Published:Updated:

பரிவர்த்தனைக்கும் 'செக்' வைத்த ரிசர்வ் வங்கி!  -வங்கிகள் மீது பாயும் வாடிக்கையாளர்கள் 

விகடன் விமர்சனக்குழு
பரிவர்த்தனைக்கும் 'செக்' வைத்த ரிசர்வ் வங்கி!  -வங்கிகள் மீது பாயும் வாடிக்கையாளர்கள் 
பரிவர்த்தனைக்கும் 'செக்' வைத்த ரிசர்வ் வங்கி!  -வங்கிகள் மீது பாயும் வாடிக்கையாளர்கள் 

ங்கிகளில் ரூபாய் தாள்களை மாற்றுவதற்கு பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் பொதுமக்கள். ' பணத்தைப் பெறுவதில் வங்கிகள் கூடுதல் கெடுபிடிகளைக் காட்டுவதால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்' என்கின்றனர் வாடிக்கையாளர்கள். 

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்காக இரண்டாவது நாளாக வங்கிளுக்குப் படையெடுத்துள்ளனர் பொதுமக்கள். ஆனால், எந்த வங்கியிலும் புதிய 500 ரூபாய் தாள்கள் வழங்கப்படவில்லை. இதனால் வங்கி நிர்வாகம் அளிக்கும் இரண்டாயிரம் ரூபாய் தாள்களை மாற்றுவதற்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இன்று காலை முதல் ஏ.டி.எம் மையங்கள் திறந்திருக்கும் என அரசு அறிவித்தது. ஆனால், 70 சதவீதத்திற்கும் அதிகமான ஏ.டி.எம்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில், பெரும்பாலான ஏ.டி.எம்களில் ' அவுட் ஆஃப் சர்வீஸ்' என்ற பலகைகளே தொங்கவிடப்பட்டுள்ளன.

" நேற்று ஓரளவுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. வங்கிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படவில்லை. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளில் மட்டுமே, அத்தாட்சி சான்றுக்கான நகல்களை இணைக்குமாறு வற்புறுத்தினர். பொதுத்துறை வங்கிகளில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. ஆனால், இன்று காலை முதல் பணப் பரிவர்த்தனை அவ்வளவு எளிதாக அமையவில்லை" என வேதனைப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர், தொடர்ந்து நம்மிடம், 

" நாளொன்றுக்கு நான்காயிரம் ரூபாய்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் போதுமான பணம் வங்கிகளின் இருப்பில் உள்ளன. ஆனால், இன்றைக்குப் பலரால் குறிப்பிட்ட தொகையைப் பெற முடியவில்லை. பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளும்போது, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு என ஏதேனும் ஒரு அடையாள சான்றைக் காண்பித்தால் போதுமானது. நேற்று பான்கார்டைக் காட்டி பணத்தைப் பெற்றவருக்கு, அடுத்த 24 மணி நேரத்திற்குப் பிறகுதான் மறு பரிவர்த்தனை நடக்கும் என வங்கிகள் கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளன. கணினியில் பான் கார்டு எண்ணை அழுத்தும்போதே, ' நேற்று மதியம் 12.30 மணியளவில் பணத்தைப் பெற்றுள்ளீர்கள். நேரம் தற்போது 11 மணிதான் ஆகிறது. இன்னும் சில மணி நேரங்கள் கடந்தால்தான் 24 மணிநேரம் முடியும். அதன்பிறகு வாருங்கள்' எனத் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். நீண்ட வரிசையில் நிற்பது ஒரு கொடுமை என்றால், 24 மணி நேரம் கடந்த பிறகுதான் பணத்தைக் கொடுப்போம் என்று சொல்வது அதைவிடக் கொடுமை. பொதுமக்களை வதைக்காமல் சில சலுகைகளை அளிப்பதற்கு ஆர்.பி.ஐ முன்வர வேண்டும்" என ஆதங்கப்பட்டார். 

" ஒருவரது பான்பார்டை முறைகேடாக யாரும் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், பொதுமக்கள் சிலவற்றைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடையாள அட்டைகளை மாற்றிக் கொடுத்தாலும், யாருடைய கணக்கில் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்ற விவரம் அனைத்தும் துல்லியமாகத் தெரிந்துவிடும். ஒரேநாளில் ஒருவர் வேறு வேறு வங்கிகளுக்குச் சென்று பணத்தை மாற்றினாலும், எளிதில் தெரிந்துவிடும். தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பணம் தேவையோ, அந்தப் பணம் முழுமையாக வங்கிகளின் இருப்பில் உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை" என்கிறார் வங்கி அதிகாரி ஒருவர். 

-ஆ.விஜயானந்த்