Published:Updated:

பணவளக்கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

பணவளக்கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

Published:Updated:
##~##

நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற சூழலில் இருக்கிற சிஸ்டங்களும், நம்முடைய நம்பிக்கைகளும் எப்படி நம்முடைய சம்பாதிக்கும் திறனை மட்டுப்படுத்துகிறது என்று சென்ற வாரம் பார்த்தோம். இந்த வாரம் நம்முடைய நம்பிக்கைகள் எப்படி நம்மை சம்பாதிக்க விடாமல் தடுக்கும் என்றும், அந்தத் தடுப்பைத் தாண்டிச் செல்ல நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் பார்ப்போம்.

நம்பிக்கை என்றால் எது? அடிப்படையில் நம்பிக்கை என்பது நம்மால் ஒரு விஷயம் முடியும் அல்லது முடியாது என்று நாமாகவே மனதில் கணக்குப் போட்டு அதை மனதளவில் ஊர்ஜிதம் செய்துகொள்வதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் சொல்பவர்கள், என்னால் முடியாது என்று வெளிப்படையாகச் சொல்பவர்கள், முடியும் என்று சொல்லிவிட்டு முயற்சிக்காதவர்கள், முடியாது என்று சொல்லிவிட்டு ரகசியமாக முயற்சிப்பவர்கள்... என பலவகைப்பட்ட மனிதர்கள் இருக்கும்  சமுதாயக் கூட்டத்தினுள்ளேயே நாம் வாழ்ந்து வருகிறோம்.

இப்போது தன்னம்பிக்கை என்பது மனிதர்களிடையே மிக மிக அரிதான பொருளாக இருந்து வருகிறது. துணிந்து இறங்குங்கள் என்றெல்லாம் சொல்வது சுலபம். மனைவி, மகன், வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ.ன்னு எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு எப்படித் துணிந்து இறங்க முடியும் என்று கேட்பீர்கள். மனுஷனுக்கு இருக்கிற பிரச்னையில  எப்படி சார் தன்னம்பிக்கை தானேவரும் என்பீர்கள். அதுதானாக வராததால்தான் தன்னம்பிக்கை ஊட்டுவது என்பது உலக அளவில் பிரபலமான ஒரு பெரிய வியாபாரமாக இருக்கிறது.

பணவளக்கலை!

வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு ஜிம்மில் பணம் கட்டி உறுப்பினராகி உடம்பைக் கட்டுமஸ்தாக வைத்துக்கொள்வதுபோல் தன்னம்பிக்கையையும் கட்டுமஸ்தாக சிக்ஸ்பேக் அளவில் கொண்டுவர பல பயிற்சி வகுப்புகள் வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடுகளிலும்  சக்கை போடு போடுகிறது. ஒருவருக்கு சிக்ஸ்பேக் பாடி இருந்தபோதும் அமைதியான நேரத்தில் திடீரென்று ஒரு பூனை கத்தினால்கூடப் பயப்படும் சுபாவம் இருந்தால் என்ன செய்வது! சிக்ஸ்பேக் என்பது வெறும் வெளி அலங்காரம்தான். மனசுக்குள் பயம்தான் உச்சக்கட்டம்.

அதே கேஸ்தான் தன்னம்பிக்கையிலும். பயிற்சிகளுக்குப் போய் வளர்த்துக்கொண்ட போதும், சம்பாதிப்பதற்காக எந்தச் செயலைச் செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்து அதைச் செயலாக்குவதில்தான் திறமையே இருக்கிறது. எண்ணம் மற்றும் செயலில் ஒரு மேம்பட்ட தெளிவு இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும்.

அது என்ன தெளிவு என்று கேட்பீர்கள்? கொஞ்சம் விரிவாக ஓர் உதாரணத்துடன் பார்ப்போம்.

பணவளக்கலை!

நல்ல வேலை, மனைவி, ஒரு குழந்தை, இ.எம்.ஐ.-யுடன் கூடிய சொந்த வீடு, கார் முதலியவற்றைக் கொண்ட 45 வயது சராசரியான மனிதர் ஒருவர். அலுவல் டயத்திற்கு பத்து நிமிடம் முன்னால் ஆபீஸிற்குள் இருப்பார். ஆபீஸ் விட்டபின் பத்து நிமிடத்திற்குப் பின்னால்தான் வீட்டிற்கு கிளம்புவார். வேலையில் திறமைசாலி என்ற புகழுடையவர். பிசினஸ் செய்து பணம் சம்பாதிக்க ஆசைதான். அதுக்கெல்லாம் பரம்பரைச் சொத்து வேண்டும். என்னைப் போன்ற ஆவரேஜ் மனிதனெல்லாம் சிஸ்டத்துக்கு கட்டுப்படாமல் இருக்க முடியவே முடியாது. சிஸ்டத்துக்கு கட்டுப்பட்டேயிருங்கள். அதேசமயம், எதையாவது ஒன்றை எக்ஸ்ட்ராவாக செய்து கொஞ்சம் வருமானம் ஈட்டப் பாருங்கள் என்று யாராவது சொன்னால், வேலையை விட்டுவிட்டால் இ.எம்.ஐ. என்ன உங்க அய்யாவா வந்து கட்டுவாரு என்று கோபப்படுவார். பிசினஸ் என்றாலே நஷ்டம்  என்று அர்த்தம் என நினைப்பவர். பிசினஸில் லாபம் வருமே என்று சொன்னால், நஷ்டம் வந்தால் நீ தருவியா என்று எதிர்கேள்வி கேட்பார். நஷ்டத்தின் மீது அவருக்கு அவ்வளவு  நம்பிக்கை!  

இவரை அவர் போகும் பாதையிலேயே விட்டால் என்னவாகும் என்று சொல்லுங்கள்! சௌகரியமாய் வேலைக்குப் போய் ரிட்டையராகி வாழ்ந்து பேரன், பேத்தி எடுத்துப் சௌக்கியமாய் போய்ச் சேர்வார் என்பீர்கள்.

இதெல்லாம் 80/90-ம் ஆண்டுகளில் சாத்தியமாக இருந்தது. இன்றையச் சூழ்நிலையைப் பாருங்கள். அவர் வேலை பார்க்கும் கம்பெனி மூடப்படலாம். அவருக்கும் அவருடைய பாஸிற்கும் முட்டிக்கொண்டு அவருடைய பாஸ் அவரைத் துரத்திவிடலாம். அவருக்கு உடல்நிலை திடீரென மிகவும் நலிவடையலாம்.  அவர் ஸ்டைலில் கொஞ்சம் நெகட்டிவ்வாக யோசித்தால், அவரே போய்ச் சேர்ந்துவிடலாம்!

இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் ஏதாவது ஒருநாள் அவருக்கு வேலை போயே தீரும். வேலை ஒன்றும் அவருக்கு பட்டயம் போட்டுத் தந்த நிரந்தரமான விஷயம் அல்ல. ஆனால்,  எப்படியும் போகிற வேலையின் மீது போகவே போகாது என்ற அதீத நம்பிக்கை.

சரி, குழந்தைகளின் படிப்பு, இ.எம்.ஐ என்றெல்லாம் சொல்கிறாரே என்று பாவப்பட்டு அவரிடம், 'நீங்கள் யாரையாவது கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஏதாவது சைடுபிசினஸ் செய்யலாமே?’ என்று சொன்னால், 'யாரை சார் நம்புவது இந்தக் காலத்திலே’ என்பார். 'எத்தனைபேர் கூட்டு வைத்து வியாபாரம் செய்து ஏமாந்திருக்கிறார்கள் என்று நான் பார்த்திருக்கிறேன்’ என்பார். 'உங்களுக்குத் தெரிந்த கூட்டணி முறிவின் கதையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்’ என்றால், 'இரண்டுபேர் கூட்டுவைத்துக் கொண்டார்கள். அவரில் ஒருவர் பிசினஸில் ஏமாற்றி நஷ்டம் செய்துவிட்டார்! இன்னொருவருக்குப் போட்ட முதலைக்கூட திருப்பித் தரவில்லை!’ என காமாசோமா கதைகளைத்தான் சொல்வாரே தவிர, அந்தக் கூட்டணியில் வந்த சிக்கல் என்ன என்பதை முழுமையாக தெரிந்து தெளிய முனைய மாட்டார்.

பணவளக்கலை!

கூட்டணி என்றால் அது முறிந்தேயாக வேண்டும் என்ற நம்பிக்கை. கூட்டணியில் இருக்கும் மற்றொரு நபர் நம்மை ஏமாற்றுவார் என்ற எதிர்பார்ப்புடன் கூடிய அதீத நம்பிக்கை. அட, கூட்டணி வேண்டாமப்பா. சின்னதாய் ஒரு பிசினஸ் உன் சொந்தக் காசில் செய்யேன் என்றால், இதெல்லாம் நம்ம அந்தஸ்துக்கு சரிப்படாது என்பார். அதென்ன உன்னுடைய அந்தஸ்து என்றால், சிஸ்டத்தைக் காண்பிப்பார். நான் அவ்ளோ பெரிய கம்பெனியிலே இவ்ளோ பெரிய உத்தியோகத்திலே இருக்கிறேன். நான் எப்படி இந்தச் சின்னத் தொழிலைச் செய்வது என்பார்.

இதுபோன்ற நபர்களுடைய குடும்பம் நல்ல பணியாளர்களைத் தயார் செய்யும் ஃபேக்டரி எனலாம். என்ன அப்படி சொல்லிவிட்டீர்கள் என்கின்றீர்களா? நம்முடைய உதாரண புருஷரோ வேலையில் லயித்தவர். வேலைக்குப் போனால் இன்ன சம்பளம் என்ற சிறப்பான கணக்கோடு வாழ்பவர். வேலைக்குப் போகா விட்டால் சம்பளம் கட்டாகிவிடும் என்பதை மறந்தவர். வேலையில் தான் காட்டும் திறமையெல்லாம் வேலையைவிட்டுத் தூக்கப்பட்டுவிட்ட பின்னால் ஒரேயடியாய் உபயோகமில்லாமல் போய்விடலாம் என்பதை உணர மறுப்பவர். இந்த வாதத்தை வைத்தால் நான் வேறு வேலைக்குப் போவேன் என்று சொல்லி எதிர்வாதம் செய்பவர். அப்படி நீடுழி வேலை பார்த்து ரிட்டையரானால் வாழ்க்கையில் பெரும்பகுதியை செலவு செய்து பெற்ற அவருடைய அனுபவங்கள் எல்லாம் என்னவாகும்? அவருடைய மகனுக்கு எந்த விதத்திலும் உதவாமல் போகும். அவருடைய மகன் புதிதாய் ஒரு இண்டஸ்ட்ரீயில் வேலைக்குப் போய் புதிதாய் வாழ்ந்து புதிதாய் கற்று யாருக்கும் உதவாத அனுபவப் புத்தகத்தை எழுதிவிட்டு போய்ச் சேர்வான்.

இதையே ஒரு தொழிலதிபராய் நினைத்துப் பாருங்கள். அவர் பார்த்த வேலை செலவு செய்த நேரம் எல்லாம் அவருடைய நிறுவனமாக வளர்ந்து அவருடைய சந்ததியினருக்குச் செல்லும். சந்ததியினர் அனுபவப் புத்தகத்திலிருந்து பாடம் படித்து இன்னும் திருத்தமாய் தொழிலைச் செய்வார்கள்.

இந்த வசதிகளையெல்லாம் மறந்து தொழில் செய்தால் நஷ்டம் வரும். இதெல்லாம் பரம்பரை பரம்பரையாய்ச் செய்பவர்களுக்கே சாத்தியம் என்ற நம்பிக்கையில் திளைத்து இருக்கிறார். இவருடைய சித்தாந்தப்படியே போனால் இவருடைய மகனுக்கு இவர் நிறுவனம் எதையும் வைத்துத் தரவில்லையே. அதனால் அவனும் வேலைக்குத்தானே போகவேண்டும். அதனால்தான் இவருடைய வீடு நல்ல பணியாளரை உருவாக்கும் ஃபேக்டரி என்று சொல்கின்றேன்.

வருடங்கள் உருள உருள தொழிலை நிறுவுவதற்கு அதிக பணம் வேண்டியிருக்கும். பணவீக்கம் என்பது தொழிலதிபர்களுக்கு மிகவும் உதவி செய்வது. ஏனென்றால் பில்டிங், மெஷின் என்ற எல்லாம் விலையேறி போட்டித் தொழில் அமைவதற்குத் தடைகளாய் மாறிக் கொண்டேயிருக்கும். கேஷ§வலாக என் நண்பர் ஒருவருடைய பிசினஸ் குறித்து ஆராய்ந்தபோது, இருபது வருடங்களுக்கு முன்னால் 50 லட்சம் ரூபாயுடன் அவரால் ஆரம்பிக்கப்பட்ட தொழிலை இன்று ஆரம்பிக்க 10 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தொழில் துவங்கத் தேவைப்படும் பணத்தின் அளவு எவ்வளவு பூதாகாரமாகிறது என்று புரிகிறதா?!

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism