Published:Updated:

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

Published:Updated:
##~##

நிறைய சம்பாதிப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி அறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சம்பாதிக்கவேண்டிய பணத்தின் அளவு எவ்வளவு என்று கேட்டால், உங்களால் தீர்மானமாக இவ்வளவு ரூபாய் - கோடிகளில், லட்சங்களில் என்று கூற முடியுமா? இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும். கொஞ்சம் சிந்தியுங்கள்.

கேள்வி கேட்கப்பட்டவுடனேயே உங்கள் மனதில் என்ன பதில் தோன்றுகிறது. நல்ல பணங்காசோடு வசதியோடு வாழ ஆசை என்பதா?, எது நல்ல வசதி? ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்று நல்ல வசதி இல்லையா? பைக்கில் போகிறவருக்கு மழை பெய்யும்போது காரும், மாருதி 800-ல் போகிறவருக்கு வெயில் காலத்தில் பென்ஸும் / ஆடியும்தானே நல்ல வசதியாக கண்ணில் தெரியும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்கு எது நல்ல வசதி என்பதில் தெளிவாக இருக்கிறீர்களா, இல்லையா? என்பதுதான் என் முதல் கேள்வி! இதுவரை தெளிவில்லாமல் இருந்தால், இன்றே ஏன் இப்போதே தெளிவாக்கிக்கொள்ளுங்கள். இல்ல சார், நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்கிறீர்களா? ஒரு வாரத்தில் நன்கு யோசனை செய்து தெளிவாக முயற்சியுங்கள். அட, கேள்வி பெரிதாயிற்றே! கொஞ்சம் நின்று நிதானமாக யோசிக்க வேண்டுமே என்கிறீர்களா? பதினைந்து நாள், ஒரு மாதம் ஏன் மூன்று மாதம் எனத் தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

பணவளக் கலை!

ஆனால், தெளிவான யோசனை செய்து எந்த அளவுக்கு சம்பாத்தியம் செய்ய வேண்டும் என்ற தொகையை மட்டும் தெளிவாக முடிவு செய்யுங்கள். ஏனென்றால், அதை முடிவு செய்தபின்னரே எதை, எப்படி, எப்போது செய்து நாம் திட்டமிட்ட தொகையை சம்பாதிக்கப்போகிறோம் என்ற திட்டத்தை உங்களால் வகுக்க முடியும். வெறுமனே பணம் சம்பாதித்து பணக்காரர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே மனதில்கொண்டு திரிந்தால் ஏக்கப் பெருமூச்சு மட்டுமே மிஞ்சும்.

நாமெல்லாம் பணக்காரராக முடியுமா? என்கிற பெருமூச்சில் பேசும் பலரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். தெளிவான பதில் ஏதும் இருக்காது. இப்படித் தெரியாமல் இருப்பது பெயர் தெரியாத ஊருக்குப் போகும் வழி இல்லையா? ஒன்று இருந்த இடத்திலேயே இருப்பார்கள். இல்லாவிட்டால் திசை தெரியாமல் சுற்றி தன்னுடைய சக்தியை வாழ்க்கை முழுவதுமே வீணாக்குவார்கள்.

முதலில் போகவேண்டிய ஊரை முடிவு செய்யுங்கள். பின்னர் வண்டியை ஸ்டார்ட் செய்வோம். போகும் வழியில் என்னென்ன பிரச்னைகள் வரலாம் என்பதற்கான முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க ஆரம்பிப்போம், சரியா?

ஒரு முக்கியமான விஷயத்தை இந்தத் தருணத்தில் நினைவில்கொள்ள வேண்டும். அடுத்துவரும் குறுகியகாலத்தில் நீங்கள் சம்பாதிக்கவேண்டியதாகத் திட்டமிடும் தொகை உங்கள் கைவசம் தற்சமயம் இருக்கும் திறமை மற்றும் வசதிவாய்ப்பினைக் கொண்டு நிச்சயமாக அடைய முடிவதாக இருக்க வேண்டும்.

இந்தியாவிலேயே பெரிய பணக்காரராக ஆகவேண்டும் என்று நீங்கள் நினைப்பதில் தவறேதும் இல்லை. மகராசனாய் நீங்கள் அந்த நிலையை அடையுங்கள். வாழ்த்துகள்! ஆனால், அதற்கு முன்னால், இன்று நீங்கள் இருக்கும் நிலமையில் இருந்து முதலில் சற்று மேலே செல்ல என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பது பற்றி தெளிவாகச் சிந்தியுங்கள். அதன் பின்னர்தானே இந்தியாவின் முன்னணி பணக்காரராக வேண்டிய பாதையில் பயணிக்கத் தேவையான ஆயத்தங்களை நீங்கள் செய்ய முடியும்.

இந்தியாவின் முன்னணி பணக்காரராக ஒரேநாளில் ஆக வாய்ப்பேயில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பல இடைநிலைகளைக் கடந்த பின்னரே இது சாத்தியம் என்பதால் முதலில் ஸ்டார்ட்டிங் பாயின்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்று கையில் இருக்கும் விஷயங்களையும் பலத்தையும் கொண்டு செய்யும் குறுகியகாலத் திட்டமிடுதலே மிக முக்கியமானதாக அமையும். இந்தக் குறுகிய காலத் திட்டமிடலில் நீங்கள் உங்களை ஏமாற்றிக்கொள்ளும்படியான திட்டங்களைப் போட்டுவிட வாய்ப்புகள் அதிகம். அதிலும் நமக்கு நாமே செய்துகொள்ளும் இரண்டு விதமான ஏமாற்று முனைவுகள் இருக்கின்றது. முடியாததை முடியும் என்று வீணே வெட்டியாய்க் கற்பனை செய்துகொண்டு குறுகியகாலத் திட்டத்தைப் போட்டால் ஏமாறப்போவது நீங்கள்தான்.  

பணவளக் கலை!

அதேபோல், நான் பெரிய பணக்காரனாகும் திட்டத்துடன் இருக்கிறேன் என்று மிடுக்காய்ச் சொல்லி, அடுத்தவர்களை ஏமாற்றுகிறேன் பேர்வழி என்று குறுகிய காலத் திட்டங்களை - வீண் ஜம்பத்துக்காக வெத்துவேட்டுத்தனத்துடன் (உதாரணத்துக்கு, பெட்டிக்கடை ஆரம்பிக்க வசதி இருந்தபோது டிப்பார்ட்மென்டல் ஸ்டோர் ஆரம்பிக்கப் போகிறேன் என்ற வகையில்) போட்டாலும் ஏமாறப்போவது நீங்களேதான்.

இந்த இரண்டு விஷயத்திலுமே நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது. வெற்றிகரமாகப் போடப்பட்டு செயல்படுத்தப்பட்ட பல குறுகியகாலத் திட்டங்களே மிகப் பெரிய சம்பாத்தியத்தை ஒருவருக்கு கொண்டுவந்து தருகிறது என்பதைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

திட்டம் போட்டாகிவிட்டதா? ஓகே சார். திட்டம் ரெடி என்கிறீர்களா? ஓகே. இந்தத் திட்டத்தை எல்லோரிடமும் சொல்லிவிடலாமா? உங்கள் பதில் என்ன? சொல்லிவிடலாம் என்பதுதானே?

அது சரியான பதிலில்லை. தேவை யில்லாத நபர்களிடம் சொல்லத் தேவை யில்லை. ஒரு நல்ல அனுபவமிக்க நபர் ஒருவரிடம் ஆலோசனைக்காகச் சொல்லலாம். உங்களுடைய சர்க்கிளிலேயே இருக்கும் அனுபவஸ்தராககூட அவர் இருக்கலாம். பணம் சம்பாதிக்க இதுபோன்ற ஆலோசனைக்காரர் (பெரும்பாலும் நண்பர் வட்டத்தில்) ஒருவரை வைத்துக்கொள்வது மிக மிக அவசியம். இதுபற்றி நாம் பின்னர் விரிவாகப் பேசுவோம்.

உங்களிடம் திட்டம் இருக்கிறதா? உங்களை சந்திக்கும் நபர், அண்ணே நல்லாயிருக்கிறீர்களா? அப்புறம் என்ன ஓடிக்கிட்டிருக்கு என்று கேட்டவுடனேயே மடைதிறந்த வெள்ளமாய் உங்கள் வியாபார ஐடியாக்களைக் கொட்டக் கூடாது. உங்களுடைய திட்டத்தை மனதினுள் வையுங்கள். ஏன் மனதினுள் வைக்கவேண்டும் என்கிறீர்களா? உங்கள் திட்டத்தைக் கேட்பவர்கள் இதெல்லாம் சரிப்பட்டு வராது. இதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது. உன் திறமைக்கு இது எட்டாக்கனி என்று சொல்லி உங்களை சோர்வடைய செய்ய வாய்ப்பிருக்கிறது.

பணவளக் கலை!

இதில் இன்னுமொரு இடைஞ்சல் இருக்கிறது. எதிராளிகள் செய்யும் டிஸ்கரேஜ்மென்டை தவிர்க்க நீங்கள் வாதிடும்போது நீங்கள் உங்களுடைய வியாபார ஐடியாவை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள முயற்சிப்பதைப் போல் இருக்கும். இல்லையென்றால், உங்கள் ஐடியாவைக் கேட்பவர் சத்தமில்லாமல் அதைச் செயலாக்கக் கூடும். பலரும் ஒரே ஐடியாவை செயல்படுத்தினால் உங்களின் லாப வாய்ப்பு குறையவே செய்யும்.

அப்படிப்பட்ட ஐடியாவா என்னிடம் இருக்க வாய்ப்புள்ளது என்கிறீர்களா? யாருக்குத் தெரியும். நல்ல ஐடியாக்களை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லை. உங்கள் வியாபார ஐடியாவைக் குறித்து மற்றவர்கள் அவர்கள் மத்தியில் பேசிக்கொள்வது நல்லதில்லை.

இதையெல்லாம் தாண்டி செயலாக்கிக் காசாக்கக் கூடிய ஒரு ரகசியத்தை மனதில் வைத்திருப்பது என்பதே உங்கள் முகத்தில் ஒரு களையை (தேஜஸ்) கொண்டுவந்துவிடும்.

சொல்லக் கூடாத விஷயம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் புறப்படப் போகும் பயணம் பெரியதில்லையா? இன்றைக்கு இருக்கும் சூழல் மற்றும் சுற்றுப்புறம் பிடிக்காமல்தானே நீங்கள் புதிய பயணத்துக்கு முயலுகிறீர்கள். அப்படி முயலும்போது ரகசியமாக முயல்வதுதானே சரியாக இருக்கும்?

நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சம்பாத்தியம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதைக் கொஞ்சம் ரகசியமாகச் செய்வதுதான் சரி. சம்பாதிப்பது என்பது ஒரு தப்பான காரியம் இல்லை! அதனால்தான் மறைக்க வேண்டியுள்ளது.

அய்யோ! நான் கொஞ்சம் ஓவராப் போயிட்டேனே. என் ஐடியாவை பலரிடமும் இதற்கு முன்னாலேயே சொல்லிவிட்டேனே என்கிறீர்களா? பயப்படத் தேவையில்லை! ஐடியாவைக் கேட்கும் அனைவருமே  அவர்களுடைய நேரத்தைச் செலவு செய்து அதைச் செயலாக்குவதில் ஈடுபாடு காட்டுவதில்லை. அவர்களுடைய நேரத்தைச் செலவிட டிவி, சினிமா என பல கவர்ச்சிகரமான கேளிக்கைகள் இருக்கவே இருக்கிறது. அதன் மீது அதீத நம்பிக்கைகொண்டு நீங்கள் தைரியமாகவே செயல்படலாம்!

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism