இளைஞர்களை இன்டலிஜென்ட் ஆக்கும் தொடர்!

ஆசை முதல் இலக்கு வரை!

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதியில் ஆண், பெண் இருபாலரும் படிக்கும் ஒரு கலை அறிவியல் கல்லூரி; தலைமைப் பண்புகள் குறித்து ஒரு நாள் பயிலரங்கம்; நிறைவில், ஆண்களில் இருந்து ஒருவரும் பெண்களில் இருந்து ஒருவருமாகச் சிறந்த 'தலைவரை’ இருவரைத் தேர்வு செய்தேன். அதில் ஒருவர்தான் ஸ்ரீநிதி.

இவர், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி. கணிதம் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தார். தன்னம்பிக்கை, சரளமாகப் பேசும் திறனும் கணிதத்தில் மிகுந்த ஆர்வமும் திறமையும் அவரிடத்தில் நிரம்ப இருந்தன. தமிழை அப்போதுதான் கற்றுக்கொள்ளத் தொடங்கி இருந்தார்.

'தமிழ்நாடு எப்படி இருக்கிறது..?’

'ஐ யம் ஸோ ஹேப்பி டு பீ ஹியர். ஐ யம் லேர்னிங் டமில்... கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன்...’

'தனியாக தங்கி இருந்து படிக்கிறீர்களே... கடினமாக இல்லையா..?’

'ஆரம்பத்தில் அப்படி இருந்தது. இப்ப இல்லை. நான் ஒண்ணும் ஃபாரின் கன்ட்ரியில இல்லையே... தமிழ்நாடும் இந்தியாவுலதானே இருக்கு..?’

'பட், இங்க நீங்க தனியா இருக்கும்போது, யூ வில் ஹேவ் டு ரன் தி ஷோ ஆல் பை யுவர்செல்ஃப் இல்லையா..?’

'இங்க வந்த முதல் நாள், எனக்குத் தெரிஞ்சவங்க யாருமில்லை... இப்ப எக்கச்சக்கமா ஃப்ரண்ட்ஸ் கிடைச்சுருக்காங்க... நான் வேற ஸ்டேட்ல இருந்து வந்துருக்கிறதால என்னை எல்லாரும் 'ஸ்பெஷலா’ கவனிச்சுக்கறாங்க..! என் டீச்சர்ஸ், ஃப்ரண்ட்ஸ்னுட்டு ஒவ்வொருத்தரும் கேர் எடுத்துக்கறாங்க...’

'நீங்க சென்னைக்கு வந்த நோக்கம் நிறைவேறிடுச்சா..?’

எதிர்கொள்!

'பல விஷயங்கள் நிறைவேறிக்கிட்டுருக்கு. இங்க வந்த ரெண்டு வருஷத்துல நான் பல விஷயங்களை 'கெய்ன்’ பண்ணியிருக்கேன்.  முன்னவிட இப்ப நல்லா இங்கிலீஷ் பேசறதா தோணுது... புதுசா ஒரு லேங்குவேஜ் அறிமுகம் ஆயிருக்கு... புதிய மக்களும் புதிய அனுபவங்களும் கிடைச்சிருக்கு... எல்லாத்தை விடவும், 'லைஃப்’ பத்திய ஒரு புரிதல் வந்திருக்கு. இதுதான் ரொம்பப் பெரிய இம்ப்ரூவ்மென்ட்னு நினைக்கிறேன்...’

'அது என்ன 'புரிதல்’..? தெளிவாச் சொல்ல முடியுமா..?’

'நான் தெரிஞ்சிக்கிட்டது என்னன்னா, ஒரு விஷயத்துக்கு நாம ஆசைப்பட்டோம்னா, முதல்ல அதுக்குத் தேவையான தகுதியை நாம வளர்த்துக்கணும். அப்பதான் அது நம்முடைய இலக்காக மாறும். அதாவது, முதல்ல நம்முடைய பாதங்களை வலிமையாக்கிட்டு அப்புறம்தான் நடக்கத் தொடங்கணும். முன்ன வெறுமனே ஆசையாவும், கனவாவும் இருந்தது இப்ப ஓர் இலக்காக மாறியிருக்கு. இது நல்ல முன்னேற்றம்தானே..?’

'ஆக, நினைச்சதைச் சாதிச்சு டுவீங்க..?’

'யெஸ். வொய் நாட்..? முதல்ல டிகிரி முடிக்கணும். மீன் டைம், வேல்யூ ஆடட் கோர்ஸஸ் மாறிமாறிப் போய்க்கிட்டு இருக்கேன். ஒவ்வொண்ணுமே ரொம்ப யூஸ்ஃபுல்லாதான் இருக்கு. நாம எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் நம்மை மேலமேல கொண்டு போகுதுங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை. நிச்சயமா சாதிக்க முடியும்னு நான் நம்பறேன். என்ன..., இட் வில் டேக் இட்ஸ் வோன் டைம். அதுவரைக்கும் பொறுமையா இருக்கணும். அதுதான் முக்கியம்...’

ஏறத்தாழ ஆறு மாதங்கள் கழித்து அவளிடம் இருந்து இ-மெயில் வந்திருந்தது.

எதிர்கொள்!

'கேம்பஸ் இன்டர்வியூவில்... கம்பெனியில் வேலைக்குத் தேர்வாகியிருக்கிறேன். முழு ஆண்டுத் தேர்வுக்குப் பிறகு சேர இருக்கிறேன்...’

மகிழ்ச்சியாக இருந்தது. 'நல்லது; இதுவே உங்களது கனவு அல்லது இலக்கு என்று உணர்கிறேன். பயணம் தொடரட்டும்’ என்று பதில் அனுப்பினேன்.

ஒரு சில நிமிடங்களிலேயே மீண்டும் ஒரு மெயில் வந்தது 'நீங்கள் சொல்வது சரிதான். யூ வில் ஹியர் மோர் ஃப்ரம் மீ...’

இது நடந்து தற்போது மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இடையில் இரண்டு முறை பணி மாறிவிட்டாள். எம்.பி.ஏ. முடித்து மேலும் மேலும் பணி உயர்வு பெற்று தற்போது ஆஸ்திரேலியாவில் முன்னணி நிறுவனம் ஒன்றில் பொறுப்பான பதவியில் இருக்கும் அவளின் வாழ்க்கை ஏறுமுகமாகவே இருப்பதன் ரகசியம் என்ன..?

'தன்னம்பிக்கை. வேறு ஒன்றுமே இல்லை’ என்று அவளே சொன்னாள்.

சாதாரண 'டீன் ஏஜ்’ பெண்ணாக, தனியே வேறு ஒரு மாநிலத்துக்கு வந்து, முற்றிலும் புதிய சூழலுக்குத் தன்னை மாற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு திட்டமிட்டு உழைத்ததன் பின்னணியில் இருந்தது தன்னால் முடியும் என்ற நம்பிக்கை. அது ஏதோ குருட்டுத்தனமான ஒரு மூடநம்பிக்கையாக இல்லாமல், தன்னை இயக்குகிற சக்தியாக அதை மாற்றி அமைத்துக்கொண்டதுதான் அவளது சாமர்த்தியம். மேலும் மேலும் செயல்புரியத் தூண்டாத எந்தவொரு சிந்தனை யும் திட்டமிடலும் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவாது. அதை சரியாகப் புரிந்துகொண்டு நடப்பவர்களால்தான் சாதிக்க முடிந்திருக்கிறது.

எந்த ஒரு முனையில் இருந்தும் தமக்கு ஆதரவு வராத நிலையிலும் தன்னந்தனியே போராடிப் போராடி வெற்றி பெற்ற இளைஞர்கள் ஏராளம். அதிகக் கல்வியறிவு இல்லாத பெற்றோர்; சமூகப் பொருளாதார ரீதியாக தமக்கு உதவ முடியாத உறவுகள், நண்பர்கள்; மொழி, கலாசாரம், அலுவலகச் சூழல் எல்லாமே புதிது. இத்தனையும் தாண்டி தம் வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொள்கிறவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை மட்டும்தான் துணையாக இருந்திருக்கிறது.

தன்னம்பிக்கை எந்த அளவுக்கு முக்கியமோ, அதற்குச் சற்றும் குறைவின்றி மிக முக்கியமானது நம் மீது பிறர் வைக்கும் நம்பிக்கையும். பாண்டியன், ராஜேந்திரன் என்று இரண்டு நண்பர்கள். விழுப்புரம் மாவட்டத்தில், அருகருகே இருக்கக்கூடிய சிற்றூரைச் சேர்ந்தவர்கள். பள்ளிப் படிப்பைத் தாண்டாதவர்கள்.

கிட்டத்தட்ட முப்பது வயது வரையில் 'வேலைவெட்டி’ இல்லாமல் சுற்றிச்சுற்றி வந்துகொண்டு இருந்தார்கள். சொந்த ஊரில் வேலைக்கோ, தொழில் தொடங்குவதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை என்று புரிந்துகொள்ளவே அவர்களுக்கு முப்பது வயது ஆகிவிட்டது. சிறிது சிறிதாக வறுமையின் நிஜ வடிவத்தை உணர ஆரம்பித்தார்கள்.

தூரத்து உறவினர் ஒருவர் சென்னையில் மளிகைக் கடை வைத்திருப்பதை அறிந்து, சென்னைக்கு வந்து அந்தக் கடையில் பொட்டலம் கட்டும் வேலையில் சேர்ந்தான் ராஜேந்திரன். அடுத்த மாதமே பாண்டியனையும் வரவழைத்துக் கொண்டான். கடை 'ஓனர்’, நல்லவராக இருந்தார். கவனித்து கவனித்து வேலையைக் கற்றுக் கொடுத்தார். தீபாவளிக்கு ஓரிரு நாட்கள் முன்னர் இருவரையும் கூப்பிட்டுச் சொன்னார்.

'ரெண்டுபேரும் நல்லாதான் வேலை பண்றீங்க. வெளிய போயி தனியா கடை போட்டு நடத்த முடியுங்கற நம்பிக்கை இருந்தா சொல்லுங்க. கொஞ்சமா முதல் போட்டு கடை வச்சி தர்றேன்; அப்பப்போ பணத்தைத் திருப்பித் தாங்க...’

அப்படியே நடந்தது. இருவரும் சேர்ந்து நடத்திய கடை நல்ல லாபம் தந்தது. பிறகு தனித்தனியே வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். இன்று..? சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இவர்களது வியாபாரம் கொடிகட்டிப் பறக்குது. கடுமையான உழைப்பு மற்றும் நேர்மையான வியாபாரம்தான் அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்றாலும் அதற்கு அடித்தளம் இட்டது ஆரம்பத்தில் ராஜேந்திரனின் தூரத்து உறவினர், இவர்கள் மீது வைத்த நம்பிக்கைதானே..?

ஆம். 'இன்டெலிஜென்ட்’ ஆவதற்கான அடுத்த சூத்திரம் இதுதான் 'நம்பிக்கைக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள்’. சின்னஞ்சிறு கடையாக இருந்தாலும், பல்லாயிரம் கோடி முதல்கொண்ட பன்னாட்டு நிறுவனமாக இருந்தாலும் இதே விதிதான். சற்றும் மாற்றமில்லை. இந்த விதியைப் பின்பற்றி, ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வந்த ஒருவரின் அனுபவம் மிகச் சுவையானது. அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தெளிவோம்)

 முதலீட்டில் வளரும் சிறு நகரங்கள்!

பெரிய நகரங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சிறிய நகரங்களில் வசிப்பவர்களும் இன்றைக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். கடந்த 2012-13 நிதியாண்டில் என்.எஸ்.இ.யில் வர்த்தகம் செய்த வாடிக்கையாளர்களில் 50 சதவிகிதம் பேர் சிறு நகரங்களைச் சேர்ந்தவர்களே என என்.எஸ்.இ கூறியுள்ளது.

ரொக்க பரிவர்த்தனை வர்த்தகத்தின் மொத்த டேர்னோவரில் டயர் 1 மற்றும் டயர் 2 நகரங்கள் அல்லாத சிறு நகரங்களில் உள்ள முதலீட்டாளர்கள் 43.7 சதவிகிதம் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளனர். டயர் 1 நகரங்கள் என்பது பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களை உள்ளடக்கியது. டயர் 2-வில் அஹமதாபாத் ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, புனே மற்றும் சூரத் போன்ற நகரங்களை உள்ளடக்கியது. நல்ல விஷயம்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism