Published:Updated:

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

கடை டூ கார்ப்பரேட் வியூகங்கள்! - 5

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

கடை டூ கார்ப்பரேட் வியூகங்கள்! - 5

Published:Updated:
''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''


உலக மகா கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி முதல் மூலக்கடை முத்து வரை, சொந்த பிஸினஸ் நடத்தும் எல்லோருமே தினமும் பலவிதமான பிரச்னைகளை சந்திக்கத்தான் செய்கிறார்கள். இது மாதிரியான சந்தர்ப்பங்களில் நாம் பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் நம் வாழ்வும் வளர்ச்சியும் இருக்கின்றன. கரூரில் கோலி சோடா தயார் செய்யும் செந்திலுக்கும் இதேமாதிரி ஒரு பிரச்னை வந்தது. அந்த பிரச்னையை அவர் எப்படி சமாளித்தார்?

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரூரின் சுற்றுப்புறங்களில் செந்திலின் கோலி சோடா மிகப் பிரபலம். நான்கு வருடங்களுக்கு முன்பு செந்தில் இந்த பிஸினஸை தொடங்கினார். மதுரையில் பன்னாட்டு கோலா நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவில் தொழிலாளியாக வேலை பார்த்து, தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டவர்.

சொந்த கம்பெனி தொடங்க வேண்டுமென்று செந்திலுக்கு சின்ன வயதிலிருந்தே ஆசை. கோலா கம்பெனி வேலையை விட்டுவிட்டு கரூருக்கு வந்தார்.  சொந்தமாக கோலி சோடா தயார் செய்து விற்பது என்கிற முடிவோடு.

மார்க்கெட்டில் பல லோக்கல் கோலி சோடா தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். எல்லோரும் வெறும் சோடா விற்பனை செய்தார்கள். செந்தில் பல புதுமைகள் செய்தார். தாகமா? வெறும் சோடா அல்லது லைம் சோடா. வயிறு வலிக்கிறதா? ஓம சோடா. குழந்தைகளுக்கு வனிலா, ஆரஞ்சு சோடா!

பாட்டில்களும் மக்கள் மனதை சுண்டி இழுத்தன. லேபிளில் வேல் ஏந்திய முருகன் சிரித்துக் கொண்டிருந்தார். பார்த்தவர் மனதைக் கொள்ளை கொள்ளும் படம்.  இப்படி ஒவ்வொரு வகை சோடாவுக்கும் ஒவ்வொரு விதமான லேபிள்.

சிறிய அளவில்தான் உற்பத்திக்கூடம் என்றாலும் பக்காவாக அதை அமைத்திருந்தார். ஒத்தாசையாக தன் மச்சான் கோபாலையும் சேர்த்துக் கொண்டார்.

##~##
இரண்டே வருடம்... வகை வகையான சோடாக்கள்... பெட்டிக்கடை முதல் பெரிய மளிகைக்கடைவரை அத்தனைபேரிடமும் பதவிசாக பேசி, பிஸினஸை வளர்த்தார் செந்தில்.

ஒருநாள் காலை... மலைச்சாமி யின் பெட்டிக்கடையில் பாட்டிலை சப்ளை செய்யும்போது, முதல்நாள் கொடுத்த ஓமசோடா ஆறு பாட்டில்களையும் அப்படியே திருப்பிக் கொடுத்தார். ''என்ன மல, ஆறுல ஒண்ணுகூட போகலையா?'' என்று கேட்டார் செந்தில்.

''போகலைங்கறதைவிட நான்தான் விக்கல'' என்று கொஞ்சம் கடுப்பானவர், ஓமசோடா பாட்டிலை எடுத்துக் கொடுத்து, ''இதுல என்ன விழுந்து கிடக்குன்னு பார்த்தீங்களா?'' என்றார்.

பதறியடித்துப் பார்த்தார் செந்தில். பாட்டிலின் அடியில் ஒரே கசடு. எப்படி வந்தது என்று செந்திலுக்கு சட்டென விளங்கவில்லை.

அடுத்தடுத்த நாட்களில்  பல கடைகளில் இருந்து இதே மாதிரி புகார். மச்சான் கோபாலிடமும் இதேமாதிரி பல கடைக்காரர்கள் புகார் செய்திருந்தார்கள். ''உங்க கம்பெனி சரக்கு வேணாம்ப்பா. பேரு கெட்டுடும் போல இருக்கு'' என்று பலரும் கையெடுத்து கும்பிட்டார்கள்.

வீட்டுக்கு வந்த செந்திலுக்கு தலை சுற்றியது. எந்த இடத்தில் தவறு? இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது?

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

செந்திலுக்கு ஏற்பட்ட இந்த பிரச்னை தமிழகம் முழுக்க இருக்கும் பல பிஸினஸ்மேன்களுக்கும் ஏற்பட்டிருக்கும். இந்த பிரச்னைக்கு எப்படி தீர்வு காணலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

எப்படித் தீர்வு காணலாம் என்று நீங்கள் நினைப்பதை உங்கள் மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள். உலக அளவில் இரு பெரும் நிறுவனங்கள் இதே மாதிரியான சிக்கலில் மாட்டிக் கொண்டபோது என்ன செய்தன என்பதை சொல்கிறேன்.

காட்பரீஸ் நிறுவனம் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதன் சாக்லேட்களை நீங்களும் உங்கள் குழந்தைகளும் ரசித்து சாப்பிட்டிருப்பீர்கள்.  

2003-ம் ஆண்டுவாக்கில் காட்பரீஸ் சாக்லேட்டுகள் விற்பனை வருடத்துக்கு சுமார் 80,000 கிலோ. இதில் கணிசமாக, சுமார் 10,000 கிலோ வரையிலும் தீபாவளியின்போது விற்பனையாகும். பைவ் ஸ்டார் முதல் டைய்ரி மில்க் வரை காட்பரீஸின் பல பிராண்டுகள் குழந்தைகளை கட்டிப் போட்டிருக்க, அணுகுண்டு மாதிரி அந்த செய்தி வந்து சேர்ந்தது.

மும்பையில் இரண்டு வாடிக்கை யாளர்கள் இரண்டு வெவ்வேறு கடைகளில் வாங்கிய டைய்ரி மில்க் சாக்லேட் பாக்கெட்டுகளில் புழுக்கள் நெளிந்ததைக் கண்டதாக புகார் வந்தது. இந்தப் புகாரை உடனடியாக மகாராஷ்டிர மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாக கமிஷனரின் கவனத்துக்கும் கொண்டுபோய் விட்டார்கள்.  முதல்கட்ட சோதனைகள் செய்த அவர், புகார்கள் மேலும் ஆழமாக விசாரிக்கப்பட வேண்டியவை என்று முடிவெடுத்து, கம்பெனிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது மட்டுமல்லாமல் உடனே பத்திரிகை யாளர்கள் கூட்டத்தையும் ஏற்பாடு செய்து குற்றச்சாட்டை வெளியிட, அடுத்த மூன்று வாரத்துக்கு பத்திரிகைகள் அந்த செய்தியை வெளியிட்டு, சாக்லேட் விற்பனையை ஒரு முடிவுக்கே கொண்டு வந்துவிட்டன.  

இந்நிலையில் சாதாரணக் கம்பெனிகள் என்ன செய்திருக்கும்?   'எங்கள் தரக் கட்டுப்பாடு கண்டிப்பானது. எங்கள்  தயாரிப்பில் புழு வர வாய்ப்பே இல்லை.  மும்பையில் ஏதோ இரண்டு கடைகளில் நடந்த சொதப்பல் இது’ என்று கை கழுவிவிடுவார்கள். அல்லது  கடைக்காரர்கள்மேல் பழியைப் போட்டு விடுவார்கள். 'கொஞ்ச நாட்களானால் மக்கள் மறந்து விடுவார்கள். இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?’ என்றுகூட நினைப்பார்கள்.

''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

ஆனால், காட்பரீஸ் நிறுவனம் அப்படி நடந்து கொள்ளவில்லை.  இது மக்கள் மறக்கும் சம்பவம் அல்ல; கம்பெனியின் வாழ்வா, சாவா பிரச்னை என்றுதான் எடுத்துக் கொண்டது. இந்தப் பிரச்னையை நேர்மையாக எதிர்கொள்ள முடிவு செய்தது,  தன்னிடம் தப்பு நடந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்க விரும்பியது. அப்படி நடந்திருந்தால், மறுபடியும் தவறுகளே நடக்காதிருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

மூலப்பொருள் உள்ளே வருவது முதல் அது புராடக்ட்-ஆக மாறி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வெளியே சென்று கடைகளில் உள்ள பாட்டில்களில் சேர்கிற வரை எங்கே தவறு என்று தேடிப் பார்த்தது. புழு நெளிந்ததாக வந்த புகாருக்கு நிறுவனம் எந்த வகையிலும் காரணமில்லை என்று கண்டுபிடித்து உறுதி செய்து கொண்டது.

அடுத்தநாளே, ஊடக சந்திப்புக் கூட்டம் ஏற்பாடாகியது. நிர்வாக இயக்குநர் பரத் பூரி நிருபர்களின் சங்கடமான கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் பதில் கொடுத்தார். 'காட்பரீஸ் உண்மைச் செய்திகள்’ என்ற தலைப்பில் நாடு முழுக்க உள்ள பத்திரிகைகளில் இந்த விளம்பரங்கள் வெளியாயின. அடுத்த சில மாதங்களிலேயே மக்களின் மனப்போக்கு மாற, மீண்டும் குழந்தைகளின் கைகளில் காட்பரீஸ் சாக்லேட்டுகள் தவழ ஆரம்பித்தன.

இதே மாதிரியான ஒரு பிரச்னைதான் ஜப்பானின் ஸ்நோ பிராண்ட் கம்பெனிக்கும் ஏற்பட்டது. 1925-ல் தொடங்கப்பட்டது ஸ்நோ பிராண்ட் மில்க் புராடக்ட் கம்பெனி. பால், தயிர், வெண்ணெய், பாலாடை, ஐஸ்கிரீம் என இந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் ஜப்பான் மக்கள் சுவைத்துச் சாப்பிட்டனர்.

ஜூன் 2000... ஜப்பானின் பல பகுதிகளில் பலருக்கும் வாந்தி, பேதி வர, கிட்டத்தட்ட 15 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் படுக்கையில் கிடந்த அத்தனைபேரும் ஸ்நோ பிராண்டின் பாலோ, தயிரோ சாப்பிட்டிருந்தார்கள்.

''என்ன அபாண்டம்! எங்கள் தயாரிப்புகள் மிகக் கடுமையாக சோதிக்கப்படுபவை. தரம் குறைந்த பொருட்களை நாங்கள் வெளியே அனுப்பவே மாட்டோம். சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எங்கள்மேல் பொறாமை! எங்கள் பிஸினஸை கவிழ்க்க நடக்கும் சதிதான் இது!'' - ஏகமாக பேசி, கை கழுவியது ஸ்நோ நிறுவனம்.

வேறு வழியில்லாமல் அரசாங்கமே களத்தில் இறங்கி, ஸ்நோ பிராண்ட் பால், தயிர் பாக்கெட்டுகளை வாங்கி சோதனை செய்தது. நோய்களை பரப்பும் பாக்டீரியா கிருமிகள் அதில் இருந்தது வெட்டவெளிச்சமானது.

''கடைகளில் கொடுத்த அத்தனை ஸ்டாக்குகளையும் திரும்ப எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டது அரசாங்கம். திரும்பி எடுத்த பாக்கெட்டுகளில் எக்ஸ்பயரி தேதிகளை மாற்றி, மீண்டும் கடைகளுக்கு கொடுத்தது ஸ்நோ.

தவறை திருத்திக் கொண்டு சரி செய்வதற்கு பதில், அடுத்தடுத்து தவறு செய்து கையும் களவுமாக மாட்ட, அந்த நிறுவனத்துக்கு இருந்த 45 சதவிகித மார்க்கெட் ஷேர் குறைந்து வெறும் 9 சதவிகிதமானது. கிட்டத்தட்ட 1,720 கோடி ரூபாய் நஷ்டம்.

இனியும் இப்படியே  விடக்கூடாது என்று நினைத்தது நிர்வாகம்.  இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை கடுமையாக எதிர்த்து வந்த மனித உரிமைப் போராளி நொபுகோ ஹிவாஸியை அந்நிறுவனத்தின் இயக்குநராக்கியது. கஸ்டமர்களின் குறையை அறிய 20 அதிகாரிகளை நியமித்தது.  அடுத்த பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து தரமொன்றே குறிக்கோளாக கொண்டு உழைத்ததில் இன்று அந்த நிறுவனம் பிளஸில் இருக்கிறது.

ஒரே பிரச்னையை இரு நிறுவனங்கள் எப்படி எதிர்கொண்டது என்பதை சொல்லி விட்டேன். இதில் எந்த நிறுவனத்தை செந்தில் பின்பற்ற வேண்டும் என்பதை நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

(மீண்டும் சந்திப்போம்)
-படம் : என். விவேக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism