Published:Updated:

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

Published:Updated:
##~##

ஒருபக்கம் தொழில்நுட்ப ரீதியாக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது உலகம். மறுபக்கம் பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் நாடு... என்கிற நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். பணவளக் கலைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?

தொழில்நுட்ப ரீதியான மாறுதல்கள் உங்கள் பிழைப்பை மொத்தமாகப் புரட்டிப்போட்டுவிடலாம். வேகமான வளர்ச்சி காணும் பொருளாதாரத்தில் நீங்கள் சௌகரியமானது என்று நினைக்கும் வேலையும் சம்பளமும் தீராதப் பற்றாக்குறையைக் கொண்டுவந்து விட்டுவிடலாம். கடந்த பத்து வருடங்களில் எத்தனை தொழில்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது என்பதை என்றைக்காவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் வயது நாற்பதுகளில் இருந்தால், 1980-களில் ஆரம்பித்து இன்று வரை காணாமல் போன தொழில்களை நினைவுபடுத்திப் பாருங்கள். சக்கைபோடு போட்ட கேசட் ரெக்கார்டிங்/விற்பனை  இன்று எங்கே போனது? வீடியோ ரெக்கார்டிங்/கேஸட் சர்க்குலேஷன் தொழில் எங்கே போனது? தடுக்கி விழுந்தால் இருந்த எஸ்.டி.டி. பூத்துகள் இருந்ததே, அதெல்லாம் எங்கே?

இந்த மூன்றில் முதலிரண்டு மொத்தமாகக் காணவில்லை. மூன்றாவது மட்டும் ஒருசில ஜெராக்ஸ் கடைகளில் இருக்கிறது. இன்னும் பத்து வருடம் கழித்து ஜெராக்ஸ் கடைகளும் காணாமல் போய்விடலாம். எப்படி? அனைவரின் பாக்கெட்டிலும் 41 எம்பி கேமரா கொண்ட ஸ்மார்ட் போன் வந்துவிட்டால், எந்த விஷயத்தையும் மொபைல் போனில் போட்டோ எடுத்து பிடிஎஃப் ஃபைலாக்கி கேட்பவர்களுக்கு இ-மெயில் அனுப்பிவிடலாமே! அப்போது ஜெராக்ஸ் கடைகளுக்கு என்ன வேலை?

பணவளக் கலை !

அட என்று ஆச்சர்யப்பட்டு நின்றுவிடாமல்,  அடுத்த பத்து வருடங்களில் இன்று நீங்கள் வேலையில் இருக்கும் தொழிலின் நிலைமை என்னவாகும் என்று சற்று யோசியுங்கள். தொழில்நுட்ப மாற்றத்தின் பக்கவிளைவுகளைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.

அடுத்து, பொருளாதார வளர்ச்சி. 2000-த்தின் ஆரம்பத்தில் இருந்த வீட்டுமனை விலைக்கும் 2013-ல் அதே மனை விற்கப்படும் விலைக்கும் எக்கச்சக்க வித்தியாசம் வரக் காரணம், இடையில் நாம் கண்ட வேகமான பொருளாதார வளர்ச்சி.

சிறியதோ, பெரியதோ ஒரு தொழிலை வேலைக்கு மாற்றாக கையில் வைத்திருக்கும்போது அது தரும் சௌகரியமும் தைரியமும் ஏராளமாக இருக்கும். தொழில் ஒன்று கையில் இருக்கும்போது உங்கள் வாழ்க்கைமுறை மொத்தமாகவே மாறிவிடும்.

சம்பளக்காரராக இருக்கும்போது நுகர்வோராக இருக்கும் நீங்கள் ஒரு சிறுதொழிலின் முதலாளியாக மாறும்போது உங்களுடைய நுகரும் விதத்தை (கன்ஸம்ப்ஷன் பேட்டர்ன்) மொத்தமாக மாற்றிக்கொள்வீர்கள். ஒவ்வொரு முறை ஒரு பொருளை வாங்கும்போதும் இது தேவையா என்று யோசிப்பீர்கள். ஒரு நாள் வரவு, முப்பது நாள் செலவு என்ற நிலையிலிருந்து மாறி, முப்பதுநாள் வரவு,  முப்பதுநாள் செலவு என்ற நிலைக்கு வரும்போது, தினம் தினம் உங்கள் கையில் வந்துசெல்லும் பணம், அதன் குணத்தால் உங்களை சிறிது சிறிதாக மாற்றும்.  

பணவளக் கலை !

பணத்துக்குத்தான் குணம் கிடையாது என்றீர்கள். மனித குணம்தானே பணத்தின் குணம் என்றீர்கள். இப்போது பணம் குணத்தை மாற்றும் என்கின்றீர்களே, எப்படி? என்று கேட்பீர்கள். ஓர் உதாரணத்துடன் இதை பார்ப்போம்.

இந்த உலகில் உங்களுக்கு ஒரே ஒரு நண்பர்தான் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் குணம்  எப்படியிருக்கும்? உங்கள் ஒரிஜினல் குணம் மற்றும் உங்கள் நண்பருடைய குணத்தில் உள்ள நல்லது, கெட்டதுகள் உங்கள் குணத்தில் கலந்திருக்கும். உங்கள் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, உங்கள் குணம் மாறும்.    

நானெல்லாம் ஒரிஜினலாக்கும். யாரும் என்னை மாற்ற முடியாது என்று மார்தட்டுபவர்களா நீங்கள்? கடைசியாக நீங்கள் வாங்கிய ஸ்மார்ட் போனிற்கான ஐடியாவை யாரிடம் கேட்டீர்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! பிறகு பேசுங்கள்.

நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பழக்கவழக்கத்தில் மாற்றம் வருகிற மாதிரி, பணம் வரும் வழியும் எண்ணிக்கையும் அதிகமாக அதிகமாக, ஒவ்வொருவரின் பண மேலாண்மைக் குணமும் உங்களிடம் கொஞ்சமாவது ஒட்டிக்கொள்ளவே செய்யும்.  

உதாரணத்திற்கு, உங்கள் நண்பர் வட்டத்தில் நேரடியாக கடை நடத்தும் முதலாளிகள் இருந்தால் அவர்களுடைய கஸ்டமர்கள் குறித்த அனுபவங்களைச் சொல்லச் சொல்லி  கேளுங்கள். பல்வேறுவிதமான வகைகளில் பணரீதியான முடிவுகளை எடுக்கும் நபர்களை அவர்கள் சந்தித்திருப்பார்கள். அவர்கள் சந்தித்த நபர்களின் பணரீதியான முடிவெடுக்கும் திறனின் பாசிட்டிவ் அம்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் பதிந்திருக்கும். பலரது பணரீதியான முடிவெடுக்கும் தன்மையைக் கண்டறியும் தொழிலதிபர்கள் மிக திறமைசாலிகளாக ஆகிவிடும் வாய்ப்பு நிறைய.  

வேலையில் இருக்கும்போதும் இதுதானே நடக்கிறது. வேலையின்போது நாங்களும் பணரீதியான முடிவெடுக்கும் பல நபர்களைச் சந்திக்கிறோமே என்று நீங்கள் வாதிடலாம். முதலாவதாக, வேலைக்குச் செல்லும் அனைவருக்குமே இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இரண்டாவதாக, வேலை ரீதியாக நீங்கள் சந்திக்கும் சூழல்கள் அந்த டீலிலிருக்கும் முழு லாபத்தையும் உங்களுக்குத் தருவதாக இருக்காது. ஒரு டீல் நல்லபடியாக முடிந்தால், வேலை நிலைக்கும் / நல்ல பெயர் கிடைக்கும் / இன்சென்டிவ் கிடைக்கும் என்ற மனநிலைதான் ஒருவருக்கு இருக்குமே தவிர, டீல் முடிவதால் வரும் மொத்த லாபமும் தனக்குக் கிடைக்கும் என்ற மனநிலை வரவே வராது. ஒரு பொருளை நீங்கள் வாங்கும்போதும் (பணத்தைச் செலவு செய்ய நினைக்கும்போது) கவனிக்கும் விஷயங்களையும், தொழில் நடத்தும் உங்கள் நண்பர் வாங்கும்போது கவனிக்கும் விஷயங்களையும் பட்டியலிட்டுப் பாருங்கள், வித்தியாசங்கள் புரியும்.

பிசினஸ் செய்துதான் பணம் சேர்க்க வேண்டுமா?, சேமித்துப் பெரிய பணக்காரராக முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். சேமிப்பு என்பது ஆவரேஜ் மனிதர்களின் அடிப்படை குணம். அதை செய்தே  பணக்காரராகலாம் என்பது அக்மார்க் ஆவரேஜ்களின் நம்பிக்கை. முதலில் அதிகமாகச் சம்பாதிக்க கற்றுக்கொள்ளுங்கள். சேமிக்கும் கலை உங்களைத் தானே தேடிவரும். எப்படி?

நீங்கள் இன்று சம்பாதிப்பதைவிட மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்க  வேண்டுமெனில் நீங்கள் எவ்வளவு உழைக்க வேண்டும்? அய்யோ, நிற்கவே நேரமிருக்காது இல்லையா! அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும்போது  பணத்தைச் சேமிப்பதற்கான குணத்தை மூளை தானாகவே பெற்றுவிடும். காரணம், அதிகம் சம்பாதிப்பதில் உள்ள வலி உங்களுக்குத் தெரியும்.

அதனால்தான் சொல்கிறேன், உங்கள் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்டாக அதிகம் சம்பாதிக்க எதிர்காலத்தில் என்னென்ன செய்ய  வேண்டும் என்கிற வழிகளைச் சொல்லித் தாருங்கள். அதைத் தவிர்த்து, சேமிக்கும் வழிகளையும் சேமிப்பின் அவசியத்தையும் மட்டுமே சொல்லித் தந்து, அவர்களுக்கு அத்தியாவசியம் மற்றும் அநாவசியத்திற்கு இடையேயுள்ள வித்தியாசம் தெரியாமல் செய்துவிடாதீர்கள். ஏனெனில், பணம் இல்லாதபோது அத்தியாவசியம் (உதா,  உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஒரு புத்தகம் வாங்குவது) கூட அநாவசியமாகத் தோன்றிவிடும்.

ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிக்கும் பணத்தில் வளர்ச்சிக்கான செலவு(Developmental expenditure) என்பதற்காக குறிப்பிட்ட ஒரு தொகையை ஒதுக்கித்தானே ஆகவேண்டும். நான் என்ன கம்பெனியா? ஆர் அண்ட்  டி, டெவலெப்மென்ட் என்பதற்கெல்லாம் செலவு செய்வதற்கு என்பீர்கள். வேகமாக மாறும் தொழில்நுட்பம், அதிவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற இரண்டின் கலவையில் இயங்கும் உலகத்தில் புதிதாக வரும் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்கான நேரத்தை தருவதற்கு எந்த நிறுவனத்திற்கும் பொறுமை இருக்காது. ஏற்கெனவே எனக்குத் தெரியும் என்று சொல்பவருக்குத்தான் வரவேற்பு இருக்கும். அதனால்தான், இன்றையச் சூழ்நிலையில் வளர்ச்சிக்கான செலவு என்பது அவசியமாகிறது!

சேமிப்பும் அவசியம்; அதே சமயம் ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானத்திற்கான வழியும் அவசியம் என்பதுதான் பணவளக் கலையின் அடிப்படை விதி!

        (கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism