Published:Updated:

குறுகியகால முதலீட்டுத் திட்டங்கள்...

அசலுக்கு பங்கமில்லை !

##~##

அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற சுந்தரம், தனக்கு கிடைத்த ஓய்வூதியப் பணத்தை எதில் முதலீடு செய்வது என குழம்பிப்போயிருந்தார். அவரது நண்பர்களில் சிலர், அரசு செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்யலாம் என்றார்கள். ஆறு மாதத்திற்கு முன்பு இந்த செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்தபோது, 10 வருடத்திற்கான வருமானம் 7.30%-மாக இருந்தது. ஆனால், தற்போது அந்த பாண்டு களுக்கான வருமானம் 9.30%-மாக உயர்ந்துள்ளது.

இந்த உயர்வினால் சுந்தரத்துக்கு எந்த பயனும் இல்லை. ஏனென்றால், நீண்டகால முதலீடாக 10 வருடங்களுக்கு செய்துவிட்டதால் தற்போது அந்தப் பணத்தை அவர் வெளியே எடுக்க முடியவில்லை. இதுவே குறுகியகால முதலீட்டுத் திட்டங்களில் அவர் முதலீடு செய்திருந்தால் பணத்திற்கும் பாதுகாப்பு கிடைத்திருக்கும்; முதலீட்டிலிருந்து வருமானமும் பார்த்திருப்பார். பொருளாதார தேக்கநிலை, பணவீக்க விகிதம் அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலையில் பிற முதலீட்டுத் திட்டங்கள்கூட மெதுவான வளர்ச்சி அல்லது ரிஸ்க் நிறைந்தவையாக உள்ளன. ஆனால், முதலீட்டை பாதுகாப்பாகவும் அதிலிருந்து உடனடி வருமானம் பெறவும் பொருத்தமான முதலீட்டுத் திட்டங்களாக இருப்பவை குறுகியகால முதலீட்டுத் திட்டங்களே.

''தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் நீண்டகால முதலீடுகள் புத்திசாலித்தனமல்ல; நமது முதலீடு எளிதில் பணமாக்கக்கூடிய தன்மைகொண்டதாக இருக்கும்பட்சத்தில்தான் பாதுகாப்பாக இருக்கும். இதற்கு குறுகியகால வங்கி வைப்பு நிதித் திட்டங்கள் மற்றும் குறுகியகால ஃபிக்ஸட் மெச்சூரிட்டி ப்ளான் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்'' என்கிறார், ஐ.ஓ.பி. முன்னாள் பொது மேலாளர் டாக்டர் எஸ். இளங்கோவன்.

குறுகியகால முதலீட்டுத் திட்டங்கள்...

வங்கி குறுகியகால வைப்பு நிதி அல்லது ஃபிக்ஸட் மெச்சூரிட்டி ப்ளான் (366 நாட்கள்) இரண்டும் எந்த வகையில் குறுகியகால முதலீடுகளுக்கு ஏற்றது என்பதையும் நமக்கு விளக்கினார்.

''பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் இருந்தாலும் நமது நோக்கத்திற்கு ஏற்ப, பணத்தின் தேவை என்ன என்பதைப் பொறுத்து முதலீடு செய்வது நல்லது. தற்போதைய நமது பொருளாதாரச் சூழ்நிலையில் ஏற்றுமதி குறைவு, உற்பத்தி மந்தம், பணவீக்க விகிதம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் குறுகிய கால முதலீடுகளே நம்பகமானது'' என்றவர், இந்த இரண்டு திட்டங்களின் பாசிட்டிவ், நெகட்டிவ் விஷயங்கள் குறித்தும் நமக்கு விளக்கினார்.

குறுகியகால வங்கி வைப்பு நிதி!

குறைந்தபட்சம் 46 நாட்கள். அதிகபட்சமாக 355 நாட்கள் வரை செய்யப்படும் வைப்பு நிதி முதலீடுகளை குறுகியகால முதலீடுகள் என்று சொல்லலாம். இதற்கு அதிகபட்சமாக 8.50

குறுகியகால முதலீட்டுத் திட்டங்கள்...

சதவிகிதம் வரை வட்டி வருமானம் கிடைக்கிறது.

வங்கி வைப்பு நிதி முதலீடுகளைப் பொறுத்தமட்டில் எந்தவிதமான ரிஸ்க்குகளும் கிடையாது. அவசரகாலத் தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். முதலீட்டை எளிதில் பணமாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்யும்போதே வருமானம் எவ்வளவு என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

இடையில் பணத்தைத் திரும்ப எடுத்தால்?

குறிப்பிட்ட கால அளவிற்கு முதலீடு செய்திருக்கிறோம். ஆனால், இடையில் பணம் தேவை என்றாலும் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், இப்படி எடுக்கிறபோது அபராதம் கட்டவேண்டியிருக்கும். திரும்ப எடுக்கப்படும் காலம் வரை உள்ள வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு அதிலிருந்து ஒரு சதவிகிதம் அபராதமாக கழித்துக்கொள்ளப்படும். இதனால் நமக்கு வருமான இழப்பு ஏற்படும்.

வரிக் கணக்கீடு!

வங்கி வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானம் ஒருவரது வரிக்கு உட்பட்ட வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, வரி வரம்பு படி வரி கட்டவேண்டும். குறிப்பாக, தனிநபரின் வருமான வரம்பிற்கு ஏற்ப வரி கட்டவேண்டும். அதிகபட்சமாக வட்டி வருமானத்திற்கு 33.66 சதவிகிதம் வரி உண்டு. 8.50 சதவிகிதம் வட்டி வருமானம் கிடைத்தால் அதிலிருந்து 33.66 சதவிகிதம் வரிப் பிடித்தம்போக, மீதம் 5.64 சதவிகிதம் என்கிற அளவிற்கு நமது வருமானம் இருக்கும்.  

யாருக்கு லாபம்?

மூத்தக் குடிமக்கள் மற்றும் அவசரகாலத் தேவைகள் கொண்டவர்கள் இந்தவகை திட்டங்களில் முதலீடு செய்யலாம். வட்டி வருமானத்திற்கு வரிப் பிடித்தம் செய்யப்பட்டாலும் முதலீட்டாளருக்கு ரிஸ்க் அவெர்ஸ் இல்லை.  

குறுகியகால முதலீட்டுத் திட்டங்கள்...

ஃபிக்ஸட் மெச்சூரிட்டி ப்ளான்!

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் முதலீடுகளை உத்தரவாதமாக வருமானம் தரும் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துத் தரும் ஃபண்ட் திட்டம் இது. குறுகியகால முதலீடாக 366 நாட்கள்/13 மாதம் முதலீடு செய்ய இந்தவகை திட்டம் பொருத்தமானது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்துவரும் இந்நிலையில், புதிய முதலீடுகளைத் திரட்டும் வகையில் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி ப்ளான்களுக்கு ஃபண்ட் நிறுவனங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றன.

இதில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்றாலும், எத்தனை சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என்று முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் தரக்கூடாது என கட்டுப்பாடுகள் உள்ளதால் ஃபண்ட் நிறுவனங்கள் இதை அறிவிப்பதில்லை.

ஆனால், இந்தவகை திட்டங்களிலிருந்து 9 சதவிகிதம் வரை வருமானத்தை எதிர்பார்க்கலாம். ஏற்ற இறக்கமாக பொருளாதார நிலைமை இருந்தாலும் நமது முதலீடு திரும்பக் கிடைக்கும்.  

யாருக்கு ஏற்றது?

உடனடி பணத் தேவை இல்லாதவர்கள் இந்தவகை திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஏனென்றால், இத்திட்டத்தில் இடைப்பட்ட காலத்தில் முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது. இந்தவகையில் இந்தத் திட்டத்தில் பணமாக்கும் வசதி குறைவாக உள்ளது. சில ஃபண்டுகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதால் முதலீட்டை திரும்ப எடுக்கலாம். ஆனால், அதில் வெளியேறும் கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் உண்டு.  

எவ்வளவு வரி?

இத்திட்டங்கள் பெரும்பாலும் 365 நாட்களுக்கு மேல் முதிர்வு காலம் கொண்டுள்ளதால் நீணடகால மூலதன ஆதாய வரியாக 10 சதவிகிதம் அல்லது இண்டக்சேஷனுடன் 20 சதவிகிதம், இதில் எது குறைவோ அதன்படி வரி கணக்கிடப்படும். ஒரு வருடத்திற்கும் குறைவான குறுகியகால மூலதன ஆதாய வரி அவரவர் வரி வரம்பின்படி கணக்கிடப்படும்.

அதிகபட்ச வருமான வரி வரம்பில் இருப்பவர்களுக்கு வங்கி வைப்பு நிதியைவிட இதில் வரி குறையும் என்பதால், குறுகியகால தேவை இல்லாதவர்கள் இந்தவகை எஃப்.எம்.பி. திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.  

தற்போதைய நமது பொருளாதார நிலையில் இந்தவகை குறுகியகால திட்டங்களிலிருந்தும் வருமானத்தைப் பார்த்துவிட முடியும்'' என்றார்.

ரிஸ்க் குறைவு, எளிதாக பணமாக்கும் வசதி, உத்தரவாதமான வருமானம் இவற்றின் அடிப்படையில் முதலீட்டு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டு மென்றால் இந்த குறுகியகால முதலீட்டு திட்டங்களை யோசிக்கலாமே...

- நீரை.மகேந்திரன்.