##~##

பேப்பர் பெண்..!

'விடியலில் விழி’ என்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் கேட்பார்களா..? என்று சிந்தித்தபடியே விஜயதிருவேங்கடம் சாரின் வீட்டைவிட்டு வெளியே வந்த என் கண்ணில் பட்டது அந்தக் காட்சி. சுமார் 16 வயதுள்ள ஒரு பெண், சைக்கிளில் வீடு வீடாகப் பேப்பர் போட்டபடி வந்துகொண்டிருந்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஹலோ.. எக்ஸ்க்யூஸ் மீ..’

'என்ன சார் வேணும்?’ என்றபடி என்னை ஏறஇறங்கப் பார்த்தாள்.

'உங்க பேர் என்ன..? படிக்கிறீங்களா..?’

'என் பேரு வித்யா... ப்ளஸ் ஒன் படிக்கிறேன்...’

'இந்த வேலையை முடிச்சுட்டு ஸ்கூலுக்குப் போகணுமா..?’

'ஆமாம். ஏன்..?’

'இல்லை.., டெய்லி இப்படின்னா டயர்டா இருக்காதா..?’

'டயர்டா..? எனக்கு அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஜாலியாத்தான் செய்றேன்!’

'உங்க அம்மா, அப்பா என்ன பண்றாங்க... தெரிஞ்சுக்கலாமா..?’

'என்ன கேட்கறீங்கன்னு புரியுது... அடுத்தவேளை சோற்றுக்கே கஷ்டப்படற ஃபேமிலின்னு பில்ட்அப் குடுக்க நான் தயாராய் இல்லை. எங்க அப்பா கார்ப்பரேஷன்ல துப்புரவுப் பணியாளரா இருக்காரு. அம்மாவும் சின்ன சின்னதா ஏதாவது வேலை செய்வாங்க. வறுமைன்னு சொல்ல முடியாது.

நமக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி தேடும் பல்லாயிரம் குடும்பங்கள்ல ஒண்ணுன்னு வச்சிக்குங்களேன்...’

வித்யாவின் பேச்சு வயசுக்கு மீறிய பேச்சாகத் தெரியவில்லை. ஆனால், 16 வயதில் இப்படித் தெளிவாகப் பேசுகிறவர்கள் அபூர்வம்!

'கஷ்டம் இல்லைன்னா ஏன் இந்த வேலையைச்  செய்யணும்..?’

எதிர்கொள் -13

'கஷ்டப்படறவங்க மட்டும்தான் கடினமா உழைக்கணும்னு சட்டம் இருக்கா..?’

இந்த எதிர்க்கேள்வியில் ஒரு கணம் திணறிப் போனேன். கடின உழைப்பு ஒரு சிலருக்கு மட்டுமே 'விதிக்கப்பட்டது’ என்கிற வக்கிர எண்ணம் எப்படி எனக்குள் வந்து? எப்படி, எப்போது வந்திருந்தாலும், அவள் கேட்ட கேள்வியில் அப்போதே அது சுக்குநூறாக சிதறிப் போனது.

அவளே தொடர்ந்தாள் 'இதை நான் வேலையா நினைச்சோ, பணம் கிடைக்கும்னு எதிர்பார்த்தோ செய்யலை. ஒவ்வொரு தினமும், பல புதிய அனுபவங்களை இது எனக்குத் தருது. இப்ப உங்களோட பேசறதும் அதுல ஒண்ணு. ஒரு விஷயம் சொல்லட்டுமா..?’ சிறிது இடைவெளி விட்டாள்.

'சொல்லு... கேட்கறதுக்குக் காத்துக்கிட்டு இருக்கேன்...’

'நான் சொல்றது எந்த அளவுக்கு நிஜம்னு தெரியலை... ராத்திரி நேரத்துல சாலையைப் பயன்படுத்தறவங்களைவிட, காலை நேரத்துல சாலைக்கு வர்றவங்க பொதுவா நல்லவங்களா இருக்காங்க... சமுதாயத்துக்குப் பயன்படறவங்களா இருக்காங்க...’

ஆஹா..! இது ஒரு அபாரமான 'அப்சர்வேஷன்’. அவளே சொன்னது மாதிரி, இது எவ்வளவு தூரத்துக்கு துல்லியமா இருக்கும்னு தெரியலை. ஆனா, ஒரு டீன் ஏஜ் கேர்ள் இப்படி யோசிக்கிறான்னா, நாம் இளம் தலைமுறைகளை 'அன்டர்எஸ்டிமேட்’ பண்ணுகிறோமோன்னு தோணுது. தன்னைச் சுத்தி நடக்குற ஒவ்வொரு அசைவையும் கவனிக்கவும் கணிக்கவும் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றிக்கொள்ளும் திறமையும் பெற்றிருக்கிறார்கள்.

'சரியா, இல்லையாங்கறதை விடு; நல்லவங்க, சமுதாயத்துக்குப் பயன்படறவங்கன்னு சொல்றியே... அது உனக்கு எப்படித் தெரிஞ்சுது..? அதுக்கு என்ன அளவுகோல் வச்சிருக்கே சொல்லு..’

எதிர்கொள் -13

சின்னதாக ஒரு புன்முறுவல் பூத்தாள். 'சிலபேரைப் பார்த்தவுடனே நமக்குத் தோணும் இல்லையா சார்... இப்ப, உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தா, இந்நேரம் நான் பேசாமகூடப் போய் இருப்பேன் இல்லையா..? நீங்களே பாருங்களேன்... இப்ப ரோடுல போறவங்க யாரையாவது பார்த்தா, சோம்பேறியாவோ, குடிகாரனாவோ தெரியுதா..? நல்லவங்களுக்கு எல்லாம் காலையில விடியுது, கெட்டவங்களுக்குத்தான் ராவுல விடியுதுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.’

'அப்ப நைட் டியூட்டி போறவங்க எல்லாம் கெட்டவங்க ஆயிடுவாங்களா..?’

'என்ன சார் நீங்க... வேலைக்குப் போறவங்க கதை வேற சார்... ராத்திரி வெளியே கிளம்பறவங்க எல்லாருமே வேலைக்குப் போறவங்கதானா..? நான் சொல்லவந்தது என்னன்னா, யார் எல்லாம் காலையில சீக்கிரம் எழுந்து சுறுசுறுப்பா இருக்காங்களோ, பொதுவா, அவங்க நல்லவங்க. அவ்வளவுதான். தேங்க் யூ சார், எனக்கு நெறைய வேலை இருக்கு. நான் வர்றேன்...’

என் பதிலுக்குக் காத்திருக்காமல் கிளம்பி விட்டாள். இதன்பிறகு திருவேங்கடம் சார் மூலம் வித்யாவைப் பற்றி பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன். வகுப்பில் நம்பர் ஒன் ஸ்டூடண்ட் எல்லாம் இல்லை. ஆனால், பேச்சு, எழுத்து, விளையாட்டு என எல்லாவற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. சாருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால், ‘she is moving her coins in the right direction’.

அதாவது, சரியான திசையை நோக்கித் தன்னை இயக்கிக்கொண்டிருக்கிறாள். அவளது லட்சியம் என்ன, வாழ்க்கையில் என்ன சாதிக்க நினைக்கிறாள் என்பதெல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. தன் பாதையைத் தானே தேர்ந்தெடுத்து, பயணத்தை யும் தானே தீர்மானித்துக்கொண்டு தெளிவாகச் சிந்தித்துச் செயல்பட முடிகிறதே அவளால்...

இவளுக்கு இது யார் சொல்லி வந்தது? எது கற்றுத் தந்தது? சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். சிறு வயது முதலே அவள் பின்பற்றி வந்த அன்றாடப் பயிற்சிகள்தாம்.

குழந்தைகள், சிறுவர் சிறுமியர், இளைஞர் களிடம் நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவது குறித்து சமூகவியல் அறிஞர்கள் இன்று உலகம் முழுவதும் 'பிரசாரம்’ செய்து வருகிறார்கள். இதற்கு என்ன அவசியம் வந்தது? ஒருகாலத்தில் எல்லாருமே தம் பிள்ளைகளை அப்படித்தான் வளர்த்து வந்தனர். சிறிது சிறிதாக, இதன் மீதான கவனம் நீர்த்துப் போனது. பையனோ, பெண்ணோ நல்ல மதிப்பெண் வாங்கினால் போதும்; வேறு எது குறித்தும் கவலைப்படத் தேவையில்லை என்கிற தவறான எண்ணம் பெற்றோரிடம் மேலோங்கிவிட்டது.

சிறுவயதில் ஒருவர் பின்பற்றுகிற நல்ல பழக்கவழக்கம்தான் பிற்காலத்தில் அவரின் தனிப்பட்ட ஆளுமையை (personality) நிர்ணயிக்கிற முக்கிய காரணியாக விளங்கப் போகிறது.

இந்த உண்மை பலருக்கு விளங்குவதே இல்லை. 'காலை எழுந்தவுடன் படிப்பு; மாலை முழுவதும் விளையாட்டு’ என்கிற அட்டவணை எதற்காக..? உடலும் உள்ளமும் ஒருசேர வளர்ச்சி அடைய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தத்தானே..? இன்று நவீன வியாபார யுகத்தில், ‘holistic growth, composite and comprehensive development’ என்றெல்லாம் பேசுகிறோமே... இது தனிநபருக்கும் பொருந்தும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம், சமூக முன்னேற்றம் போன்றவை, ஒவ்வொரு தனிநபரின் மேம்பட்ட ஆளுமை மூலமே சாத்தியம் ஆகும். ஒரு சராசரி மனிதனின் பழக்கவழக்கம்தான் அவனுடைய சமுதாயத்தின் பழக்கவழக்கமும் ஆகும். தனிமனிதர்களுடைய செயல்களின் தொகுப்புதான் ஒரு தேசத்தின் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் சாதனையாக மாறுகிறது.

'விடியலில் விழி’ என்கிற முதல் சூத்திரத்தின் முதல் படியில் நிற்கிறோம். இன்று, வித்யாவைப் போன்ற இளைஞர்கள்தாம் அங்கே துவார பாலகர்கள். நாளை, உற்சவர்களும் மூலவர்களுமாக இருக்கப் போகிறவர்களும் அவர்களேதான். துள்ளலும் துடிப்புமாக ஓடிக்கொண்டே இருக்கிற இளைஞர்களைப் பாருங்கள்.

எண்ணிக்கையில் அவர்கள் மிகவும் குறைவானவர்கள். இந்த எண்ணிக்கை அதிகமாகவேண்டும். அதுவும் விரைவில், மிக விரைவில். அதுதான் நம் அனைவருக்கும் நல்லது. ஒரு நாளின் வேலை நேரத்தை அதிகமாக்கிக்கொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய முதல் புத்திசாலித்தனமான காரியம்,  தூக்கத்தின் அளவை குறைத்துக் கொள்வதுமூலம். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான அளவுக்கு அன்றி தூங்குவதில்லை என்று பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள நம் இளைஞர்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளில் முதன்மையானதும் முக்கியமானதும் இதுதான். ஒவ்வொரு நாளையும் அதிகபட்ச பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றி அமைத்துக்கொள்வதுதான்.

சா£¢... காலையில சீக்கிரம் எழுந்தா மட்டும் போதுமா என்றுதானே கேட்கிறீர்கள்..? உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வருகிறான் அர்ஜுன். யார் இந்த அர்ஜுன்..?

(தெளிவோம்)

 ஐ.பி.ஓ. ஐடியா இல்லை!

ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிலிப்கார்ட், இப்போதைக்கு ஐ.பி.ஓ. வருவது பற்றி யோசிக்கவில்லை என இதன் நிறுவனரும் சி.இ.ஓ.வுமான சச்சின் பன்சல் சமீபத்தில் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். இந்தியாவில் இ-காமர்ஸ் என்பது வளர்ந்த நாடுகளைப்போல நன்கு வளரவில்லை. இப்போதைக்கு 1 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் 6,000 கோடி ரூபாய்க்கு மேல்) இந்தியாவில் இ-காமர்ஸ் மூலம் வர்த்தகமாகிறது. இதுவே, 2020-ம் ஆண்டில் 76 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகமாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். இப்போதைக்கு ஃபிலிப்கார்ட் இணையதளத்தில் 500 விற்பனையாளர்கள் இருப்பதாகவும் 2015-ல் பத்தாயிரம் விற்பனையாளர்கள் இருப்பார்கள் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism