உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!
##~## |
மாதச் சம்பளக்காரரோ தொழில் முனைவோரோ பணம் என்னும் பார்ட்னரை எப்படி கையாளவேண்டும் என்பதனைப் பற்றி விரிவாகவே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மாதச் சம்பளக்காரரைவிட தொழில் முனைவோருக்கு பணம் என்னும் பார்ட்னரை சரியாக கையாளாவிட்டால் நிறைய இடைஞ்சல்களைக் கொண்டுவந்துவிடுவார். பணத்தின் மீது தொழில் முனைவோருக்கு நட்பு முறையிலான கட்டுப்பாடுகள் என்பது நிறையவே வேண்டும். தொழிலை ஆரம்பிக்கும்போதும் சரி, தொழிலை நன்றாக நடத்தும்போதும் சரி, தொழில் ஏதாவது ஒரு காரணத்தால் நலிவடையும்போதும் சரி, பணத்தின் மீதான நட்பு முறையிலான கட்டுப்பாடுகளை சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அனுசரித்து இருந்துகொண்டே இருக்கவேண்டும்.
தொழிலுக்குத் தேவையான பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஆரம்பிப்பவர்கள் சிலர். சாதுரியத்தால் மிகவும் சொற்பத் தொகையை மட்டுமே கையில் வைத்து உருட்டி புரட்டி தொழில் நடத்துபவர்கள் சிலர். இவர்கள் இருவருமே பணம் என்னும் பார்ட்னரின் மீதான கட்டுப்பாடுகளை மிகவும் லாவகமாக கையாளவேண்டியிருக்கும்.
என்ன, திரும்பவும் பணம் என்னும் பார்ட்னரை கவனமாக, லாவகமாக கையாளவேண்டும் என்றே சொல்கிறீர்களே என்று கேட்பீர்கள்.

மனித பார்ட்னர்களுக்கும் பணம் என்னும் பார்ட்னருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பணம் என்னும் பார்ட்னருக்கு பொறுமை என்பதே இருக்காது. பெர்ஃபார்மென்ஸ் என்பதை அதீதமாக மதிக்கவும் ரசிக்கவும் செய்யும் பார்ட்னர் அவர். மனித பார்ட்னர்கள் கூட்டுச் சேர்ந்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து கூட்டமைப்பார்கள். வெளியேறுவது என்பது அவரது கடைசி அத்தியாயமாக இருக்கும்.
ஆனால், பணம் என்னும் பார்ட்னரோ ரொம்பவும் ஷார்ப்பானவர். நாம் தகுதியான ஆளுடன் கூட்டு வைத்திருக்கிறோமா? நம்மை மதிக்கிறாரா? உயர்வாக நினைக்கிறாரா? பழகப் பழக (பணம் சேரச்சேர) மரியாதை உயருகிறதா, குறைகிறதா? பணம் சேரச் சேர அலுப்பு தட்டாமல் இன்னும் சேர்க்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? இல்லை, போதுமப்பா என்று நினைக்கிறாரா? என்றெல்லாம் பார்ப்பார்.
இதையெல்லாம்விட உங்களிடம் கூட்டு வைக்கும்போதே எப்போது வெளியேறலாம் என்ற எண்ணத்தோடேயே உங்களிடம் கூட்டு வைப்பவர். உங்களைவிட திறமைசாலியைப் பார்த்தவுடனேயே அவரிடத்தில் நாட்டம் கொண்டு கூட்டமைக்கத் தொடங்கிவிடுவார். போகிறபோக்கில் உங்களிடம் வைத்துள்ள கூட்டணியை மொத்தமாக முறித்துக்கொண்டும் சென்றுவிடுவார்.
இன்னுமொரு முக்கியமான விஷயம், பணம் என்னும் பார்ட்னருக்கு உங்கள் கூட்டணியை முறித்துக்கொள்வதால் எந்தவித நஷ்டமும் இல்லை. நஷ்டம் உங்களுக்குத்தான்.
பணம் என்ன மனிதனா இவற்றையெல்லாம் எடைபோட்டுப் பார்க்க என்பீர்கள்! கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தால் இதன் வலிமை புரியும்.

பணத்துக்கு என்று தனிகுணம் கிடையாது. மனித குலத்தின் குணமே பணத்தின் குணம். ஏனென்றால், மனிதனே பணத்தை செயல்படச் செய்கிறான் என்பதால் மனித குணமே பணத்தின் குணமாகிறது. தொழிலோ, வேலையோ உங்களிடத்தில் பணம் வந்து சேரக் காரணமானவர்கள் யார்? மனிதர்கள்தான். மதிப்புமிக்க பொருள் என்று நினைத்ததால்தானே ஐபோனும்/ஆண்ட்ராய்டு போனும் வாங்கிக் குவித்து அதைச் செய்து விற்பவர்களுக்கு லாபத்தைத் தருகிறோம். தகுதி இல்லாத மனிதனுக்கு ஊதிய உயர்வு கிடைப்பதில்லை! பணம் தரும் கஸ்டமர்களை மதிக்காத தொழிலுக்கு பணத்தைக் கொண்டுவரும் வியாபாரத்தை மனிதர்கள் தருவதில்லை.
உங்களைச் சுற்றி இருக்கும் பல நிறுவனங் களைப் பாருங்கள். தகுதியில்லாமல் தொழில் தற்சமயம் அதிர்ஷ்டத்தில் (!) நடந்தாலும் நாளடைவில் அது நசிந்துவிடும். பணம் மரியாதைக்குரியது என்று நினைக்காத நபர்களைச் சுற்றி அதைப் பிடுங்கிச் செல்ல பல மனிதர்கள் எப்போதும் இருப்பார்கள். பணம் என்பதை உங்களிடத்தில் கொண்டுவருவதும் உங்களிடத்தில் இருந்து எடுத்துச் செல்வது மனிதர்கள்தான். ஊதாரிகளைக் கண்டறிந்து சுற்றி இருந்து பிடுங்கிச் செல்லுவதும் மனிதர்கள், திறமையாகத் தொழில் செய்து புராடக்ட்களை, சர்வீஸ்களை தரும் மனிதர்களைக் கண்டறிந்து பணத்தைக் கொண்டுவந்து கொட்டுவதும் மனிதர்கள்தான்! எனவேதான், பணம் மனித குணங்களில் பலவற்றை அப்படியே கொண்டிருக்கிறது.

பணத்தைத் தருவதும் மனிதக் கூட்டம், தட்டிப் பறித்துச் செல்வதும் மனிதர்களின் கூட்டம்தான் என்ற நடைமுறை குறித்து நீங்கள் இன்னும் முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை இல்லையா? மனித குணம்தான் பணத்துக்கு இருக்கிறது என்பதில் சந்தேகத்தை முற்றிலுமாக போக்க ஒரு அறிஞர் பணத்தினைப் பற்றிச் சொன்ன வாசகங்களைப் பார்ப்போம். மனித உணர்ச்சிகளும் பணமும் இரண்டறக் கலந்தது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தைச் சொல்ல முடியாது. அறிஞர் அப்படி என்னதான் சொன்னார் என்று பார்ப்போம். “There is pain in getting, care in keeping, and grief in losing riches” - Thomas Draxe.
இதை இப்போது மனித இயல்புகளுடன் ஒப்பிடுவோம். ஒரு பிள்ளையைப் பெறுவதில் வலி இருக்கிறது. தாய் நிறையவே சிரமப்பட வேண்டியுள்ளது. பெற்ற பிள்ளையை நன்கு பராமரிக்க மிகவும் ஈடுபாட்டுடன் கூடிய கவனம் தேவைப்படுகிறது. பெற்றதை ஏதாவது ஒரு காரணத்தால் இழந்தால் அடையும் துயரம் சொல்லி மாளாது. இதேதானே பணத்திலும். சம்பாதிக்க நிறையவே மெனக்கெட்டு சிரமப்படவேண்டியுள்ளது. சம்பாதித்த பணத்தைப் பராமரிக்க மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. சம்பாதித்ததை இழந்தால் மிகுந்த துயரம் நமக்கு ஏற்படுகிறது. இந்த ஒற்றுமைகளாலேயேதான் பணம் மனித உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறது எனலாம்.
பூஜ்ஜியத்தில் இருந்து ராஜ்ஜியத்தைப் பிடித்தவர்கள், ராஜ்ஜியத்தை வைத்திருந்து பின்னால் பூஜ்ஜியமானவர்கள் என்ற இரு சாராரை நாம் பார்க்கிறோம். முதலாமவர், பணத்தின் குணத்தை நாடிபிடித்துப் பார்த்து அதற்கேற்ப நடந்து வெற்றி பெற்றிருப்பார். இரண்டாமவர், நாடிபிடிக்கத் தெரியாமல் ராஜ்ஜியத்தை இழந்திருப்பார்.
பூஜ்ஜியமும் இல்லை! ராஜ்ஜியமும் இல்லை! என்னப்போல் ஆவரேஜிற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? ஆவரேஜ்கள் என்ற குணம் பணத்திற்குப் பிடிக்காது. ஏன் ஆவரேஜ்களைப் பணத்திற்குப் பிடிப்பதில்லை. கிரிக்கெட் போட்டிக் களத்தில் வெற்றி பெற்றவர்களின் பெயரும், தோல்வியுற்றவர்களின் பெயரும் பேசப்படும். ஆவரேஜ்கள் இந்தப் போட்டிகளில் ஆடியன்ஸ் போல. எழுபத்திநான்காயிரம் பேர் மேட்சைப் பார்த்தார்கள் என்ற புள்ளிவிவரம் மட்டுமே வெளிவரும். வெற்றிபெற்ற பதினொன்றிலோ, தோல்வி பெற்ற பதினொன்றிலோ இருக்க வேண்டும் என்பதுதான் விஷயமே!
ஆடியன்ஸிற்கு இங்கே பெரிய ரோல் இல்லை! ஆடியன்ஸ் இல்லாமல் கிரிக்கெட் எப்படி நடக்கும் என்று கேட்பீர்கள். ரசிகர் களால்தானே கேம் பெரிய அளவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ரசிகர்கள் இல்லாவிட்டால் கேம் ஏது என்பீர்கள். பணம் கொடுப்பது ரசிகர்கள்தான். ஆனால், பணம் பெறுவது வெற்றியானாலும், தோல்வியானாலும் ப்ளேயர் களே. ஸ்பாட்லைட்டில் இருப்பவர்களும் அவர்களே! கிரிக்கெட் பார்த்த ரசிகர் வெற்றிக்கு கிடைப்பது பணமல்ல, ஏதோ மனதிருப்தி! அதனாலேயே கிரிக்கெட்டை நன்கு ரசித்துப் பார்த்தவர் பெரிய அளவில் பணம் பண்ணினார் என்ற சரித்திரம் இல்லை (பெட்டிங் பற்றியெல்லாம் பேசக்கூடாது!).
கிரிக்கெட் விளையாடிய வீரர் நிறைய சம்பாதித்தார் என்று வரலாறு இருக்கிறது. உலகக் களத்தில் சம்பாத்தியத்திற்கான கேமில் நாம் விளையாடும் வீரரா, இல்லை பார்க்கிற ஆடியன்ஸா? என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். ஆடியன்ஸ் எனில் அதை உணர்ந்து அதன்படி நாம் நடக்க வேண்டும். கையில் இருக்கும் டிக்கெட்டிற்கேற்ற கேலரியில் அமரலாம். மேட்ச் பார்க்கலாம். ஆபீஸில் டீ டைமிலும், லஞ்ச் டைமிலும் மேட்ச் பற்றி கிழிகிழி என கிழிக்கலாம்.
ஆனால், ப்ளேயரானாலோ பிட்ச்சில் நடக்கலாம், கிரவுண்டில் ஓடலாம். பல்லாயிரக்கணக்கானோர் நம்மைப் பார்க்கும் பேறு பெறலாம். அதனால் வருமானமும் பெறலாம். தொழில் முனைவு என்பது ப்ளேயராக இருத்தலுக்கு சமானமானது. நீங்கள் ப்ளேயராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது ஆடியென்ஸாக இருக்க விரும்புகிறீர்களா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
(கற்றுத் தேர்வோம்)