Published:Updated:

ஷேர்லக் - செபிக்கே செக் !

ஷேர்லக் - செபிக்கே செக் !

ஷேர்லக் - செபிக்கே செக் !

ஷேர்லக் - செபிக்கே செக் !

Published:Updated:
##~##

''சந்தை குறித்த பல ரகசியங் களை சந்திக்கு கொண்டுவரும் ஷேர் மார்க்கெட் சிங்கமே, வருக! வருக!'' என்றபடி வரவேற்றோம். ''பில்டப் வேண்டாம். நேராக விஷயத்துக்கு வருகிறேன்'' என்றபடி செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

''சென்செக்ஸ் சுமார் 1000 புள்ளிகள் ஏறியதால், தொடர்ந்து சந்தை உயருமா, முதலீடு செய்ய இது சரியான நேரமா என பலரும் கேட்கிறார்கள். சந்தை உயருமா, உயராதா என நாம் நினைப்பது ஒருபக்கம் இருக்கட்டும். இனிவரும் நாட்களில் பெரிய அளவில் இறங்கவும் செய்யலாம் என்று  என்.எஸ்.இ. நினைக்கிறதோ என்கிற சந்தேகம் சிலருக்கு. காரணம், இனிமேல் பங்கு முதலீட்டில் கேஷ் செக்மென்டில் முதலீட்டாளர்கள் கட்டாயமாக மார்ஜின் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற யோசனையை செபிக்கு பரிந்துரை செய்திருக்கிறதாம் என்.எஸ்.இ. இதுபோன்ற நடைமுறை எஃப் அண்ட் ஓ செக்மென்டில்தான் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2012 அக்டோபரில் எம்கே குளோபல் புரோக்கிங் நிறுவனத்தால் சந்தையில் ஏற்பட்ட பெரிய சரிவுக்கு என்.எஸ்.இ.-யும் காரணம் என செபி அனுப்பிய நோட்டீஸுக்கு என்.எஸ்.இ. திருப்பிவிட்ட நோட்டீஸ்தான் இந்த யோசனை.

இந்த விஷயத்தில் செபி ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. என்.எஸ்.இ. சொன்ன பரிந்துரையைக் கண்டுகொள்ளாமல் விட்டால், நாளைக்கு சந்தை இறங்கினால் அதற்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும். சரி என்று சொன்னால், சந்தை இன்று இருக்கும் நிலையில் பங்கு வாங்கு கிறவர்கள் சந்தையைவிட்டு ஓடிவிடுவார்கள். இந்த நிலையில், முன்னே போனால் கடிக்கும், பின்னே போனால் உதைக்கும் என்கிற மாதிரி யான ஒரு இக்கட்டான நிலை செபிக்கு ஏற்பட்டிருக்கிறது. செபிக்கு என்.எஸ்.இ. வைத்த செக் என்று சிலர் காதைக் கடிக்கிறார்கள்!'' என்று கண் சிமிட்டினார் ஷேர்லக்.

அவருக்கு சுடச்சுட டீ தந்தோம். ''மஹிந்திரா நிறுவனம் துணிச்சலோடு புதிய முதலீட்டில் இறங்கி இருக்கிறதே?'' என்று கேட்டோம்.

ஷேர்லக் -  செபிக்கே செக் !

''பொருளாதார மந்தநிலையிலும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் துணிச்சலாக விரிவாக்க நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. அது அடுத்த மூன்று வருடங்களில், புதிய பொருட்கள் அறிமுகம் செய்ய, தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய என ரூபாய் 10,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதில் ரூபாய் 7,500 கோடி ரூபாயை வாகனம் மற்றும் வேளாண் துறையில் முதலீடு செய்கிறது. இதேபோல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 24.4 பில்லியன் டாலரை ஆயில் மற்றும் கேஸ் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முதலீடு வரும் 2017-க்குள் செய்யப்பட இருக்கிறது'' என்றார் டீயைக் குடித்தபடியே.

''ரியல் எஸ்டேட் பங்குகள் நொண்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறதே?'' என்றோம்.

''ரியல் எஸ்டேட் விலை சில இடங்களில் கணிசமாக ஏறினாலும், இத்துறையின் முன்னணி நிறுவனங்களான டி.எல்.எஃப்., புருவங்காரா, இந்தியா புல்ஸ், யூனிடெக் நிறுவனப் பங்குகளின் விலை பாதிக்குமேல் குறைந்துள்ளன. இதில் முதலீடு செய்தவர்கள் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்!'' என்றார் சிரித்தபடி.

''பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு திடீரென ஒத்திவைத்திருக்க என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''அரசின் பங்கு விலக்கல் சுணக்கத்தில் இருப்பதே காரணம்! நடப்பு நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி கூடுதல் மூலதனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி இதற்காகப் பயன்படுத்தி கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் இதுவரை 1,323 கோடி ரூபாய்தான் திரட்டப்பட்டிருக்கிறது. இந்த இக்கட்டான நிலையில் பொதுத் துறை வங்கிகளுக்கு இப்போது அவசரமாக கூடுதல் மூலதனம் அளிக்கவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை என நிதி அமைச்சகம் கருதுவதாக தகவல்'' என்று சொன்னார்.

''என்.எஸ்.இ.எல். நிறுவனத்தின் இ.சீரிஸ் இருப்புகள் சரியாக இருப்பதாக தணிக்கை நிறுவனமான ஷார்ப் அண்ட் டானன் அசோசியேட்ஸ் தெரிவித்துள்ளது. இ-சீரிஸுக்கான தங்கம், வெள்ளி கையிருப்பு சரியாக இருந்தால், அதனை டெலிவரி கேட்பவர்களுக்கு தரத் தயக்கம் ஏன் என  இ-சீரிஸில் ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் கேட்கிறார்கள். டெலிவரி கேட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமான நிலையில் பெரும்பாலோருக்கு டெலிவரி கிடைக்கவில்லை என பலரும் புலம்பித் தீர்க்கிறார்கள். வழக்கமாக தினசரி 10-12 பேர் டெலிவரி கேட்பார்கள். இப்போது 1,200 -1,300 பேர் டெலிவரி கேட்கிறார்களாம்'' என்றார்.

''கரன்சி டெரிவேட்டிவ் வர்த்தகமும் குறைந்திருக்கிறதாமே?'' என்று இழுத்தோம்.

''ஆமாம், கடந்த ஜூலையில் என்.எஸ்.இ, எம்.சி.எக்ஸ்.-எஸ்.எஃக்ஸ், யூ.எஸ்.இ. சந்தைகளில் இதன் வர்த்தக அளவு 42% குறைந்து ரூ.7.42 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் ரூ.12.80 லட்சம் கோடியாக இருந்தது. முதலீடுகள் இப்போது சீஸனல் பிசினஸ் மாதிரி ஆகிவிட்டது'' என்றவரிடம் கோல் இந்தியாவின் பைபேக் ஆஃபர் பற்றி கேட்டோம்.

''ரூ.62,000 கோடியை கையிருப்பு வைத்துள்ள கோல் இந்தியா தனது 5 சதவிகித பங்கு விலக்கலை செயல்படுத்த முடியாவிட்டால், பங்குகளைத் திரும்ப வாங்கும் முயற்சியிலும் இறங்கலாம் என்கிறார்கள். இதுபற்றி வரும் 18-ம் தேதி முடிவு எடுக்கப்படுமாம்!'' என்றவர், ''கடைசியாக ரிலையன்ஸ் நிறுவனம் பற்றிய செய்தியோடு முடிக்கிறேன்'' என்று எழுந்தார்.

''இயற்கை எரிவாயுவின் விலை 4 டாலரி லிருந்து 8 டாலருக்கு உயர்த்த மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்ததாக செய்தி வந்தது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் டி-1 மற்றும் டி-3 பகுதியில் இயற்கை எரிவாயு உற்பத்தியைக் குறைக்க காரணம், விலை உயர்த்தப்பட்ட பிறகு உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளலாம் என நினைத்ததால்தானா என்கிற சந்தேகம் இப்போது மத்திய அரசுக்கு வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் நடந்தது என்ன என்பதை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி ஹைட்ரோகார்பன் டைரக்டரேட்டுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த விசாரணையில் ரிலையன்ஸ் எரிவாயு விற்பனையைக் குறைத்தது உண்மை என தெரிய வந்தால் அதன் பங்கு விலை குறையும். எனவே, உஷார்'' என்று கிளம்பத் தயாரானவரிடம் ஷேர் டிப்ஸ் உண்டா என்றோம். ''காலாண்டு முடிவில் பல பங்குகளை நீரே பரிந்துரைத்திருக்கிறீரே! பிறகு நான் வேறு தரவேண்டுமா?'' என்று பொய் கோபம் காட்டிவிட்டு புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism