Published:Updated:

ஜெயிக்க வைத்த நம்பிக்கை !

ஜெயிக்க வைத்த நம்பிக்கை !

ஜெயிக்க வைத்த நம்பிக்கை !

ஜெயிக்க வைத்த நம்பிக்கை !

Published:Updated:
##~##

''வினோத்குமார் என்னைச் சந்தித்தபோது அவருக்கு மாதம் 10,000 ரூபாய்தான் வருமானம். ஆனால், அந்த வருமானத்திலேயும் சிக்கனமாகச் செலவு செய்து மிச்சப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்துடன் என்னைத் தேடிவந்து நிதி ஆலோசனைக் கேட்டார்.

சென்னை மயிலாப்பூரில் தன் மனைவி வினோதினி, இரண்டாவது படிக்கும் மகன் வித்யாதரன் ஆகியோருடன் வசித்து வந்தார் வினோத்குமார். கணவன், மனைவி இருவரும் கேட்ரிங் தொழில் செய்து சம்பாதித்து வந்தனர். கணவன், மனைவி படித்தது குறைவு என்றாலும் அனுபவத்தில் கற்ற விஷயங்கள் பல   என்பது அவர்கள் பேச்சிலேயே புரிந்துகொள்ள முடிந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏழ்மை நிலை!

மயிலாப்பூரில் உள்ள பூர்வீக வீட்டில் வினோத்குமார் குடும்பத்தோடு குடியிருந்ததால்  வாடகை செலவு இல்லை. வினோத் என்னிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தது 2003-ம் ஆண்டு. அப்போது அவருக்கு 30 வயது இருக்கும். வினோதினிக்கு 28 வயது. அந்தச் சமயத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார் விநோதினி. நான் அவர்களுக்கு சொன்ன முதல் ஆலோசனை, வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

''மகன் வித்யாதரனுக்கும் இனி பிறக்க இருக்கும் பிள்ளையின் எதிர்காலத்திற்கும் முதலீடு செய்ய இப்போது உங்களிடம் வருமானம் கிடையாது. அதனால் செய்துவரும் தொழிலை இன்னும் லாபகரமாக்க வேண்டும். அதற்கு நீங்கள் இருவரும் கூடுதலாக உழைக்க வேண்டும்'' என்று சொன்னேன்.

ஜெயிக்க வைத்த நம்பிக்கை !

திருப்புமுனை!

ஆரம்பத்தில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு மற்றும் பேச்சுலர்களுக்கு வீட்டில் சமையல் செய்து தந்தனர். பிறகு, அக்கம்பக்கத்தினரின் வீட்டு விசேஷங்களுக்கும் தேவையான சமையல் வேலைகளையும் ஆர்டர் எடுத்து செய்துதரச் சொன்னேன். இவர்களின் கைப்பக்குவமும், உணவின் ருசியும் மக்களுக்குப் பிடித்துப்போக, அவர்களின் உறவினர்களின் விசேஷங்களுக்கும் சமையல் ஆர்டர்கள் கிடைத்தன. காலப்போக்கில் சமையல் ஆர்டர்களுக்காக வினோத்குமார் அலைந்ததுபோய் அவர் வீடு தேடி சமையல் ஆர்டர் வர ஆரம்பித்தன. அதனால் அவர்களின் வருமானமும் அதிகரித்தது.

அப்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவள் பெயர் மீனா. குழந்தைப் பிறந்த சமயத்தில் மனைவியின் வேலையிடத்தை நிரப்ப நன்கு சமைக்கத் தெரிந்த இருவரைக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தி வேலையை சீராக கொண்டு சென்றிருக்கிறார் வினோத். தொழிலுக்கான செலவுகள், வேலையாட்கள் சம்பளம், இடத்திற்கு வாடகை என எல்லாச்

ஜெயிக்க வைத்த நம்பிக்கை !

செலவுகளும் போக அவர்களுக்கு கிடைத்துவந்த லாபம் மட்டும் 30,000 ரூபாய். வீட்டு நிர்வாகத்திற்கு என்று தனியாகவும், தொழில் என்று தனியாகவும் செலவுகளைச் செய்ததால் லாபத்தை சரியாக பிரித்தெடுக்க முடிந்தது அவர்களால்.

நான் சொல்லாமலே அவர்கள் இதைச் செய்ததைப் பார்த்து ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனால், பிசினஸ் செய்யத் தெரிந்த அளவுக்கு அவர்களுக்கான முதலீட்டை அவர்களால் சரியாக அமைத்துக்கொள்ள முடியவில்லை. அதை செய்துதர வேண்டியது என் வேலையாக இருந்தது.  

முதலீட்டு முறைகள்!

அவர்களின் லாபமான 30,000 ரூபாய்க்கு தனியாக வங்கியில் சேமிப்புக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கச் சொன்னேன். அந்தப் பணத்தில் 70 சதவிகித தொகையை இன்ஷூரன்ஸ், சேமிப்பு மற்றும் முதலீட்டிற்காக ஒதுக்கச் சொல்லிவிட்டு, மீதித் தொகையை அவசரகாலத் தேவைகளுக்கு அப்படியே சேமித்துவரச் சொன்னேன். அவருக்கு அனைத்து முதலீடுகளும் நீண்டகால அடிப்படையில்தான் என்பதால் மூன்றுவகையான முதலீடுகளைப் பரிந்துரை செய்தேன்.

முதலில் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்யாணத்திற்காக மாதம் ஒரு தொகையை நல்ல வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு; அவர்களின் ஓய்வுக்கால தேவைகளுக்காகவும் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு; வினோத் பெயரில் வங்கியில் எஃப்.டி. கணக்கை ஆரம்பித்து ஒரு குறிப்பிட தொகை முதலீடு என மூன்று பிரிவாக முதலீடு செய்யச் சொன்னேன்.  

கட்டாயம் தேவை இன்ஷூரன்ஸ்!

இந்த முதலீட்டு வேலைகளை எல்லாம் தொடங்குவதற்கு முன்பு கணவன், மனைவி இருவரும் வருமானம் ஈட்டுவதால் அவர்கள் இருவர் பெயரிலும் தலா 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சொன்னேன். அதற்கான பிரீமியத்தையும் தொழில் மூலம் கிடைக்கும் பணத்திலிருந்து வருடத்திற்கு ஒருமுறை எடுத்துக் கட்டச் சொன்னேன்.

மருத்துவச் செலவு!

அதேபோல, அவர்கள் நால்வருக்கும் சேர்த்து நான்கு லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்துக் கொடுத்தேன். கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்களே அப்படித்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்த ஆறு மாதத்தில் வயிற்றுப் பகுதியில் கட்டி இருப்பதாகச் சொல்லி வினோத்குமாருக்கு 2 லட்சம் ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகிவிட்டது.

அவர் எடுத்திருந்த மெடிக்ளைம் பாலிசி அந்தச் சமயத்தில் பெரிதும் உதவியாக இருந்தது.  மருத்துவக் காப்பீடு மட்டும் எடுக்காமல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்திருப்போம் என்று என்னிடம் அழுதேவிட்டார் வினோதினி. 'மருத்துவக் காப்பீட்டை எடுத்து அதற்கான பிரீமியத்தைக் கட்டி வரும்போது அதன் அருமை நமக்குப் புரியாது. ஆனால், அதன்மூலம் பலனை அனுபவிக்கும்போதுதான் நம்மையும் மீறிய சந்தோஷம் உண்டாகும்’ என்று அவரைத் தேற்றினேன்.

இன்று மகன் வித்யாதரன் பன்னிரண்டாம் வகுப்பும், மகள் மீனா ஐந்தாம் வகுப்பும் படிக்கிறார்கள். அவர்களுக்கென செய்த முதலீடுகள் எதிர்காலத் தேவைக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. எதிர்காலத் தேவைகளுக்கு வேண்டிய அளவுக்கு செய்திருப்பதால், வினோத்குமார் - வினோதினி தம்பதியர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.  

வெறும் 10,000 ரூபாய் சம்பாத்தியத்தில் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் இன்றைக்கு நிதித் தேவை என்கிற விஷயத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம், என் வழிகாட்டுதல் மட்டுமல்ல, அவர்களின் தளராத உழைப்பும், தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியும்தான்!''

- செ.கார்த்திகேயன்.

குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப
நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism