Published:Updated:

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

ஷேர்லக் ஹோம்ஸ்

Published:Updated:

கண்கொத்திப் பாம்பாக இருங்கள்...

ஷேர்லக் ஹோம்ஸ்


வெள்ளிக்கிழமை... வழக்கமாகச் சொன்ன நேரத்துக்கு வந்துவிடும் ஷேர்லக் வரவில்லை... தேர்தல் முடிவுகளைப் பார்த்தபடி செட்டில் ஆகிவிட்டாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே வாசலில் புல்லட் சத்தம் கேட்டது... ஆர்வம் தாங்காமல் மாடியிலிருந்து கீழே இறங்கிப் போய் வரவேற்றோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
''எ
ன்ன செய்வது வரும் வழியெல்லாம் ரத்தத்தின் ரத்தங்களின் உற்சாகம்..! பத்தாயிரம் வாலாக்களைப் பற்ற வைத்து, போதாக்குறைக்கு வருவோர் போவோர் வாயில் எல்லாம் இனிப்பை அள்ளி அப்பிக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இந்த களேபரத்தை எல்லாம் தாண்டி வருவதற்குள் நேரமாகிவிட்டது'' என்று நாம் கேட்காமலே விளக்கத்தைக் கொடுத்துவிட்டு மேலே வந்து இருக்கையில் அமர்ந்தார்.

''தேர்தல் முடிவுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என்று பேச்சுக்கு அஸ்திவாரத்தைப் போட்டோம்...

''தி.மு.க.வின் செயல்பாடுகள் எந்த வகையிலும் திருப்தி அளிக்கவில்லை என்பதாலேயே அ.தி.மு.க.வுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள். முக்கியமாக மின்சாரப் பற்றாக்குறையால் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல. கூடவே ஊழல் பிரச்னையும் சேர்ந்து விட்டது. இனியாவது வெளிச்சம் கிடைத்தால் சரி'' என்றவர் அப்படியே மார்க்கெட் நியூஸுக்குத் தாவினார்.

''இந்த வாரத்தில் சந்தை பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் கண்டுவிடவில்லை. திங்கள்கிழமை முதலே கீழ்நோக்கியே சென்றது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தால் நம் சந்தை நிச்சயம் குறையும். எனவே டாலரைப் பாருங்கள் என கடந்த வாரம் சொன்ன மாதிரியே டாலரின் மதிப்பு உயர, நம் சந்தையில் போட்டு வைத்திருந்த பணத்தை திரும்ப எடுத்துக் கொண்டு  ஓடினார்கள் எப்.ஐ.ஐ.கள். கடந்த ஐந்து தினங்களில் எப்.ஐ.ஐ.கள் செய்த முதலீட்டைவிட, வெளியே எடுத்த தொகை 640 கோடி ரூபாய்க்குமேல். தவிர, சீனா பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகளின் ரிவர்ஸ் ரெக்கொயர்மென்ட் ரேஷியோவை 0.50 புள்ளிகள் உயர்த்தும் முடிவை வரும் 18-ம் தேதி எடுக்கப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் சரிந்தன. ஆனால், இந்த வாரத்தின் கடைசி நாளான இன்று மார்க்கெட் உயர்ந்ததற்கு காரணம், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியானதுதான். மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் கம்யூனிஸ்டுகள் தோல்வி அடைந்ததை ஒரு பாசிட்டிவ்வான விஷயமாகவே பார்த்தது சந்தை.

இந்நிலையில் அமெரிக்க டாலர் தொடர்ந்து மேல் நோக்கிச் செல்லும்பட்சத்தில் சந்தை இறங்கவே வாய்ப்புண்டு. தவிர, 18-ம் தேதி சீனா வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும் அறிவிப்பை வெளியிடும்போதும் சந்தை நடுக்கம் காணும். எனவே, ஜாக்கிரதை!'' என்று எச்சரித்தவருக்கு சில்லென்று ரோஸ் மில்க் கொடுத்துவிட்டு, அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

''நம்மூர் வங்கியான கரூர் வைஸ்யா பேங்கில் என்ன பிரச்னை? அதன் பெயர் ஏன் செய்திகளில் அடிபடுகிறது?''

ரோஸ் மில்க்கை ஒரு மடக்கு உறிஞ்சிக் குடித்தவர், நம் கேள்விக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''கரூர் வைஸ்யா வங்கியின் சி.இ.ஓ. குப்புசாமியின் பதவிக்காலம் இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த தலைவராக கே.வெங்கடராமன் தேர்வாகி இருக்கிறார். இவர் இதற்கு முன் எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை பார்த்தவர். இந்த நியமனத்துக்கு ரிசர்வ் வங்கியும் அனுமதி கொடுத்து விட்டது. புதிதாக வரும் சி.இ.ஓ.க்கு பல சோதனைகள் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். இந்த வங்கியில் 5% பங்குகளை வைத்திருக்கும் ஜி.எம்.ஆர். குழுமம் தன் வசமிருக்கும் பங்குகளை விற்க முடிவெடுத்திருப்பதாக அரசல்புரசல் தகவல். அடுத்த சி.இ.ஓ.வை தேர்வு செய்ததில் தன்னோடு ஆலோசிக்கவில்லை என்கிற கவலை ஜி.எம்.ஆர் தரப்பில் இருப்பதாகப் பேச்சு. ஆனாலும், வங்கியின் பங்குகளை விற்கும் திட்டம் ஏதுமில்லை என்று வெளிப்படையாகவே சொல்லி விட்டது. இதுதான் விவகாரம். இப்படி ஒரு சர்ச்சை போய்க் கொண்டிருப்பதால், இப்பங்குகளை வாங்கியவர்கள் கண்கொத்திப் பாம்பாக கவனித்து வரவும்.''

''அதுதான் விஷயமா? இந்த பங்கை நீண்ட காலமாக வைத்திருக்கும் நம் வாசகர்களுக்கு இந்த தகவல் நிச்சயம் பயன்படும். வேறு என்ன விஷயம்?'' என்றோம்.

''ஃபியூச்சர் வென்சர்ஸ் ஐ.பி.ஓ. வந்தபோது அதில் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துவிட்டு முதலீடு செய்யுமாறு சொல்லி இருந்தீர்கள். அந்த எச்சரிக்கை இப்போது உண்மை என்றாகி விட்டது. 10 ரூபாயில் பட்டியல் இடப்பட்ட அந்த பங்கு, முதல் நாளன்றே 15% குறைந்து 8.50-க்கு வந்து விட்டதே! இன்று ஒருநாள் மீண்டும் 5 சதவிகிதத்துக்குமேல் உயர்ந்தது என்றாலும், இந்த பங்கை தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்பது கேள்விக்குறியே.

ஃபியூச்சர் மாதிரியே முதல் நாளன்றே கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்தது செர்வலெட்சுமி பேப்பர் நிறுவனத்தின் பங்கு. இந்த பங்கு 29 ரூபாய்க்கு லிஸ்ட் ஆனது. லிஸ்ட் ஆன உடனேயே 48.75 ரூபாய் வரை உயர்ந்தது. முதல் நாளன்றே பங்கு விலையை 100 சதவிகிதம் உயர்ந்து விடுமோ என பலரும் அதை போய் வாங்க, உடனே விலை குறைய ஆரம்பித்து 19 ரூபாய்க்கு இறங்கியது. விலையை ஏற்றியிறக்கி விளையாடும் சில டிரேடர்களின் கையில் இந்த பங்கு சிக்கிவிட்டதோ என்று சந்தேகமாக இருக்கிறது. குறைந்த விலை என்கிற கவர்ச்சியோடு ஐ.பி.ஓ. வரும் இதுபோன்ற பங்குகளை நமது வாசகர்கள் தவிர்ப்பதே நல்லது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதால் நம்மவர்கள் நூறு, இருநூறு என்று வாங்காமல் 500, 1000 பங்குகளை வாங்கி விடுகிறார்கள். இதனால் நஷ்டம் வரும்போது பெரிதாகவே வந்து விடுகிறது'' என்றவர் மிச்சமிருக்கும் ரோஸ் மில்க்கையும் குடித்து முடித்தார்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''இன்று வந்த தேர்தல் முடிவால் ராஜ் டி.வி பங்கின் விலை உயர்ந்ததைக் கவனித்தீரா?'' என்று கேட்டோம்.

''தமிழகத்தில் அ.தி.மு.க. ஜெயித்ததால் ராஜ் டி.விக்கு நல்லது நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் அந்த நிறுவனத்தின் பங்குகளை சிலர் வாங்க ஒரேநாளில் 20 சதவிகிதம் உயர்ந்தது. ஆனால், அன்று சன் டி.வி-யின் விலையும் 3.75 சதவிகிதம் வரை உயரவே செய்தது. நடந்த விஷயம் ஒன்றுதான். ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பார்க்கிறார்கள் என்பதுதான் இதில் விசேஷம்.''

''நிறுவனச் செய்திகள் ஏது முண்டா?'' என்று கேட்டோம்.

''அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் கன்சாலிடேட்டட் லாபம் 27 சதவிகிதம் குறைந்திருக்கிறது. கடந்த காலாண்டில் ரப்பர் விலை மிக அதிகமாக இருந்ததே இதற்கு காரணம் என்கிறார்கள். இப்போது ரப்பர் விலை கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருவதால் அடுத்து வரும் காலாண்டில் மீண்டும் லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

எம்.டி.என்.எல். நிறுவனம் தனது சம்பளச் செலவை கணிசமாக குறைத்திருப்பது நல்ல செய்தி. கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் சம்பளச் செலவு 1,968 கோடியாக இருந்ததாம். இந்த ஆண்டு கிட்டத்தட்ட 264 கோடி குறைத்து 1704 கோடியாக ஆக்கியிருக்கிறதாம் அந்த நிறுவனம். தவிர, கடந்த ஆண்டு வருமான வரித்துறைக்கு தவறுதலாக கட்டப்பட்ட 843 கோடி ரூபாய் இப்போது திரும்பக் கிடைத்து விட்டது. அதனால் இந்த ஆண்டு மொத்த நஷ்டம் 1,071 கோடியாக மட்டுமே இருக்குமாம். கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது இந்த நஷ்டம் எவ்வளவோ குறைவுதான். இன்னும் இரண்டாண்டுகளில் இந்த நிறுவனம் லாபத்துக்கு வந்துவிடும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பங்கை வாங்கி சேர்க்க ஆரம்பிக்கலாம்'' என்றவர் கிளம்பத் தயாரானார்.

''முக்கியமான விஷயத்தைக் கொடுக்காமல் கிளம்புகிறீர்களே!'' என்றோம். ''அட, டிப்ஸ் கொடுக் காமல் போனால் வாசகர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று எனக்குத் தெரியாதா என்ன?'' என்று சொல்லிவிட்டு துண்டுச் சீட்டை கொடுத்துவிட்டு பறந்தார். துண்டுச் சீட்டில் இருந்த பங்குகளின் பெயர்களை முன்பக்க பெட்டிச் செய்தியில் பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism