Published:Updated:

தங்கநகை அடமானம்... ஆர்.பி.ஐ. புது நெருக்கடி !

தங்கநகை அடமானம்... ஆர்.பி.ஐ. புது நெருக்கடி !

##~##

வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் தங்க நகை அடமானம் தருவதற்கு பல புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருக்கிறது மத்திய ரிசர்வ் வங்கி. கடன் தரும்போது, அடமானம் பெற்ற நகையின் தரம் (கேரட்), எடை ஆகியவைப் பற்றிய விவரத்தை வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்களது நிறுவன ஆவணத்தில் குறிப்பிட்டு வாடிக்கையாளருக்கு தரவேண்டும்:

5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெறும் வாடிக்கையாளரிடம் இருந்து பான் கார்டு நகலை கேட்டு பெறவேண்டும்: 1 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைக் கடனாகப் பெற்றால் ரொக்கமாகத் தராமல் காசோலையாக வழங்கவேண்டும்: கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது எல்லாக் கிளை களிலும் ஒரே மாதிரி ஆவணங்கள் முறையைத்தான் பின்பற்றவேண்டும்: மேலும், அனைத்து வாடிக்கையாளர்களிடமும் கே.ஒய்.சி பெற வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது ஆர்.பி.ஐ.  

இந்தப் புதிய கட்டுப்பாடுகளால் மக்களுக்கு என்ன நன்மை, இதனால் பயன் அடையப்போவது யார்? என்று ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் கே.சுவாமிநாதனிடம் கேட்டோம். விளக்கமாகவே எடுத்துச் சொன்னார் அவர்.

''ஆர்.பி.ஐ. கொண்டுவந்திருக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் நல்ல எண்ணத்துடன் கொண்டுவரப்பட்டிருந்தாலும், அதனால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்! உதாரணமாக, நகைக் கடன் மூலம் மக்களுக்குத் தரவேண்டிய பணம் காசோலை மூலம்  தரப்பட்டு, வங்கி வழியாகப் பரிமாற்றம் செய்யவேண்டும் என்கிறது ஆர்.பி.ஐ.

தங்கநகை அடமானம்... ஆர்.பி.ஐ.  புது நெருக்கடி !

நடுத்தர மக்களும்  பிற்படுத்தப்பட்ட மக்களும்தான் அதிக அளவில் தங்க நகையை வைத்து கடன் வாங்குகிறார்கள். ஏதோ ஓர் அவசரத் தேவையாகத்தான் தங்க நகையை அடமானம் வைக்கிறார்கள். அந்தச் சமயத்தில் பணத்தைக் காசோலையாகவே தருவோம் எனில், அதை எப்போது வங்கியில் டெபாசிட் செய்து பணத்தை எடுப்பது? அவசரமாக பணம் தேவைப்படுகிறவர்கள் இனி அங்கீகரிக்கப்படாத கந்து வட்டி கடை களை நோக்கியே செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது அரசே மக்களை கந்து வட்டி கடைகளுக்கு கைகாட்டிவிடுவது போலாகும்.

தவிர, தங்க நகைக்கு எவ்வளவு பணம் தருகிறார்கள்? எவ்வளவு வட்டி கேட்கிறார்கள் என்றெல்லாம் யோசிப்பதைவிட, எவ்வளவு சீக்கிரம் பணம் கிடைக்கும் என்று யோசிக்கும் மக்கள்தான் இங்கு அதிகம். அவர்களிடம் போய் பான் கார்டு வேண்டும், பேங்க் அக்கவுன்ட் வேண்டும், செக்கில்தான் பணம் தரமுடியும் என்றெல்லாம் சொன்னால் அது யதார்த்தத்திற்கு புறம்பான தாகவே இருக்கும்.

தங்கநகை அடமானம்... ஆர்.பி.ஐ.  புது நெருக்கடி !

முதலில் மக்கள் ஏன் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் நகையை அடமானம் வைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் சுமார் 15 நிமிடங்களில் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்கிவிட முடியும். ஆனால், ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவதற்குள் அரை நாள் ஓடிவிடும். இப்படி காத்திருக்கப் பயந்துதான் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை நோக்கி செல்கிறார்கள் மக்கள்.  

இந்தச் சமயத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள கட்டுப்பாடுகளைக் குறைத்திருந்தால், மக்கள் எளிதாக கடன் வாங்கக்கூடியச் சூழ்நிலை உருவாகி இருக்கும். பாதுகாப்பான முறையில் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெறுவதோடு,  வட்டியும் குறைந் திருக்கும். அரசுக்கு இதனால் ஒரு வருவாயும் வந்திருக்கும். ஆனால், தற்போது மக்கள் பணத்தையும் இழந்து, நகையையும் இழக்கும் அபாயத்துக்கு இந்த அரசாங்கமே தள்ளுகிறது.

மேலும், 20 கிராம் தங்கத்திற்கு மேல் அடகு வைப்பவர்கள் அந்த நகைக்கு உண்டான ஓனர்ஷிப் ரசீது தரவேண்டும் என்று ஆர்.பி.ஐ. சொல்லி இருப்பது சாத்தியமில்லாத விஷயமே. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 20,000 கிலோ தங்கம் விற்பனையாகி இருக்கிறது என்றால் அதில் 2,000 கிலோ தங்கத்திற்கு மட்டுமே ரசீது வாங்கப்பட்டிருக்கும். ஏனெனில், வரிக்கு பயந்து ரசீது வாங்காதவர்கள்தான் நம் நாட்டில் அதிகம். ஆனால், அந்த வரி செலுத்தப்படாத தங்கத்தின் மீது கடன் வாங்கும்போது, ரசீது கேட்டால் எப்படி தருவார்கள்? தவிர, ஹால்மார்க் நகைகளை விற்கும்போதுதான் நகைக் கடைகள் ரசீது தருகின்றன. சிறிய கடைகள் ரசீது ஏதும் தருவதில்லை.

மேலும், மும்பை தங்க நகை வியாபாரிகள் சங்கம் வெளியிடும் 22 கேரட் தங்கத்திற்கான முந்தைய 30 நாட்களின் சராசரி விலையைக்

தங்கநகை அடமானம்... ஆர்.பி.ஐ.  புது நெருக்கடி !

( தினசரி வர்த்தக முடிவு விலை) கணக்கிட்டு, அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் 60% மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது. இது ஏற்கெனவே இருந்ததுதான் என்றாலும் அதை சரிவர சில நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்கவில்லை.  இதனை நெறிபடுத்துவதற்காகவே புதிய உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.

அடகு வைத்த நகைகளை ஏலம் விடும் முறையையும் ரிசர்வ் வங்கி முறைப்படுத்தி உள்ளது. இனி தங்க நகைகளை ஏலம் விடும் போது அந்தந்த தாலுகாவில் மட்டுமே  ஏலம்விட வேண்டும். ஏலம் விடும்போது கடந்த 30 நாட்களின் சராசரி விலையின் 85 சதவிகிதத்திற்கு கீழ் ஏலம் விடக்கூடாது என்றும் சொல்லி இருக்கிறது. இதெல்லாம் வரவேற்கத்தகுந்த விஷயம்தான். ஆனால், மக்களுக்கு குறைந்த வட்டியில் எளிதில் கடன்   கிடைக்க ஆர்.பி.ஐ. நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முடித்தார்.

பாமர மக்களின் உடனடித் தேவைக்கு பணம் கிடைப்பதைத் தடுக்காமல், எல்லோருக்கும் எளிய வங்கிச் சேவை தர ரிசர்வ் வங்கி  நடவடிக்கை  எடுத்தால் போதுமே!

- சே. புகழரசி.

அடுத்த கட்டுரைக்கு