Published:Updated:

முதலீட்டில் தெளிவு... முன்னேற்றமே முடிவு!

சறுக்கலை சரிசெய்த சவாலான நிதித் திட்டமிடல்

##~##

''என்னிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தபோது பாக்கியராஜுக்கு 50 வயது. அரசுத் துறை சார்ந்த வங்கியில் பணியாற்றி வந்தார். மாதச் சம்பளம் 50,000 ரூபாய். அவரது மனைவி திலகத்துக்கு 45 வயது. இல்லத்தரசியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள், சந்தியாவுக்கு வயது 22. கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவரது மாதச் சம்பளம் 20,000 ரூபாய். சந்தியாவுக்கு அடுத்து பிறந்தது இரட்டை குழந்தைகள். அதில் மூத்தவள், சாலினி; இளையவள், மாலினி. இவர்கள் இருவருக்கும் வயது 17. ப்ளஸ்டூ படிக்கிறார்கள்.  

கடன் மற்றும் சேமிப்பு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாக்கியராஜ் என்னிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தபோது முதல் மகளின் படிப்புக்காக அவருடைய பி.எஃப்.-லிருந்து பணத்தைத் திரும்பப் பெற்று பயன்படுத்தி இருந்தார். அவர் வேலை செய்யும் வங்கியிலேயே குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வாங்கி சென்னை சைதாப்பேட்டையில் வீடு ஒன்றை வாங்கி அதில் வசித்து வந்தார். இதுதவிர, திருமுல்லைவாயிலில் வீட்டுமனை ஒன்றும் அவருக்கு இருந்தது.

அவருக்கு சேமிப்பு என்று பார்த்தால் அவர் வேலை செய்யும் வங்கிலேயே ஆர்.டி. ஒன்றை ஆரம்பித்து, அதில் முதலீடு செய்து வந்தார். அதுதவிர, அந்த வங்கியில் மியூச்சுவல் ஃபண்டுகள் சிலவற்றில் முதலீடு செய்து, பின்னர் அந்த ஃபண்டுகள் சரியான வருமானம் தராததால் அவற்றை விற்றுவிட்டு, ஏற்கெனவே செய்துவந்த ஆர்.டி.-ல் பணத்தைச் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்.  

சென்ற தலைமுறை மனிதர் என்பதால், இவருக்கு கடன் என்றாலே அலர்ஜி! எனவே, தனக்கிருந்த ஒரே கடனை போனஸ், ஊக்கத் தொகை என மொத்தமாக பணம் கைக்கு கிடைக்கும் போதெல்லாம் அதில் ஒரு பகுதியை எடுத்து கடனை அடைத்ததால், இன்னும் குறைந்த அளவிலான கடனே பாக்கி இருக்கிறது.

முதலீட்டில் தெளிவு... முன்னேற்றமே முடிவு!

நான்கு தேவைகள்!

அவரிடம் பல மணி நேரம் பேசியதில், முதல் தேவையாக அவர் சொன்னது, மீதமிருக்கும் வீட்டுக் கடனை எப்படியாவது அடைத்துவிட வேண்டும் என்பதுதான். இரண்டாவது, கல்லூரிக்கு செல்ல ஆயத்தமாக இருக்கும் மகள்களின் கல்லூரிச் செலவுகளை எப்படி சமாளிப்பது.  மூன்றாவது, அவர்கள் மூவருக்கும் திருமணம் செய்ய பணத்தைச் சேமிப்பது. நான்காவது, அவரது ஓய்வுக்காலத்துக்காக பணத்தை முதலீடு செய்வது. இந்தத் தேவைகளுக்காகவே என்னிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார் என்பதைத் தெரிந்துகொண்ட பின் அவருக்கான நிதி ஆலோசனையை வழங்க ஆரம்பித்தேன்.

முதலில் இன்ஷூரன்ஸ்!

அவருக்கு இன்ஷூரன்ஸ் கவர் என்பது இதுவரை இல்லை. இனியும் இல்லை என்றால் சிக்கலாகிவிடும் என்பதால், அதிக பிரீமியம்தான் என்றாலும்கூட போதுமான அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னேன். அதேபோல், அவரது முதல் மகளும் வருமானம் ஈட்டி வருவதால் அவருக்கும் தனியாக போதுமான அளவுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளச் சொன்னேன். பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசிகளை எடுக்கச் சொன்னேன்.

கல்விக் கடன் வாங்கலாமே!

இந்த வயதான காலத்திலும் தன்னால் முடிந்தவரை சம்பாதித்து செலவு செய்ய வேண்டும். கடன் மட்டும் வாங்கவே கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் பாக்கியராஜ். பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால், அனைத்துப் பொருளாதார விஷயங்களுக்கும் பணம் என்கிற ஒன்று இருந்துவிட்டால் யாரும் கடன் வாங்கவேண்டிய தேவையே இருக்காது.  தவிர, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருக்கிறவர்கள்தான் கடனையும் பெற்று பயன்படுத்த வேண்டுமே ஒழிய,  கிடைக்கிறது என்பதற்காக எல்லாம் வாங்கக் கூடாது!

முதலீட்டில் தெளிவு... முன்னேற்றமே முடிவு!

ஏற்கெனவே வரும் வருமானம், வீட்டுக் கடனை கட்டவே சரியாக இருக்கும். அதனால் மகள்களின் கல்விக்காக கடன் வாங்கி அதைக் கட்டுவது எளிதான காரியமில்லை. எனவேதான், மகள்களின் படிப்புச் செலவுக்காக வங்கியில் கல்விக் கடன் பெற்று அவர்களைப் படிக்க வைக்க திட்டமிட்டுத் தந்தேன்.  படித்து முடித்தபின் அவர்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்களே கல்விக் கடனை அடைத்துக்கொள்வார்கள் என்பதையும் சொல்லி புரியவைத்தேன்.

மியூச்சுவல் ஃபண்டு முதலீடு!

ஏன் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை நிறுத்தினீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், 'நான் முதலீடு செய்த எங்களது வங்கியின் மியூச்சுவல் ஃபண்டானது சரியான வருமானத்தைத் தரவில்லை’ என்றார். இன்றைய நிலையில், பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் சார்ந்த முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்வதுதான். அந்த ஃபண்டுகள் நல்ல லாபத்தைத் தரவில்லை என்றால் மற்ற ஃபண்டு களும் குறைந்த வருமானத்தைத் தருவதாகவே நினைக்கிறார்கள். அதைவிட அதிக வருமானம் தரும் ஃபண்டுகள் நிறைய இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, பாக்கியராஜுக்கு தன் வயதுக்கு ஏற்றபடியாக மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டு வகைகளைத் தேர்ந்தெடுத்து தந்து முதலீடு செய்யச் சொன்னேன். இந்த முதலீடு ஓய்வுக் காலத்துக்காக இருக்கட்டும் என்பதையும் சொன்னேன்.  

மூத்த மகளின் திருமணம்!

முதலீட்டில் தெளிவு... முன்னேற்றமே முடிவு!

முதல் மகள் சந்தியாவுக்கு இன்னும் இரண்டு வருடத்தில் திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்றார். சந்தியாவின் திருமணத்துக்கு தங்க நகைச் சீட்டில் சிறுக சிறுக சேமித்து தேவையான அளவுக்கு தங்க நகைகளை வாங்கி வைத்திருப்பதாகவும், திருமணச் செலவுக்கு மட்டும் தொகை தேவை என்றார். அதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால் மகள் சம்பாதிக்கும் தொகை 20,000 ரூபாயை இரண்டு வருடங்கள் தொடர்ந்து கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். இதற்கு 10% வருமானம் கிடைத்தாலும் கல்யாணத்துக்கு தேவையான தொகை கிடைத்துவிடும். மீதிப் பணம் தேவைப்பட்டால் ஆர்.டி. முதலீட்டில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பி.எஃப்-லிருந்து மட்டும் தயவு செய்து பணத்தை எடுக்காதீர்கள் என்றதோடு, பி.எஃப். சேமிப்பின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துச் சொன்னேன்.

சந்தியாவுக்கு செய்வதுபோல 25 வயதில் அடுத்த இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்யவேண்டும் என்பதால் இன்னும் ஏழு வருடங்கள் கழித்து அதற்கான தொகையும் தேவைப்படும் என்றார். அதற்காக இன்றிலிருந்து 6,000 ரூபாயை கோல்டு இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யச் சொன்னேன். அதைத் தற்போது செய்து வருகிறார். இது தவிர, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் கல்விக் கடனுக்காக கட்டும் இ.எம்.ஐ. போக மீதி பணத்தை முதலீடு செய்து வந்தால் போதுமான தொகையைச் சேமித்து விடலாம் என்பதையும் எடுத்துச் சொன்னேன். இன்னும் அதிகமான தொகை தேவைப்பட்டால் திருமுல்லைவாயிலில் உள்ள வீட்டு மனையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் நினைவுபடுத்தினேன்.

வீட்டுக் கடனை முடிக்க!

பாக்கியராஜ் தான் வேலை செய்யும் வங்கியிலேயே வீட்டுக் கடனை வாங்கி இருக்கிறார். அதனால் அவருக்கு வழக்கமான வீட்டுக் கடன் வட்டியைவிட குறைவான வட்டியே வசூலிக்கப்படுகிறது. தவிர, அவருடைய ஓய்வுக்காலத்துக்கு பிறகும் பத்து ஆண்டுகள் கழித்து வீட்டுக் கடனை அடைத்துக் கொள்ள அவகாசம் தரப்பட்டிருக்கிறது. இந்தச் சலுகைகளை மனதில்கொண்டு இன்னும் 20 ஆண்டுகளுக்கு இ.எம்.ஐ. மட்டும் செலுத்துங்கள் எனவும், அவ்வப்போது கைக்குக் கிடைக்கும் பணத்தை முதலீடு செய்தால் பிற தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையும் எடுத்துச் சொன்னேன்.

ஓய்வுக்காலத்துக்கு!

இன்றைய நிலையில் அவருடைய மாதச் செலவு 25,000 ரூபாய். இதுவே ஓய்வுக்காலத்தில் மாதச் செலவு மற்றும் வீட்டுக் கடன் இ.எம்.ஐ. என 50,000 ரூபாய் தேவைப்படும் என்பதையும், அந்த வருமானத்தைப் பெற அவரது வங்கி சேமிப்புக் கணக்கில் 50 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டேன். கொஞ்ச நேரம் அவர் மலைத்துதான் போனார். பின்னர், அவர் அதற்கான வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்த பின்னரே அப்பாடா என்று பெருமூச்சுவிட்டார்.

பாக்கியராஜ் ஓய்வு பெறும்போது பி.எஃப். மற்றும் ஓய்வுத் தொகை என எல்லாம் சேர்த்து 30 லட்சம் ரூபாய் கிடைக்கும். பென்ஷனாக மாதாமாதம் 25,000 ரூபாய் கிடைக்கும். அதனால் இன்றைய நிலையில் எல்லாத் தேவைகளும் போக மீதமிருக்கும் தொகையையும் அப்படியே ஓய்வுக்காலத்துக்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யச் சொன்னேன்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு..!

பாக்கியராஜ் என்னிடம் நிதி ஆலோசனை பெறத் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இன்றும் ஆண்டுக்கு ஒருமுறை அவருடைய போர்ட்ஃபோலியோவை ரிவியூ செய்ய அவர் என்னைத் தேடி வருவார். சந்தியாவுக்கு திருமணமாகி விட்டது. சாலினி, மாலினி இருவரும் கலை அறிவியல் கல்லூரியில் மேலாண்மைப் பிரிவில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்கள். ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்து வருவதால் பெண் குழந்தைகளைத் தொந்தரவு செய்யாமல் கடைசி காலத்தைக் கடத்திவிடலாம் என்கிற நம்பிக்கை அவர் மனதில் துளிர்விட ஆரம்பித்திருக்கிறது. அந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!''

- செ.கார்த்திகேயன்.
குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப
நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.