Published:Updated:

எடக்கு மடக்கு - பங்குச் சந்தையை வாழ வையுங்கய்யா!

எடக்கு மடக்கு - பங்குச் சந்தையை வாழ வையுங்கய்யா!

எடக்கு மடக்கு - பங்குச் சந்தையை வாழ வையுங்கய்யா!

எடக்கு மடக்கு - பங்குச் சந்தையை வாழ வையுங்கய்யா!

Published:Updated:
##~##

என்ன ஏகாம்பரம், தீபாவளி எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதான்னு கேட்கறீங்களா? எனக்கு நல்லாத்தாங்க போச்சு. உங்களுக்கு எப்படி இருந்தது இந்த தீபாவளி?

தீபாவளின்னதும் எனக்கு பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க. நான் காலேஜ் முடிச்சு வேலைக்குப் போய் சம்பளம் வாங்குனதும் நண்பர் ஒருத்தரு, 'ஏகாம்பரம், எதிர்காலத்துக்கு ஏதாவது முதலீடு பண்ணு’ன்னு சொல்லி பங்குச் சந்தையை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்ப இந்தியா முழுக்க 20 ஸ்டாக் எக்ஸ்சேஞ்சு இருந்துச்சு. ஆனாலும், நேரடியா எக்ஸ்சேஞ்சுல மெம்பரா இருக்கற புரோக்கர்கிட்ட  வாடிக்கையாளரா சேர்ந்து வியாபாரம் பண்றதுங்கிறது ரொம்ப கஷ்டமுன்னு நண்பரு சொல்வாரு. அதனால அவரோட பஜாஜ்-சேட்டக் ஸ்கூட்டரில என்னை உட்கார வச்சு கூட்டிட்டுப்போய் அறிமுகப்படுத்தினாரு. அறிமுகப்படுத்த ஆளில்லேன்னா சப்-சப்-சப் (அதாவது, ஏகப்பட்ட சப்-புரோக்கர்கள் இருப்பாங்க!) புரோக்கரிடம்தான் வாடிக்கையாளர் ஆகணும்.

நாம வாங்குற பங்கு பலபேரு கைமாறி வர்றதால கமிஷன் கொஞ்சம் அதிகமாத்தான் போகும். சென்னையில இரண்டு பெர்சன்ட்; நாம இருக்கிற ஊருல ஒரு பெர்சன்ட்னு போட்டுடுவாங்க. சென்னைக்கு அடுத்து இருக்கற தாம்பரத்துலகூட இந்த கூடுதல் கமிஷன் இருக்குமுன்னா பார்த்துக்குங்களேன். ஆனா, ஒரு விஷயம். எக்ஸ்சேஞ்சுல மெம்பரா இருக்கற புரோக்கர் அதிகபட்சமா இரண்டரை பெர்சன்ட்தான் புரோக்கரேஜ் போடலாமுன்னு சட்டமும் இருந்துச்சு.

இந்த மாதிரி பல கண்டிஷன்களை எல்லாம் தாண்டி நானும் முதலீடு பண்ணி கொஞ்சம் காசும் பார்த்திருக்கேன்னா பார்த்துக்குங்களேன். இப்ப மாதிரி கே.ஒய்.சி.ங்கிற அப்ளிகேஷன் எல்லாம் அப்ப கிடையாது. வாய் வார்த்தைதான். யாராவது அறிமுகம் செஞ்சு வைக்கணும். இல்லாட்டி முழுப்பணத்தையும் முழுசா முதல்லேயே கட்டிடணும். போனில ஆர்டரைச் சொன்னாப் போதும். பின்னாடி நேரில போய் செக்கை கொடுத்து ஷேர் சர்ட்டிஃபிகேட்டை கையில வாங்கிக்கலாம்.  

எக்ஸ்சேஞ்ச் மெம்பரை நேரில பார்த்துப் பேசிட்டா, அது தெய்வ தரிசனம். அவர் வாயில இருந்து ஏதாவது டிப்ஸ் வராதான்னு ஏங்கின காலம் அது. ஏன்னா அவருதானே வியாபாரம் நடக்கிற இடத்துக்கு நேரடியாபோய் வர்றவரு. அப்ப ஏதுங்க எலெக்ட்ரானிக் டிரேடிங்?

ஒவ்வொரு எக்ஸ்சேஞ்சும் குறிப்பிட்ட அளவு புரோக்கர்களையே மெம்பரா வச்சிருந்துச்சு. அவங்க நேரடியா வாடிக்கையாளரை எடுக்க முடியாம திணறுனாங்க. அந்தமாதிரி நிலைமையே ஒரு புகாரா மாறுச்சு.

எடக்கு மடக்கு - பங்குச் சந்தையை வாழ வையுங்கய்யா!

எக்ஸ்சேஞ்சுகள் அதிகம் வியாபாரம் பண்ணாம இருக்கிற மெம்பர்களோட வியாபாரத்தைக் காப்பாத்த நினைக்குதுன்னு அரசாங்கம் புரிஞ்சுகிட்டு ஓவர் த கவுன்டர்

எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (ஓ.டி.சி.இ.ஐ.)ன்னு ஒரு எக்ஸ்சேஞ்சை கொண்டுவந்து அது தோல்வியில முடிஞ்சுடுச்சு.  

அப்புறமா வந்துச்சுங்க என்.எஸ்.இ. தகுதி, பணம் இருந்தா யாரு வேணா, எப்பவேணா மெம்பராகலாமுன்னு சொல்லிச்சு. சாட்டிலைட் டிரேடிங், சந்துபொந்தெல்லாம் டெர்மினலுன்னு  எஸ்டிடி பூத்து மாதிரி நிறைய இடங்கள்ல டிரேடிங் டெர்மினல்களைப் போட்டுச்சு. 2.5%, 3.5%  அப்படிங்கற காலமெல்லாம் போயி 0.002, 0.001-ங்குற காலம் வந்துச்சு.

அதெல்லாம் நல்லதுக்குத்தானே ஏகாம்பரமுன்னு சொல்றீங்களா? நல்லதுதான். ஆனா, 1995-ல ஆரம்பிச்ச இந்த விலை வீழ்ச்சி 2013-ல தாக்குப்பிடிக்க முடியாத நிலைமைக்குப் போயிடுச்சு. ஆபீஸ் ரூம், டெலிபோன், ஸ்டேஷனரி, வொர்க்கிங் கேப்பிட்டலுன்னு இருந்தாப் போதுமுன்னு இருந்த தொழில் இன்னைக்கு கம்ப்யூட்டர், நெட்வொர்க், கம்ப்ளையன்ஸ், ஏசின்னு போயிடுச்சு. கணக்கை தொடங்கணுமுன்னா, ஏகப்பட்ட ஃபார்மாலிட்டி.

சுத்தம் பண்றேன், விரிவாக்குறேன்னு சொல்லி கன்னாபின்னான்னு எக்ஸ்சேஞ்சுகளும், செபியும் சேர்ந்து சட்டதிட்டங்களையும், விதிமுறை களையும், நடைமுறைகளையும் கொண்டுவந்து குவிச்சுட்டாங்க. யாருவேணா எப்பவேணா மெம்பராகலாமுன்ற நிலைமை இருக்கிறதால 0.002/0.001 அப்படிங்கிற நிலைமையெல்லாம் போயி டிரேடுக்கு 20 ரூபாய்ங்கிற அளவுக்கு கூறுபோட்டு விக்கிற நிலைமைக்கு தொழில் வந்துடுச்சு.

பாதுகாப்பா வச்சுக்கிறோம் சந்தையைன்னு சொல்லி எக்கச்சக்கமா மார்ஜின் பணத்தை அட்வான்ஸா புரோக்கரை கட்டச் சொல்றாங்க. பணத்துக்கு ஒரு வட்டி உண்டுல்லா? அதுக்குக்கூட கட்டு படியாகாத அளவுக்கு புரோக்கரேஜ் அதலபாதாளத்துக்குப் போயிட்டிருக்குது. கேப்பிட்டல் அடிக்குவசி, அளவுக்கு அதிகமான வொர்க்கிங் கேப்பிட்டல், இதனோடு சில்லுன்னு ஏசி, ஏகப்பட்ட வாடகை, அட்வான்ஸ் எல்லாம் சேர்ந்து புரோக்கர்களை நஷ்டத்துக்குத் தள்ள ஆரம்பிச்சிடுச்சு. புரோக்கரேஜ்தான் குறைஞ்சுகிட்டே வருதே தவிர, மத்த செலவுகள் எந்தவிதத்திலேயும் குறைய வாய்ப்பே இல்லாமப் போனா என்ன ஆகும்?

வால்யூமை அதிகப்படுத்தலாமுன்னு இடையில பணம் கடனெல்லாம் கொடுத்து கிளையன்டை டிரேடிங் பண்ண வச்சாங்க. அதுக்கும் சட்ட திட்டங்கள் கொண்டு வந்துச்சு எக்ஸ்சேஞ்சுகளும் செபியும். வியாபாரத்துல மார்ஜின் குறைஞ்சு கிட்டே போகுது. வால்யூம் ஏற்றத்துக்கான வழி ஏதும் இருக்கிற மாதிரி தெரியலை. இந்த மாதிரி நெலைமையில இந்தத் தொழில்ல யார்தான் இருப்பாங்கச் சொல்லுங்க?

இதுல டெக்னாலஜியோட லீலைகள் வேற. கம்ப்யூட்டர் பேஸ்டு டிரேடிங்கில இருந்து ஸ்மார்ட் போன்-பேஸ்டு டிரேடிங்கா மாறிடுச்சு. இத்தனைப் பிரச்னைகளையும் சமாளிக்க முடியாத புரோக்கருங்க கொஞ்சம்

கொஞ்சமா பிராஞ்ச் ஆபீஸ்களை குளோஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. இப்ப கொத்து கொத்தாக மூட ஆரம்பிச்சுட்டாங்க.

வியாபாரத்துல லாப நஷ்டம் வரும். கம்பெனிங்க புதுசா வரும் போகும். இதுல என்ன ஏகாம்பரம் உனக்கு அங்கலாய்ப்பு அப்படிம்பீங்க. அங்கதாங்க விஷயமே இருக்கு. புரோக்கர் ஆபீஸ்கள் இப்படி குறைஞ்சுகிட்டே போறது நல்லதுக்கு இல்லீங்க. இதனால மீண்டும் ஏகபோகம் மாதிரி சிலபேரு மட்டுமே இருப்பாங்க. புது முதலீட்டாளருங்க பலரும் சந்தைக்குள்ள வரணுமுன்னா நாட்டோட இண்டுஇடுக்குல எல்லாம் சந்தையப் பத்திச் சொல்ல ஆள் இருக்கணும். அதைவிட்டு முன்னாடி மாதிரி பெரிய ஊரில மட்டும்தான் புரோக்கர் ஆபீஸ் இருக்குமுன்னு நிலை வந்தா, நாட்டுல பங்குச் சந்தையில மக்களின் பங்களிப்பு குறைஞ்சுடும்.  

ஏகாம்பரம், சும்மா குறை மட்டுமே சொல்லாதே! வழியைச் சொல்லுங்கிறீங்களா? எந்தத் தொழிலும் நசியறப்ப ரெகுலேட்டரும் அரசாங்கமும் கொஞ்சம் முழிச்சுக்கணும். போட்ட சட்டங்களை மறுஆய்வு செஞ்சு, தேவைக்கு அதிகமான போட்டிகளைக் குறைக்க ஏற்பாடு பண்ணனும்.

1995-ல ஆரம்பிச்ச எலெக்ட்ரானிக் டிரேடிங்குல பல மாறுதல்கள் நாளடைவுல வந்துடுச்சு. டி+2 சிஸ்டம் வந்து பல ஆண்டுகள் ஆயிடுச்சு. இதையெல்லாம் மீண்டும் பரிசீலிச்சு, தேவையான மாற்றங்களைக் கொண்டு வரணும். விதிமுறைகளை மாத்தாம, முதலீட்டாளரையும் புரோக்கரையும் கஷ்டப்படுத்தக்கூடாது. கொத்துக்கொத்தா ஒரு பிசினஸ் ஆல் இந்தியா லெவல்ல குளோஸ் ஆகுதுன்னா அது நல்லதுக்கில்லைன்னு புரிஞ்சுக்கணும்.

நம் நாட்டுல பல்வேறு தடைகளை எல்லாம் தாண்டித்தாங்க முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைக்கு வர்றாங்க. அப்படி வர்றவங்களை அடிச்சு விரட்டக்கூடாதுங்கய்யா. ரெகுலேட்டர்கள் இதைக் கண்டுக்காம விட்டா நாளடைவுல நாட்டுல முதலீடு செய்ய நினைக்கிற எல்லோருக்கும்தாங்கய்யா பிரச்னை. பங்குச் சந்தையை வாழ வையுங்கய்யா.

நான் சொல்றது சரியா, இல்லையா, நீங்களே சொல்லுங்கய்யா!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism