Published:Updated:

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

Published:Updated:
##~##

 பணவளக் கலை தொடரைப் படிக்கும் பலர் என்னை நேரில் சந்திக்கும்போது ஒரு கேள்வியைத் தவறாமல் கேட்கிறார்கள். அவர்கள் பிறந்து வளர்ந்த பொருளாதாரச் சூழல், படிப்பு மற்றும் வேலையின் பின்னணியோடு தற்போதைய நிதிநிலையையும் எடுத்துச் சொல்லி, என்னால் நிறைய பணம் சம்பாதிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள். ஒருவர் நிறையப் பணம் சம்பாதிக்கவும் (வேலையில் இருந்து அல்ல!) அவருடைய பின்னணிக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் எனக்குத் தெரியவில்லை என்பதே அவர்களிடம் நான் சொல்லும் பதில்.

அப்படியென்றால், எதுதான் பணம் சம்பாதிக்கக்கூடிய குணம் என்று கேட்கிறீர்களா? உங்கள் கேள்விக்கான பதிலை சற்று  விரிவாகப் பார்ப்போம்.

உங்களுடைய மூளையின் எதிர்பார்ப்புகள் (மைண்ட்செட்) எப்படியிருந்தால் நீங்கள் நிறைய சம்பாதிக்க முடியும் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள ஒரு அலுவலகப் பணியாளருக்கும் ஒரு சிறுதொழில் அதிபருக்கும் இடையே இருக்கும் மைண்ட்-செட் வித்தியாசங்களைக் கொஞ்சம் ஆராய்வோம்.

ஒரு தொழில் அதிபர் தன் தொழிலை சிறப்பாகச் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பார். பணியாளரோ தனக்கு என்ன கிடைக்கும், அது கிடைக்க என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்று பார்ப்பார்.

தொழிலதிபரின் மனதில் எதிர்பார்ப்பில்லாதச் சிறப்பான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற வீரியம் மட்டுமே இருக்கும். பணியாளரிடம் எதிர்பார்ப்புடன் கூடிய பலன் என்ற தராசும் இருக்கும்.

தொழில் அதிபர் சிறப்பான காரியங்களை வரிந்து கட்டிக்கொண்டு செய்வதோடு,   பிரயோஜனமில்லாத விஷயங்களை சட்டென வெட்டிவிடவும் செய்வார். அவருடைய நேரத்தை அதிக பலன் தரும் விஷயங்களுக்காக மட்டுமே அவர் உபயோகிப்பார். பணியாளரோ கிடைப்பதற்கு ஏற்றவாறு மட்டுமே செயலாற்று வார். சில சமயம், அதிகம் உழைத்தால் அதிகம் கிடைக்கும் என்று எக்கச்சக்கமாக உழைத்தும் கொட்டுவார்.  

பணவளக் கலை !

இந்த வேறுபாடுகள், முதல்பார்வையில் கொஞ்சம் குழப்புவதாக இருக்கும். கொஞ்சம் விளக்கிச் சொன்னால் சுலபமாகப் புரியும்.

சிறுவயதில் இருந்தே பள்ளிக்குச் செல்லும்போது படி! படி! அப்போதுதான் உருப்படுவாய்! என்று சொல்லி நம் அனைவரையும் வளர்க்கிறார்கள் நம் பெற்றோர்கள். முயற்சி செய், வெல்லலாம் என்கின்றனர். படித்து முடித்து வேலைக்குச் செல்லும்போது பெரும்பாலானோருக்கு அவர்கள் படித்ததும் அவர்கள் வேலையாகச் செய்வதும் வெவ்வேறாக இருக்கிறது. மிகச் சில படிப்புகளைத் தவிர்த்து, படித்ததற்குச் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு வேலையைத்தான் பலரும் செய்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் அவர்கள் இருக்கும் பணிதான் வாழ்வாதாரம். அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனம் இருக்கும் தொழில்தான் முக்கியம். ஆனால், படித்த படிப்போ அந்த நிறுவனத்திற்கு எந்த வகையிலும் உதவுவதாக இருக்காது.

ஆனாலும், தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டுமாயிற்றே! படிப்பதில் ஹார்டு வொர்க், ஹார்டு வொர்க் என்றல்லவா நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். 21 வருடங்கள் அந்தப் பயிற்சி எடுத்த நீங்கள் எந்த வேலையைத் தந்தாலும் ஹார்டு வொர்க் போடும் மைண்ட்செட்டிலே இருப்பீர்கள்.

இங்கேதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. நீண்ட நாள் மிகச் சிறப்பாக உழைத்தபின், மிகவும் சிறப்பாகச் செயல்பட்டபின், அந்த உழைப்பிற்கான பலாபலன்கள் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் வராதபோது எரிச்சல் வருகிறது. தராசைக் கையில் எடுக்கிறீர்கள். என்ன தருகிறார்கள்! அதற்கு ஏற்றாற்போல் செய்வோம் என்று ஆரம்பிக்கிறீர்கள். பலாபலனை நோக்கியச் செயல்பாடுகள் என்றில்லாமல் உழைப்பு! உழைப்பு! உழைப்பு! என்ற சிஸ்டத்தில் உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி உங்களிடத்தில் வேலையைத் திணித்து வாங்கிக் குவிக்கிறது.

பணவளக் கலை !

இந்தக் கல்விமுறையில் திளைத்த நாம் வேலையிலும் உழைப்பு! உழைப்பு! உழைப்பு! என்று வேலை பார்த்துத் தள்ளுகிறோம். நாற்பது வயதுகளில் 18 வருட வேலை அனுபவத்திற்குப் பின்னால் நாம் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறோம். அட, நம்மிடம் எவ்வளவு திறமை இருக்கிறது. ஆனால், நாம் ஒன்றும் பெரியதாகச் சம்பாதிக்கவில்லையே என்று யோசிக்கிறோம். நடுத்தர வயது தர்மசங்கடம் (மிட்-கேரியர் டைலமா) என்கின்றார்களே, அது இதுதான்.

இந்தத் தர்மசங்கடம் வர முக்கியமான காரணம், தொலைநோக்குத் திட்டமில்லாமல் செயல்படுவதுதான். ரிசல்ட்டைப் பற்றிய பெரிய கவலை இல்லாமல் மாங்குமாங்கென்று வேலை பார்ப்பதை விட்டுவிட்டு இந்த உழைப்புக்கு இன்ன பலன் என்றிருக்கும் தொழில் முனைவோரின் அகராதிக்கு உட்படுங்கள்.

ஒரு தொழிலதிபர் என்ன செய்கிறார்? லாபம் தரும் தொழிலைச் செய்வார். செய்யும் தொழிலில் உழைப்புக்கும் லாபத்திற்கும் சம்பந்தமில்லாமல் குறைந்த வருமானம் வந்தால் அதைவிட்டு உடனே வெளியேறுவார். அல்லது நல்ல அடிமைகள் நாலுபேர் கிடைத்தால் அவர்களை வைத்து அந்தத் தொழிலை நடத்தச் சொல்லிவிட்டு, வேறு தொழிலைப் பார்க்கப் போய்விடுவார். பிரயோஜனம் இல்லாத தொழிலைவிட்டு வேகமாக வெளியேறும் தொழிலதிபர், அவருடைய நேரத்தை அதிக லாபம் தரும் தொழில்களுக்காக மட்டுமே தருவார். அதனால்தான், அவருடைய நேரத்திற்கு அதிகப் பணம் கிடைக்கிறது.

தொழிலதிபர் தொழில் வளர என்னெல்லாம் தேவையோ, அதையே செய்வார். பணியாளரோ என்னவெல்லாம் செய்யுமாறு சொல்கிறார்களோ, அதை மட்டுமே செய்வார். ஓர் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் மத்தியில்கூட பாஸிற்கு என்ன வேண்டும், கிளையன்டிற்கு என்ன வேண்டும், டீம்மேட்களுக்கு என்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்யும் பணியாளருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடித் தேடி வரும். இந்தக் குணாதிசயம் கொண்டவர்தான் எந்த ஒரு புதிய விற்பனைத் திட்டத்தையும் பிரமாதமாகச் செயல்படுத்துவார். அதேபோல் கம்பெனி பணியாளர்களை வேலையைவிட்டு அனுப்ப நினைக்கும்போது அனுப்பப்படும் கடைசி நபராக இருப்பார்.

பணவளக் கலை !

நம்மில் பெரும்பாலானோர் இந்த வகை நபராக இருக்கத் தவறுகிறோம். ஏன் என்கிறீர்களா? அதற்கும் நம்முடைய கல்வி முறையே காரணம். சொன்னதைச் செய் என்பதுதான் நம் கல்வி முறையின் தாரக மந்திரம். சொன்னதைச் செய்தே 21 வருடங்கள் வரை பழக்கப்பட்ட நாம் தேவையானவற்றை அறிந்து செய்ய வேண்டும் என்ற நிலைக்கு நம்மை மாற்றிக்கொள்ள மிகவும் கஷ்டப்படுகிறோம். குறிப்பாகச் சொன்னால், பள்ளிப் பருவத்திலேயே இந்தப் பிரச்னையை மனதில் திணிக்கின்றனர். ஆசிரியர் கேள்வி கேட்கும்போது, அவர் என்ன பதிலை எதிர்பார்க்கிறார் என்பதற்கேற்ப பதிலைச் சொல்லிப் பழகுகிறது குழந்தை. இந்தக் குழந்தை இப்படி கண்டிஷன் செய்யப்பட்டு வளர்க்கப்படும்போது, வேலைக்குப் போகும் போது, யாராவது சொன்னால் அந்த வேலையை மட்டுமே முடித்துத் தரும். தானாக முன்வந்து யோசித்து இன்ன தேவை இங்கு இருக்கிறது என்று அறிந்து செயல்படாது.  

தொழிலதிபர் பணியாளரிடம் இருந்து அதீத திறமையுடன் அதீத உற்பத்தித்திறனுடன் வேலையை வாங்கப் பார்ப்பார். பணியாளரோ வேலை போகாமல் இருக்க எது தேவையோ அதைச் செய்ய முற்படுவார். தொழில் அதிபர் தனக்கு பவர் இருக்கிறது, இல்லை என்கிற கவலையெல்லாம் படாமல் வந்தது வரட்டும் என்று முடிவெடுப்பார். பணியாளரோ பல நேரங்களில் பவர் இருந்தாலும்கூட சிறு சிறு முடிவுகளை எடுக்கத் தயங்கி காலம் தாழ்த்துவார். தொழிலதிபர் தற்போது இருக்கும் சூழல் மாறும் என்பதை மனதில் கொண்டே செயல்படுவார். பணியாளரோ தற்போது இருக்கும் சூழல் மாறவே மாறாது (பெர்மனென்ட்) என்ற மனநிலையில் செயல்படுவார்.

இதுவரை சொன்னதிலிருந்து, நீங்கள் எந்த வகை மனிதர் என்று பாருங்கள். நீங்கள் பணியாளர் மைண்ட்செட்டில் இருந்தால், ஸாரி, நீங்கள் நிறையச் சம்பாதிப்பது கஷ்டம். தொழிலதிபருக்கான குணங்களைக் கொண்டிருந்தால், நீங்கள் ஏன் இன்னும் நிறைய சம்பாதிக்க ஆரம்பிக்கவில்லை என்பதே என் கேள்வி!    

(கற்போம்)