பிரீமியம் ஸ்டோரி

எதற்கும் தயாராக இருங்கள்!

வெள்ளிக்கிழமை இரவு... இதழின் கடைசி பாரங்களை முடிக்கும் பணி ஜரூராக நடந்து கொண்டிருக்க, சத்தமில்லாமல் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக்.

ஷேர்லக் ஹோம்ஸ்

''எங்கே போய்விட்டீர்? நீர் வராமல் போய் விடுவீரோ என்று நாங்கள் பயந்தே போனோம்!'' என நம் ஆச்சரியத்தைக் காட்ட, ''ஷேர்லக்கை நம்பியோர் கைவிடப்படார்'' என்றபடி உட்கார்ந்தார்.

''சந்தையின்போக்கு சரியில்லாமல் இருக்கிறதே!'' என்றோம் அவரிடம்.

தொண்டையைச் செருமிக் கொண்டவர், ''அது எப்படி சரியாக இருக்கும்?'' என்று கேட்டபடி பேச ஆரம்பித்தார்.

''சென்செக்ஸ் கடந்த வாரத்தின் முதல் நாளன்று 18319 புள்ளிகளோடு ஆரம்பமானது. வெள்ளிக்கிழமையன்று 18376 புள்ளிகளோடு முடிந்தது. ஆக, ஐந்து டிரேடிங் நாட்களில் அதிகபட்ச முன்னேற்றம் வெறும் 57 புள்ளிகள்தான். சந்தை பெரிய அளவில் மேல்நோக்கிச் செல்லாமல் அதிக ஏற்ற இறக்கத்தோடு இருந்ததற்கு காரணம், அமெரிக்க டாலர்தான். கடந்த ஒருமாத காலத்தில் இல்லாத அளவுக்கு டாலர் இண்டெக்ஸ் இறங்கிக் கிடக்கிறது. தற்போது 73.37-ஆக டாலர் இண்டெக்ஸ் இருப்பதால், பலரும் டாலரை விற்றுவிட்டு, யூரோவையும் தங்கத்தையும் கச்சா எண்ணெய்யையும் வாங்கித் தள்ளிவிட்டார்கள்.

##~##
பொதுவாக டாலர் இண்டெக்ஸ் இறங்கினால், எஃப்.ஐ.ஐ-கள் நம் பங்குச் சந்தைக்கு ஓடிவந்து முதலீடு செய்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக நம் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பார்த்து அவர்கள் கொஞ்சம் அதிகமாகப் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். 2ஜி பிரச்னை இன்னும்கூட எரிமலையாக வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அன்னா ஹஸாரே, ராம்தேவ் போன்றவர்கள் நம் நாட்டில் நடக்கும் ஊழலை எதிர்த்து நடத்தும் நிகழ்ச்சிகளைப் பார்த்து எஃப்.ஐ.ஐ-கள் பயந்து, நம் சந்தையைவிட்டு சென்ற வண்ணம் இருக்கிறார்கள்.

கடந்த மே மாதத்தில் அவர்கள் செய்த மொத்த முதலீடு 54,936 கோடி ரூபாய். ஆனால், அவர்கள் விற்றுத் தீர்த்த பங்குகளின் மதிப்பு 60,095 கோடி ரூபாய். ஆக, முதலீடு செய்ததைவிட 5,158 கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்றுத் தீர்த்தார்கள். கடந்த ஐந்து மாதங்களில் முதலிரண்டு மாதங்கள் மைனஸிலும் அடுத்த இரண்டு மாதங்களில் பிளஸிலும் இருக்கிறது அவர்கள் முதலீடு. சந்தை ஓரளவு இறங்கி இருப்பதன் மூலம் பங்குகளின் பி.இ. கவர்ச்சிகரமாக இருப்பதால், (டாலரின் மதிப்பு மேற்கொண்டு சரியும் பட்சத்தில்)

எஃப்.ஐ.ஐ.களின் கடைக்கண் பார்வை மீண்டும் நம் சந்தை மீது விழ வாய்ப்புண்டு. இதனால் அடுத்த வாரத்தில் சந்தை  கொஞ்சம் மேலே செல்லலாம்.

ஆனால், டெம்பிள்டன் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் மார்க் மோபியஸ் வேறு மாதிரி சொல்கிறார். சர்வதேச அளவில் இன்னொரு பெரிய நிதி நெருக்கடி (டபுள் டிப்ரஷன்) ஏற்படக்கூடும் என்று அவர் குண்டு போடுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு 'சப்-பிரைம்’ பிரச்னையால் வந்த நிதி நெருக்கடியைவிட இப்போது வரவிருக்கும் டபுள் டிப்ரஷன் மோசமாக இருக்குமாம். மூன்று ஆண்டு களுக்கு முன்பு ஏற்பட்ட பழைய நிதி நெருக்கடியே இன்னும் தீர்க்கப்படாமல் கிடக்கிறது. ஏற்கெனவே இருமுறை பல டிரில்லியன் அளவுக்குப் பணத்தை அச்சிட்டு வெளியிட்டும் பிரச்னை தீரவில்லை. கூடிய விரைவில் மூன்றாவது முறையாகவும் பணத்தை அச்சடிக்கப் போகிறதாம் அமெரிக்கா.

ஷேர்லக் ஹோம்ஸ்

இப்படியே போனால் அந்நாடு திவாலாகும். பெருமளவில் டாலரை வாங்கி வைத்திருக்கும் சீனப் பொருளாதாரமும் ஆட்டம் காணும். இதனால், உலகப் பொருளாதாரமே இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையைத் தொடும் என்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால், எதற்கும் தயாராக இருப்பதே நல்லதாகப்படுகிறது''.

''ஓவராகப் பயமுறுத்துகிறீரே! பெரிய பெரிய நிறுவனங்களே நம்பிக்கையோடு தன் பிஸினஸை விரிவாக்கிக் கொண்டிருக்கும் போது சாதாரண முதலீட்டாளர் களுக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது?'' என்று சொல்லி குடிப்பதற்கு சில்லென்ற தண்ணீரைக் கொடுத்தோம்.

''சரியாகச் சொன்னீர். சந்தை என்பதே கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் துணிந்தவர்களுக்கு மட்டுமானது தான்'' என்றவர் அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.

''2ஜி பிரச்னையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பெயர் கடந்த சில நாட்களாக அடிபட்டதைத் தொடர்ந்து சன் டிவி பங்கு விலை ஒரேநாளில் 25 சதவிகிதத்திற்கு மேலும், ஸ்பைஸ்ஜெட் பங்கு விலை 10 சதவிகிதத்துக்கு மேலும் குறைந்தது. ஆனால், மறுநாளே மீண்டும் உயரத் தொடங்கியது. சன் டிவி-யின் எதிர்காலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால், ஸ்பைஸ்ஜெட் பற்றி கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.''

''சரி, அடுத்து....?''

''மான்சான்ட்டோ நிறுவனத் தின் பங்கு டீலிஸ்ட் ஆகப் போகிறது என்கிற செய்தியைத் தொடர்ந்து அந்தப் பங்கின் விலை ஒரேநாளில் 10% வரை உயர்ந்தது. டீலிஸ்ட் செய்தி வந்தாலே போதும், கண்ணை மூடிக் கொண்டு அந்தப் பங்கை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் முதலீட்டா ளர்களுக்கு யார்தான் சொல்லித் தந்தார்களோ! பிற்பாடு அந்த நிறுவனமே அலறி அடித்துக் கொண்டு வந்து, ''டீலிஸ்ட் பற்றிய செய்தி பக்கா வதந்தி! அந்த மாதிரியான ஐடியா எங்களுக்கு இல்லவே இல்லை!'' என்று சொன்னபிறகு, மறுநாளே 6.60% வரை குறைந்தது. பேலன்ஸ் ஷீட்டை பார்த்து பங்கு வாங்க வேண்டுமே ஒழிய, செய்திகளைப் பார்த்து வாங்கக் கூடாது என்பதை இனிமேலாவது நம்மவர்கள் புரிந்து கொள்ளட்டும்!''

''ஓகே, வேறு ஏதாவது புதிய செய்தி?''

''தற்போது விவசாயி களிடமிருந்து அடிமாட்டு விலைக்கு நிலம் வாங்கப்பட்டு, அது தொழிற்பேட்டைகளாக மாற்றப்பட்டு அதிக லாபத்துக்குத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு விற்பனை செய்கிறது. இதனால், நிலத்தைக் கொடுத்த விவசாயிகளின் வாழ்வாதாரம் போய் வருமானம் இல்லாதவர்களாக மாறிவிடு கிறார்கள்.

ஷேர்லக் ஹோம்ஸ்

இந்நிலையில் நிலத்தை மேம்படுத்தி விற்கும்போது, அந்த லாபத்தில் 80% நிலத்தை விற்ற விவசாயிக்கு அளிக்க மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் விரும்புகிறது. இதையட்டி நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசாங்கம் சுறுசுறுப்பாக இருக்கிறதாம்'' என்றவர், ''இப்போது நான் சொல்லப்போவது கடைசி செய்தி'' என்றார்.  

''25 கோடி ரூபாய் அளிக்கப் பட்ட பங்கு மூலதனம் கொண்ட சிறிய நிறுவனங்கள் இனி ஐ.பி.ஓ. வருவதற்கு செபியிடமிருந்து ஒப்புதல்பெறத் தேவையில்லை. அதற்கு பதில் எக்ஸ்சேஞ்சிடமிருந்து அனுமதி பெற்றாலே போதும் என மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் உயரதிகாரி ஒருவர் சொல்லி இருக்கிறார். இதனால், பல சிறிய நிறுவனங்கள் இனி ஐ.பி.ஓ. வந்து மக்களிடமிருந்து பணத்தைத் திரட்டி, பிஸினஸை விரிவாக்க வாய்ப்புண்டு என்பது நல்ல விஷயம். ஆனால், சிறிய நிறுவனங்களின் நிதிநிலையை சரியாக கவனிக்காமல் அனுமதி கொடுத்துவிட்டால், அதில் பணத்தைப் போடும் மக்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் வரலாம். எனவே, இந்த விஷயத்தில் எக்ஸ்சேஞ்சுகள் படுஜாக்கிரதையாக இருக்க வேண்டும்'' என்றவர் நாம் கொடுத்த சூடான இஞ்சி டீயைக் குடித்துவிட்டுப் பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு