Published:Updated:

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

Published:Updated:
##~##

நம் எல்லோர் மனதிலும் இருக்கும் முக்கிய கேள்வி, நம்  எல்லோராலும் பெரிய அளவில் பணம் சம்பாதித்து பிரபலமாக முடியுமா? என்பதுதான். முடியும் என்பதுதான் என் பதில். ஆனால், இந்த வெற்றியை அடைய நம் வாழ்வில் சில அடிப்படை மாறுதல்களைச் செய்யவேண்டியிருக்கிறது. சிறு பிராயத்தில் இந்த மாறுதல்கள் செய்யப்பட்டால் வெற்றி நிச்சயம்!  

ஒரு குடும்பத்தில் குழந்தை ஒன்று பிறக்கிறது. வயதான பாட்டி, பிறந்த குழந்தையைப் பார்த்து, பெரிய டாக்டராய் வரும் என்கிறாள். பெற்றோர்கள் முதல் அந்த வீட்டில் உள்ள எல்லோருமே அந்தக் குழந்தை என்னவாக வரும் என்ற கனவுப் பட்டியலைப் போடுகிறார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிறந்த குழந்தை வளர ஆரம்பிக்கிறது. பள்ளிக்குச் செல்கிறது. நான் இந்த உலகில் பெரிய ஆளாவேன் என்று அதுவும் ஒரு கனவை வளர்க்கிறது. பல்வேறு நபர்களுடைய கனவுகளின் ஊடே தன் சொந்தக் கனவையும் கண்டுகொண்டு அந்தக் குழந்தை வளர்கிறது. வளர வளர சுற்றுச்சூழல் குழந்தையின் எண்ணம், கனவு போன்றவற்றை மாற்றி, ஆவரேஜ் வாழ்க்கைக்கு தயார்படுத்துகிறது.  கணக்கு வரவில்லையா? டியூஷனுக்கு போ! படிப்பு ஏறவில்லையா? பாட்டு/டான்ஸ்/டென்னிஸ்/ஷட்டில் விளையாடக் கற்றுக்கொள் என்று துரத்துகிறது!  

உனக்கு என்ன நன்றாக வருகின்றதோ, அதைச் செய் என்று பெரும்பாலும் சொல்வதில்லை!  தனக்கு வராத விஷயங்களை நம்பிக்கையோடு  உழைத்தால் கற்றுக்கொண்டுவிடலாம் என்று சுற்றுச்சூழல் நம்பிக்கை ஊட்டுகிறது. உன்னால் முடியும் நம்பு, தோல்வியைக் கண்டு துவளாதே, கஷ்டப்பட்டால் பலன் உறுதி என்ற பலவிதமான தன்னம்பிக்கை டானிக்குகளை ஊற்றி குழந்தைகள் வளர்க்கப்படுகின்றன.

இந்தத் தன்னம்பிக்கை டானிக்குகள் மட்டுமே ஒரு குழந்தையைச் சாதனையாளராய் மாற்றி பணக்காரனாய் ஆக்கிவிடுமா? என்று கேட்டால், அங்கேதான் நிஜவாழ்க்கையின் ட்விஸ்ட் இருக்கிறது. அந்த ட்விஸ்ட்டைப் பார்க்கும் முன்னர், இன்னும் கொஞ்சம் ரெகுலர் குழந்தை வளர்ப்பு குறித்துப் பார்ப்போம்.

பணவளக் கலை !

உன்னால் முடியும் நம்பு என்கிறோம். எது முடியும் அல்லது எதை முடிக்கவேண்டும் என்று சொல்வதில்லை. தோல்வியைக் கண்டு துவளாதே என்கிறோம். எந்தத் தோல்வியில்..? என்று சொல்வதில்லை. கஷ்டப்பட்டால் பலன் உறுதி என்கிறோம். எதில் கஷ்டப்பட்டால் எந்த அளவு பலன் உறுதி என்று சொல்வதில்லை!  

நாம் கொடுக்கும் தன்னம்பிக்கை டானிக் எல்லாமே குழந்தை நன்றாய் படித்து, இங்கிலீஷ் பேசி, வேலைக்குப் போய் சம்பாதித்து, திருமணம் செய்து, குழந்தைப் பெற்று, வீடு கட்டி, மகன்/மகளுக்கு திருமணம் செய்து, ரிட்டையராகி பின்னர் போய்ச்சேரும் சாதாரண வாழ்க்கை முறையை நடத்தி முடிக்க மட்டுமே உபயோகப்படுத்தினால் கனவு புராஜெக்ட் நனவாகுமா? அல்லது இந்த சாமான்ய வாழ்க்கைதான் உங்கள் கனவு புராஜெக்டா? இல்லை அல்லவா?

அப்ப, நாம் தரும் தன்னம்பிக்கை டானிக்கெல்லாம் வேஸ்ட்டா என்று கேட்கிறீர் களா? தன்னம்பிக்கை டானிக்கெல்லாம் வீணாகப் போவதில்லை! அந்த தன்னம்பிக்கை எங்கே

பணவளக் கலை !

பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே பலாபலன்கள் கிடைக்கும்.  

சாதாரணமான மனிதனாய் வாழ்வதற்கும் சாதனையாளராய் வாழ்வதற்கும் இடையே யுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால் அனைவருமே பணம் ஈட்டிப் பெரும் புகழுடன் வாழ முயற்சிக்கலாம். சாதாரண மனிதனாய் வாழ்வது என்றால் என்ன? படிப்பு, வேலை, திருமணம், பிள்ளைக்குட்டி, வீடு, ரிட்டையர்மென்ட், மயானம் என்ற சைக்கிளைத் தொடருவது, சாதாரண வாழ்க்கை. இந்த நிலையில் வாழ உலகத்தில் அனைவரும் செய்துவரும் தினப்படி விஷயங்களை ஒழுங்காகச் செய்தாலே போதுமானது.

சாதனையாளராக மாற நினைத்தால் ஒரு மனிதன் என்னென்ன செய்யவேண்டும் என்று பார்த்தாலே குலை நடுங்குகிறது. ஆவரேஜ்கள் செய்யாத விஷயங்களைச் செய்யவேண்டியுள்ளது. அதிலும், எந்த அளவுக்கு நீங்கள் செய்யும் காரியம் உலகத்தில் தாக்கத்தை (இம்பேக்ட்) ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த அளவுக்கு ரிஸ்க்கும் உங்களுக்கு அதிகரிக்கிறது. ஏன் இன்னும் ஒரு படி மேலேபோய்ச் சொன்னால், ஒரு ஆவரேஜ் வாழ்க்கை வாழும் மனிதனுக்கும் கீழான வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவேண்டிய ஒரு நிலைகூட சாதனை செய்ய நினைத்தவருக்கு நேரலாம்.

அய்யோ, அந்த ரிஸ்க்கை எல்லாம் நான் எடுக்க முடியாதுங்க! பேசாம ஆவரேஜாக வாழ முயற்சிக்கிறேன் என்கிறீர்களா! அது உங்கள் இஷ்டம். காரு வாங்கணும், பங்களா வாங்கணும் என்று பின்னால் புலம்புனீர்கள் என்றால் யாரும் அதற்குப் பொறுப்பாக முடியாது. நீங்களேதான் அதற்கு முழுப் பொறுப்பு.

உண்மையில் பணரீதியான ஆவரேஜும், பணரீதியான சாதனையும் இரண்டு எதிர்துருவங்கள். அதிலும் சாதனை எந்த அளவுக்கு உயரம் அதிகமாக இருக்க  நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு பாதாளத்திற்குப் போகும் வாய்ப்பும் இருக்கவே இருக்கிறது. (ரிஸ்க்கைப் பற்றி இந்தத் தொடரின் ஆரம்பத்தில் விளக்கமாக  பேசியது நினைவிருக்கிறதா?)

ஆவரேஜ் என்பது பாதுகாப்பான ஒன்று. சாதனை என்பது ரிஸ்க் எடுக்கும் ஒன்று. மனித இயல்பே பாதுகாப்பாக வாழ முயற்சிப்பது தானே! அதனால்தான், கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் வளர்ந்து கல்லூரி வாழ்க்கையில் கடைசி வருடம் வரும்போது எப்படியாவது வேலை கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் திக்குமுக்காடிப் போகின்றன. சாதனைக் கனவுகளுடன் பிறந்த பெரும்பான்மைக் குழந்தைகள் ஆவரேஜ் என்னும் ரியாலிட்டிக்கு கொண்டு செல்லப்படுவது இந்தப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில்லா நிலைமை என்ற வேறுபாட்டினால்தான் என்பதை உணருங்கள்.

பணவளக் கலை !

நம்மில் பெரும்பாலானோர் வேலை வாய்ப்பில்கூட இரண்டு சாய்ஸ் நமக்குக் கிடைக்கும்போது எந்த வாய்ப்பு குறித்து நம்மால் அதிகமாக கணிக்க முடிகிறதோ, அந்த வாய்ப்பையே பாதுகாப்பு என்று நினைத்து தேர்ந்தெடுக்கிறோம். குறைவாய் கணிக்க முடியும் வாய்ப்பை பாதுகாப்பற்றது என்று நினைத்து ஒதுக்கவே செய்கிறோம்.

பணரீதியான சாதனை என்பது மோதிப் பார்ப்பது. ஆவரேஜ்கள் நிறைந்த உலகத்தில் சாதனை செய்யப்போகிறேன் என்ற செயல்பாடு என்பது மலையுடன் மோதிப் பார்ப்பதற்கு ஒப்பான ஒன்று. கொஞ்சம் மோதித்தான் பாருங்களேன். எப்படி மண்டை உடைகிறது என்று தெரியும். எவ்வளவு அழுத்தத்துடன் மோதுகிறீர்களோ, அந்த அளவுக்கு பாதிப்பும் அதிகரிக்கத்தான் செய்யும்.

அடுத்தவர்கள் அனுபவத்தை வைத்தே நான் உணர்ந்துகொள்ளும் தகுதியுள்ளவன் சார் என்கிறீர்களா? ஆபீஸ் பாலிடிக்ஸை எதிர்த்து மோதியவர்களிடம் கேட்டுப் பாருங்கள், மோதுவதில் (ஜெயிப்போமா இல்லையா என்பதே தெரியாமல்!) என்னென்ன இடர்பாடுகள் இருக்கிறது என்று விளக்கமாகச் சொல்வார்கள்.

ஆவரேஜ் வாழ்க்கை வாழும் மலை போன்ற கூட்டத்தின் நடுவே மாறப்போகிறேன் என்று சொல்லி மோதுவது ஒன்றும் சுலபமில்லை. ஆவரேஜ் கூட்டத்தில் உங்களுடைய மோதல் எந்த அளவுக்கு தாக்கத்தைத் தருகிறதோ, அந்த அளவுக்கு நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். தொழில்ரீதியாக எந்த அளவுக்கு நீங்கள் அதிக நபர்களிடம் தாக்கத்தை உருவாக்குகிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் பாப்புலராகவும் பணக்காரராகவும் ஆவீர்கள்.

என்ன சார் பயமுறுத்துகிறீர்கள்... பேசாமல் ஆவரேஜாக இருப்பதே சிறந்ததுபோல் இருக்கிறதே! என்கின்றீர்களா? சரிதானே! ஓரளவுக்கு கணிக்க முடிந்த விஷயத்தைச் செய்யாமல் சாதிக்கிறேன் என்று  ஏன் கணிக்க முடியாததைச் செய்ய முற்படவேண்டும் என்பீர்கள். ஓரளவுக்கு கணிக்க முடியக்கூடிய பாதுகாப்பான விஷயங்களிலும் எக்கச்சக்கமான ரிஸ்க் இருக்கவே செய்கிறது. உங்களுக்கு அறவே பிடிக்காத, நீங்கள் அறவே மதிக்காத / உங்களை அறவே மதிக்காத ஆட்களுடன்/நிறுவனத்தில் வேலை செய்வது, எது முக்கியம் என்பதே தெரியாமல் வேலை செய்வது, உங்கள் ஒரிஜினாலிட்டிக்கு எதிர்மறையான விஷயங்களைச் செய்வது போன்ற ரிஸ்க்குகள் இந்தப் பாதுகாப்பான பாதையில் இருக்கத்தான் செய்கிறது.

சாதனை பாதையில் இருக்கும் ரிஸ்க்குகளை ஒப்பீடு செய்யும்போது, இதெல்லாம் ஒரு ரிஸ்க்கே இல்லை. இதையெல்லாம் பார்த்தால் வாழ முடியுமா என்கிறீர்களா? கொஞ்சம் யோசியுங்கள்! இப்படி அட்ஜஸ்ட் செய்து தொடர்ந்து வாழ்ந்தீர்கள் என்றால், எப்பேர்ப்பட்ட கனவுகளுடன் தொடங்கிய உங்கள் முழுவாழ்க்கையையே வீணாக்கி வாழ்ந்தல்லவா முடித்துவிடுகிறீர்கள்?! இந்தப் பாராவில் சொன்ன ரிஸ்க்குகளை எடுக்கத் தவறினால் ஒரு முழு ஜென்மத்தையல்லவா (அடுத்த ஜென்மம் இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் நம்முடைய டிஷ்கஷனுக்கு அப்பாற்பட்டது) இழந்துவிடுகிறீர்கள்! நீங்கள் இதை இழக்கத் தயாரா?!

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism