Published:Updated:

பிரவுஸிங் சென்டர் பிரமாத எதிர்காலம் உண்டா?

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!பிஸினஸ் கேள்வி - பதில்

##~##

''நான், பி.எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்து முடித்திருக்கிறேன். எங்கள் பகுதியில் பிரவுஸிங் சென்டர் எதுவும் இல்லாததால், சேலம் சென்று வருகிறோம். எங்கள் பகுதியில் பிரவுஸிங் சென்டர் ஆரம்பிக்க நினைக்கிறேன். இது சரியான முடிவா... அதைத் தொடங்குவதற்கு யாரை அணுக வேண்டும்... வங்கி லோன் கிடைக்குமா?''

- சந்தியா, ஜாகிர்அம்மாபாளையம், சேலம்

இன்று, உலக அளவில் இணையதள பயன்பாடு உள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா திகழ்கிறது. எனவே, பிரவுஸிங் சென்டர் ஆரம்பிப்பதற்கு சரியான தருணம்தான். அதற்கு முன்பாக இணையதளம் பற்றி முழு வதுமாக தெரிந்துகொள்வது நல்லது. வியா பாரம் மற்றும் சமூகம் என பல இணைய தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வெற்றிநடை போடுகின்றன.

மாணவர்கள் பல தரப்பட்ட தகவல்களைப் பெற, பாடத்திட்டங்கள் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க இவை பெரிதும் உதவுகின்றன. மேல் படிப்புக்கு தேவையான தேர்வுகள், வேலைக்கான விண்ணப்பங்கள் போன்றவற்றுக்கும் இணையதளங்கள் உதவுகின்றன. விமானம், ரயில், பஸ் பயணங்களுக்கான முன்பதிவு செய்யவும்... வங்கியிலிருக்கும் உங்கள் பணத்தை, சில நொடிகளில் இன்னொரு வருக்கு பரிமாற்றம் செய்யவும் இணையதளம் உதவுகிறது.

பிரவுஸிங் சென்டர் பிரமாத எதிர்காலம் உண்டா?

தினம் தினம் புதுவித தொழில்நுட்ப முன்னேற்றமும் இணையத்தில் நடந்துகொண்டே இருக்கிறது. அனைத்தையும் தெரிந்து கொள்வது மிக முக்கியம்.

பிரவுஸிங் சென்டர் என்றால், ஒவ்வொரு கம்யூட்டருடனும் பிரவுஸிங் சென்டருக்குத் தேவையான பிரின்ட்டர் இணைப்பு, தொலைபேசி இணைப்பு, கேமிரா இணைப்பு போன்ற நவீன இணைப்புகளும் அவசியம். ஒரு பிரவுஸிங் சென்டருக்கு குறைந்தபட்சம் ஆறு கம்ப்யூட்டர்கள் தேவைப்படும். ஒவ்வொரு கம்ப்யூட்டரையும் தனிப்பட்ட முறையில் பார்க்க பகுதி பகுதியாக பிரித்து தடுப்பு இருத்தல் வேண்டும். பிரின்ட்டருடன் ஜெராக்ஸ் வசதியும் இருப்பது நல்லது.

முதல் மாடியில் பிரவுஸிங் சென்டர் அமைப்பது, பாதுகாப்பாக இருக்கும். வெறும் பிரவுஸிங் சென்டராக மட்டும் இல்லாமல், ஒன்றிரண்டு கம்ப்யூட்டர்களை டைப்பிங், திட்ட அறிக்கை தயார் செய்தல் போன்றவற்றுக்கும் பயன்படுத்துங்கள். அதற்குத் தகுதியான ஆட்களை நியமியுங்கள். இது கூடுதல் வருமானம் வரும் வழி.

வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் வார அல்லது மாத அட்டை வழங்கலாம். மின் தடையை இன்றைய சூழ்நிலையில் அதிகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் இன்வெர்ட்டர் பொறுத்துங்கள். இதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவாகும். கம்ப்யூட்டரில் சின்னச் சின்ன பழுது ஏற்படும்போது நீங்களே சரிசெய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

இடம், அதற்கான முன்தொகை ஆகியவற்றுக்கு வங்கிகளில் கடன் பெற முடியாது. கணினி மேஜை, நாற்காலி தடுப்பு, மின்சாதன இணைப்பு, இணையதள இணைப்பு, பிரின்ட்டர், விளம்பரப் பலகை என அனைத்து செலவுகளுக்கும் கடன் கிடைக்கும். உங்கள் முயற்சி, சேவை திட்டத்தில்

பிரவுஸிங் சென்டர் பிரமாத எதிர்காலம் உண்டா?

வருவதால், வேலையற்ற இளைஞர்களுக்கு வேலையை உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ் 3 லட்ச ரூபாய் வரையும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ்  10 லட்சம் ரூபாய் வரையும், 'நீட்ஸ்' (NEEDS) திட்டத்தில்  ஒரு கோடி ரூபாய் வரையும் அதிகபட்சமாக கடன் பெறலாம்.

கடன் வசதி பெற 5 வருட வாடகை ஒப்பந்தம், உபகரணங்களின் விலைப் பட்டியல், திட்ட அறிக்கை, எந்த திட்டத்தில் கடன் பெற விரும்புகிறீர்களோ... அந்த திட்டத்தின் விண்ணப்பப் படிவம் அனைத்தையும் மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியானவர் என அறிந்தால், பரிந்துரை செய்வார்கள். இத்திட்டத்தில் 15% - 25% வரை மானியம் உண்டு. நீங்கள் அணுக வேண்டிய முகவரி: மாவட்ட தொழில் மையம், ஐந்து ரோடு, சேலம் - 4, தொலைபேசி எண்: 0427-2447878.

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி. ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002