Published:Updated:

பணவளக்கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

பணவளக்கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

Published:Updated:
##~##

பணம் இல்லாதவர்களுக்கு சம்பாதிப்பதின் ரகசியமும், பணம் வைத்திருப்பவர்களுக்கு அதைப் பாதுகாப்பதில் உள்ள அவசியமும், இருந்ததைத் தொலைத்தவர்களுக்கு மீண்டு வருவதற்கான மனோதிடமும் தேவைப்படுகிறது. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், சுலபமான ஒரு விஷயம் உங்களுக்குப் புலப்படும்.

மனிதர்களைப் பொறுத்தவரை, இல்லாதவர், இருப்பவர், இருந்ததைப் பாதுகாக்காமல் தொலைத்து இல்லாதவராக மாறியவர் என்ற மூன்று வகையானவர்களே இருக்கிறார்கள். இவர்களில் இல்லாதவர்களைப் பற்றி பார்ப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணம் இல்லாதவர்கள் பணம் வைத்திருக்கும் சிலரைப் பார்த்து தானும் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் இயற்கையான (பசி போன்ற) இயல்பு இல்லை. அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பணம் கிடைத்தவுடனேயே அதற்கு மேலும் சம்பாதிக்க சிலர் நிறுத்திக்கொள்வது இதனால்தான். சிலர் மட்டுமே நிறையச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர். ஏன் ஆசைப்படும் அனைவருமே முயற்சி எடுப்பதில்லை?

பணம் வைத்திருப்பவர்களைப் பார்த்து பணமில்லாத அனைவருமே பணம் சம்பாதிக்க ஆசைப்பட வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. உங்களைச் சுற்றி, உங்கள் அலுவலகத்தில், நீங்கள் வசிக்கும் ஏரியாவில் இருக்கும் பல மனிதர்களைப் பாருங்கள். அவர்களை பலவிதமாக பிரிக்க முடியும்.

பணவளக்கலை!

ஆசையேபடாதவர்கள், ஆசை மட்டுமே பட்டுக்கொண்டு நடவடிக்கை ஏதும் எடுக்காதவர்கள், ஆசையும்பட்டு நடவடிக்கையும் எடுத்து அதில் தோற்றுப்போய் இதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்லித் திரிபவர்கள், பணம் சம்பாதிக்கும் முயற்சியில் ஏமாற்றப்பட்டவர்கள்/ஏமாந்தவர்கள், ஒரே ஒரு வெற்றியோடு நடவடிக்கைகளை நிறுத்தியவர்கள், ஒரு வெற்றியைப் பெற்ற வேகத்தில் அகலக்கால் வைத்து சிக்கிக்கொண்டவர்கள், தொடர்ந்து வெற்றி பெறுபவர்கள் எனப் பலவிதமான மனிதர்கள் உங்கள் முன்னே தெரிவார்கள்.

இதில் ஆசைப்படாதவர்கள் என்ற கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆசைப்பட்டுவிட்டு அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பவர்கள் அதே அளவில் இருப்பார்கள். நடவடிக்கை எடுத்து தோற்றவர்கள் குறைந்த அளவிலும், ஏமாளிகள் ஒரு சிலரும், ஒரேயரு வெற்றி பெற்றவர்கள் வெகுசிலரும், தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவாகவும் இருப்பார்கள்.

அதெல்லாம் சரி, ஆசைப்படாமல் இருக்க முடியுமா?, ஆசை எது?, சரியான ஆசை எது? அத்தியாவசிய ஆசை எது? ஆசையை எப்படி நிர்ணயித்துக்கொள்வது? என உங்கள் மனதில் பல முக்கியமான கேள்விகள் எழலாம்.

பணவளக்கலை!

எனக்கு டிவிஎஸ்50, உங்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ், உங்கள் நண்பருக்கு ரேஞ்ச் ரோவர் என்பது அத்தியாவசியமாகத் தோன்றலாம் இல்லையா?! டியோஜென்ஸ் என்ற அறிஞருக்கு அவர் குடியிருந்த பீப்பாய் பெரியதாக இருந்தது. ஆனால், மாவீரன் அலெக்ஸாண்டரின் ஆசைக்கு உலகமே ரொம்ப சிறியது என ஒரு பழமொழியே உண்டு.

ஒரு வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி செட்டிலாகி ரிட்டையராகி போய்ச் சேர்வது பணரீதியான ஆவரேஜ் வாழ்க்கை. ஹவுஸிங் லோன் போட்டு வீட்டைக் கட்டி அந்த வீட்டின் சந்தை மதிப்பு உயர்ந்ததைப் நினைத்து பெருமிதம்கொண்டு வாழும் நிலை அது. நம்மில் பெரும்பாலானோர் வாழும் வழிமுறையும் இது.

இதுதானே வாழ்க்கையில் தேவை. அந்தந்தப் பருவத்தில் அந்தந்த விஷயங்கள்தானே நடக்க வேண்டும் என்ற வாதத்தை நீங்கள் வைத்தீர்கள் எனில் நீங்கள் நல்லதொரு ஆவரேஜ் மனிதர். ஆவரேஜைத் தாண்டி சிந்தனையும் செயல்பாடும் செல்லவைப்பதில்தான் பண ரீதியான வெற்றி ஒருவருக்கு கிடைக்கிறது. அது என்ன அவ்வளவு சுலபமா என்கின்றீர்களா? விரிவாகப் பார்ப்போம்!.

மனிதனின் மூளைக்கு கோடிகளில் கணக்கிடத் தெரிந்தாலும் கண்ணில் தெரியும் விஷயங்களுக்கே பெரிய அளவில் ஆசைப்படுகிறான். அறிவுக்கு எட்டுவதைவிட அனுபவத்திற்கு எட்டுவதன் மீதே ஆசை வருகிறது. ஒரு நேர்க்கோட்டில் மாடிப்படி போன்ற அமைப்பிலேயே ஆசை அமைகிறது. அடுத்தடுத்து ஒவ்வொருபடியாக ஏறவேண்டும் என்பதுதான் நமக்குச் செய்யப்படும் போதனை. ஏன் படியில தாவித்தாவி நடக்கிறே, மண்டைய உடைச்சுக்கவா? என்று ரிஸ்க் குறித்த முதல் பாடத்தைக் குழந்தையிலேயே சொல்லித்தர ஆரம்பித்துவிடுகிறோமே!

ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். 150 பேர் வேலை பார்க்கும் ஒரு பெரிய அலுவலகம். 10 பேர் அதில்  கடைநிலை ஊழியர்கள். அவர்களுக்குள் இருக்கிற ஆசையைக் கூர்ந்து பாருங்கள். சம்பள உயர்வின்போது யாருக்கு அதிகம் என்பது முதலாவதான ஆசை. யாராவது ஒருவருக்கு சம்திங் கிடைத்தால் அதில் ஆசை. யாராவது ஒருவர் பதவி உயர்வு பெறுகிறவரை யாருக்கும் புரமோஷனில் ஆசையிருக்காது. அவர்களில் யாராவது ஒருவர் சிறிய தொழில் செய்தால் (சைடு பிசினஸாக ஊறுகாய்கூட விற்கலாம்!) மற்றவர்களுக்கு அதில் ஆசை. இப்படி அவர்களுடைய சர்க்கிளில் இருக்கும் முன்னேற்றத்தினைப் பற்றியே ஆசை கொள்வார்கள்.

பணவளக்கலை!

கிளார்க்குகள் அவர்கள் மத்தியிலும், மேலாளர்கள் அவர்கள் மத்தியிலும் போட்டி யினால் ஆசைகள் கொண்டிருப்பார்கள். பெரிய அளவில் படிநிலைகள் மாறி ஆசைகள் இருக்காது. அதாவது, ஒரு மாடிப்படியில் முதல் படியில் இருந்து பத்தாவது படிக்கு தாவும் எண்ணம் - ஒரு பியூனுக்கு ஜெனரல் மேனேஜரின் வருமானத்தைப் பெறவேண்டும் போன்ற எண்ணம் - குறைவாகவே இருக்கும்.

வேலைக்குச் சேர்ந்த அன்றே இந்த கம்பெனிக்கு முதலாளியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் சேரும் நபர்கள் நம்மில் எத்தனைபேர் இருக்கிறோம்? காரணம், நம்முடைய வளர்ப்பு முறை அப்படியே இருக்கிறது. ஒரு சிஸ்டத்தின் கீழ் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறோம். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் பத்தாவது படிக்கு ஒரேயடியாகத் தாவும் எண்ணம் தோன்றும். லட்சத்தில் ஒருத்தருக்குத்தான் நான் இதுபோன்ற தொழில் செய்து (படியெல்லாம் பத்தாது, லிப்ட்தான் வேண்டும்!) ஓஹோ என்று வரவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மில்லியனில் ஒருத்தருக்குத்தான் வேலை செய்யும் கம்பெனியை டேக் ஓவர் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். தோன்றவேண்டும்! இல்லாவிட்டால் இடைஞ்சல்தான்!.

அனுபவத்தில் உணரும் விஷயங்களுக்கு மட்டுமே ஆசைப்படும் மனிதர்களில் பலர் அந்த லெவலிலேயே திளைத்துவிடுகிறார்கள். அங்கேதான் ஆசை மட்டுப்பட்டுவிடுகிறது. எங்க ஜி.எம். நினைச்சா?, எங்க முதலாளி நினைச்சா...? என மேலதிகாரியையும் முதலாளி யையும் தெய்வமாகவும்/ ஹீரோவாயும் நினைத்து செயல்படும் ஒரு கூட்டம்தான் உலகை இயக்கிக்கொண்டிருக்கிறது. ஆசையில்லாதவர்கள் என்று நான் குறிப்பிடுவது இவர்களைத்தான். மேலதிகாரியையும்/ முதலாளியையும் ஹீரோவாக்கி ரசிக்க ஆரம்பிக்கும் இவர்கள் நல்லதொரு ரசிகனாய் வாழ்ந்துமுடித்திருப்பார்கள். இதை நிஜத்தில் ரசிக்கவேண்டும் என்றால் முதலாளிகளின் டிரைவர்களிடம் கொஞ்சம் பேச்சு கொடுத்துப் பாருங்கள். இந்தவகை ஹீரோ வொர்ஷிப் என்றால் என்ன என்பதன் அர்த்தம் உங்களுக்குப் புரியும்.

வாங்கும் சம்பளத்துக்கு கடனுக்கு பார்க்கப் படும் வேலைகள் கம்பெனியை ஜெயிக்க வைப்பதில்லை. மேலதிகாரி காப்பாற்றுவார், முதலாளி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை சிஸ்டத்தில் திளைக்கும் நாம் ஓவர்டேக் செய்யும் மனநிலையை இழந்துவிடுகிறோம். அதனாலேயே நிர்வாகங்கள் பயன் பெறுகிறது.

ஆனாலும் நிர்வாகங்கள் ஆவரேஜ்களை நம்பியே இருந்தபோதிலும் தனித்துவம்/கிரியேட்டிவிட்டி/ அக்ரெஷன் என்பதைப் பற்றியெல்லாம் பயிற்சி வகுப்புகளும் கருத்தரங்கு களும் செலவு செய்து நடத்தும். இவற்றின் நோக்கமே, உங்களுக்கு கொடுக்கப்படும் எல்லைக்குள்ளேயே உங்களுக்கான தனித்துவம்/ கிரியேட்டிவிட்டி/ அக்ரெஷன் எல்லாம் இருக்கவேண்டும் என்பதைச் சொல்லத்தான். தரப்பட்ட எல்லையைத் தாண்டினால் அது எல்லையைத் தாண்டிய பயங்கரவாதமாகவே நிறுவனங்கள் கருதும்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வாழும் மனிதர்கள் எல்லைத் தாண்டி கிடக்கும் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லையே? என்னதான் ஜெயில் காம்பவுண்டுக்குள் வைக்கப்படும் ரேஸில் ஓலிம்பிக் வீரனைவிட வேகமாக ஓடினாலும் என்ன பிரயோஜனம்? ஒலிம்பிக்கில் ஓட முதலில் ஜெயிலைவிட்டு கட்டாயம் வெளியே வந்தாக வேண்டுமே! இது வேலை பார்ப்பவர்களுக்கு மிகவும் பொருந்தும்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism