Published:Updated:

பணவளக்கலை!

பணவளக்கலை!

பணவளக்கலை!

பணவளக்கலை!

Published:Updated:
##~##

நாம் அனைவருமே பணத்தைப் பற்றி அவ்வப்போது கவலைப்படுகிறோம். இதில் 'அவ்வப்போது’ என்பது வாழ்க்கையில் பல்வேறு வயதுகளில், பல்வேறு சூழல்களில் என்ற இரண்டையும் உள்ளடக்கியது.

பள்ளிக்குச் செல்லும்போது கூடப் படிக்கும் பையனிடம் இருக்கும் விளையாட்டுச் சாமான் நம்மிடம் இல்லையே என்ற இயலாமையில் ஆரம்பித்து, கல்லூரிக்குச் செல்லும்போது நண்பர்களிடம் இருக்கும் ஸ்மார்ட் போன், லேட்டஸ்ட் டேப்லட் போன்றவை நம்மிடத்தில் இல்லையே என்பது போன்ற பலவிதமான கவலைகள் எல்லாம் பணம் குறித்த கவலைகளேயானாலும், இவையெல்லாம் நாம் சொந்தக்காலில் நிற்காமல் அடுத்தவர்களைச் (குடும்பத்தை/தகப்பனாரை) சார்ந்திருக்கும் காலகட்டத்தில் வருவது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவற்றை சற்றுப் புறந்தள்ளிவிட்டு நாம் நம் காலை ஊன்றி நிற்கும் வயது (21-23) வந்த பின்னர், பணம் குறித்து படும் கவலைகளை மட்டுமே கணக்கில்கொள்வோம். ஏனென்றால், பணம் குறித்த கவலையும் அந்தக் கவலையின் மீதான நடவடிக்கையும் அந்த வயதுக்குப் பின்னரே சுயமாக நாம் உணர்வதும் அதற்கான நடவடிக்கை எடுப்பதும் நமக்கு சாத்தியம்.

இப்படி 21 வயதில் ஆரம்பித்து மாய்ந்து மாய்ந்து ரூம் போட்டு கவலைப் படுகிறோமே! இந்தப் பணத்தைப் பற்றி நாம் படும் கவலைகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம் என்று இப்போது விளக்கமாகப் பார்ப்போம். அதாவது, நம் கவலைகளை எந்தெந்த சூழலில் எப்படிப்பட்ட பணம் குறித்த கவலை நம்மை வந்தடைகிறது என்று சற்று பிரித்துப் பார்ப்போம்.

பணவளக்கலை!

படித்து முடித்து வேலையில்லாமல் சம்பாத்தியத்திற்கே வழி இல்லை என்ற நிலையில் இருக்கும்போது பணம் இல்லையென்றால் நான் எப்படி வாழப்போகிறேன் என்பது ஒரு நிலை; வேலை ஒன்று கிடைத்து ஓரளவு சம்பாதிக்க வழி கிடைத்தவுடன் வாழ்க்கையை ஓட்டுவதற்கு தேவையான அளவுக்குச் சம்பாதிக்கிறோமே தவிர கல்யாணம், காட்சி என்று நடந்தால் எப்படி செலவுக்கு சமாளிக்கப் போகிறோம், இப்படியே எவ்வளவு நாள் உழைத்து வரும் வருமானத்தைக்கொண்டு பொழுதைக் கழிப்பது, சேமிப்பே இல்லாமல் போகிறதே என்ற கவலை என்பது அடுத்த நிலை.

பார்க்கும் வேலை பல மாறி நல்லதொரு நிறுவனத்தில் பி.எஃப்., பென்ஷன் போன்ற வசதிகளுடன் இருபத்திநாலு மணிநேரமும் பெண்டு எடுக்கும் வேலைகளுடன் இருக்கும் போது இப்படி சம்பாதித்து சேமிப்பதிலேயே வாழ்க்கைப் போய்விடும் போலிருக்கிறதே, நான் எப்போது வாழ்க்கையை அனுபவிப்பது (ஒரு ஹாலிடே/பண்ணை வீடு/பங்களா எப்போது வாங்குவேன்

பணவளக்கலை!

என்று) என்பது ஒரு கவலையின் நிலை. இதனையும் தாண்டி விடாமுயற்சியால் தொழிலதிபராகி பணத்தை அள்ளும்போது, என்ன பிழைப்பு இது. பணத்துக்காக எத்தனை விஷயங்களை இழக்கவேண்டி யுள்ளது, எத்தனைபேருடன் போட்டிபோட வேண்டியுள்ளது, என்ன பித்தலாட்டம் எல்லாம் செய்யவேண்டியிருக்கிறது, இதில் போய் நாம் சிக்கிக்கொண்டோமே என்று பதறிபோய் கவலைப்படுவது ஒருநிலை.

இந்நிலைகளில் சிலவற்றை மற்றுமே எல்லோரும் அடைய முடியும். உதாரணத்திற்கு, தொழிலதிபராவது என்ற நிலையை சிலரே அடைகின்றனர்.

இப்படி பணம் குறித்த கவலைகள் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப அவரவரிடம் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு நிலையிலும் வெறுமனே கவலை மட்டும் பட்டால் போதாது என்பது உங்களுக்குத் தெரியவேண்டும். கவலைகளுக்குத் தீர்வு காணவேண்டும். இந்த ஒவ்வொரு நிலையிலும் இந்தக் கவலை என்பது குறிப்பிட்ட சில தேவைகளினால் வருகிறது. கவலைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள உங்களுடைய தேவைகள் என்னென்ன என்பதையும் அது சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றிய அனைத்திலும் நீங்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டும். கவலைகள் கேள்விகளாக மாற்றப்பட்டு அந்தக் கேள்விகளுக்குச் சரியான விடைகளைத் தேடினால் மட்டுமே கவலைகளைக் குறைக்க முடியும்.

மேலே சொன்ன இந்தக் கவலைகளை என்ன மாதிரியான சில கேள்விகளைக் கேட்டால் குறைக்க முடியும், நம்முடைய பணம் குறித்த நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிந்துகொள்வோம். இதற்கு என்ன கேள்விகள் கேட்கப்படவேண்டும் என்று பார்ப்போம்.

1. எந்தெந்த காரியங்களுக்காக நான் பணம் சம்பாதிக்க வேண்டும்?

2. எவ்வளவு பணம் அந்தக் காரியங்களுக்காக சம்பாதிக்க வேண்டும்?

3. அந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குண்டான சிறந்த வழி எது?

4. என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் பொருளாதார ரீதியாக எந்த அளவுக்கு பொறுப்பானவன்?

நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தக் கேள்வியின் விடை வெவ்வேறாக இருக்கும். படித்து முடித்த இளைஞன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான அளவு பணம் தேவைப்படும் என்பான். மிகச் சரியாக அவனால் இவ்வளவு பணம் (ரூபாய் 10,000, 15,000 என) இருந்தால் போதும் என்று சொல்ல முடியும். தன் தகுதிக்கு ஏற்ற வேலையில் ஆரம்பித்து அது கிடைக்கவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக வேலையின் தன்மையைக் குறைத்து கடைசியில் பிழைப்பை ஓட்ட ஏதாவது ஒரு வேலை என்று போவான். என்னை நம்பி என் தாய், தந்தை, தம்பி, தங்கை இருக்கின்றனர். நான் பணரீதியாக சரியில்லை என்றால் அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்பதைத் தெளிவாக அவனால் சொல்ல முடியும்.
 

பணவளக்கலை!

ஆனால், நடுத்தர வயதுள்ள தொழிலதிபர் ஒருவரைக் கேட்டால், 'ஸ்டேடஸை மெயின்டெயின் பண்ணனும். விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலுக்கு பணம் சம்பாதிக் கணும். அதனால் புது புராடக்ட், புது மார்க்கெட் என்று போகணும். குறைந்தபட்சம் என்னை நம்பியிருக்கும் என் மனைவி, மகன், மகள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக இவ்வளவு பணம் கட்டாயம் சம்பாதிக்கவேண்டும்’ என்பார். நூறு, நூற்றிஐம்பது குடும்பம் நம்மை நம்பி பிழைக்குதப்பா என்று பல தொழிலதிபர்கள் மனதாரச் சொல்வதைப் பார்த்திருப்பீர்கள். என்னதான் கராறான முதலாளியாக இருந்தாலும் சரி, உங்கள் மனதில் உங்களிடம் வேலை பார்க்கும் அத்தனை குடும்பங்களுக்கும் நீங்கள்தான் பொருளாதார ரீதியான பொறுப்பு என்ற உறுத்தல் ஒருபுறம் இருக்கத்தான் செய்யும்.

கவலைகளை மட்டுமே பட்டுக்கொண்டிருக் காமல் கவலைகளுக்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு கவலைகளைக் கேள்வியாக்கி அந்தக் கேள்விகளுக்கான சரியான விடையைக் கண்டுபிடித்தால் பணம் உங்களை நோக்கி சரியான அளவில் வர ஆரம்பிக்கும். அப்படி வர ஆரம்பிக்கிற பணத்துடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது என்பதில்தான் பணரீதியான வெற்றியின் வளர்ச்சியே இருக்கிறது.

அது என்ன பணத்துடன் உறவு என்கிறீர்களா? உங்கள் செயல்பாடுகளில் பாதிக்கு நீங்களும் பாதிக்கு உங்களிடம் இருக்கும் பணமுமே பொறுப்பாகிறது. நினைவிருக்கட்டும், பணம்தான் உங்கள் வாழ்க்கையில் உங்கள் முதல் பார்ட்னர். நீங்கள் இன்னொருவரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு ஒரு செயலைச் செய்கிறீர்கள். உங்கள் செயல் வெற்றி பெற்றால் அதில் உங்கள் பங்கு எவ்வளவு, உங்கள் பார்ட்னரின் செயல்/நடவடிக்கை ரீதியான பங்கு எவ்வளவு என்று நீங்கள் சுலபமாக கணக்குப்போட்டுப் பார்க்க முடியும். அதேபோல, அந்தச் செயல் தோல்வி அடையும்போது அந்தத் தோல்வியில் உங்கள் பங்கு எவ்வளவு, உங்கள் பார்ட்னரின் பங்கு (பங்களிப்பு - பணரீதியானதல்ல செயல் ரீதியானது) எவ்வளவு என்ற  கணக்கைத் துல்லியமாகப் போடமுடியும்.

மனிதர்கள் பார்ட்னராக இருக்கும்போது அவர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நீங்கள் உங்களுடைய செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் பார்ட்னர் கஸ்டமர்களிடம் எறிந்து விழுந்தால், 'என்ன சார் செய்வது, அவர் குணம் அப்படி! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள்’ என நீங்கள் நயந்து பேசி சரிக்கட்ட வேண்டியிருக்கும். பணம் என்னும் பார்ட்னரோ வேறுமாதிரியான குணம் கொண்டவர். அவர் உங்களுடைய செயல்பாட்டை மாற்றும் வல்லமை கொண்டவர். எப்படி என்கின்றீர்களா?

பணத்தை பார்ட்னராகக்கொள்வதில் இருக்கும் ஒரு முக்கியமான சிக்கல் அதுதான். பணம் என்ற பார்ட்னர் அவர் பாட்டுக்கு சிவனே என்று இருந்துவிட்டு உங்கள் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்திவிடுவார். ஏனென்றால், உங்கள் பார்ட்னராகிய பணம் உங்களுக்கு செலவழிக்கும் வலிமையைத் தருகிறார். பணம் என்ற உங்களுடைய பார்ட்னர் உங்களுடைய செலவழிக்கும் திறனை அதிகரிப்பதன் மூலம் கற்பனைத் திறனையும், உணர்ச்சிகளையும் அணுகுமுறையையும் நோக்கத்தையும் பயத்தை யும் ஞாபகத்தன்மையையும் மாற்றியமைக்க வல்லவராக இருக்கிறார்.

பணம் என்னும் பார்ட்னர் எந்த அளவு உங்களுக்கு உறுதுணையாக (பேலன்ஸ் அதிகரிக்க அதிகரிக்க உறுதுணையின் அளவு அதிகரிக்கிறதா? குறைவாக இருக்கும்போது உறுதுணையின் அளவு அதிகரிக்கிறதா? என்பதை பின்னர் பார்ப்போம்) இருக்கிறாரோ, அந்த அளவுக்கு வெற்றிதான் என்பீர்கள். அதுதான் இல்லை. சாமானியனோ, சாஃப்ட்வேர் கம்பெனி ஓனரோ இரண்டு பேருக்குமே அவர்கள் கையில் இருக்கும் திட்டங்களுக்கான பணம் எப்போதும் தட்டுப்பாட்டிலேயே இருந்துகொண்டிருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெற இந்தப் பணம் என்னும் பார்ட்னருடன் என்ன மாதிரியான உறவு நமக்கு இருக்கவேண்டும்?

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism