##~##

ஊக்கம் மட்டும் கிடைத்தால்..!

சங்கர் 25 வயது இளைஞன். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எலெக்ட்ரானிக் இன்ஜினீயர். எப்பப் பார்த்தாலும் கையில ஏதாவது 'ப்ளான்’ வச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு இருப்பான். அவன் தங்கை நிஷா, பி.காம் ஃபைனல் இயர் படிச்சுக்கிட்டு இருக்கா.  இரண்டு பேருமே, எதையாவது புதிதாக செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிஷாவைப் பொறுத்தமட்டில், உபயோகம் அற்றது என்று எதுவுமே இல்லை; குப்பைக் காகிதங்கள் முதல் ப்ளாஸ்டிக் சாதனங்கள் வரை ஒவ்வொன்றையும் எப்படி முழுமையாகப் பயன்படுத்துவது என்பதில்தான் அவளது முழுக் கவனமும் இருக்கும். வீட்டில் எதுவெல்லாம் 'வேலை செய்யாமல்’ இருக்கின்றனவோ, அதையெல்லாம் சங்கரும் நிஷாவும் சரி செய்தே தீருவது என்பதில் தீவிரமாக இருப்பார்கள். பழுது போக்குவதுதான் அவர்களின் பெரிய பொழுதுபோக்கு!

தீப்பெட்டி, வண்ணக் காகிதம், சோப்பு, பற்பசை போன்றவற்றின் மேலட்டைகள், கைக்குட்டைகள், பேனா, பென்சில்... என்று இவற்றைப் பயன்படுத்தி ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் கச்சிதமாக பரிசுப் பொருட்களை செய்து முடித்து விடுவார்கள். ஒருமுறை நவம்பர் 14 அன்று சிறுவர் தின விழா பரிசளிப்புக்குப் போயிருந்தபோதுதான் இருவரையும் சந்தித்தேன். அத்தனை பரிசுகளையும் இருவரும்தான் செய்திருந்தனர்.

ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால், அதன் விலை மதிப்பு அநேகமாக ஜீரோ. பரிசுகளைப் பெற்றுக்கொண்ட குழந்தைகளைவிட, பெரியவர்களுக்குத்தான் அதிக குஷி. 'இதை எப்படிச் செய்தீர்கள்..?’ என்று ஒருவர் விடாமல் கேட்டவண்ணம் இருந்தனர்.

எதிர்கொள் !

அதன்பிறகு, என் எல்லாப் பயிலரங்க நிகழ்ச்சிகளிலும் இவர்கள் இருவருக்கும் தனியே நேரம் ஒதுக்கிவிடுவேன். சொல்ல வேண்டியதில்லை, ஒவ்வொரு பயிலரங்கத்திலும் அவர்களது 'பிரெஸன்டேஷன்’தான் 'ஹைலைட்’டானது. வயது வித்தியாசம் இன்றி அத்தனை பேரையும் இது கவர்ந்தது. வயதில் மிக முதிர்ந்தவர்கள்கூட, ஆர்வமுடன் கற்றுக்கொள்ள முன்வருவதைப் பார்க்கும்பொழுது ஆச்சா¢யமாக இருந்தது.

'இதுல ஆச்சா¢யப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை சார்’ என்றாள் நிஷா. 'புதுசா எதையாவது கத்துக்கணும்னு எப்பவுமே மனசு ஆசைப்படும் சார். அதுலேயும், எதையாவது கத்துக்கிட்டு அதை செஞ்சு காண்பிக்கிறப்ப, யாராவது அதைப் பாராட்டிட்டாங்கன்னு வச்சிக்குங்க... அவ்வளவுதான். அப்புறம் அவங்களை யாராலும் தடுக்கவே முடியாது. நாங்களே அப்படி உருவானவங்கதானே..?’

புரிந்துகொண்டேன். தேவையான ஊக்கம் மட்டும் நாம் தந்தால் போதும், ஆர்வத்துடன் காரியங்களைச் செய்ய பலர் தயாராய் இருக்கிறார்கள். 'ஸ்டிமுலஸ் பேக்கேஜ்’ என்கிற கான்செப்ட்டினுடைய அடிப்படையே அதுதானே..? ஆனால், துரதிருஷ்டவசமாக, 'ஸ்டிமுலஸ்’ என்றாலே அது, நிதி தொடர்பாகத்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத விதியை உருவாக்கி வைத்துவிட்டார்கள்.

எதிர்கொள் !

சங்கர், நிஷாவுக்கு, புதிய 'ப்ளான்’ ஒன்று தோன்றியது. தம்மைப்போலவே, 'இமேஜினேட்டிவ்’-ஆக சிறிய சிறிய விஷயங்கள் செய்கிறவர்களை ஒருங்கிணைத்தால் என்ன..? என்பதுதான் அது. 'பரஸ்பர அறிமுகம் மட்டுமே நோக்கம் அல்ல. அறிவுப் பரிமாற்றம்... அதையும் தாண்டி, இன்னும் உச்சங்களைத் தொடலாமே... வொய் டோன்ட் வி ட்ரை..?’

சங்கரின் கேள்வி மிக முக்கியமானதாகப் பட்டது எனக்கு. கண்ணுக்குத் தெரியாத, வெளிஉலகுக்கு வராத 'இமேஜினேட்டிவ்’ மனிதர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்..? அதைவிடவும், தங்களுடைய திறமையின் 'மதிப்பு’ தெரியாமலே இருந்து வருகிறவர்கள் பலர் என்பதுதான் வேதனை. இன்னமும், நமது நாட்டில் அங்கீகரிக்கப்படாதத் துறையாகவே, 'இமேஜினேட்டிவ்’ திங்கிங் இருந்து வருகிறது.

முறைப்படுத்தப்படாமல், பதிவு செய்யப்படாமல் விரவிக் கிடக்கும் தனிநபர் முயற்சிகள் ஏராளம். கணக்கில் அடங்காத தனித்திறமைகள், கவனத்துக்கு வராமலேயே வீணாகிக் கொண்டு இருக்கின்றன.

இன்றைய இளைஞர்கள் ஜெயிக்க வேண்டும் எனில், அவர்கள் திறமைகளை விளம்பரப்படுத்த, வணிகப்படுத்த கூச்சமேபடக் கூடாது.

'தொழில் அறிவு’ ஆகட்டும், 'கற்பனை சார்ந்த கலை’களாகட்டும்... இவற்றை 'வணிகப் படுத்துகிற’ கடமையை நாம் அறவே செய்யத் தவறிவிட்டோம். இந்த நிலை இன்னமும் தொடர்கிறது. இதை மாற்றுவதில்தான், இப்போது சங்கரும் நிஷாவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்களுக்காக மட்டுமல்ல, தங்களைப் போன்ற பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்காகவும்.

ஆனால், அதை எப்படி முறையாகச் செய்வது..? 'யாரிடம் கேட்டால் சரியான வழிகாட்டுதல் கிடைக்கும்?’

'பொருளாதாரம் தெரிந்த, சட்ட நுணுக்கங்கள் அறிந்த, அரசு விதிமுறைகளுக்கு நன்கு பழக்கப்பட்ட, எல்லாவற்றுக்கும் மேலாக பொது நலனில் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்ட ஒருவர் வேண்டுமே...’ பல பெயர்களைப் பரிசீலித்ததில், 'யெஸ். இவர்தான் சரி’ என்று தீர்மானித்தோம்.

அவர்தான்...  

(தெளிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism