இளைஞர்களை இன்டலிஜென்ட் ஆக்கும் தொடர்!

நம்பி நட!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்றைக்கு இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய மந்திரம் என்ன? என்கிற என் கேள்விக்கு நஸ்ரீன் சொன்ன பதில்... 'நம்பி நட..!’

'நம்பிக்கை வேணும். நம்மால இதைச் செய்துகாட்ட முடியும்னு  நம்பணும். நம் லட்சியம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது கடினமானதா இருக்கும். இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு, நாளைக்கு இல்லைன்னா அதற்கும் மறுநாள் நிச்சயமா நடந்தே தீரும்னு நம்பணும். இன்னைக்கு இளைஞர்கள் கிட்ட,  நம்பிக்கையின்மை அதிகமா இருக்குமோன்னு எனக்குத் தோணுது. இது மாறணும்’.

நஸ்ரீன் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. நம்பிக்கை மிக முக்கியம். ஆனால், நம்பிக்கை என்கிற சொல்லை நாம் மிகத் தவறாகப் பொருள் கொள்கிறோம். மிதமிஞ்சிய விஷயங்களை மிகச் சாதாரணமாகச் செய்து காட்டிவிட முடியும் என்று நம் இளைஞர்களை நாம் நம்பவைக்கப் பார்க்கிறோம். நம்பிகையூட்டுதல் என்கிற பெயரில் தவறான வழிகாட்டுதல்களை அவர்களுக்குப் புகட்டி, வாழ்க்கையின் நிதர்சனங்களில் இருந்து இளைஞர்களை அந்நியப்படுத்திவிட்டோம்.

நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறபோது அதன் இரண்டு முக்கியமான மூலக்கூறுகளைப் பற்றி சொல்லியாக வேண்டும். ஒன்று, வரையறைகள் (limitations) இரண்டு, சாத்தியக்கூறுகள் (possiblities). முதலில் நாம் வரையறைகளைப் பற்றிப் பார்ப்போம்.

எதிர்கொள்

ஒவ்வொருத்தருக்குமே ஏதாவது சில வரையறை இருக்கவே செய்யும். ஒரு நாட்டுக்கு அதிபராக இருந்தாலும் அவருக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். எல்லோராலும் எதையும் எப்போது வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்துல சாம்பியனா இருக்கிறவன், 100 மீட்டர் பந்தயத்துல ஜெயிச்சுடுவான்னு சொல்ல முடியுமா..? 'எனக்கு சிறகிருந்தால்... வானத்துக்கே பறந்து செல்வேன்...’ என்று நினைக்கலாம். நாம வளர்க்கற கோழிக்கும் சிறகுகள் இருக்குதானே..? மிஞ்சிப் போனா அது நம்ம வீட்டுக் கூரை வரைக்கும்தான் பறக்கும். குருவி, காக்கா எல்லாம் மரஉச்சி வரைக்கும் போகும். கழுகு, பருந்து எல்லாம் இன்னும்கூட கொஞ்சம் உயரம் பறக்கும். தன்னால எவ்வளவு உயரம் பறக்க முடியும்னு அதுக்குத் தெரியும்.

இதெல்லாம் தனிநபர் சார்ந்த வரைமுறை. காலம் சார்ந்த வரைமுறைதான் இதைவிட முக்கியமானது. எந்த விஷயத்தையும்  செய்துமுடிக்க ஒரு காலவரைமுறை இருக்கிறது. 40 வயது கடந்தவர் ஐ.ஏ.எஸ்-ஆக முயற்சிக்க முடியுமா..? அது மட்டுமல்ல, எல்லாத் தகுதிகளும் உடைய இளைஞனாக இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் ஐ.ஏ.எஸ். ஆக முடியாதல்லவா..?

வரையறைக்கும் சாத்தியக் கூறுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. சாத்தியம் ஆகாதது எதுவும் நம்பிக்கை வைப்பதால் மட்டுமே சாத்தியம் ஆகிவிடாது. கலியபெருமாள்னு ஒரு பெரியவரு. தள்ளுவண்டியில வாழைப்பழ வியாபாரம் பண்றவரு. நாள் தவறாம எங்க குடியிருப்புக்கு வந்துட்டுப் போவாரு.

'எத்தனை நாளா இந்த வியாபாரம்..?ன்னு கேட்டேன்.

'ஒரு முப்பது வருஷமா..!’  

'என்னது..?’ ஆச்சா¢யப்பட்டுப் போனேன். 'முப்பது வருஷமாவா? இதைவிட பெருசா எதுவும் முயற்சி செஞ்சிருக்கலாமே!’

'வேற என்ன பண்ணியிருக்க முடியும்னு தெரியலை... ஆனா.., இதுலயே கொஞ்சம்

கொஞ்சமா வளர்ந்து இருக்கேன். புள்ளைங் களைப் படிக்க வச்சிருக்கேன். முன்னே கடன் வாங்கித்தான் சரக்கு வாங்கி வருவேன். இப்ப, என் சொந்த முதலீட்டுல நடத்துறேன். ஏறக்குறைய என் கடமை எல்லாம் முடிச்சுட்டேன்... சொந்தமா ஒரு கடை போடலாமான்னு பார்க்கிறேன்...’

எதிர்கொள்

'இந்தக் கடை போடற விஷயம் எல்லாம் எப்பவோ பண்ணியிருக்கணும்...’

'நீங்க சொல்றது சரியா இருக்கலாம். ஆனா, அகலக் கால் வைக்கக்கூடாதுன்னு எனக்குத் தோணுச்சி. நம்ம சக்திக்கு மீறிய எதுக்கும் ஆசைப்படக் கூடாது. எங்கேயாவது கடனை வாங்கிக் கடை போட்டு இருக்கலாம்தான். அது நல்லாப் போகலைன்னா..? வாங்கிய கடனைத் திருப்பிக் குடுக்கணும் இல்லை..?

இவ்வளவுதான் நம் வாழ்க்கைன்னு முடங்கிப் போயிடக்கூடாது, ஒத்துக்கறேன். அதேசமயம், நமக்கு என்ன முடியுமோ... எவ்வளவு அடி விழுந்தா நம்மால தாங்கிக்கொள்ள முடியுமோ...அவ்வளவுக்குத்தான் முயற்சிக்கலாம்.

என் பையன் இப்போ ரெண்டு மாசமா வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கான். இந்த மாசம் ஏதோ வண்டி வாங்கணும்னு சொன்னான். சரின்னு சொல்லிட்டேன். இன்னும் ரெண்டு வருஷமோ, மூணு வருஷமோ போனா கார் வாங்குனாலும் வாங்குவான். இதெல்லாம் எதுல இருந்து வந்தது..? நான் வாழைப்பழம் வித்து அதுல அவனைப் படிக்க வச்சதனாலதானே..? இதுதான் முன்னேற்றம்ங்கறது. ஒரே நாள்ல கோபுரத்து மேல ஏறி உட்கார்ந்துடறது இல்லை. படிப்படியாதான் எதுவும் சாத்தியம் ஆவும். இதை நாம புரிஞ்சிக்கிட்டாப் போதும்.’

நஸ்ரீன் சொன்னதுக்கும் பெரியவர் கலியபெருமாள் சொன்னதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சில 'லிமிடேஷன்ஸ்’களுக்கு உட்பட்டு தான் நாம் காரியம் ஆற்ற வேண்டியிருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய்துவந்தால் வெற்றி பெறலாம் என்கிற நம்பிக்கை தேவை.

யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது. அதில் முழுநம்பிக்கை வைத்துச் செயல்படுவது மிக முக்கியம். 'நம்பி நட’க்கிற அதேநேரத்தில் தெளிவான 'ஆக்க்ஷன் ப்ளான்’ நிச்சயம் வேண்டும்.

தம்மிடம் இருக்கும் அத்தனை 'வரையறை’களையும் அறிந்து, அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்பட்டு வெற்றி அடைந்த ஓர் இளைஞி சொல்லும் அற்புதமான ஃபார்முலாவை அடுத்த வாரத்தில் சொல்கிறேன்!

(தெளிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism