Published:Updated:

என்.எஸ்.இ.: ஐ.பி.ஓ.வர வேண்டுமா ?

என்.எஸ்.இ.: ஐ.பி.ஓ.வர வேண்டுமா ?

##~##

தேசிய பங்குச் சந்தை (என்.எஸ்.இ.) தன் லேட்டஸ்ட் தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்தியாவின் முன்னணி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆக உள்ளது. கடந்த 18 ஆண்டு காலத்தில் இந்தியாவில் பங்குச் சந்தையில் சாதாரண மனிதர்களும் நுழைந்து, பங்குகளை வாங்கி, விற்க முடிகிறது எனில், அதற்கு முக்கிய காரணம் என்.எஸ்.இ. அறிமுகப்படுத்திய தொழில்நுட்பம்தான்.

என்.எஸ்.இ.-ன் இந்த வளர்ச்சியையும், இந்தியாவில் பங்குச் சந்தைக்கு இருக்கும் வளமான எதிர்காலத்தையும் பார்த்து உலகம் முழுக்க உள்ள பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் (பி.இ.)  என்.எஸ்.இ-ல் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 2006-07 நிதி ஆண்டில் ஜெனரல் அட்லாண்டிக் பார்ட்னர்ஸ் அண்டு எஸ்.ஏ.ஐ.எஃப், நோர்வெஸ்ட் வெஞ்சர் பார்ட்னர், என்.ஒய்.எஸ்.இ. குரூப், ஜெனரல் அட்லாண்டிக், கோல்டன் சாட்சே, டைகர் குளோபல், மார்கன் ஸ்டான்லி, சிட்டி குரூப், அடிக்ஸ் உள்ளிட்ட பி.இ. ஃபண்டுகள்  என்.எஸ்.இ-ன் 38% பங்குகளை வாங்கின. இவற்றின் முதலீட்டு மதிப்பு சுமார் 100 கோடி டாலராக (சுமார் ரூ.6,000 கோடி) உள்ளது.

இத்தனை கோடி முதலீடு செய்தபிறகும் இந்த நிறுவனங்களுக்கு பெரிய அளவில் டிவிடெண்ட் எதுவும் கிடைத்தபாடில்லை. ஒவ்வொரு ஆண்டும் நல்ல லாபத்தையும் என்.எஸ்.இ. சம்பாதித்து வருகிறது. (பார்க்க அட்டவணை)  தவிர, கடந்த 21 ஆண்டுகளாக இயங்கிவரும் என்.எஸ்.இ. தொடர்ந்து வருமான வரி கட்டி வருகிறது.  

சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் 94%, நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 67%, லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் 29% டிவிடெண்டையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், இந்தியாவின் என்.எஸ்.இ. வெறும் 15% மட்டுமே டிவிடெண்ட்-ஆக தந்துள்ளது.

என்.எஸ்.இ.: ஐ.பி.ஓ.வர வேண்டுமா ?

மேலும், பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதற்கான எந்த முயற்சியையும் என்.எஸ்.இ. தரப்பிலிருந்து எடுத்த மாதிரியும் தெரியவில்லை. இதனால் இந்த பி.இ. நிறுவனங்கள் ஏற்கெனவே போட்ட முதலீட்டை நல்ல லாபத்துக்கு விற்றுவிட்டு வெளி யேறவும் வாய்ப்பு இல்லாமல், முதலீட்டுக்கு ஏற்ப சரியான வருமானமும் கிடைக்காமல் இருக் கின்றன. இதனால் என்.எஸ்.இ.-ல்  முதலீடு செய்துள்ள பி.இ. நிறுவனங்கள் அதனை பங்குச் சந்தையில் கூடிய விரைவில் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.

இதுதவிர, என்.எஸ்.இ. உயர் அதிகாரிகளின் சம்பள விவகாரம் இந்த முதலீட்டாளர்களிடம்  பெரும் புகைச்சலைக் கிளப்பி இருக்கிறது. அதன் நிர்வாக இயக்குநராக இருந்த ரவி நாராயணின் சம்பளம் 2011-12-ம் ஆண்டில் ரூ.7.35 கோடியிலிருந்து ரூ.7.88 கோடியாக அதிகரித்துள்ளது.  அதிகாரிகளுக்கு அள்ளித் தரும் என்.எஸ்.இ. நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு மட்டும் அதிக டிவிடெண்ட் தராமல் இருப்பது ஏன் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.    

ஆர்.பி.ஐ. முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான கமிட்டி, ''பங்குச் சந்தைகள் என்பது பொது நிறுவனங்கள். அவற்றை லாபநோக்குடன் நடத்தக் கூடாது. அந்த வகையில் பங்குச் சந்தைகள் ஐ.பி.ஓ. வருவது நல்லதல்ல'' என்று கருத்து தெரிவித்தது.

என்.எஸ்.இ.: ஐ.பி.ஓ.வர வேண்டுமா ?

இதை பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும் வாரியமான செபி வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவும் இல்லை; எதிர்க்கவும் இல்லை. எக்ஸ்சேஞ்சுகள் பங்குச் சந்தையில் பட்டியலிட்டால், அவற்றின் லாபத்தில் 25 சத விகிதத்தை செட்டில்மென்ட் ஃபண்டுக்கு மாற்றவேண்டும் என்று மட்டும் சொல்லி இருக்கிறது.  

''நம் நாட்டில் பங்குச் சந்தைகள் என்பது பங்கு வர்த்தகத்தை நெறிப்படுத்தும்  அமைப்பாக இருக்கின்றன. அவற்றின்  பங்குகள் பட்டியலிடப்பட்டால், கட்டுப்பாட்டு அமைப்பாளரே தொழில் செய்பவராக மாறிவிடுவார். அப்போது பங்கு வர்த்தகம் நியாயமாக நடக்குமா என்பது கேள்விக்குறியே. அடுத்து, ஒரு பங்குச் சந்தையின் பங்குகள் அதே பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது நியாயமாக வர்த்தகம் ஆகுமா? என்பது அடுத்த கேள்வி!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனம், ஏதாவது ஒரு பங்குச் சந்தையுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். என்.எஸ்.இ. விஷயத்தில் அந்த நிறுவனம் அதே நிறுவனத்துடன் எப்படி ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும்? தவிர, இப்படி பட்டியலிடப்படும் இரு நிறுவனமும் ஒன்றாக இருக்கும்போது, எப்படி ஒப்பந்தம் ஏற்படுத்த முடியும்? மற்ற பங்குச் சந்தைகளில் இந்தப் பங்குகள் பட்டியலிடப்பட வாய்ப்பு இருக்கிறதா? உதாரணமாக, என்.எஸ்.இ. பங்குகளை பி.எஸ்.இ. அதன் சந்தையில் பட்டியலிட ஒப்புக்கொள்ளுமா என்பதும் கேள்விக்குறியே'' என்றார் மும்பையைச் சேர்ந்த முன்னணி பங்குச் சந்தை நிபுணர்.

இதர நாடுகளில் பங்குச் சந்தைகள் எப்படி பட்டியலிடப்படுகின்றன என்கிற கேள்வியை பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.

''சிங்கப்பூரின் எஸ்.ஜி.எக்ஸ். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டுள்ள அதன் பங்குகளை, பங்குச் சந்தைக்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒரு குழு அமைத்து கண்காணிக் கிறார்கள். ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலியன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (ஏ.எஸ்.எக்ஸ்), அந்த நாட்டின் பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஆஸ்திரேலியன் செக்யூரிட்டீஸ் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (நம்மூர் செபி போல்) கண்காணித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலை நம் ஊருக்கு சாத்தியமா? என்பதை அலசி ஆராய்ந்த பிறகே என்.எஸ்.இ. பங்குகளை பட்டியலிட நடவடிக்கை எடுப்பது நன்றாக இருக்கும்'' என்றார்.    

என்.எஸ்.இ., பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டுமா? என்பது குறித்து பகுப்பாய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.

என்.எஸ்.இ.: ஐ.பி.ஓ.வர வேண்டுமா ?

''பங்குச் சந்தைகள் என்பது முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சேவை செய்யவே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பங்குகளை லாப நோக்கத்துக்காக பட்டியலிடுவது தவறு. அந்தவகையில், என்.எஸ்.இ.யானது ஐ.பி.ஓ. வருவது தப்பு. அப்படியே ஐ.பி.ஓ. வந்தால், இயக்குநர் குழுவில் யார் இருப்பார்கள்? அவர்கள் நியாயமானவர்களாக இருப்பார்களா? லாபத்தை அதிகரிக்க தரகுக் கட்டணங்கள் போன்றவற்றை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அந்தவகையில் நிச்சயம் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால், அதிக லாபம் வேண்டும் என்பதற் காகவே பி.இ. முதலீட்டாளர்கள்  என்.எஸ்.இ.-ல் முதலீடு செய்துள்ளனர். அவர்கள்  லாபத்தில் 30-50% வரை டிவிடெண்டாக எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு நல்ல டிவிடெண்ட் தருவதே சரி'' என்று கூறினார்.  

இந்த விஷயத்தில் என்.எஸ்.இ. என்னதான் செய்யப் போகிறதோ?

- சி.சரவணன்.