Published:Updated:

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

பணவளக் கலை !

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

Published:Updated:
##~##

பணவளக் கலை உங்கள் மனதில் பல்வேறு போராட்டங்களை உண்டாக்கியிருக்கக் கூடும். எதைச் செய்தோம், நம் வாழ்வில் இன்றுவரை எதைச் செய்யத் தவறினோம், எதை நம்பினோம், எதில் ஏமாந்தோம், எதில் உழன்றோம். எதனை எதிர்கொள்ளத் தயங்கினோம் என்றெல்லாம் நீங்கள் இந்நேரம் மனதில் பட்டியலிட்டுப் பார்த்திருப்பீர்கள். எனக்கும் பணக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி பலமுறை உங்கள் மனதில் எழுந்திருக்கும்.  

பண ரீதியான வெற்றி என்பது ஒரு சில விஷயங்களைத் தொடர்ந்து தடையில்லாமல் முழுமனதுடன் செய்து வருவதாலேயே கிடைக்கிறது. இதில் தொடர்ந்து என்பது கஷ்ட நஷ்டங்கள் வந்தபோதும் என்று அர்த்தம் கொள்ளவேண்டிய ஒன்றாகும். சாமான்யர்கள் (ஆவரேஜ்கள்) கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்கும்போது தங்கள் செயல்பாட்டை நிறுத்தி மாற்றுவழியைத் தேட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களைச் சுற்றியுள்ள நபர்களில் பிசினஸ்மேனாக இருந்து கஷ்ட காலத்தில் வேலைக்குச் செல்லலாம் என்ற முடிவை எடுத்தவர்களைக் கொஞ்சம் பேச்சு கொடுத்துப் பாருங்கள், உங்களுக்குப் புரியும். பிசினஸ் நன்றாக இருந்தபோது சந்தோஷத்தின் எல்லையில் இருந்திருப்பார்கள். கஷ்டம் வந்தபோது உடனடியாக வாரிச்சுருட்டி ஓடிவந்து வேலையில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள். நல்லாத்தாங்க போச்சு! இடையில கொஞ்சம் நொண்டியடிச்சுது. இது சரிப்படாதுன்னு சொல்லி வந்த விலைக்கு பிசினஸை வித்துட்டு வேலைக்கு வந்துட்டேன் என்று சொல்வார்கள்.

இந்த நொண்டியடிக்கும் நிலைதான் ஆவரேஜ் மனிதர்களுக்குப் போடப்படும் வேகத்தடை. இந்த வேகத்தடை (பிசினஸில் கஷ்ட/நஷ்டம்) வந்தவுடனேயே ஒரு ஹி டேர்ன் அடித்து வேகமாகத் திரும்பவும் ஆரம்ப நிலைக்கே சென்று மாற்றுப் பாதையைத் (வேலை) தேர்ந்தெடுப்பதுதான் ஆவரேஜ் மனிதர்களின் குணம்.

வெற்றி பெற்ற மனிதர்களின் சரித்திரத்தைப் பார்த்தாலோ அல்லது அவர்களின் பேட்டியைக் கேட்டீர்கள் என்றாலோ நிச்சயமாய் மேலே சொன்ன ஒரு (ஒன்றென்ன பல) கஷ்ட/நஷ்ட நிலையைத் தாண்டித்தான் அவர்கள் மேலே வந்திருப்பதாகச் சொல்வார்கள்.

பணவளக் கலை !

அந்த நிலைமையில்தான்  நான் நிதானமாக யோசித்தேன். திருப்புமுனை வந்தது. பிசினஸை மாற்றியமைத்தேன். பார்ட்னரை வெளியேற்றினேன் என முக்கிய முடிவுகளை எடுத்ததாகச் சொல்வார்கள். இதிலிருந்தே பண ரீதியான வெற்றிக்கான குணாதிசயம் உங்களுக்குச் சுலபமாய் புரிந்திருக்கும். போகும் பாதையில் தொடர்ந்து சென்று போராடி வெற்றி பெறும் குணம் அவர்களிடம் நிறைந்திருக்கும்.

அய்யோ! இதெல்லாம் நமக்கு ஆகாது! நான் பாட்டுக்கு ஆவரேஜாகவே வாழ்கிறேன் என்கிறீர்களா? ஆவரேஜாக வாழ்வதில் தவறொன்றும் இல்லை! அந்த நிலையை மனப்பூர்வமாக நீங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள் என்றால்!  அப்படி உங்கள் மனநிலை இல்லாதபட்சத்தில், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை எனும் வாய்ப்பை அநியாயத்துக்கு வீணடிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

அது என்ன ஆவரேஜ் என்றால் அவ்வளவு கிள்ளுக்கீரையா? ரொம்பத்தான் ஆவரேஜ் பற்றி குறை சொல்கிறீர்களே என்பீர்கள். ஒரு சிலர் ஆவரேஜ்கள் எப்படி தங்களை  மாற்றிக்கொண்டு பணம் சம்பாதிப்பது என்று சொல்லித் தராமல் சும்மா எதற்கெடுத்தாலும் ஆவரேஜ், ஆவரேஜ் என்று

பணவளக் கலை !

திட்டுவதால் என்ன பிரயோஜனம் என்பீர்கள். ஆவரேஜ்களை பணம் சம்பாதிக்க வைக்கும் ஐடியாக்களை கொடுப்பதைவிட ஆவரேஜ்கள் ஏன் தோல்வியைக் கண்டால் துவண்டுபோய் மாற்றுப்பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால் சுலபமாக தோல்வியைக் கண்டு துவளாமல் இருக்கலாம். பின்வரும் எட்டு பிரச்னைகளே ஆவரேஜ்களை ஆவரேஜாக இருக்கச் செய்கிறது.

ஆவரேஜ்களின் முதல் பிரச்னை, ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் நிலையிலேயே இருக்கிறது. சரிவர ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் துவங்கும் நபருக்கு நிச்சயமாய் வேகத்தடை உடனடியாக வந்துவிடும். இந்தமாதிரி ஆரம்பங்கள்தான் முன்னேற முடியாத முட்டுக்கட்டையை சுலபத்தில் போட்டுவிடுகிறது.

உதாரணத்துக்கு, ஓர் இடத்தில் ஒருவர் ஒரு கடை வைக்கிறார். இன்ட்டீரியருக்கு பல லட்சம் செலவு செய்கிறார். அவர் கடை இருக்கும் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்க, அது முடியும் வரை வியாபாரம் டல்லடிக்கத்தானே செய்யும்! தீர விசாரித்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாமே!

இரண்டாவதாக, முடியாத விஷயம் என்று தெரிந்தே குருட்டு நம்பிக்கையில் முயற்சிப்பது. ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய முயற்சிப்பது போன்ற விஷயங்கள்.  இந்த இரண்டுமே அந்தச் செயலில் இறங்குபவர்களின் எனர்ஜியை முழுதுமாகத் தின்று தீர்த்துவிடும். பத்தாயிரம் ரூபாயை கையில் வைத்துக்கொண்டு லட்சம் ரூபாய் பிசினஸுக்கு முயற்சித்தால் தோல்விதானே கிடைக்கும்?

மூன்றாவதாக, எல்லாம் தெளிவாகத் தெரியாமல் நான் செயல்படமாட்டேன் என்று நினைக்கும் குணம். பிசினஸில் கொஞ்சம் தெளிவற்ற குழப்பநிலை இருக்கத்தான் செய்யும். அதைப் புரிந்துகொள்ளாமல் தெளிவில்லை என்பதால் முடிவெடுக்க தாமதப்படுத்துவதனால் நஷ்டமடைவார்கள். ஒரு சின்ன உதாரணம். சிலரிடம் கடன் கேட்டால், மறுத்துவிடுவார்கள். ஏன் என்று கேட்டால், தர்ற கடன் திரும்ப வரும்ங்கிறதுக்கு என்ன கேரன்டி? என்பார்கள். இப்படி ஒரேயடியாய் இல்லை என்பதைவிட, புதிய நபராய் இருந்தால் ஒரு சிறுதொகையை முதலில் தந்து அது சரியான நேரத்தில் திரும்ப வருகிறதா என்று பார்த்து,  மேற்கொண்டு தரலாம்.  

நான்காவதாக, செய்யும் தொழிலில் எது முக்கியம் என்று புரிந்துகொள்ளாமல் செயல்படுவார்கள். தேவையான இடத்தில் நேரத்தைச் செலவிடாமல் தேவையில்லாத இடத்தில் நேரத்தைச் செலவிடுவார்கள். உதாரணத்துக்கு, நான்கு இடங்களில் தொழில் நடக்கும். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு மேனேஜரைப் போடாமல் சம்பளப் பட்டுவாடாவுக்கு ஓனரே நேரில் செல்வார். அன்றைக்கு மிக முக்கியமான பிசினஸ் விஷயங்கள் இருந்தாலும் அதைப் பார்க்க மாட்டார். இதனால் அவர் மனம் சந்தோஷப் படலாம். ஆனால், பிசினஸுக்கு நிச்சயம் நஷ்டம்தான்!

பணவளக் கலை !

ஐந்தாவதாக, ஆவரேஜ்கள் செய்யும் ஒரு விஷயம் தேவையற்ற பேச்சுவார்த்தைகள். பணியாளராகட்டும், வீடாகட்டும் தொழில் குறித்த தேவையற்ற பேச்சுக்கள் நிறைய முட்டுக்கட்டையைப் போடும். இப்படி ஓவராய் பேசும்போது நீங்கள் தேவையில்லாமல் நிறைய இட்டுகட்டிச் சொல்ல வேண்டியிருக்கும். இதை நான் பண்ணியிருக்கக்கூடாது. தேவைக்கு மேல் பேசாமல் இருந்தாலே போதும் இந்த நிலை வரவே வராது.

ஆறாவதாக, எந்தப் பிரச்னைக்கு முன்னுரிமை தருவது, எதற்கு தரக்கூடாது என்பதை முடிவு செய்வது. நாளைக்கு புரொடக்ஷனுக்கு மெட்டீரியல் கைவசம் இல்லை. வரவேண்டிய லோடும் வந்திருக்காது. அதைக் கவனிக்காமல் கேஷியர் தினமும் லேட்டாக வருகிறாரே  என்று லெக்சர் அடிக்கக் கூடாது!

ஏழாவதாக, தன்னால் மேனேஜ் பண்ண முடியாத அளவுக்கு ஒரு பிசியான வாழ்க்கையை வாழ்வது. நாலு இடத்தில் பிசினஸ், பிசினஸ் அசோசியேஷனில் செக்ரட்டரி, சோஷியல் அசோசியேஷனில் தலைவர், தேர்த் திருவிழாவில் தலைமை என்று அலைந்தால் பிசினஸை கவனிக்க முடியாது.  

எட்டாவதாக, சிக்கல் வரும்போது எமோஷனல் ரியாக்ஷன்களை அனைவரிடமும் கொட்டுவது. இந்த நேரத்தில் நீங்கள் எமோஷனலாக வெடித்தீர்கள் என்றால் என்னவாகும்? எனக்கு அப்பவே தெரியும். சேல்ஸ் மேனேஜர் கூத்தடிச்சுக்கிட்டு இருந்தார். அக்கவுன்டன்ட் கண்டமேனிக்கு பில்லைப் பாஸ் பண்ணினார் என்று வெடித்தீர்கள் எனில், சிக்கலான சூழலில் இவர்களெல்லாம் கழன்று கொண்டு உங்களுக்கு அதிகச் சிக்கலைத்தான் தருவார்கள்.

பொதுவாகவே பிசினஸ்-டு-வேலை என்று வந்த தங்களுடைய பிசினஸ் பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டவர்கள் இந்த எட்டில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்டவையையோ செய்து தாங்கள் ஆவரேஜ் என்பதை நிரூபித்திருப் பார்கள். நான் அப்படிப்பட்ட ஆளில்லை என்று சொல்கிறீர்களா நீங்கள்?   அப்புறமென்ன, அதிகம் சம்பாதிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பியுங்கள்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism