Published:Updated:

ஷேர்லக் - தீபாவளிக்குள் புதிய உச்சம்!

ஷேர்லக் - தீபாவளிக்குள் புதிய உச்சம்!

ஷேர்லக் - தீபாவளிக்குள் புதிய உச்சம்!

ஷேர்லக் - தீபாவளிக்குள் புதிய உச்சம்!

Published:Updated:
##~##

மழை வருகிற மாதிரியும் வராது மாதிரியும் போக்கு காட்டிக்கொண்டிருந்த மாலை வேளையில் நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். வந்து உட்கார்ந்தவுடன், வேகமாக செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். ''என்ன இத்தனை அவசரம்?'' என்றோம். ''எல்லாம் மழை படுத்தும்பாடு! ஏற்கெனவே கடும் ஜலதோஷம். எனவே, மழையில் நனைய வேண்டாம் என்பதால் சீக்கிரமே செய்திகளைச் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறேன்'' என்கிற வேண்டுகோளோடு பேச ஆரம்பித்தார். அவர் முதலில் சொல்ல ஆரம்பித்த செய்தி என்.எஸ்.இ. தொடர்பானது.

''என்.எஸ்.இ. நிறுவனத்தில் பல பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் எக்கச்சக்கமாக முதலீடு செய்திருக்கிறார்கள். என்.எஸ்.இ.-ன் கையில் இப்போது 100 கோடி டாலர் ரொக்கம் இருந்தாலும், அந்த நிறுவனம் பெரிதாக டிவிடெண்ட் எதுவும்  முதலீட்டாளர்களுக்குத் தருவதில்லை என்று வருத்தப்பட ஆரம்பித்திருப்பதோடு, என்.எஸ்.இ. நிறுவனம் ஏன் ஐ.பி.ஓ. வந்து பங்குச் சந்தையில் பட்டியலிடக் கூடாது என்று கேட்கவும் தொடங்கி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இந்தக் கோரிக்கையை எல்.ஐ.சி., ஐ.டி.பி.ஐ. போன்ற நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. இதனால், என்.எஸ்.இ.-ல் போட்ட முதலீட்டை எப்படி எடுப்பது என்று தெரியாமல் நொந்துபோய் கிடக்கிறார்களாம் இந்த பி.இ. முதலீட்டாளர்கள். என்.எஸ்.இ. பங்குச் சந்தையில் பட்டியலிட இவ்வளவு தயங்குவது ஏன் என்பது  புரியவில்லை. ஒருவேளை எம்.சி.எக்ஸ். மாதிரி ஆகிவிடுமோ என்று பயப்படுகிறதோ, என்னவோ!'' என்றவருக்கு சுடான டீ தந்தோம்.

''அடுத்த செய்தி என்.எஸ்.இ.எல். பற்றிதானே?'' என்றோம்.

''என்.எஸ்.இ.எல். மோசடி தொடர்பாக ஏற்கெனவே மூன்று பேர் கைதான நிலையில், அந்த நிறுவனத்திடமிருந்து ரூ.930 கோடி கடன் வாங்கிய என்.கே. புரோட்டீன்ஸ் நிர்வாக இயக்குநர் நிலேஷ் பட்டேலை மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்திருக்கிறது. இந்த நிலேஷ் பட்டேல், என்.எஸ்.இ.எல்.-ன் முன்னாள் சேர்மனாக இருந்த சங்கர்லால் குருவின் மருமகனாம்!  

ஷேர்லக் -  தீபாவளிக்குள் புதிய உச்சம்!

இதைவிட முக்கியமான விஷயம், என்.எஸ்.இ.எல். பிரச்னை தொடர்பாக ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் குழுமத்தின் நிறுவனர் ஜிக்னேஷ் ஷாவையும் ஏற்கெனவே கைதாகி இருக்கும் அஞ்ஜனி சின்ஹாவையும் ஒருசேர வைத்து கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரித்தனர் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார்.

அஞ்ஜனி சின்ஹா இந்த விசாரணையின்போது ஜிக்னேஷ் ஷா, ஜோசப் மேஸே மீதும் சரமாரியாக புகார் சொன்னாராம். இது கண்டு மிரண்டு போன ஜிக்னேஷ், பதிலுக்கு அஞ்ஜனி சின்ஹா மீது புகார் மழை பொழிந் தாராம். இப்படி போட்டி போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பதைக் கண்டு போலீஸே ஆடிப்போனதாம்.  இந்த விசாரணை முடிவில் ஜிக்னேஷ் ஷா கைதாகலாம் என்கிற பரபரப்பு மும்பை முழுக்க நிரம்பி வழிந்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. என்றாலும், தீபாவளிக்குள் இந்த வழக்கில் முக்கியமான திருப்பம் ஏற்படும் என்றும் சிலர் சூசகமாகச் சொல்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!'' என்றவர், அடுத்த செய்திக்கு தாவினார்.

''டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தப்போகும் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. கூடிய விரைவில் விமானப் போக்குவரத்துத் துறையிடமும் ஒப்புதல் வாங்கிவிட்டால், விமான சேவை தொடங்கி நடத்தவேண்டியதுதான். விமானப் போக்குவரத்து துறையில் ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களில் எப்படி நஷ்டப்படாமல் தொழில் செய்வது என்று தெரியாமல் தவிக்கும்போது டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டும் என்ன தைரியத்தில் விமான சேவை தொடங்க இப்படி ஜரூராக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரியவில்லை என்கிறார்கள் சில அனலிஸ்ட்கள்'' என்றார்.

ஷேர்லக் -  தீபாவளிக்குள் புதிய உச்சம்!

''இன்றைக்கு வந்த ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தின் ரிசல்ட் எப்படி இருக்கிறது?'' என்று கேட்டோம்.

''தனியார் வங்கியில் முன்னணியில் இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ. நல்ல ரிசல்ட்டையே தந்திருக்கிறது. அதன் நிகர வருமானம் கிட்டத்தட்ட 20% அதிகரித்திருக்கிறது. அதிக வட்டி காரணமாக, நிறுவனத்தின் லாபம் 2,352 கோடியாக உயர்ந்திருக்கிறது. வங்கிப் பங்குகளைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது'' என்றார்.

''இன்று வெளியான ஐ.டி.சி.-ன் பங்கும் நல்ல லாபம் காட்டி இருக்கிறதே?'' என்றோம்.

''உண்மைதான். ஐ.டி.சி.-ன் நிகர லாபம் 21.5% உயர்ந்திருக்கிறது. என்றாலும், விற்பனையானது எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. இதனால் அந்தப் பங்கின் விலை இன்றைக்கு சந்தை முடிவின்போது மைனஸிலேயே முடிந்தது'' என்றவரிடம், ''சுபிக்ஷா சுப்பிரமணியம் மீண்டும் செய்தியில் அடிபடுகிறாரே, என்ன விஷயம்?'' என்று கேட்டோம்.  

''சுப்பிரமணியம் கடந்த காலத்தில் சுபிக்ஷாவைத் தவிர, விஷ்வபிரியா ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் என்கிற நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அதில் சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட்டாக பணம் திரட்டினார். ஆனால், டெபாசிட் முதிர்வான பின்னரும் வங்கியில் தந்த செக்குகள் அனைத்தும் பணமில்லை என்று திரும்பிவிட்டன. பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்களில் பெரும்பாலானோர் சீனியர் சிட்டிசன்கள். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் செய்ய, சுப்பிரமணியனைப் பிடித்து விசாரித்திருக்கிறது போலீஸ்'' என்றவர், புறப்படத் தயாரானார்.

''தீபாவளிக்குள் சந்தை எப்படி இருக்கும்?'' என்றோம். நம் கேள்விக்கு பட்டாசாய் பதில் சொன்னார்.

''தீபாவளிக்குள் நிஃப்டி புள்ளிகள் புதிய உச்சத்தைத் தொடக்கூடும். வலிமையான சப்போர்ட் 6115-6080-ஆக உள்ளது. சிமென்ட் துறை தவிர, இதர துறை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நல்லபடியாக வந்து கொண்டிருக்கின்றன. ரூபாய் மதிப்பு நிலை பெற்றிருக்கிறது. கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே இருக்கிறது. சர்வதேச அளவில் பெரிய பிரச்னைகள் இல்லை என்பது சந்தைக்கு சாதகமான விஷயங் களாக இருக்கின்றன'' என்றவர், வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை சொன்னதோடு, ஷேர் டிப்ஸ்களையும் தந்துவிட்டு பறந்தார். அந்த பங்குகள் இதோ:

எல் அண்டு டி, ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ரிலையன்ஸ் கேப்பிட்டல், எல்..ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ், கெடிலா, சீமென்ஸ் (விலை குறைய குறைய).