Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:
ஷேர்லக் ஹோம்ஸ்


வெள்ளிக்கிழமை மாலை மூன்றரை மணிக்கு மார்க்கெட் முடியவும் ஷேர்லக் நம் ஆபீஸில் நுழையவும் சரியாக இருந்தது.

''இப்போதுதான் மார்க்கெட் முடிந்தது. அதற்குள் வந்துவிட்டீரே!'' - சில்லென்ற தண்ணீரை கிளாஸ் முழுக்க நிரப்பி அவருக்கு குடிக்கத் தந்தபடி கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த வாரம் முழுக்க சந்தை படுத்தபடி தானே இருந்தது! தவிர, மாசக் கடைசி என்பதாலோ என்னவோ, பல டிரேடிங் சென்டர்கள் காலியாகவே கிடந்தன. என்றாலும், சொல்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்ததால், சீக்கிரமே உம்மைச் சந்திக்கலாம் என்று வந்து விட்டேன்'' என்று சொல்லிவிட்டு, சில்லென்ற தண்ணீரை மடக்மடக்கென குடித்துவிட்டு, நேராக விஷயத்துக்கு தாவினார்.

படையெடுத்து வெளியேறிய எஃப்.ஐ.ஐ.கள்!

##~##
கடந்த வாரம் முழுக்க சந்தை ஒரே சிவப்பு மயம். ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ. போன்ற ஹெவிவெய்ட் சாம்பியன்கள் பற்றி தடபுடலாக வந்த நெகட்டிவ் செய்திகளால் அந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகக் குறைய, அதனால் சந்தையும் வீழ்ச்சி கண்டது. இதுவரை வந்த நிதிநிலை அறிக்கைகள் ஓரளவு நன்றாக இருந்தாலும், ஒவ்வொரு நிறுவனங்களும் கொடுத்திருக்கும் எதிர்பார்ப்புகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் எஃப்.ஐ.ஐ-கள் தங்கள் முதலீட்டை பெருமளவில் திரும்ப எடுத்தனர்.

கடந்த ஒரு வாரத்தில் முதலீடான தொகை வெறும் 622.50 கோடி ரூபாய் மட்டுமே. ஆனால் அவர்கள் திரும்ப எடுத்த தொகையோ 2,163 கோடி ரூபாய். சமீபகாலத்தில் எஃப்.ஐ.ஐ.கள் இந்த அளவுக்கு வெளியே போனதில்லை. இதேநிலை அடுத்த வாரமும் தொடர்ந்தால் நம் பாடு கஷ்டமாகிவிடும். அடுத்த வாரமும் சந்தை சிவப்பிலேயே இருக்கும் என்பதுதான் என் அனுமானம்'' என்றவர் ஒரு நிமிஷம் அமைதியாக இருந்தார்.

அச்சுறுத்தும் ஆர்.பி.ஐ.!

''என்ன நிறுத்தி விட்டீர்கள்? ஏதாவது பெரிய செய்தி எதுவும் சொல்லப் போகிறீர்களா?'' என்று பதறிப்போய் கேட்டோம்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''கொஞ்சம் கதி கலங்க வைக்கிற செய்திதான். சந்தையின் முக்கிய புரோக்கர்களிடம் பேசினால் இந்த செய்தியைச் சொல்லித்தான் பதறுகிறார்கள். அடுத்த மாதம் மே 3-ம் தேதி நடக்கும் ரிசர்வ் வங்கியின் மீட்டிங்கில் முக்கிய வட்டி விகிதங்கள் 0.25 - 0.50 சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. முதலில் 0.50 - 0.75 சதவிகிதம் வரை வட்டி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் சராசரி ரெப்போ விகிதம் 6.90 சதவிகிதம்தான். இப்போது 6.75 சதவிகிதமாக இருக்கிறது. எனவே, இப்போது 0.25 சதவிகிதம் உயர்த்தினால் அதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாது என்று நினைக்கிறது ஆர்.பி.ஐ. ஆனால், வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் உயர்த்தினால், ரெப்போ விகிதம் 7.25 சதவிகிதமாக உயரும். ரெப்போ ரேட் உயரும்போது வங்கிகள் கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதமும் உயரும். இதனால் நிறுவனங்களின் லாபம் குறையும்.

நிறுவனங்களுக்கு இப்படி பல பிரச்னைகள் இருந்தாலும் இப்போதைக்கு வட்டி விகிதங்களை உயர்த்துவது தவிர ஆர்.பி.ஐ.க்கு வேறு வழியில்லை என்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் சராசரி பணவீக்கம் 5 முதல் 6 சதவிகிதமே. கடந்த ஒரு வருடமாகத்தான் பணவீக்கம் சராசரி 10 சதவிகிதமாக இருக்கிறது. இதை உடனடியாக குறைக்காவிட்டால், இந்தியப் பொருளாதாரம் பெரிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.'' என உணர்ச்சி வசப்பட்டவரை ஆறுதல் படுத்த ஒரு தட்டில் தர்பூசணிப்பழத்தை வெட்டிக் கொடுத்தோம். இரண்டு துண்டு சாப்பிட்டவர் அடுத்த விஷயத்துக்கு போனார்.

ரிலையன்ஸின் புதிய அவதாரம்!

''இதுநாள்வரை பெட்ரோகெமிக்கல் பிஸினஸிலேயே இருந்துவந்த ரிலையன்ஸ், இனி இன்ஷூரன்ஸ் துறையிலும் நுழையப் போகிறது. புதிதாக ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை ஆரம்பிப்பதைவிட மிட்டலுக்குச் சொந்தமான 'பார்தி ஆக்ஸா லைஃப் இன்ஷூரன்ஸ்’ நிறுவனத்தை வாங்கி, அதை தனதாக்கிக் கொள்ளும் பேச்சு வார்த்தை ஜரூராக நடந்து வருகிறது.

டெலிகாம் துறை இப்போதைக்கு சரியில்லை; தவிர, இன்ஷூரன்ஸ் நிறுவனமும் எதிர்பார்த்த அளவுக்கு போணியாகவில்லை என்பதாலோ என்னவோ, அதை ரிலையன்ஸுக்கு விற்றுவிட யோசிக்கிறாராம் மிட்டல். அனில் ஏற்கெனவே ஒரு லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இப்போது முகேஷ§ம் ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை வாங்கினால் தம்பி நிறுவனம் என்னவாகுமோ!''

''ஃப்யூச்சர் வென்ச்சர் நிறுவனத் தின் ஐ.பி.ஓ. பற்றி பரபரப்பாக செய்தி வந்ததே!'' என அடுத்த சப்ஜெக்ட்டுக்கு அடி எடுத்துக் கொடுத்தோம் நாம்.

ஒதுங்கும் பெரிய நிறுவனங்கள்!

''மார்க்கெட்டிங் செய்வதில் ரமேஷ் பியானி கில்லாடி. ஃப்யூச்சர் வென்ச்சர் நிறுவனத்தின் பங்கை எந்த பிரீமியமும் இல்லாமல் 10 ரூபாய் பங்கை அதே விலைக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி வந்தார். அவர் கேட்ட அளவுக்கு பணம் கிடைத்து விட்டது என்றாலும் 5 மடங்கு, 10 மடங்கு என பணம் குவிந்துவிடவில்லை. அதிலும் ஹை நெட் வொர்த் இன்டிஜுவல்கள் என்னும் சில பெரும் பணக்காரர்களே பணத்தைப் போட்டிருக்கிறார்கள். பல பெரிய நிறுவனங்கள் இந்த பங்கில் பெரிதாக முதலீடு செய்யவில்லை. ஆனால், முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் நிறுவனங்களின் முதலீடு 25 மடங்கு அதிகமாக இருந்தது முக்கியமான விஷயம்!''

இன்னும் எழாத இன்ஃப்ரா!

ஷேர்லக் ஹோம்ஸ்

''இன்ஃப்ரா துறை பற்றி ஏதாவது செய்தி உண்டா?'' என்றோம்.

''உண்டு. ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் வரை விலை குறைந்து சீண்டுவாரற்று கிடக்கிறது. இன்னும் ஓரிராண்டுகளில் இந்தத் துறை பங்குகள் சரியாகிவிடும் என சிங்கப்பூரைச் சேர்ந்த மாக்கொயர் (Macquarie) சொன்னாலும், இன்ஃப்ரா நிறுவனங்கள் புதிதாக ஐ.பி.ஓ. வெளியிட செபி தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இமார் எம்.ஜி.எஃப். என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூலதனச் சந்தையில் 6,400 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்தது. அது படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது 1,600 கோடி ரூபாய்க்கு வந்துவிட்டது. ஆனால், இவ்வளவு குறைந்து ஐ.பி.ஓ. வர செபி அனுமதி கொடுத்தபாடில்லை. தவிர, டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டியின்போது கட்டப்பட்ட வீடுகளில் விதிமுறைகள் மீறப்பட்டி ருப்பதாகவும் இந்த நிறுவனம் மீது புகார். இதுகுறித்தான விசாரணை முடிந்தபிறகும் இந்நிறுவனம் ஐ.பி.ஓ. வர அனுமதி கிடைக்குமா, இல்லையா என்பது தெரியாது.''

காவு வாங்கிய கரன்சி டிரேடிங்!

''அண்மையில் கரன்சி டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் விதிமுறைகளை மீறியதற்காக எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், சிட்டி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் போன்றவற்றுக்கு 15 லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்தது ஆர்.பி.ஐ. விதிமுறைகளை வங்கிகள் மீறலாமா என வங்கி வட்டாரத்தில் விசாரித்தேன். வெளியே சொன்னால் வெட்கக்கேடு, கரன்சி டிரேடிங் தொடர்பான விதிமுறைகளை சரியாகத் தெரிந்து கொள்ளாமலே அதில் விளையாடியதன் விளைவுதான் இந்த பிரச்னையாம். வங்கிகளாக இருந்தாலும் சரி, தனிநபர்களாக இருந்தாலும் சரி, கரன்சி டிரேடிங் பற்றி நன்றாக தெரிந்து கொண்டபிறகே அதில் இறங்குவது நல்லது. கரன்சி டிரேடிங் பற்றிய விழிப்புணர்வை பெருக்க ஆர்.பி.ஐ.யும் செபியும் நடவடிக்கை எடுத்தால் நல்லது'' என்றவர், ஒரு உஷார் விஷயத்தைச் சொன்னார்.

''மடமடவென உயர்ந்து வரும் வெள்ளி விலையை அநியாயத்துக்கு கீழே கொண்டுவர சில நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த வங்கி ஒன்று மூன்று பில்லியன் அவுன்ஸ் அளவுக்கு வெள்ளிகளை விற்று 'ஷார்ட்’ போயிருக்கிறதாம். இதனால் வெள்ளி விலையை பெரிய அளவில் குறைக்க அந்த வங்கி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறதாம். எதற்கும் வெள்ளி முதலீட்டாளர்கள் உஷாராக இருப்பது நல்லது'' என்று எழுந்தவருக்கு மீண்டும் சில்லென்ற நன்னாரி சர்பத் கொடுத்தோம். ரசித்துக் குடித்தவர், வழக்கம்போல துண்டுச் சீட்டு கொடுத்துவிட்டு பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism