Published:Updated:

சுத்தம் லாபம் தரும்!

குப்பைகளை காசாக்கும் பிசினஸ் மந்திரம்...

##~##

திண்டுக்கல்லில் பெண்களால் நடத்தப்படும் மகளிர் குழு ஒன்று, இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை ஒரு லாபகரமான தொழிலாகவும் செய்து வருகிறது.

பொதுவாக மகளிர் குழு என்றாலே மானிய விலையில் கடன் கிடைக்கும் என்றும், அதில் சேர்வதால் அரசு உதவிகள் பெற முடியும் என்று மட்டுமே பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும், இதில் சேர்ந்து தொழில் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களும் சிறுதொழில் செய்தால் போதும் என்ற எண்ணத்திலேயே இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சிந்தனை எல்லாம் தவிடுபொடி ஆக்குகிற மாதிரி, திண்டுக்கல் மாவட்டத்தில் தாழம்பூ என்கிற பெயருடன் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினைச் சேர்ந்த பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து அதனை ஒரு லாபகரமான தொழிலாகவும் மாற்றியுள்ளனர்.

தாழம்பூ கூட்டமைப்பின் செயலாளராக இருக்கும் ஜெயந்தியிடம் இதுகுறித்து பேசினோம். ''ஒரே பகுதியைச் சேர்ந்த எங்களில் சிலர் கூட்டாகச் சேர்ந்து தாழம்பூ, மருதம், ஜானகி என்ற பெயர்களில் மகளிர் குழுக்களை ஆரம்பித்தோம். எங்களுக்கு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. நாங்கள் செய்கிற தொழில், நம் சமூகத்துக்கு  நன்மை செய்கிற மாதிரி இருக்க வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்குள் மேலோங்கியது.

சுத்தம் லாபம் தரும்!

எங்கள் கிராமமான  என்.பஞ்சம்பட்டி, கடந்த 2008 மற்றும் 2012-ம் ஆண்டுக்கான 'நிர்மல் புரஸ்கார்’ என்று சொல்லப்படும் தூய்மை கிராமம் விருதை பெற்றது. ஏற்கெனவே சுத்தகமாக இருக்கும் எங்கள் கிராமத்தை இன்னும் தூய்மைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தோம்.  

பிறகு, நம் ஊரில் அதிகமாகச் சேரும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கவேண்டும் என்று முடிவு செய்து, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் கவிதா இண்டஸ்ட்ரீஸ் ஸ்கூலில் இருந்து திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிப்பதாகக் கேள்விப்பட்டு எங்கள் குழுவில் இருந்த 36 பெண்களும் சென்று பயிற்சி பெற்றோம்.

அங்கு நாங்கள் மேற்கொண்ட இரண்டு நாட்கள் பயிற்சிக்குப் பிறகு, எங்களின் தொழில் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு எங்கள் கிராமத்துக்கே வந்து அவர்களே ஒரு மாதம் பயிற்சி அளித்தனர் அந்த ஸ்கூலைச் சேர்ந்த பயிற்சியாளர்கள். அந்த பயிற்சியில் பிளாஸ்டிக்குகளைத் தரம் பிரிப்பது, இயந்திரங்களைக் கையாள்வது, அவற்றை பராமரிப்பது என்பது குறித்து பயிற்சிகளை சொல்லித் தந்தார்கள்.

முழுமையான பயிற்சிக்குப் பிறகு வங்கியில் தொழில் குறித்த விவரத்தைச் சொல்லி 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று இயந்திரங்களை வாங்கினோம். எங்கள் குழுவில் இருந்த ஆறு பேர் இதில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தோம். தினமும் 9 - 5 மணி வரை வேலை பார்த்து,  வருமானத்தை அதிகப்படுத்தினோம்.

சுத்தம் லாபம் தரும்!

எங்கள் அயராத பணியினால் அதிக வருமானம் கிடைத்தது, அதனால் மூன்றே வருடங்களில் வங்கியில் வாங்கிய முழுக் கடனையும் அடைத்துவிட்டோம்.  பணியாளர்களின் சம்பளம், இயந்திர பராமரிப்பு போன்ற எல்லாச் செலவுகளும் போக, மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதை தனியாக எடுத்து வைத்து அவசரத் தேவை என்கிறபோது செலவு செய்கிறோம்.

நாங்கள் நன்றாகச் செயல்பட்டதற்காக எங்களுக்கு மணிமேகலை விருதினையும், அதேபோல 2012-ல் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கி, அதனை செயல்படுத்தியதற்காக மாநில அரசிடமிருந்து சுற்றுச்சூழல் விருதினையும் மற்றும் 5 லட்சம் ரொக்கப் பரிசினையும் பெற்றோம்'' என்று நெகிழ்ந்து பேசியவர் தொடர்ந்து உற்பத்தி குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''எங்களது தொழிலுக்கான மூலப்பொருட்கள் மக்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகிற பிளாஸ்டிக் கழிவுகள்தான். எங்கள் ஊரில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலிருந்தும் அந்தந்த பகுதியில் வசிப்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து எங்களிடம் வந்து தருவார்கள். மேலும், நாங்கள் சில கடைகளிலும் வாங்குவோம். முதலில் கிலோ ரூ.5-க்கு வாங்கினோம். இப்போது அதனை சற்று உயர்த்தி ரூ.8-க்கு வாங்குகிறோம்.

எங்களிடம் மூன்று இயந்திரங்கள் உள்ளது. முதலில் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரித்து, அரைத்து அந்த கலவையைதான் வெளியிடங்களுக்கு விற்கலாம் என்று நினைத்தபோது, அதனை

சுத்தம் லாபம் தரும்!

யாரிடம் விற்பது என்று தெரியாமல் தவித்தோம். அப்போதுதான் அரசுத் தரப்பில் இருந்து கான்ட்ராக்ட் முறையில் நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் கலவையைப் பெற்றுக்கொள்ள முன்வந்தார்கள். இதுவரை ஒரு கிலோ பிளாஸ்டிக் கலவையை ரூ.25-க்கு தந்து வந்தோம். கடந்த ஏப்ரல் மாதம் முதல் கிலோ ரூ.30-க்கு தந்து வருகிறோம். எங்களிடமிருந்து வாங்கும் இந்தப் பொருட்களை வைத்து சாலை போடவும், பைப் தயாரிக்கவும்  பயன்படுத்துகின்றனர்.

மக்களிடையே பிளாஸ்டிக் குறித்து விழிப்பு உணர்வினை ஏற்படுத்த வேண்டும். எங்கள் கிராமத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றுதான் இதனை ஆரம்பித்தோம். ஆனால், இது லாபம் தரக்கூடிய தொழில் என்று இதில் இறங்கிய பிறகுதான் தெரிந்தது. இப்போதைக்கு தார் ரோடு போடுவதற்கும், பைப் கம்பெனிகளுக்கும்தான் எங்கள் தயாரிப்பை தந்து வருகிறோம். நாங்களாகவே இதை வைத்து ஏதாவது தயாரித்து அதை விற்க முடியுமா என்றும் யோசித்து வருகிறோம். அதேசமயம், அதற்கான பயிற்சிகளையும் எடுத்து வருகிறோம். முதல்கட்டமாக பிளாஸ்டிக் கலவையிலிருந்து ஜங்ஷன் பாக்ஸ், நைலான் குடம், பைகளுக்கான கட்டைகளைத் தயாரிக்க உள்ளோம்.

இந்தத் தொழிலை இப்போதைக்கு எங்கள் பகுதியில் மட்டுமே செயல்படுத்துகிறோம். இன்னும் பல ஊர்களில் செயல்படுத்த வேண்டும். அது மட்டுமின்றி, மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களும் இதனை செய்ய முன் வரவேண்டும். போயும் போயும் குப்பையைப் போய் நாம் தொடுவதா என்று சிலர் தயக்கம் காட்டுகின்றனர். அனைத்து வேலைகளும் செய்ய இயந்திரங்கள் இருந்தும் மக்கள் இதில் வர விருப்பமில்லாமலே இருக்கின்றனர். இதனை மாற்றி, பிளாஸ்டிக்குகளால் பூமி பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதிதாக இதில் களமிறங்குபவர்களுக்கு நாங்கள் வழிகாட்டவும் தயார்'' என உற்சாகத்துடன் முடித்தார் ஜெயந்தி.

குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக்குகளை  சுத்தம் செய்வதால், நல்ல வருமானமும் பார்க்கலாமே!

  - ந.ஆஷிகா, படங்கள்: வீ.சிவக்குமார்.

 வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது!

கவிதா, குழு உறுப்பினர்

சுத்தம் லாபம் தரும்!

''இந்தத் தொழிலை ஏழு ஆண்டுகளாகச் செய்து வருகிறோம். ஆரம்பத்தில் நாங்களும் அரசுத் தரப்பிலிருந்து கிடைக்கும் கடனை வாங்குவது, அதை அடைப்பது என்றுதான் இருந்தோம். பின்னர் எங்களுக்குள் உதித்த வித்தியாசமான தொழில் எண்ணம்தான் எங்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. ஆரம்பத்தில் மக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை எங்களிடம் கொண்டுவந்து தருவார்கள். அதற்குத்தக்க பணத்தைத் தருவோம். நாளடைவில் நாங்களே மக்களைத் தேடிச் சென்று வாங்க ஆரம்பித்தோம். இதனால் அவர்களுக்கும் ஆர்வம் மேலோங்க தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை தூக்கி எறியாமல் வீட்டிலேயே சேகரித்து வைத்தார்கள். எல்லோருடைய ஆதரவாலும் தான் இதனை வெற்றிகரமாகச் செய்ய முடிகிறது. இதனால் எங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதோடு, சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்து வருமானத்தைப் பார்க்க முடிவதால் மகிழ்ச்சியாக இருக்கிறது!''