Published:Updated:

'151 கோடியும் எடப்பாடி பழனிச்சாமியின் பணமா?'  -கலங்கும் 'கூட்டுறவு' இளங்கோவன்

'151 கோடியும் எடப்பாடி பழனிச்சாமியின் பணமா?'  -கலங்கும் 'கூட்டுறவு' இளங்கோவன்
'151 கோடியும் எடப்பாடி பழனிச்சாமியின் பணமா?'  -கலங்கும் 'கூட்டுறவு' இளங்கோவன்

போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து மத்திய அரசு நடத்தும் ஆட்டத்தால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் ஆளும் கட்சி அமைச்சர்கள். ' கூட்டுறவு வங்கிகளை குறிவைத்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது வருமான வரித்துறை. கமிஷன் பணத்தை டெபாசிட் செய்திருப்பது குறித்து, ஏராளமான ஆவணங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர்' என்கின்றனர் கூட்டுறவு சங்க அதிகாரிகள். 

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தலைமைச் செயலகத்திற்குள்ளும் சோதனைகள் நடந்தபோது, 'அடுத்த டார்கெட் யாரை நோக்கிப் பாயும்' என அதிகாரிகள் மட்டத்தில் விவாதம் எழுந்தது. அடுத்த சில மணிநேரங்களில், பொதுப் பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான இளங்கோவனின் சேலம் கூட்டுறவு சங்கத்தில் ரெய்டு நடந்தது. இரண்டு நாட்களாக நடந்த தீவிர சோதனையில் இரண்டு அட்டைப் பெட்டிகள் நிறைய ஆவணங்களை அள்ளிச் சென்றனர். இதையடுத்து, 'எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் ரெய்டு நடத்தப்படலாம்' என்ற தகவலும் அ.தி.மு.க வட்டாரத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. 

"சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சோதனை நடந்தபோதே, 65 கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்களையும் வருமான வரித்துறையினர் வரவழைத்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. 'ரூபாய் நோட்டுகள் செல்லாது' என மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பிறகு, புதிதாக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தனர். சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பெயரில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டதன் பின்னணியை விசாரித்தனர். இவற்றின் மூலம் 151 கோடி ரூபாய் அளவிற்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் பிடிபட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளாக அரசுத் திட்டங்களில் சம்பாதித்த பணத்தை, இந்த வழிகளில் முதலீடு செய்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கின்றனர். தற்போது கடலூரில் தீவிர சோதனை நடந்து வருகிறது. 'கூட்டுறவு சங்கங்களை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வருவார்கள்' என கூட்டுறவு சங்க அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.

பொதுவாக, அரசியல் பின்புலம் உள்ளவர்கள் சங்கத்தின் தலைவர்களாக வருவதால், அவர்களை அனுசரித்தே அதிகாரிகள் செயல்பட்டு வந்துள்ளனர். போலியாக கணக்குகளைத் தொடங்கி யாருடைய பணத்தை வரவு வைத்தார்கள் என்பது குறித்து அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டுவிட்டன. இதில், கூட்டுறவு சங்க அதிகாரிகளும் சிக்க உள்ளனர். அடுத்த நடவடிக்கை எடப்பாடி பழனிச்சாமியை நோக்கிப் பாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சேகர் ரெட்டி தொடர்பிலும் கார்டன் வட்டாரத்தின் குட்புக்கிலும் இருக்கிறார் எடப்பாடி. இதுவரையில், எடப்பாடியின் கணக்கு வழக்குகளை எப்படிக் கையாண்டார்கள் என்பது குறித்துத்தான் வருமான வரித்துறையின் விசாரணை நகர்ந்து கொண்டிருக்கிறது" என்கிறார் சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க செயலர் ஒருவர். 

' 151 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டது உண்மையா' என்ற கேள்வியை, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டோம். " அப்படி வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை. அத்தனையும் பொய்யான தகவல். கூட்டுறவு வங்கி என்பது மிக கௌரவமானது. ஒரு சதவீதம்கூட தவறு நடக்க வாய்ப்பில்லை. நாங்கள், வங்கிகளுக்குச் சென்று கூட்டம் நடத்துகிறோம். அரசின் திட்டங்களைக் கொண்டு செல்வது பற்றி விவாதிக்கிறோம். அவ்வளவுதான். கூட்டுறவு வங்கிகளை திறம்பட வழிநடத்தும் பணியில் நிர்வாக இயக்குநர் உள்பட மேலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அம்மா ஆட்சியில் பொதுமக்கள் ஏராளமாக டெபாசிட் செய்துள்ளனர். அமைச்சரை குறிவைத்து ரெய்டு நடத்துப்படுவதாகச் சொல்லப்படுவது முற்றிலும் தவறானது. அவர் அவருடைய வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் எங்களுடைய வேலைகளை கவனித்து வருகிறோம்" என்றார் உறுதியாக. 

கூட்டுறவு வங்கிகளில் மூன்றாவது நாளாக சோதனை நீடித்துக் கொண்டே இருக்கிறது. 

- ஆ.விஜயானந்த்