Published:Updated:

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி
கமாடிட்டியிலும் கலக்கலாம்!

டந்த இதழின் முடிவில் ஒரு டிராய் அவுன்ஸ் என்றால் எவ்வளவு கிராம் என்று கேட்டிருந்தேன். ஏராளமான வாசகர்கள் மிகச் சரியான விடையை சொல்லி அசத்தியிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் தலா ஒரு கிராம் தங்கம் பரிசாக அளிக்க எனக்கு ஆசைதான்! ஆனால், தங்கம் விற்கிற விலையில் அது நடக்காது என்பதால் எல்லோருக்கும் என் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்.

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

1 டிராய் அவுன்ஸ் என்பது 31.1034768 கிராம்! சர்வதேசச் சந்தைகளில் தங்கத்திற்கான அளவுகோல் இதுதான்.

'அவோயிர்டுபாயிஸ்’ அவுன்ஸ் என்பது வேறு. பல வெளிநாடுகளில் பலசரக்குக் கடைகளில் அளவிடப் பயன்படுத்துவது இது. இந்த அவுன்ஸுக்கும் தங்கத்துக்கும் சம்பந்தமில்லை என்பதால் அதுகுறித்து மேற்கொண்டு பேசாமல் விட்டுவிடலாம்.

கடந்த இதழில் நான் கொடுத்திருந்த தங்கத்தின் விலையேற்றம் குறித்த கிராஃப்பை நீங்கள் உன்னிப்பாகக் கவனித்திருந்தால் ஒரு விஷயம் உங்களுக்கு நன்றாகவே புரிந்தி ருக்கும். 1985 முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 300 டாலர் என்றுதான் இருந்தது. மீண்டும் 850 டாலர்கள் வந்தது 2008-ம் ஆண்டுதான்! 1980-ல் தொட்ட விலையான 850 டாலர் களை மீண்டும் தொடவே ஏறத்தாழ 28 ஆண்டுகளாயிற்று.

##~##
இதில் நமக்கு ஒரு பாடம் இருக்கிறது.

தங்கம் ஒரு நல்ல நீண்ட கால முதலீடு என்பவர்களைக் கொஞ்சம் யோசிக்க வைக்கும் புள்ளி விவரம் இது. 1979-80-ல் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு சுமார் 100-தான். 2008-ம் ஆண்டு தொடக்கத்தில் தொட்ட உச்சம் 21,000. 1979-80-ல்  சென்செக்ஸில் உள்ள பங்குகளில் 100 ரூபாய் முதலீடு செய்திருந்தால் (அதே சதவிகிதத்தில்), 28 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சந்தை மதிப்பு ஏறத்தாழ 21,000 ரூபாயாக இருந்திருக்கும் என்பதுதான் இந்த புள்ளி விவரம் உணர்த்தும் பாடம்!

ஆனால், இதையே தங்கத்தின் விலை ஏற்றத் துடன் ஒப்பிட்டுப் பார்ப் போம். 28 ஆண்டுகளில் எந்தவித ஏற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல் மாதிரி இருக்கும் தங்கத்தைப் பற்றி ஒரு நல்ல நீண்டகால முதலீடு என்று சொல்கிறோம். ஆனால், அதே காலகட்டத்தில் 210 மடங்கு அதிகரித் திருக்கும் பங்குச் சந்தையைக் குறுகிய கால முதலீடாகவே கருதும் தவறான கண்ணோட் டம் நம்மிடம் எப்படியோ புகுந்து விட்டது. இதை முற்றிலும் நேர்மாறாகப் புரிந்து வைத்திருப்பதால்தான் முதலீட்டாளர்கள் பலர் பங்குச் சந்தையில் தொடர்ந்து இழப் பையும், தங்கத்தினால் பெரிய பலனும் அடைய முடிவதில்லை.

எனினும், தங்கத்தில் நடக்கும் விலை மாற்றங்களால் ஏற்படும் பயன்பாட்டை நாம் முழுமையாக அடைய முடியாமல் போகக் காரணம், நமது வர்த்தக முறைதான். இந்தியாவில் பெரும்பாலும் ஆபரண மாகவும், பவுன் காசுகளாகவும்தான் தங்கத்தை வாங்குகிறோம். இதில் என்ன குறை என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் கணக்குப் போட்டுப் பாருங்கள்.

ஆபரணம்:

நம் நாட்டில் சுமார் 49 சதவிகிதம் தங்கம் ஆபரணமாகவே வாங்கப்படுகிறது. ஆபரணங்களாக வாங்கும்போது கூலி, சேதாரம், இதர கழிவுகள் மற்றும் கட்டணங்கள் என முதலில் சொல்லும் விலை ஒன்றாகவும், கடைசியில் நம் தலையில் கட்டும் விலை முற்றிலும் வேறொன்றாகவும் இருக்கிறது. என்றாலும் நாம் வாங்காமல் திரும்புவதே இல்லை.

சரி, வாங்கிய பிறகு அதன் விலை ஏறிவிட்டது என்றால் அந்த விலையில் நாம் வாங்கிய தங்க நகையை விற்க முடியுமா என்றால் அதுவும் முடியாது. நம்மிடம் இருந்து திரும்ப வாங்கும்போதும் மீண்டும் அதே கழிவுகள், கட்டணங்கள் என கணிசமாக குறைத்துத்தான் வாங்குவார்கள். இது ஒருவகையில் நமக்கு நஷ்ட மாகவும் முடியலாம்.

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

இதைவிட பெரிய ஆபத்து, ஆபரணத் தங்கத்தில் இருக்கும் 'எமோஷனல் அட்டாச்மென்ட்’. ஒரு நல்ல முதலீட்டிற்கு அழகு குறைந்த விலையில் வாங்கி, அதன் மதிப்பு உயரும்போது விற்பது தான். அப்படி அதிகரிக்கும்போது விற்று லாபம் பார்க்க வேண்டும்.

இதுதான் ஒரு நல்ல முதலீட் டிற்கான இலக்கணம். ஆனால், தங்கத்தை நாம் இப்படியா செய்கிறோம்?

தங்கம் விலை ஏறினாலும் நாம் விற்க நினைப்பதே இல்லை.

ஒருவேளை நாம் அப்படி நினைத் தாலும் நம் வீட்டுப் பெண்கள் நம்மை விற்க விடுவதே இல்லை. அதிகபட்சம் அதை எடுத்துக் கொண்டு போய் வேறொரு நகையாக லேட்டஸ்ட் டிசைனாக மாற்றிக் கொண்டு வருவோம், அவ்வளவுதான்!    

கமாடிட்டியிலும் கலக்கலாம்!

அடுத்து, வங்கிகளிலிருந்து தங்கக் காசாக வாங்குகிறோம். நம் நாட்டில் 41% தங்கம் காசுகளாக வாங்கப்படுகிறது. அதிலும் பெரும் பாலும் வங்கிகளில்; இப்படி வாங்கும்போது அதன் விலையைக் கேளுங்கள்; யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள். அவ்வளவு விலை கொடுத்து வாங்கிய பிறகு, அதை அவர்கள் திரும்ப வாங்கிக் கொள்ள மாட்டார்களாம். அதை நகைக்கடைகளில்தான் விற்க வேண்டுமாம். இது என்ன நியாயம்? ஒரு அவசரத் தேவைக்கு அடமானக் கடனாவது கொடுப்பார்களா, அதுவும் இல்லை. ஆபரணத் தங்கத்துக்குக் கூட கடன் உண்டு. ஆனால் சுத்தத் தங்கத்துக்கு கடன் இல்லை! என்ன விந்தை இது!

மேலே சொன்ன இரண்டிலும் என்ன பிரச்னை தெரியுமா? தங்கத்தின் விலை அவ்வப்போது அதிகரித்தும், அதன் பலன் முழுவதும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்காதபடி இடைத்தரகர்கள் எடுத்துக் கொள்வதுதான். ஆனால், கமாடிட்டி சந்தையில் தங்கம் வாங்கி விற்க தரகருக்கு நாம் கொடுக்க வேண்டிய கமிஷன் மிக மிகக் குறைவுதான்.

எந்த ஒரு சந்தையிலும் விலை மாற்றங்களின் பலன் பெருமளவு முதலீட்டாளர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமெனில் அங்கு 'இம்பாக்ட் காஸ்ட்’ மிகக் குறைவாக இருக்க வேண்டும் அதற்குத் தேவையான, முக்கியமான அங்கங்கள் இரண்டு: ஒளிவு மறைவற்ற வர்த்தகம், சென்ட்ரலைஸ்டு ஆர்டர் புக்.

கணினி மூலமான வர்த்தகத் தால் நாடு முழுவதும் ஒளிவுமறைவற்ற வர்த்தகம் உருவாகியிருக்கிறது. அகமதாபாத்தில் இருக்கும் வர்த்தகருக்கும் மதுரையில் இருக்கும் முதலீட்டாளருக்கும் பொருட்களின் விலை ஒரே நேரத்தில்/சமயத்தில் கணினி மூலம் உடனுக்குடன் டிஸ்ப்ளே ஆகிறது; வாங்கலாமா, விற்கலாமா என முடிவெடுக்க இது அவசியம்.

நாடெங்கிலும் அனைவரின் தேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரே ஆர்டர் புக்கில் கொடுப்பதால், லிக்விட்டி அதிகமாகிறது. வாங்குவோரும், விற்போரும் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் சந்தித்தால் பொருட் களுக்கு நியாயமான விலை கிடைக்கும்தானே?

இதைத்தான் நம்மூர் சந்தை களும் செய்தன. தினசரி மார்க்கெட்டைவிட வாரச் சந்தையில் விலை குறைவாக இருக்கும் அல்லவா? அந்த வாரச் சந்தையையே தினசரிச் சந்தையாக மாற்றிவிட்டால்...? தினசரி எல்லோருக்கும் நல்ல விலை கிடைக்கும்தானே?

'இம்பாக்ட் காஸ்ட்’ குறையும் போது மேலும் பலர் அதில் வர்த்தகம் செய்ய வழி பிறக்கும். அடிக்கடி வர்த்தகம் செய்பவர் களும் குறைந்த செலவில் வர்த்தகம் செய்ய முடியும்.

மேற்சொன்ன விஷயங்களி லிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்?

* தங்கம் ஒரு நல்ல குறுகிய கால முதலீடு; வர்த்தகத்திற்கும் ஏற்றது.

* வர்த்தகம் குறைவாக இருந்தால் 'இம்பாக்ட் காஸ்ட்’ குறைவாக இருப்பது அவசியம். கமாடிட்டி டிரேடிங்கில் இது சாத்தியமாகிறது.

தங்கம் பற்றி இன்னும் முக்கியமான தகவல்களை அடுத்த இதழிலும் தொடர்ந்து சொல்கிறேன்.

(தொடர்ந்து கலக்குவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு