Published:Updated:

ஷேர்லக் - சந்தை: தீபாவளிக்குப் பிறகு..?

ஷேர்லக் - சந்தை: தீபாவளிக்குப் பிறகு..?

##~##

''இந்த தீபாவளி டெல்லியில் உள்ள என் மகளின் வீட்டில் மாப்பிள்ளை மற்றும் பேரக் குழந்தைகளுடன் கொண்டாடப் போகிறேன். வியாழன் இரவே விமானப் பயணம் என்பதால், மாலையில் உம்மை சந்திக்கிறேன்'' என ஷேர்லக் நமக்கு ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்ததால், அவருக்காக காத்திருந்தோம். சரியாக ஆறு மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்தார் அவர்.

'சென்செக்ஸ் 21 ஆயிரத்துக்கும் மேலே சென்று புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டதே! இது தீபாவளி போனஸ்தானே?'' என்று அவர் வந்து உட்கார்ந்தவுடன் கேட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சந்தை மீண்டும் இறங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கடந்த வாரத்தில் நான் தொடர்ந்து எச்சரித்தபோதிலும் சந்தை ஏற்றத்திலேயே இருப்பது மகிழ்ச்சிதான். இந்த ஏற்றம் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரவும் செய்யலாம் என்கிறார்கள்.

இன்றைய தினம் நிஃப்டி 6220 புள்ளிகளுக்கு மேல் குளோஸ் ஆகியிருப்பதால், அடுத்து 6320, 6375 புள்ளிகளுக்கு தாண்டிச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சிலர். 2010-2013க்கு இடைப்பட்ட காலத்தில் 'கப் அண்டு ஹேண்டில்’ பேட்டர்ன் உருவாகி இருப்பதாகவும், நிஃப்டியானது 6338 என்கிற நிலையைத் தாண்டி செல்லும்பட்சத்தில் சந்தை அடுத்த 18 மாதங்களில் புதிய உச்சமான 8145 என்கிற அளவைத் தொட வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஒருவேளை சறுக்கினாலும் 6220, 6168 என்கிற அளவுகளில் நல்ல சப்போர்ட் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஷேர்லக் -  சந்தை: தீபாவளிக்குப் பிறகு..?

ஆனால், இதை எல்லாம் முடிவாக எடுத்துக்கொண்டு யாரும் களத்தில் குதிக்கத் தேவையில்லை. காரணம், இப்போது வந்திருக்கும் ஏற்றம் மிகக் குறுகிய காலத்தில், மிகக் குறுகிய வால்யூமுடன் ஈடேறியிருக்கிறது. இந்த ஏற்றத்துக்கு முழுக்க முழுக்க காரணம், டிரேடர்கள்தான். சிறு முதலீட்டாளர்கள் சந்தை பக்கம் வருகிற நிலைமையில் இல்லை. அவர்களுக்கு வெங்காயமும் தக்காளியும் குறைந்த விலையில் எங்கே கிடைக்கும் என்பதைத் தேடுவதிலேயே பொழுது போய்விடுகிறது.

தவிர, சந்தை 2008-ல் தொட்ட உச்சத்தை இப்போது மீண்டும் தொட்டிருக்கிறது. ஆனால், பணவீக்கமோ இந்த 5 வருடத்தில் கிட்டத்தட்ட 70% வரை உயர்ந்திருக்கிறது. இந்தப் பணவீக்கத்தைக் கழித்து பார்த்தால், இன்றைய நிலைமையிலும் சந்தை 13,000 என்கிற புள்ளிகள் அளவிலேயே இருப்பதையும் சிலர் சுட்டிக் காட்டவே செய்கிறார்கள்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் சந்தை ஏறியிறங்கி இருந்தாலும், மெட்டல் பங்குகளின் விலை தரைதட்டி நிற்கின்றன. ஐ.டி., எஃப்.எம்.சி.ஜி., பார்மா என ஒரு சில துறை பங்குகள் மட்டுமே பெரிய அளவில் குறையாமல் இருப்பதோடு, டீஸன்டான லாபத்தையும் தந்திருக்கின்றன. எனவே, பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு எழுந்துவரும்போது மெட்டல் பங்குகள் நல்ல லாபம் தர வாய்ப்பிருக்கிறது'' என நீண்ட நேரம் பேசியவருக்கு தீபாவளி ஸ்வீட் டப்பா தந்தோம்.

''அய்யோ இவ்வளவு வேண்டாமே!'' என்றவர் மைசூர்பாகில் ஒரு விள்ளலை மட்டும் சாப்பிட்டார். ''எம்.சி.எக்ஸ். போர்டிலிருந்து ஜிக்னேஷ் விலகிவிட்டாரே?'' என்றோம்.  

ஷேர்லக் -  சந்தை: தீபாவளிக்குப் பிறகு..?

''ஜிக்னேஷ் ஷாவை மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கடுமையாக விசாரித்த பிறகு அவருடைய வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளனர். மேலும், அவருடைய சொத்துக்களின் ஆவணங்களையும் கேட்டதாகத் தெரிகிறது. அவர் மட்டுமல்ல, எம்.சி.எக்ஸ்.-ல் இன்னொரு முக்கியமானவரான ஜோசப் மஸ்ஸேயின் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது போலீஸ்.  இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தே ஜிக்னேஷ் ஷா ராஜினாமா செய்துள்ளாராம்.

என்.எஸ்.இ.எல்-க்கு மோஹன் இந்தியா நிறுவனம் தான் தரவேண்டிய தொகையில் 771 கோடி ரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 11 கோடியை மட்டுமே இப்போது தரமுடியும்; மீதியை ஓராண்டுக்குள்தான் தரமுடியும் என்று சொல்லி உள்ளது. இதற்கு ஜாமீனாக அந்நிறுவனம், மும்பை பொருளாதார குற்றப்பிரிவில் அதன் புதுடெல்லி பங்களா, பிகானீயரில் 500 ஏக்கர் நிலம் ஆகியவற்றை கொடுத்துள்ளது. அந்தவகையில், கடனை சரியான நேரத்தில் தரவில்லை என்றால் இந்தச் சொத்துகள் பறிமுதல் செய்யப்படலாம் என்கிறார்கள்

ஷேர்லக் -  சந்தை: தீபாவளிக்குப் பிறகு..?

விவரமறிந்தவர்கள்'' என்றார்.

''பங்கு வெளியீட்டின்போதே  சில காலத்துக்குப் பிறகு பங்குகளாக மாறக்கூடிய கடன் பத்திரங்களையும் வெளியிடலாம் என யூ.கே.சின்ஹா சொல்லி இருக்கிறாரே?'' என்றோம்.

''பொருளாதார மந்தநிலை மற்றும் பங்குச் சந்தை மூலமான வருமானம் நிலையானதாக இல்லை என்பதால் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய பெரும்பாலான முதலீட்டாளர்கள் தயங்குகிறார்கள். அந்த வகையில் பல ஐ.பி.ஓ.கள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. மேலும், பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ. வர தயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில், ஐ.பி.ஓ-ன்போது பங்குகளாக மாறக்கூடிய கடன் பத்திரங்களையும் வெளியிட்டு நிதி திரட்ட அனுமதி அளிக்கலாமா என்று செபி ஆலோசித்து வருகிறது. சந்தை ஏற்ற, இறக்கம் மிகுந்திருக்கும் இந்நிலையில் முதலீட்டாளர்கள் சில ஆண்டுகளுக்காவது தைரியமாக முதலீடு செய்ய இது உதவும் என்கிறார்கள் அனலிஸ்ட்கள்''என்று புறப்படத் தயாரானவரிடம், ''தீபாவளி டிப்ஸ் ஏதும் இல்லையா?'' என்று கேட்டோம்.

''முகூர்த் டிரேடிங்குக்கான டிப்ஸைதான் நீரே தந்துவிட்டீரே! பிறகு நான் வேறு தரவேண்டுமா?'' என்று செல்லமாக கோபித்துக்கொண்டவர், வாசகர்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு, ஒரு துண்டுச் சீட்டையும் தந்துவிட்டுக் கிளம்பினார். அதில் இருந்த ஷேர் டிப்ஸ்கள் இதோ:

ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், கொரமண்டல் இன்டர் நேஷனல், கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் (இந்தப் பங்குகள் நீண்ட கால முதலீட்டுக்கானவை!)