Published:Updated:

இடைதேர்தல் எனும் பணத் திருவிழா!

Vikatan Correspondent
இடைதேர்தல் எனும் பணத் திருவிழா!
இடைதேர்தல் எனும் பணத் திருவிழா!
இடைதேர்தல் எனும் பணத் திருவிழா!

லகில் கோவில் திருவிழா, தேரோட்டத் திருவிழா, காய்கறித் திருவிழா, மீன்பிடித் திருவிழா, கார் திருவிழா எல்லாம் கேள்விபட்டிருப்போம்.... பணத் திருவிழா என்ற மாபெரும் திருவிழா, மக்கள் வரிசையில் நின்று கையில் மை வைக்கும் சுப நிகழ்ச்சி(??)  நடப்பது இந்தியாவில் மட்டுமே. அது தான் இடைத் தேர்தல்.

சாதாரண தேர்தலுக்கே பணம் ஆறாக ஓடும், இடைதேர்தல் என்றால் வெள்ளமாக கரை புரண்டு மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும். கடனை அடைக்க முடியாதவர்கள், பள்ளிக் கல்விக்கு “பணத்தை பலி” கொடுத்தவர்கள் , மருத்துவச் செலவால் மயங்கி விழுந்தவர்கள் எல்லாம் மீண்டு வரவும், செலவழித்த பணத்தை மீட்கவும் ஆவலுடன் எதிர்பார்ப்பது கடவுளின் கருணை மட்டுமல்ல…. இடைதேர்தலையும் தான்.

இந்திய அரசின் அனுமதி பெற்று இடைதேர்தல் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். தவறான வழியில் பணம் கொடுத்து பலம் காண்பிக்கவும் மக்களை பல வகையில் கஷ்டப்படுத்தி, நிம்மதி இழக்க வைத்து அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்ட போர்க்களமாக இடைத்தேர்தல்கள் அமையும் என்பது காலம் காலமாக இடைத்தேர்தல்கள் சொல்லும் உண்மை. வன்முறையும், நடு ரோட்டில் மறியலும், காது கிழியும் கட்சிப்பாடல்களும் காசு கொடுத்து மக்கள் வாங்கிக்கொள்ளும் துயர நாட்கள் என்றே சொல்ல வேண்டும்.

நேற்று வரை மக்களுக்காக போராடாத கட்சிகள், சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன் என பல வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்த (மக்களுக்காக சிந்திக்கத்தான் சென்றார்களாம்??) எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம் மக்கள் முன் நாங்களும் இருக்கின்றோம் என தரிசனம் தருவதும் ,தொகுதிப்பக்கம் பார்க்க முடியாத அமைச்சர் பெருமக்கள் எல்லாம் இடைதேர்தலில் தூங்காமல் கஷ்டப்பட்டு உழைப்பதும் ,செய்தித்தாளில் படங்களோடு வருவதும் அது இடைதேர்தல் நேரமாகத்தான் இருக்கும். பொதுத் தேர்தல் என்றால் பொங்கி எழுந்து ஆளும் கட்சியை விரட்ட கூட்டணி அமைப்பதும் வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் இம்முறை முன்னாள் முதல்வரும், சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவருமான ஜெயலலிதா தேர்தலை சந்திப்பதால், இடைதேர்தல் வாக்காளர்களுக்கு இனிய இடைத் தேர்தலாக வாய்ப்பாகவும் உள்ளது. மற்ற தொகுதி மக்களையும் எங்கள் தொகுதிக்கு இடைதேர்தல் வராதா என்று ஏங்க வைக்கும் அளவிற்கு பணப் புழக்கமும், பரிசுகளும் வீடு தேடி அணிவகுக்கும் நேரமிது. மக்களுக்கு எந்தப்பயனும், எந்த உபகாரமும் இல்லாத இந்த எம்.எல்.ஏக்கள், எப்போது பதவியை ராஜினாமா செய்து நாமும் இடைதேர்தலை சந்திப்பது என மக்கள் கவலைப்படும் நிலையில், இடைதேர்தல் அரங்கேறி வருகின்றன.

ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் எனபது போன்ற சூழலில், மீண்டும் போட்டியிட்டு முதல்வராக வேண்டும் என்று நினைப்பது அவர் தனிப்பட்ட விருப்பாக இருந்தாலும், மக்களின் எண்ணம் வேறு வகையில் இருக்கிறது. கடந்த ஓராண்டாகவே அரசின் செயல்பாடுகள் மக்களின் மத்தியில் கடும் அதிருப்தியில் உள்ளது.

இடைதேர்தல் எனும் பணத் திருவிழா!

ஒரு வேளை அம்மா வெற்றி பெற்றால் (கட்டாயம் வெற்றி உறுதியாக்கப்படும் என்பது வேறு கதை. ) மீண்டும் முதல்வராகி மக்கள் பணியை தொடங்க வேண்டும் என்பது அவரது விருப்பம். ஆனால் எஞ்சியுள்ள ஓராண்டில் மீண்டும் தேர்தல் அறிவிப்பு வந்து விடும். அடுத்த ஆண்டு  தேர்தலை அதிமுக கட்சி சந்திக்க வேண்டும்.

இடைதேர்தல்களால் மக்கள் நிம்மதி இழப்பதும், அனைத்து எம்.எல்.ஏக்கள், மந்திரிகள் அம்மாவிற்காக உழைப்பதால் அரசின் செயல்பாடுகள் முடங்கவும் வாய்ப்புகள் அதிகம். ஒரு வேளை தோற்றுப்போனால் மக்களிடம் என்ன சொல்லி பொதுத் தேர்தலை சந்திப்பார்??. அப்போது அனைத்து எதிர்கட்சிகளும், ஊழலுக்கு மக்கள் தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று ஒன்றாக குரல் கொடுக்கும் வாய்ப்பை ஜெயலலிதா கொடுத்து விடுகிறார் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது..

இடைதேர்தல் என்பது கட்சிக்கு மட்டும் பணம் செலவழியும் பணத் திருவிழா அல்ல, மக்களின் பல கோடி வரிப்பணமும் தேர்தல் ஆணையத்தால் விரயமாகும் "பணப்பலித் திருவிழா ". இடைதேர்தல்களை எந்தக் கட்சி புறக்கணித்தாலும் அது மற்றொரு கட்சியின் வெற்றிக்கு மறைமுகமாக உதவுவதும், வெற்றி பெற செலவு செய்ய காத்திருக்கும் கட்சியின் பணச் செலவை குறைக்கவும், வாக்காளர்கள் “வருமானத்தை” பாதிக்கவும் மட்டுமே பயன்படுமே தவிர பெரிய மாற்றம் ஏற்படாது. மக்கள் வெறுப்பில் ஓட்டளிக்காவிட்டாலும் அது தவறுதான்.

ஒரு இடைதேர்தலுக்கு பல லட்சம்/ கோடிகள் செலவாகும். பல லட்சம் செலவழித்து ஒரு தொகுதிக்கு ஓராண்டு மக்கள் பிரதிநிதியாக பொறுப்பேற்க தேர்தல் அவசியமா? பல கோடி செலவழித்து அந்தக் கட்சி வெற்றி பெற்று என்ன சாதனை மக்களுக்கு செய்யப்போகிறது? இந்தத் தேர்தல் செலவை யார் ஏற்றுக் கொள்வது? இனி வரும் காலங்களில் அரசு தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். இடைதேர்தல் செலவுகளை சம்பந்தப்பட்ட கட்சியே ஏற்றுக்கொள்ளவும் , இடைதேர்தலை விரும்பாத பட்சத்தில் இரண்டாமிடம் வந்த கட்சியின் வேட்பாளரை எம்.எல் ஏவாக தேர்ந்தெடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்.

இடைதேர்தல் எனும் பணத் திருவிழா!

அரசியல் கட்சிகளால் வன்முறை ஏற்பட்டு பொதுச் சொத்துக்கு சேதம் என்று சொன்னால் இழப்பீட்டை வசூலிக்கச் சொல்லும் நீதி மன்றம்,  இடைத் தேர்தல் என்ற பெயரில் பல கோடி மக்களின் வரிப்பணம் வீணாவதையும், வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்திற்கு லஞ்சம், ஊழலால் மக்களின் வரிப்பணம் வீணாவதையும் வேடிக்கை பார்ப்பது ஏன்?.

பணத்தோடு மக்களின் நிம்மதியும் போய் விடுகிறது என்பதே உண்மை.

தேர்தலை ஜெயலலிதா எதிர்கொள்வதற்கு பதிலாக தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு மக்களின் கோபத்தில் இருந்து வெளி வரும் நடவடிக்கைகளை கட்சித் தலைவராக இருந்து கொண்டே செயல்பட முடியும்.

1. டாஸ்மாக் ஒழிப்பு,- டாஸ்மாக் கடைகளை மூடி ஏழைக் குடும்பங்களின் மகிழ்ச்சியை பார்க்கலாம்,

2. ஏற்கனவே இருக்கின்ற எம்.எல்.ஏக்கள் இதுவரை என்ன சாதித்தார்கள் என்பதை அவர்களுடன் நேரடியாக தொகுதியில் ஆய்வுக்கு வர வேண்டும். அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு, எம்.எல் எ.க்களின் சொத்துக் குவிப்பை விசாரணை செய்து மக்களுக்காக களம் இறங்கும் மக்களின் முதல்வராக ஒரு வருடம் பார்த்து தமிழகத்தின் நிலையை வெளிப்படையாக அறிந்து கொள்ள வேண்டும்.

3. லஞ்ச ஊழல் மிகுந்துள்ள அரசு பொதுப்பணித் துறை, காவல், வருவாய்த் துறைகளை சீர் செய்யலாம். கனிம வளங்களை அரசுக்கு சொந்தமாக்கி அரசின் வருவாயை அதிகரிக்கலாம்.

4. மாதம் ஒரு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மக்களின் குறைகளை நேரடியாக கேட்டுப் பெறலாம். திறக்கப்படாத அம்மா உணவகம், பல்பொருள் அங்காடி, காய்கனி வளாகத்தை திறக்கலாம்.

அரசுக்கு முதல்வராக இருந்து செய்ய வேண்டிய பணிகளை மக்களுக்காக மக்களின் முதல்வராக ஒரு வருடம் பணி செய்தால் மக்களின் நம்பிக்கையும், எதிர்காலமும் ஜெயலலிதாவுக்குத்தான். இடைதேர்தல் மாயையில் இருந்து வெளி வந்து மக்களுக்காக பாடுபட வேண்டியது அவரின் மதிப்பை உயர்த்தும்.

'கிணற்று நீரை ஆற்று நீரா அள்ளிக் கொண்டு போய் விடும்?' என்ற சொலவடைக்கு ஏற்ப,  முதல்வர் பதவி எங்கும் போகாது.மக்களின் மனமறிந்து கஷ்டத்தை தீர்ப்பவர்களுக்கு மக்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

தற்காலிக வெற்றியை விட நிரந்தர வெற்றியே நிம்மதி தரும் என்பது மக்கள் மனம் சொல்லும் செய்தி.

- எஸ்.அசோக்