Published:Updated:

வி.வி.மினரல்ஸின் வில்லங்க வியாபாரம்!?  -சுங்கத்துறையின் அதிர்ச்சி ஆவணம் #VikatanExclusive

வி.வி.மினரல்ஸின் வில்லங்க வியாபாரம்!?  -சுங்கத்துறையின் அதிர்ச்சி ஆவணம் #VikatanExclusive
வி.வி.மினரல்ஸின் வில்லங்க வியாபாரம்!?  -சுங்கத்துறையின் அதிர்ச்சி ஆவணம் #VikatanExclusive

வி.வி.மினரல்ஸின் வில்லங்க வியாபாரம்!?  -சுங்கத்துறையின் அதிர்ச்சி ஆவணம் #VikatanExclusive

தூத்துக்குடி, துறைமுகத்தின் சுங்கத்துறை உதவி ஆணையர் அமித் குமாரின் அந்தக் கடிதம் ஒட்டுமொத்த தாது மணல் திருட்டின் மூலத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. ' கார்னட் மணல் ஏற்றுமதிக்காக மாவட்ட ஆட்சியரின் பெயரிலேயே போலியான நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது' என்கின்றனர் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள். 

திருநெல்வெலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன். இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி கடற்கரையோரத்தில் தாதுமணலைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கார்னட், இலுமனைட் போன்ற தாதுக்களின் மூலம் மிகப் பெரும் வருவாயை ஈட்டி வருகிறது. 'இந்தியாவிலேயே 15 கி.மீ கடற்கரையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடற்கரையில் இருந்து கார்னெட், இல்மனைட், ருடைல் மற்றும் ஜிர்கான் போன்ற கனிமப் பொருட்களை சட்டத்துக்கு விரோதமாக அதிக அளவில் ஏற்றுமதி செய்வதாகவும்' சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வந்தனர். அ.தி.மு.க அரசின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு மிகுந்த நம்பிக்கைக்குரியவராக இருந்த வைகுண்டராஜன், 2013-ம் ஆண்டு அவருடன் முரண்பட்டார்.

' தாதுமணல் ஏற்றுமதியை அரசே ஏற்று நடத்தும்' எனத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடும் அளவுக்கு, அவர்மீது கடும் கோபத்தில் இருந்தார் ஜெயலலிதா. அவரது மரணத்துக்குப் பிறகு சசிகலா உறவுகளுடன் இணக்கமான உறவைக் கடைப்பிடித்து வருகிறார் வைகுண்டராஜன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனுக்கு ஆதரவுக்கரமும் நீட்டியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுடன் நெருக்கத்தைக் காட்டினாலும், அவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் தாதுமணல் மோசடியைத் தொடர்ந்து வெளிக் கொண்டு வருகின்றனர் சில அதிகாரிகள். சமீபத்திய உதாரணம். வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக கலெக்டர் பெயரிலேயே போலியான ஆவணங்களை கனிமவளத்துறை அதிகாரிகள் தயாரித்தது. இதன்பேரில், ' உரிய நடவடிக்கை எடுக்குமாறு' தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமாருக்கு, துறைமுக சுங்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். " துறைமுக பொறுப்புக் கழகத்திலோ மாவட்ட நிர்வாகத்திலோ எந்த அதிகாரிகள் பதவிக்கு வந்தாலும், வி.வி.எம் நிறுவனத்தின் தொழிலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வார்கள். முன்பு துறைமுக கழகத் தலைவராக இருந்த சுப்பையா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவரது குடும்பத்தினர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது. இவர் சொத்து சேர்ப்பதற்கு வி.வி.மினரல்ஸ் பங்குதாரர் வைகுண்டராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் உதவியாக இருந்தனர் என்பதுதான் சி.பி.ஐ தரப்பின் வாதம். அந்தளவுக்கு துறைமுகத்தில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் வைத்ததுதான் சட்டமாக இருந்து வந்தது. தற்போது சில அதிகாரிகள் சட்டவிதிகளைக் காட்டி, கெடுபிடி காட்டுவதால் அவர்களது வியாபாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது" என விவரித்தவர்,

" கடந்த 13.3.2017 அன்று வி.வி.மினரல்ஸ் நிறுவனம் சார்பில், துறைமுகத்தின் சுங்கத்துறை அலுவலகத்துக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஜபேல் அலி துறைமுகத்துக்கு 420 மெட்ரிக் டன் அளவுள்ள கார்னட் தாதுவை துறைமுகம் மூலம் அனுப்புவது குறித்து விவரித்துள்ளனர். இந்தக் கடிதத்துடன், தூத்துக்குடி கலெக்டர் வழங்கிய நற்சான்றிதழ் கடிதத்தையும் இணைத்துள்ளனர். அந்த நற்சான்றிதழில், ' ROC No: GM.1/688-1/2014 எனக் குறிப்பிட்டு, தாதுமணல் ஏற்றுமதிக்கான குத்தகை உரிமை வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. வைப்பாரில் 1018/4, 1019/3, 1019/4, 1020/1&2 உள்ளிட்ட சர்வே எண்களில் இருந்து எடுக்கப்படும் ஆறு லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் கார்னட், இலுமனைட் தாதுக்களை ஏற்றுமதி செய்வதற்கான போக்குவரத்து அனுமதியை வி.வி.மினரல்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக முன்கூட்டியே 2 கோடியே 95 லட்சத்து இருபதாயிரம் ரூபாயை ராயல்டியாக அவர்கள் செலுத்தியுள்ளனர். 75 ஆயிரம் மெட்ரிக் டன் கார்னட்டையும் 2 லட்சத்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் இலுமனைட்டையும் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை அவர்கள் பெற்றுள்ளனர். இந்த அளவுள்ள தாதுக்கள் அனைத்தும் சட்டபூர்வமானவை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் பெயரையும் முகவரியையும் இந்தக் கடிதத்தில் பயன்படுத்தியுள்ளனர். 

இந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்தைக் கண்டு அதிர்ந்துபோன தூத்துக்குடி சுங்கத்துறை உதவி ஆணையர் எஸ்.அமித் குமார், 13.3.2017 அன்று மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ' 11.3.2017 அன்று ஜபேல் அலி துறைமுகத்துக்கு அனுப்பப்பட இருந்த பில் எண்:4684963 எண்ணுள்ள 420 மெட்ரிக் டன் அளவுள்ள கார்னட் குறித்து, தங்கள் அலுவலகம் மூலம் கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்தக் கடிதத்தில் அலுவலக முத்திரையோ மாவட்ட ஆட்சியரின் கையொப்பமோ முறையாக இல்லை. வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு நீங்கள் அளித்த சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது. இதன் காரணத்தைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படியொரு கடிதம் வந்த மறுநாளே, அதாவது 14.3.2017 அன்று மீண்டும் ஒரு கடிதம் சுங்கத்துறை உதவி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ' வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு தாதுக்களை அனுப்புவதற்கான போக்குவரத்து அனுமதி மற்றும் சுரங்கத்தில் இருந்து எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எங்கள் அலுவலகத்தால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ் கடிதம் உண்மையானது' எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கடிதத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் முத்திரை இல்லாமல், வெறும் தாளில் தட்டச்சு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டு

கடிதங்களும் மாவட்ட கலெக்டர் ரவிக்குமாரின் பார்வைக்கு அனுப்பி வைத்தார் அமித் குமார். இரண்டையும் பார்த்து அதிர்ந்து போன கலெக்டர், ' இப்படியொரு போலியான கடிதத்தை தயாரித்த, தூத்துக்குடி கனிவளத்துறை உதவி இயக்குநர்  கிருஷ்ணமோகனை பணி இடைநீக்கம் செய்யுமாறு' புவியியல் மற்றும் கனிமவளத்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். சுங்கத்துறை உதவி ஆணையர் கண்டுபிடித்ததால், இப்படியொரு மோசடி ஆவணம் வெளியில் வந்தது. வெளியில் தெரியாமல் கடத்தப்பட்ட தாதுக்களின் அளவு எவ்வளவு இருக்கும்?" என்ற கேள்விதான் அதிகாரிகள் மத்தியில் வலம் வருகிறது. கனிமவளத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்றார் விரிவாக. 

' போலி ஆவணம் தயாரித்தது உண்மையா?' என்ற கேள்வியை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமாரிடம் கேட்டோம். " புவியியல் மற்றும் கனிமவளத்துறை ஆணையருக்கு, இதுகுறித்து கடிதம் எழுதியிருக்கிறேன். விசாரணை நடந்து வருகிறது" என்றதோடு முடித்துக்கொண்டார். 

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் கருத்தை அறிய அவர்களது சட்ட ஆலோசகர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம். " இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம்" என்றார் உறுதியாக. 

-ஆ.விஜயானந்த்
 

அடுத்த கட்டுரைக்கு