நம்புங்கள், காலம் கடந்துவிடவில்லை!

##~##

பட்டம் முடித்து சத்துணவுப் பணியாளராகத் தனது கிராமத்திலேயே பணிபுரிந்து வந்தார் அகிலா. மிக சொற்ப சம்பளம். ஆனாலும், தன் தேவைகளை சுருக்கிக்கொண்டு மாதம் 1,000 ரூபாய் வரை தனது 'கனவுத் திட்டத்துக்கு’ என்று சேமித்துக்கொண்டிருந்தார். ஏறத்தாழ 50,000 வரை சேர்ந்துவிட்டது. அந்தப் பணத்தைவைத்து என்ன செய்யலாம்..?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அது போதுமா..? மேலும், தேவை என்றால் இன்னும் எவ்வளவு..? எங்கிருந்து, எப்படித் தொடங்குவது..? எதுவும் தெரியாது. ஆனாலும் மனதுக்குள் தனது திட்டத்தை உரம்போட்டு வளர்த்து வந்தார். சங்கர்-நிஷா நடத்திய சந்திப்பில் கலந்துகொண்டார். அங்குதான் அகிலாவைப் பார்த்தேன். வந்த ஒவ்வொருவரிடமும் தானே வலியச்சென்று பேசியதும், அவர்களின் ஆர்வத்தை அவர்கள் எப்படி அடைகாத்து வருகிறார்கள் என்பதையும் கேட்டுக்கேட்டுப் பரவசப்பட்டாள்.

அவளது திட்டம்தான் என்ன..? மண்பாண்டங்களின் மீது வண்ணம் தீட்டி மிளிர வைப்பது; சேலைகளின் ஓரத்தை வெவ்வேறு டிசைன்களில் வெட்டி, வித்தியாசமான வண்ண நூல்களால் தைத்து புதுவடிவம் தருவது என வண்ணங்களை வெகு நேர்த்தியாகக் கையாள்வதில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.

'வண்ணங்கள், நமக்கு இறைவன் தந்த வரங்கள். வார்த்தைகள் தர முடியாத ஆறுதலையும் ஆனந்தத்தையும் வண்ணங்கள் நமக்கு அளிக்கும். ஒன்றுமில்லை, நாம் நீலம் அல்லது கறுப்பு இங்க்ல எழுதுனதை, சிவப்பு அல்லது பச்சை இங்க்குனால 'அன்டர்லைன்’ பண்ணுங்க. அதே வரிகள், இப்ப எவ்வளவு அழகாகத் தெரியுது பாருங்க! அதுதான், வண்ணங்களோட எஃபெக்ட். வாழ்க்கை வண்ணமயமானதுன்னு எல்லோரும் சொல்றோம். ஆனா, வண்ணங்களுக்கான முக்கியத்துவத்தை நாம உணரவே இல்லை...’

விட்டா, ஒரு பெரிய லெக்ஷரே குடுத்துடுவா போல இருந்தது.

எதிர்கொள்!

'சரி... உங்களோட திட்டம்தான் என்ன..? அதைச் சொல்லுங்க...’ என்றார் பேங்க் மேனேஜர்.

'அதைத் தெரிஞ்சுக்கதான் இங்கே வந்தேன். என்னோட இன்ட்ரஸ்ட் இது. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த 50,000 ரூபாய் இருக்கு. இதே லைன்ல ஃபர்தரா நான் என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க. இதையே முழுநேரமாவும் பண்ண முடியுமா..? அதுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கு..? என்னோட 'வொர்க்’-கைப் பார்த்தா உங்களுக்கு எப்படித் தோணுது..?’ என வெளிப்படையாக அவள் கேட்டது எல்லோரையும் ஈர்த்தது.

'நீங்க ஏற்கெனவே செய்து வைச்சது எல்லாம் இருக்கட்டும்’ - தொடர்ந்தார் மேனேஜர்,  'இப்ப..., இத்தனைபேர் முன்னால ஏதாவது செய்ய முடியுமா..?’

எதிர்கொள்!

'ம்... என்ன செய்யலாம்..? கலர் பவுடர் எல்லாம் இருக்கு. ஆங்..., அதோ பானையில பிடிச்சு வச்சிருக்காங்களே... அதை எடுத்துக்கவா..?’

அவள் சுட்டிக்காட்டிய பானை மிகப் பழசாக, உள்ளே என்றைக்கோ பிடித்து வைத்திருந்த தண்ணீருடன், தூசி படிந்து இருந்தது.

'எடுத்துக்குங்க... நான் உங்க திறமையை டெஸ்ட் பண்றதுக்காக இதைச் சொல்லலை. உங்களோட கலை ஆர்வம் எந்த அளவுக்கு இருக்குன்னு பார்க்கலாமேன்னுதான் சொன்னேன்...’

'ஓகே, சார். எனக்கு சந்தோஷம்தான். இதுவே ஒரு நல்ல வாய்ப்புதானே..?’ என்று சொல்லிவிட்டு தன் 'வேலை’யைத் தொடங்கினாள்.

முதலில் நன்றாகக் கழுவி வெள்ளைத் துணியால் சுத்தமாகத் துடைத்தாள். அப்போதே நாங்களெல்லாம் பானை புதுப்பொலிவு பெற்றுவிட்டதாக உணர்ந்தோம். சின்னச் சின்ன டப்பாக்களைத் திறந்து ஒரு பேப்பரில் பல வண்ணப்பொடிகளைக் கொட்டினாள். சிறிது தண்ணீர்விட்டுக் குழைத்தாள். மளமளவென்று பானையின் மீது பூச ஆரம்பித்தாள். கழுத்துப்பகுதி, நடுப்பகுதி, அடிப்பகுதி, உட்பகுதி என்று பிரித்துப் பிரித்து 'வேலை’ செய்தாள். ஒரு மணி நேரமாயிற்று.

'ஆங்... இப்ப எப்படி இருக்கு..?’ என்று சொல்லியபடி, கொண்டுவந்து எல்லோருக்கும் தெரியும்படியாக மேசையின் மீது வைத்தாள்.

ஒரு சில நொடிகள்... யாராலும் நம்ப முடியவில்லை. அது இப்போது அழுக்குப் பானை இல்லை. கலைப்பொருள்!

பீங்கானில் வடித்து எடுத்த பொம்மைபோல பார்ப்பதற்கு அழகாக ரம்மியமாக இருந்தது.

ஒவ்வொருவரும் தானாக எழுந்து நின்று கைதட்டி னார்கள்.

'கொஞ்சம் பொறுங்கள்...’ என்று சொல்லிவிட்டு, ஒரு வெள்ளைத் துணியை மேலே கிடத்தி, அதன் மீது சில பூக்களைத் தூவினாள். ஒரு தெய்வீகச் சூழலை அது அக்கணமே ஏற்படுத்தி விட்டது.

மேனேஜர் சொன்னார். 'திஸ் இஸ் ஆர்ட்!  நிச்சயம் ஏதேனும் உதவி செய்தே தீரவேண்டும். இரண்டு நாட்கள் கழித்து என்னை பேங்கிலே வந்து பாருங்கள்’.

எதிர்கொள்!

வங்கியின் மேலதிகாரிகளுடன் பேசினோம். பல நண்பர்களைக் கலந்து ஆலோசித்தோம். அகிலாவை வங்கிக் கிளைக்கு வரவழைத்து உரையாடினோம்.

கைவினைப் பொருள் கழகம், சிறு தொழில் வளர்ச்சிக் கழகம், மத்திய அரசின் பல்வேறு துறைகள் என்று பலமுனைகளில் இதைக் கொண்டு சென்றோம். ஒவ்வொரு நிலையிலும் அகிலாவின் இடைவிடாத முனைப்புதான் அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு சென்றது.

நாங்கள் ஒருவாரம் அவகாசம் அளித்தால், இரண்டு நாட்களில் செய்துவிடுவாள்; இரண்டு நாட்களில் முடிக்கச் சொன்னால், சில மணி நேரங்களில் முடித்துவிடுவாள். ஆண்டுக் கணக்கில் பொத்திப்பொத்தி வளர்த்த கனவு அல்லவா..?

சிட்டுபோலப் பறந்துபறந்து வேலை செய்தாள். அடுத்த மூன்று மாதங்களில் உதித்தது அகிலா ஆர்ட் சென்டர்! அபாரமான கற்பனை வளம், கூர்மையான நிர்வாகத் திறன், பொங்கி வழியும் நம்பிக்கை, மேலேமேலே உயர வேண்டும் என்கிற தணியாத தாகம். எல்லாமாகச் சேர்ந்து பயன் அளித்தது.

ஆயிரங்களில் ஆரம்பித்து லட்சங்களைத் தாண்டி கோடிகளை எட்டிப்பிடித்திருக்கும் 'டேர்னோவர்’, அகிலாவை எந்த விதத்திலும் மாற்றிவிடவில்லை. அதே ஆர்வம், அதே உழைப்பு. ஆனால், பரந்துவிரிந்து சிந்திக்கிறாள். 'எத்தனைபேர் இப்படித் தமக்குள்ளே ஒரு பொறியுடன் வாழ்ந்து வருகின் றனரோ..! அவர்களைக் கேலியுடன் மட்டுமே பார்க்கிற சமுதாயத்தில் தமது 'உட்கனல்’ அணையாமல் பார்த்துக் கொள்ளுதல் எத்தனை கடினமானது என்பதை நான் அறிவேன். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான்.

உங்கள் கனவுகளைக் கலைந்து செல்லவிடாதீர்கள். கண்ணை இமை காப்பதுபோல காத்து வாருங்கள். இட் இஸ் நெவர் டூ லேட் என்பதை மட்டும் திடமாக நம்புங்கள்’.

ஆம், மிக உண்மை. ஆனால் இது கலை, கற்பனை சார்ந்த தேடுதலுக்குத்தான் பொருந்தும். பிற துறைகளுக்கு..? 'எய்தர் நவ் ஆர் நெவர்’ என்று மல்லுகட்டிப் போராடி, வென்று காட்டுவதுதான் சரி என்று தன் அனுபவத்தைச் சொல்கிறார் சக்கரவர்த்தி.

சொல்வதுதான் அவர். அனுபவம்..? அவருடைய புதல்வி கனிஷ்காவினுடையது!

(தெளிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism