Published:Updated:

முதலீட்டு போர்ட்ஃபோலியோ ரிவியூவ்...

அசத்தல் லாபத்துக்கு அவசியம் செய்யுங்கள்!

முதலீட்டு போர்ட்ஃபோலியோ ரிவியூவ்...

அசத்தல் லாபத்துக்கு அவசியம் செய்யுங்கள்!

Published:Updated:
##~##

பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்குப் போன என் நண்பர் ரமேஷ் சென்னைக்குத் திரும்பியதும் என்னை வந்து சந்தித்தார். அவரது போர்ட்ஃபோலியோவை என்னிடம் காட்டினார். அதைப் பார்த்தவுடன் அவர் மீது எனக்கு கோபமும், சிரிப்பும்தான் வந்தது.

இந்தியாவில் வசிக்கும்போது சுமார் 132 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறார் அவர். அதன்பிறகு வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்றபிறகு, அவர் செய்த முதலீட்டையும் மற்ற முதலீட்டுத் திட்டங்களையும் சுத்தமாக மறந்தே போய்விட்டார். அங்கு அவருக்கு அதிகமான சம்பளம் கிடைத்ததால் முன்பு செய்த எந்த முதலீட்டையும் அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லையாம். ஆனால், தாயகம்  திரும்பியதும் அவர் செய்த முதலீடுகள் நினைவுக்கு வர, என்னைத் தேடி வந்தார்.

அவர் முதலீடு செய்திருக்கும் பங்குகளின் பட்டியலை நான் வாங்கிப் பார்த்தேன். அவர் வாங்கிய பங்குகளில் சில இன்று இருக்கும் இடம்கூட தெரியாமல் போயிருந்தன. பல பங்குகளின் விலையானது அதலபாதாளத்திற்குச் சென்று வர்த்தகமாகிக் கொண்டிருந்தன.

இப்படித்தான் இயந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் நம்மில் பெரும்பாலானவர்கள் அவரவர்களின் எதிர்காலத் தேவைகளுக்காக செய்த எல்லா முதலீடுகளையும் மறந்து, அதைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், எல்லோரையும் இப்படி சொல்வதற்கில்லை. தங்கள்  முதலீட்டின் மூலம் லாபம் பார்த்தாக வேண்டும் என்கிற உத்வேகத்துடன் செயல்படுகிறவர்கள், தங்கள் போர்ட்ஃபோலியோவை அடிக்கடி மறுபரிசீலனை (Portfolio review) செய்வதன் மூலம் நஷ்டத்தைத் தவிர்த்து, லாபம் சம்பாதித்து நல்ல வருமானத்தை ஈட்டியிருக்கிறார்கள்.  

போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனையா?, அப்படி என்றால் என்ன, எதற்காக போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யவேண்டும்? அதை எப்படி முறையாகச் செய்வது?, செய்தபிறகு எப்படி கடைப்பிடிப்பது? போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனையினால் கிடைக்கும் சாதகமான பலன்கள் என்ன? என் நண்பர் செய்ததுபோல, போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யாமல்விட்டால், என்னென்ன பாதகம் நமக்கு வரும்? என்கிற கேள்விகள் எல்லாம் முக்கியமானவை. இந்த எல்லா கேள்விகளுக்கும் இப்போது விளக்கமாக பதில் சொல்கிறேன்.

போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனை!

இன்றைய நிலையில் மக்கள் மிக முக்கியமான முதலீட்டுத் திட்டங்களாக கருதுவது, ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, வங்கி டெபாசிட்கள், சீட்டு சேமிப்பு போன்றவற்றைதான். அவரவர்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்து செய்யும் முதலீடுகளும், திட்டங்களும் வேறுபடலாம். இப்படி பலவகையான முதலீட்டுத் திட்டங் களில் பணத்தை முதலீடு செய்துவிட்டு அதை அவ்வப்போது கவனித்து, அதில் மாற்றங்கள் தேவைப்படும்பட்சத்தில் மாற்றி அமைத்து, அதற்கு தக்கபடி வருமானம் ஈட்ட மேற்கொள்ளும் விஷயம்தான் போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனை. அதுமட்டுமல்லாமல், செய்திருக்கும் முதலீடுகள் நன்றாக இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்ய, செய்திருக்கும் முதலீடுகள் மீதான பலவீனத்தைக் கண்டறிய, கண்டறிந்த பின்னர் அதை சரிசெய்ய, சமநிலைப்படுத்த, இலக்குகளை சரியான நேரத்தில் அடைய என போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனை மூலம் பல நல்ல விளைவுகளை அடைய முடியும்.

முதலீட்டு போர்ட்ஃபோலியோ ரிவியூவ்...

பங்குச் சந்தை முதலீடு!

பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது என்ன லாபம் தருகிறது என்பதைக் கவனிக்கத் தவறுவதில்லை. ஆனால், சந்தை சரியும்போது, அவர்கள் செய்துள்ள முதலீடு எந்த அளவுக்கு குறைகிறது என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை. இதுபோலத்தான் மற்ற முதலீட்டுத் திட்டங்களிலும்.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம்!

இன்னுமொரு முக்கியமான விஷயம், இன்றைய நிலையில் தங்களின் போர்ட்ஃபோலியோவில் இன்ஷூரன்ஸ் என்கிற விஷயத்துக்கு இடம் தருவதே இல்லை. இது மிகப் பெரிய தவறு.  பணத்தைப் பெருக்க யோசிக்கும் முன்பு பாதுகாப்புக்கு செய்யவேண்டிய விஷயங்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும். ஏற்கெனவே  லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருப்பவர்கள், தங்களுக்குப் போதுமான அளவுக்கு கவரேஜ் இருக்கிறதா? அந்த பாலிசிகளுக்கு எத்தனை ஆண்டு பிரீமியம் கட்டவேண்டும் என்பதுகூட தெரியாத மனநிலையில்தான் இருக்கிறார்கள். ஒருவருக்கு மிக மிக முக்கியமானது இந்த இரண்டு விஷயங்கள்தான். அதனால் போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனையின்போது இதையும் நிச்சயம் கவனிக்க வேண்டும். காரணம், வருமானம் உயர்ந்திருக்கலாம் அல்லது கடன் சுமை அதிகமாகியிருக்கலாம். இதைக் கவனிக்காமல், ஏற்கெனவே எடுத்துக்கொண்ட இன்ஷூரன்ஸ் கவரேஜே போதும் என்று  இருந்தால் அதனால் எந்த பயனும் இல்லை.

எதற்கு மறுபரிசீலனை?

முதலீட்டு போர்ட்ஃபோலியோ ரிவியூவ்...

பங்குச் சந்தையின் போக்கு ஏறி இறங்கும் என்கிற காரணத்தினால் மட்டுமே போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது கிடையாது. அவரவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பொருளாதார  மாற்றங்கள், அரசு வெளியிடும் வருமான வரி விதிமுறை மாற்றம் போன்ற விஷயங்களினாலும் ஒருவர் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்வது அவசியம். காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை என்கிற கால அளவுகளின் அடிப்படையில் ஒருவர் தனது போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யலாம்.  ஆனால், பெரும்பாலானவர்கள் இதைச் செய்யாமல் போவதற்கு காரணம், அவர்களின் நிதி, முதலீடு மற்றும் வரவு செலவு விவரங்களை முறையாக பராமரிப்பது கிடையாது என்பதால்தான். முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறவர்கள் முதலீடு சார்ந்த விவரங்களைச் சேகரித்து வைப்பதிலும் ஆர்வம் காட்டவேண்டியது அவசியம்.

சாதகமானவை!

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருவர் தனது போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனைச்  செய்வதால் கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும்!

 எதிர்காலத் தேவைகளுக்காக மேற்கொண்ட முதலீட்டு இலக்குகளை சரியான நேரத்தில் அடைவதற்கான தெளிவு கிடைக்கும்.

முதலீட்டுத் திட்டங்களை பரவலாக்குவதன் மூலம் முதலீட்டின் மீதான ரிஸ்குகளைக் குறைக்க முடியும்.

 குறிக்கோள்களுக்கு ஏற்ற மாதிரி அசெட் அலோகேஷனை முடிவு செய்ய முடியும். அதற்கு தகுந்தாற்போல முதலீட்டுத் திட்டங்களையும் தேர்வு செய்ய முடியும்.

செய்திருக்கும் முதலீடுகள் மீதான வரிச் சலுகைகளைப் பெற திட்டங்களை வகுக்க முடியும்.

 முதலீட்டுக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனை வழிவகுக்கும்.

 செய்யும் முதலீட்டுத் தொகையானது ஒரே முதலீட்டுத் திட்டத்தில் தேக்கம் அடைந்து விடாமல் பிரித்து முதலீடு செய்து எளிதாக வருமானத்தை ஈட்ட முடியும்.

இரண்டு படிகள்!

போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யும்போது இரண்டு படிகளின்படி செய்ய வேண்டும்.

முதல் படியாக, ஒருவர் தனது முதலீட்டின் மீதான இலக்கை நிர்ணயம் செய்யவேண்டும். அதாவது, ஒரு பங்கை 100 ரூபாய் விலை தந்து வாங்குவதாக இருந்தால், அந்தப் பங்கின் விலையானது 150 ரூபாய்க்கு உயர்ந்ததும் விற்றுவிடுவேன் என்ற இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் தங்கள் இலக்கை நிர்ணயம் செய்யாமல் இன்னும் உயரும் என்று எதிர்பார்த்து கடைசியில் லாபத்துக்கு பதில் நஷ்டமே அடை கிறார்கள். முதலீடு செய்யும்போது இலக்கை நிர்ணயம் செய்யவில்லை என்றாலும்கூட, போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனை மேற்கொள்ளும் போதாவது முதலீட்டுத் திட்டத்தின் மீதான இலக்கை நிர்ணயம் செய்துகொள்ளலாம். இதனால், உங்கள் முதலீட்டிலிருந்து நீங்கள் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை வரையறுக்க முடியும்.

இரண்டாவதாக, எந்த முதலீட்டுத் திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே முடிவு செய்திருந்தாலும் அதை போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனையின்போது சரிபார்த்துக்கொள்வது அவசியம்.

வயது அடிப்படையில்..!

வயதுக்கு தக்கபடிதான் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதால் மறுபரிசீலனையின்போது வயது மற்றும் அதற்கு தகுந்தாற்போல முதலீடு குறித்த விஷயங்களையும் ஆராய வேண்டும். பெரும்பாலானோர் தாங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் , எவ்வளவு ரிஸ்க்கை தாக்குப் பிடிப்போம் என்பதை அறிந்துகொள்ளாததால் பெரிய அளவில் முதலீட்டை இழக்கிறார்கள். அதிக வயது கொண்டவர்கள் அதிக ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது. அதுபோல  அக்ரெஸிவ், மாடரேட் மற்றும் கன்சர்வேட்டிவ் என்று வயது அடிப்படையில் முதலீட்டாளர்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் முதலீட்டு மனநிலைகளைத் தெரிந்துகொள்ள பலவகையான கேள்விகள், விதிமுறைகள் என்று இருக்கின்றன.

முதலீட்டு போர்ட்ஃபோலியோ ரிவியூவ்...

சமநிலைபடுத்துதல்!

பல்வேறு சொத்துகளில் முதலீட்டை மேற்கொண்ட பின்னர் உங்கள்  வருமானக் குறிக்கோளுக்கு ஏற்றவாறு போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைப் பதைதான் சமநிலைப்படுத்துதல் என்கிறோம்.

இதைச் செய்வதன் மூலம் போர்ட்ஃபோலியோ உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். இதுபோன்ற உத்திகள் சந்தையில் பெரிய சரிவுகள் (2008 சந்தை சரிவு) எற்படும்போது முதலீட்டில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாது. போர்ட்ஃபோலியோவை பரிசீலனை செய்யும்போது, உங்கள் முதலீட்டு வருமான இலக்கில் மாற்றம் இல்லாவிட்டால் அசெட் அலோகேஷனை மாற்றத் தேவையில்லை. அதாவது, சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட முதலீட்டை அதிகரிக்கக் கூடாது.

மேலே சொன்னதுபோல, போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனையை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு அடிப்படையில் மேற்கொள்ளலாம். அதேபோல, வாங்கியிருக்கும் பங்கானது குறுகிய காலத்தில் திடீரென உயர்கிறது என்றால் கால அவகாசம் பார்த்துக் கொண்டிருக்காமல் அந்தப் பங்குகளை விற்று லாபம் பார்ப்பதே புத்திசாலித்தனம்.  அதேபோல பங்கின் விலையானது திடீரென இறங்கினாலும் விற்றுவிட்டு வெளியேறுவது நல்லது.  

வருமான அடிப்படையில்!

தங்களின் போர்ட்ஃபோலியோவில் கிடைக்கும் வருமானத்தை வைத்தும் மறுபரிசீலனை செய்யலாம். உதாரணத்துக்கு, முதலீடு செய்யும் போது ஒருவரது போர்ட்ஃபோலியோ பங்குச் சந்தை மற்றும் கடன் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் 50:50 என்ற விகிதத்தில் இருந்து,  பங்கு சார்ந்த முதலீடுகள் பின்னர் 50 சதவிகித வருமானத்தைத் தந்தால் பங்குச் சந்தை

60 சதவிகிதமாகவும், கடன் சார்ந்த முதலீடுகள் 40 சதவிகிதமாகவும் மாறிவிடும்.

இதுபோன்ற தருணத்தில் போர்ட்ஃபோலியோவை அதன் ஒரிஜனல் கலவையான பங்குச் சந்தையை 50%, கடன் சந்தையை 50%-மாக மாற்ற வேண்டும். இந்த சமயத்தில், விற்கும் பங்கு வருமானத்துக்கு வரி கட்டவேண்டி இருக்குமா என்பதைக் கவனித்து செயல்படுவது நல்லது.  போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யும்போது முதலீட்டின் மூலம் கிடைக்கும் நிகர லாபத்துக்கு விதிக்கப்படும் வரிகளைப் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.  

முதலீட்டு போர்ட்ஃபோலியோ ரிவியூவ்...

குடும்பச் சூழ்நிலையில் மாற்றம்!

குடும்ப நிதி நிலைமையில் மாற்றங்கள் நிகழும்போதும் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யலாம். உதாரணத்துக்கு, குடும்ப மொத்த வருமானத்தில் ஒருவரின் வருமானம் மட்டும் ஏதேனும் ஒரு காரணத்தினால் இல்லாமல் போகும்பட்சத்தில் நிச்சயமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். இந்தச் சமயத்திலும் போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனை அவசியம்!  

போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனைச் செலவு!

போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனைச் செய்யும்போது வருமான வரி, ஃபண்டு வெளியேறும் கட்டணம் போன்ற சில செலவுகள் ஏற்படும். இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகுதான் மறுசீரமைப்பைச் செய்யவேண்டும். உதாரணத்துக்கு,   போர்ட்ஃபோலியோ

5 சதவிகித வருமானத்தில் இருக்கும்போது, சந்தையில் சரிவு ஏற்படும் என யூகித்து பங்கு களையும், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளையும் விற்றால், அவை குறுகிய கால முதலீடாக இருந்தால் லாபத்தில் 15 சதவிகித வரி கட்டவேண்டும்.  இதனால் போர்ட்ஃபோலியோவின் வருமானம் 3.5 சதவிகிதமாக மாறிவிடும். அதுவே, ஃபண்டு விற்பதாக இருந்தால் கூடுதலாக வெளியேறும் கட்டணம் இருந்தால் நிகர வருமானம் இன்னும் குறையும். இதனால் மறுபரிசீலனை செலவை அவசியம் கவனிக்க வேண்டும்.      

மேற்கொள்ளாமல் போனால்..!

 போர்ட்ஃபோலியோ மறுபரிசீலனையைச் செய்யாமல் விட்டால், என் நண்பர் அடைந்ததுபோல நஷ்டமே வரும். கம்பெனி டெபாசிட்களில் முதலீடு செய்த ஒருவர் அதை முதிர்வுக் காலம் வரையும், அதன்பிறகும் கவனிக்காமல் விட்டால், பிரச்னைகளை சந்திப்பார். முதிர்வுக் காலத்துக்குப்பின், இருக்கும் நாட்களுக்கு வட்டி வருமானம் கிடைக்காது.  போர்ட்ஃபோலியோவை உரிய நேரத்தில் மறுபரிசீலனை செய்தால் இந்தப் பிரச்னை வராது!

 ஏதோ ஒரு காலத்தில் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியை இன்றைக்கு மறந்தே போயிருப்போம்.  என்றாவது ஒருநாள் பாலிசி எடுத்த ரசீது கிடைக்க அன்றைய தேதியில் பாலிசியானது முதிர்வடைந்து இருக்கலாம்.

அதனால்தான் ஆண்டுக்கு ஒருமுறையேனும் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்வது அவசியம்.''

தொகுப்பு: செ.கார்த்திகேயன்.