Published:Updated:

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய ஆர்.பி.ஐ. கவர்னர்!

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய ஆர்.பி.ஐ. கவர்னர்!

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய ஆர்.பி.ஐ. கவர்னர்!

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய ஆர்.பி.ஐ. கவர்னர்!

Published:Updated:
##~##

'இன்று மொஹரம் பண்டிகை காரணமாக சந்தை விடுமுறை. தவிர, புயல் எச்சரிக்கை வேறு. எனவே, வீட்டிலேயே இருக்கிறேன்.  எனக்கு போன் செய்து தகவல்களை பெற்றுக் கொள்ளவும்’ என மதியமே நமக்கு இ-மெயில் அனுப்பி இருந்தார் ஷேர்லக். 'ஏழு மணிக்கு போன் செய்கிறோம்’ என்று பதில் மெயில் அனுப்பிவிட்டு, அதுபடியே போன் செய்தோம்.

''சந்தையைத் தூக்கி நிறுத்தும் வேலையை நம் ஆர்.பி.ஐ. கவர்னர் செய்ய ஆரம்பித்துவிட்டாரே?'' என்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சந்தை விழாமல் பார்த்துக்கொள்ள இந்த அரசாங்கம் தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்துகொண்டுதான் இருக்கிறது. முன்பெல்லாம் சந்தை இறங்கினால், நிதி அமைச்சர் புதிதாக எதையாவது சொல்லி மீண்டும் சந்தையை ஏற்ற அல்லது சரிவைத் தடுக்க முயற்சிப்பார். இப்போது அந்த வேலையை ரிசர்வ் வங்கி கவர்னரே செய்துவிட்டார். ரூபாய் மதிப்பு மீண்டும் கணிசமாக சரியத் தொடங்கியதைக் கண்ட கவர்னர், இதுவரை இல்லாத வழக்கமாக உடனடியாக ஒரு நிருபர் கூட்டத்தைக் கூட்டி, ரூபாயின் அடிப்படை மதிப்பில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்ல, சந்தை மீண்டும் பச்சை சேலை கட்டிக் கொண்டது.

சந்தையை சரியாமல் தடுப்பது ரிசர்வ் வங்கி கவர்னரின் வேலையா? இவர் அடிக்கடி இப்படி செய்ய ஆரம்பித்தால் ரிசர்வ் வங்கியின் பெயரே கெட்டுவிடுமே என பலரும் கவலை தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் சொல்வது சரிதானே?'' என்றவரிடம், அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

ஷேர்லக் - சந்தையை உயர்த்திய ஆர்.பி.ஐ. கவர்னர்!

''எஸ்.பி.ஐ-ன் நிகர லாபம் 35% வீழ்ச்சிக் கண்டிருக்கிறதே?'' என்றோம்.

''வாராக்கடனுக்கு அதிக தொகை ஒதுக்கியதே காரணம். ஏறக்குறைய ரூ.2,645 கோடி  வாராக் கடனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது வங்கியின் காலாண்டு நிகர லாபமான ரூ.2,375 கோடியைவிட அதிகம். இந்த வாராக்கடன் பிரச்னை எஸ்.பி.ஐ.க்கு மட்டுமல்ல, சுமார் 40 வங்கிகளுக்கு இருக்கிறது. பட்டியலிடப்பட்ட 40 வங்கிகளின் நிகர வாராக்கடன் 38% அதிகரித்து, ரூ.1,28,533 கோடியாக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதி ஆண்டு இறுதியில் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டிவிடும் என அனலிஸ்ட்கள் கணித்திருக்கிறார்கள். இந்த 40 வங்கிகளில் 14 வங்கிகளின் வாராக்கடன், கடந்த ஆறு மாதங்களில் 50 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளன. குறிப்பாக, எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, சென்ட்ரல் பேங்க், ஐ.டி.பி.ஐ. பேங்க், யூனியன் பேங்க் ஆகியவற்றின் வாராக் கடன் 30 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துள்ளது. அந்த வகையில், வங்கிப் பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்கள், செய்யப் போகிறவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய காலமிது'' என எச்சரிக்கை தந்தார் ஷேர்லக்.  

''பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (பி.பி.சி.எல்.) நிகர லாபம் 81% வீழ்ச்சிகண்டுள்ளதே?'' என்று அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

''ரூபாய் மதிப்பு குறைந்ததே முக்கிய காரணம். இரண்டாம் காலாண்டில் இதன் கரன்சி இழப்பு ரூ.1,100 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.486 கோடி லாபமாக இருந்தது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பிலிருந்து கிடைக்கும் லாபம் ஒரு பீப்பாய்க்கு 6.44 டாலரிலிருந்து 4.65 டாலராக குறைந்தது இன்னொரு முக்கிய காரணம்'' என்றார்.

''என்.எஸ்.இ.எல். விஷயத்தில் என்ன டெவலப்மென்ட்?'' என்று வினவினோம்.  

''ஆர்.பி.ஐ.-ன் அனுமதி இல்லாமல்

வங்கி சாரா நிதி நிறுவனம் (என்.பி.எஃப்.சி.)போல என்.எஸ்.இ.எல். செயல்படுகிறது என அதன் இன்டர்னல் ஆடிட்டிங்கில் 2011-ம் ஆண்டிலே எச்சரிக்கப்பட்டது. அப்போது என்.எஸ்.இ.எல். நிறுவனத்தை ஆடிட் செய்த முகேஷ் பி ஷா இப்படி எச்சரித்தார். இதை அப்போது யாரும் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறார்கள்.

ஜிக்னேஷ் ஷாவும் இதர இயக்குநர்களும் இனி ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் இயக்குநர்களாக நீடிக்க முடியாது என கம்பெனி ரிஜிஸ்ட்ரரின் (ஆர்.ஓ.சி.) இடைக்கால அறிக்கை சொல்லி இருக்கிறதாம். முதலீட்டாளர்கள் மற்றும் கடன் தந்தவர்களின் நலனைக் காக்க அவர்கள் தவறிவிட்டனர் என்றும், அது குற்றம்சாட்டி இருக்கிறது'' என்றார்.

''ஆர்.பி.ஐ. இன்னும் ஒருமுறை முக்கிய வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்கிறார்களே?''  என்று நம் அதிர்ச்சியைக் காட்டினோம்.

''கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் மொத்த விலை குறியீடு 7% உயர்ந்துள்ளது. உணவுப் பணவீக்க விகிதமும் தொடர்ந்து 18.19 என அதிகரித்தே காணப்படுகிறது. அக்டோபரில் நுகர்வோர் விலை குறியீடு இரட்டை இலக்கத்தை (10.09%) மீண்டும் தொட்டிருக்கிறது. காய்கறி விலை 45.67% அதிகரித்திருக்கிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது சுலபமான விஷயமில்லை என்று வேறு நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஆர்.பி.ஐ. அடுத்தமுறையும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றேபடுகிறது'' என்றார்.

''எஃப்.ஐ.ஐ.களின் முதலீடு எப்படி இருக்கிறது?'' கடைசி கேள்வியைக் கேட்டோம். ''கடந்த வாரம் முழுக்க மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் பங்குகளை விற்றுக்கொண்டிருக்க, எஃப்.ஐ.ஐக்கள் வாங்கித்தள்ளினார்கள்.  குறிப்பாக, செப்டம்பர் காலாண்டில் டாடா குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களில் எஃப்.ஐ.ஐ. முதலீடு அதிகரித்துள்ளது. ஆனால், 9 நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு குறைந்துள்ளது. எப்.ஐ.ஐ.கள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை உடைய டிரேடர்கள் மட்டும் இப்போது சந்தையில் முதலீடு செய்யலாம். அடுத்தவாரம் பார்ப்போம்'' என்றபடி போனை லொடக்கென்று வைத்தார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism