
உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!
##~## |
பணம் சம்பாதிப்பது என்பது எல்லோராலும் முடியுமா? என்ற கேள்வி மீண்டும் மீண்டும் அனைவரின் மனதிலும் வந்துகொண்டேயிருக்கும். ஆவரேஜ் வாழ்க்கை வாழ்பவருக்கு பற்றாக்குறை வரும்போது வரும் இந்தக் கேள்வி, ஆவரேஜுக்கு கீழே வாழ்பவருக்கு அன்றாடம் மனதில் வரும் விஷயமாக இருக்கும்.
அதெல்லாம் சாதாரண விஷயமில்லை. பணம் சம்பாதிப்பது ஒரு பிறவிக்குணம். எல்லாம் பிறந்த நேரத்தில் இருக்கிறது; எந்த வீட்டில் பிறக்கிறோம் என்பதில் இருக்கிறது. இதையும் தாண்டி எந்தப் பள்ளியில்/கல்லூரியில் படிக்கிறோம் என்பதில் இருக்கிறது. எப்படிப்பட்ட நண்பர்களையும், உறவினர்களையும் கொண்டிருக்கிறோம் என்பதிலிருக்கிறது என அடுக்கடுக்கான காரண காரியங்களை நாம் அனைவருமே ஒவ்வொரு காலகட்டத்திலும் சொல்லி வாழ்கிறோம்.
நம்மில் பலரும் சூழ்நிலைகளாலும், வேறு ஏதாவது காரணங்களாலும் பணம் குறித்து பெரிய எதிர்பார்ப்புகளோ/திட்டமிடலோ இல்லாமல் ஆவரேஜ் வாழ்க்கையை வாழும் கட்டாயத்துக்கு வந்து வாழ்ந்தும்விடுகிறோம்.
இப்படி ஆவரேஜ் பாதையில் பயணம் செய்த நமக்கு வேறு மாற்றுவழியே இல்லையா? ஆவரேஜ் வழி என்பது திரும்பி வரமுடியாத ஒருவழிப் பாதையா? என்ற கேள்வி இந்நேரம் பலரின் மனதில் வந்திருக்கக்கூடும்.
ஆவரேஜ் பாதை அப்படி ஒன்றும் மாற்ற முடியாத ஒருவழிப் பாதை அல்ல. இன்றைக்கு நீங்கள் பார்க்கும் ஹைவேஸ் ரோடுகள் பணம் சம்பாதிப்பவர்களின் பாதை என்று வைத்துக் கொண்டால், ஆவரேஜ்கள் பயணிப்பது அந்த ஹைவேஸுக்கு பக்கத்தில் செல்லும் சர்வீஸ் ரோட்டைப் போன்றது.

ஹைவேஸில் வேகம் பிடித்துப் பறந்து சென்று நாம் போகவேண்டிய இடத்தை வெகுசீக்கிரமாகச் சென்றடையலாம். சர்வீஸ் ரோட்டில் போனால் குறுக்கும் மறுக்குமாக நீங்கள் பயணிக்கும் பாதையைச் சந்திக்கும் நிறைய இணைச் சாலைகள், எதிரே வரும் வாகனங்கள், பாதசாரிகள், குண்டுகுழி என பல இடைஞ்சல்களைச் சந்திப்பதால் அதிகக் குறைவான தூரத்தையே கடக்க முடியும்.
நினைவிருக்கட்டும், எல்லா சர்வீஸ் ரோடுகளும் ஹைவேயில் ஏதாவது ஓர் இடத்தில் சேர வழியிருக்கும். நீங்கள் சர்வீஸ் ரோட்டிலேயே மெதுவாக பயணம் போகப் போகிறீர்களா? அல்லது அதிவேக ஹைவேஸில் வேகமாகச் செல்லப் போகிறீர்களா? என்ற முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது.
நம்முடைய சாலைகளைப்போல் இல்லாமல் பணம் சம்பாதிக்கும் ஹைவேஸில் ஒரே ஒரு கூடுதல் நிபந்தனை இருக்கிறது. ஹைவேஸில் இறங்கிவிட்டால் நீங்கள் குறைந்தபட்சம் இந்த வேகத்தில்தான் போகவேண்டும் (குறைந்தபட்ச செயல்பாடுகள், நிலைப்பாடுகள் மற்றும் மனோதிடம்) என்ற கட்டாயம் இருக்கிறது. இல்லாவிட்டால் விபத்துகள் நடந்து இழப்புகள் வந்துவிடக்கூடும்.

சம்பாதித்தே ஆகவேண்டும் சார், என்னவானாலும் சரி என்ற எண்ணமும் செயலும் கொண்டவர்களுக்கு இந்த ஹைவேஸில் வந்து சேர்வது எப்படி என்பதை யாரும் சொல்லித் தரவேண்டியது இல்லை. அவர்கள் எந்த வயதினரானாலும் சரி! சம்பாதிப்பதன் அவசியத்தைப் பூரணமாக உணர்ந்தவர்கள் அவர்களாகவே சர்வீஸ் ரோட்டிலிருந்து ஹைவேஸுக்கு மாறிவிடுவார்கள்.
அப்ப யாருக்கு சார், இந்த பணவளக் கலை என்கிறீர்களா? திறமையை உள்ளடக்கி அதேசமயம், சம்பாதிக்கும் ஆசையை மட்டுமே மனதில்கொண்டு என்னென்ன புரிதல்கள் வேண்டும் என்று குழம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு! தன்னைவிடக் குறைவான தகுதிகளைக்கொண்டிருந்தும் அதிகமாகச் சம்பாதித்தவர்களைப் பார்த்து ஆச்சர்யப்படுபவர்களுக்கு. சம்பாதிக்கும் ஆசையைவிட பயத்தை மனதில் அதிகமாகக் கொண்டிருப்பவர்களுக்கு!
உலகத்தில் எல்லோரும் இதுபோன்ற நபர்கள்தானே இருப்பார்கள் என்கிறீர்களா? அதுதான் இல்லை! கொஞ்சம் சுற்றும் முற்றும் பாருங்கள். பணம்தான் எல்லாப் பிரச்னைக்கும் காரணம். பணம் சம்பாதிக்கிற எண்ணம்தான் எல்லா திருட்டுத்தனத்துக்கும் வழிவகுக்கிறது. ஒருவன் ஒரே நேரத்துல பணக்காரனாகவும் நல்லவனாகவும் இருக்கவே முடியாது. பணம் ஒரு சைத்தான். நம்ம ஒரிஜினாலிட்டியைக் கெடுத்துடும்! பணம் சேர்க்கணுமின்னு அலைஞ்சா நாயாபேயா கஷ்டப்பட வேண்டியிருக்கும். நிறையப் பணம் சேர்க்கச் சேர்க்க ஆசை தீரவே தீராது தெரியுமா? நல்லா யோசிச்சுப் பார்த்தா, வசதியில்லாம இருக்கறதுதான் பெட்டர் தெரியுமா! நானெல்லாம் பணக்காரனாக முடியாதுப்பா? அப்படி ஆகணுமுன்னு இருந்தா இந்நேரமே ஆயிருக்கணும்!
இதுபோன்ற காரண காரியங்களையும் நம்பிக்கைகளையும் கொண்டவர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஏன் நமக்கே இதுபோன்ற சில எண்ணங்கள் அடிமனதில் இருக்கவே செய்யும். இந்த அடிப்படையில் தவறான எண்ணங்களை மனதில் கொண்டிருப்பதாலேயேதான் நிறைய இடங்களில் சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் அமைதியாக இருந்துவிடுகிறோம்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல. பணத்தாசை என்பது சரியான ஒரு விஷயமே. நியாயமான முறையில் வியாபார ரீதியாக அன்றாட வாழ்வில் செயல்படுவதில் தவறேதும் இல்லை என்பது போன்ற கருத்துக்களை நம் மனதில் சரியான முறையில் நியாயப்படுத்திக்கொண்ட பிறகே நம்மால் சம்பாதிப்பதற்கான முதல்படியை எடுத்துவைக்க முடியும். ஏனென்றால், இதுபோன்ற தவறான விஷயங்கள் நம் மனதில் குடிகொண்டிருந்தால் பணத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கவே முடியாது. இந்த எண்ணங்கள் அடிமனதில் ஊறிப்போனால் ஒரு விஷயத்தில் லாபம் வைத்து செயல்படுகிறோம் என்பதே நமக்கு தவறாகப்படும்!
ஊரில் இருந்து ஒரு மூட்டை தேங்காய் வாங்கி வந்து அக்கம்பக்கம் இருப்பவர்களுக்கு விற்கும்போதுகூட (கடை விலையைவிட மிகக் குறைவான விலையான போதும்கூட) தயங்கித் தயங்கி லாபத்தைச் சேர்த்து விலை சொல்லும் நபரைப் பார்த்திருக்கிறேன். தீபாவளி வரும் முன்னர் இருக்கும் ஊரிலேயே கடைவீதிக்குச் சென்று ஹோல்சேல் கடையில் துணியை வாங்கி வந்து, நம்ம ஆபீஸ் நண்பர் வடநாட்டுக்குப் போய் பர்ச்சேஸ் பண்ணிட்டு வந்திருக்காரு. சீப்பா இருக்குது. நான் வாங்கலாமுன்னு இருக்கேன். உங்களுக்குப் பிடிக்குமேன்னு எடுத்துட்டு வந்தேன் என்று சாதுர்யமாக தன் வியாபாரத்தையே உங்கள் நன்மைக்காக என்று சொல்லும் பிறவி வியாபாரியையும் நான் பார்த்திருக்கிறேன்.
சம்பாதிப்பது தவறில்லை. சம்பாதிப்பதற்காக தொழில் செய்வதில் தவறில்லை. தொழிலில் லாபம் வைப்பதிலும் தவறில்லை என்ற அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொண்டாலே சம்பாத்தியம் என்பது சாத்தியம். இல்லையென்றால் வேலையும் சம்பளமும்தான்.
சரி, நாங்கள் பணம் பற்றிய சரியான புரிதல்களைக் கொண்டுள்ளோம். நீங்கள் சொல்லும் ஹைவேஸுக்கு நாங்கள் மாறவேண்டும் எனில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? முதலில், நீங்கள் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்று சொல்லுங்கள். அப்புறம் எந்த இடத்தில் சர்வீஸ் லேனில் இருந்து ஹைவேஸுக்கு மாறவேண்டும் என்று நான் சொல்கிறேன்.
புதுசா என்ன சொல்லப்போறோம்! நிறைய சம்பாதிக்கணும். அதுதான் நாங்கள் சென்று சேர வேண்டிய ஊரின் பெயர் என்கிறீர்களா? ஸாரி, அது சரியான ஊரின் பெயர் இல்லை!
(கற்றுத் தேர்வோம்)