Published:Updated:

மீண்டு எழும் திருப்பூர்!

மீண்டு எழும் திருப்பூர்!

மீண்டு எழும் திருப்பூர்!

மீண்டு எழும் திருப்பூர்!

Published:Updated:
##~##

கடந்த சில ஆண்டுகளாகவே சரிவின் ஆதிக்கத்தில் இருந்த திருப்பூர் நகரம், மீண்டும் முன்னேற்றப் பாதையில் வேகமெடுக்கத் தொடங்கி இருக்கிறது. இதன்மூலம் ஏறக்குறைய இழந்துபோன நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுத்திருக்கின்றனர் திருப்பூர் மக்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே இறங்குமுகத்தில் இருந்த திருப்பூர் பனியன் ஏற்றுமதி, ஏறுமுகத்தில் ஏற துவங்கி விட்டதுபோல தெரிகிறது. நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'2012-13 முதல் அரையாண்டின் ஏற்றுமதி மதிப்பு ரூ.6,666 கோடியாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் ரூ.8.643 கோடியாக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பில்

29.71 சதவிகிதமும், வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பில் 16.90 சதவிகிதமும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் ஏற்றுமதி 17 ஆயிரம் கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கிறோம்'' என்று சொல்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சக்திவேல்.

மீண்டு எழும் திருப்பூர்!

திருப்பூரில் தொழில் வளர்ச்சி இப்போது மீண்டும் வேகமெடுத்திருப்பதற்கு மூன்று முக்கியமான காரணங்களைச் சொன்னார் அவர். முதலாவதாக, சீனாவில் ஜவுளித் துறைக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் தற்போது குறைந்துள்ளது. இதற்கு காரணம், அங்கு உற்பத்தி செலவு கணிசமாக அதிகரித்ததே. சீனாவில் மின்கட்டணம், தொழிலாளர் ஊதியம் போன்றவை கடுமையாக உயர்ந்துள்ளதால் உற்பத்தி செலவு மிகவும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவில் எலெக்ட்ரானிக் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. டெக்ஸ்டைல் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இதனால் அங்கு சென்ற ஆர்டர்கள் எல்லாம் இப்போது இந்தியாவை நோக்கி திரும்ப வரத்தொடங்கியுள்ளன.

இரண்டாவதாக, வங்க தேசத்தில் சமீபத்தில் ஒரு ஜவுளித் தொழிற்சாலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. ராணா ப்ளாஸா என்னும் கார்மென்ட் ஃபேக்டரியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வால்ட் டிஸ்னி உள்ளிட்ட சில நிறுவனங்கள் இனி வங்க தேசத்துடன் வர்த்தகம் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது. வங்க தேசத்தில் உற்பத்திச் செலவு குறைவு என்றாலும், இதுமாதிரியான விபத்துகள் நடக்கிற அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இருப்பதால், மேற்கத்திய மற்றும் அமெரிக்க நாட்டு கம்பெனிகள் அந்த நாட்டுக்கு ஆர்டர்கள் தருவதை நிறுத்திவிட்டு, அந்த ஆர்டர்களை இந்தியாவை நோக்கி திசை மாற்றியிருக்கின்றன.

மீண்டு எழும் திருப்பூர்!

மூன்றாவதாக, ஐந்தாண்டுகளாக அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இப்போது அங்கு படிப்படியாக நிலைமை சரியாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக செய்துவரும் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது' என்கிறார் சக்திவேல்.

அதேபோல, ஏற்றுமதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மட்டுமே சார்ந்திருக்காமல், பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர் திருப்பூர் தொழில் அதிபர்கள்.  குறிப்பாக, ரஷ்யா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்க நாடுகளில் ஏற்றுமதிக்கு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிந்தடிக் ஆடைகளின் தேவைதான் அங்கு அதிகளவில் உள்ளது. எனவே, சிந்தடிக் ஆடைகளைத் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிட்வேர் டெக்னாலஜி தொழில்நுட்பம் மூலம் அந்தவகை ஆடைகளைத் தயாரிக்கும் பணிக்கு திருப்பூர் தொழில் அதிபர்கள் முயன்று வருகின்றனர்.

மீண்டு எழும் திருப்பூர்!

இதுகுறித்து ஏற்றுமதியாளர் விஜயகுமாருடன் பேசினோம். 'நான் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வருகிறேன். சீனா மற்றும் வங்க தேச மார்க்கெட் சரிவின் காரணமாக இந்தமுறை ஏற்றுமதி 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு 40 சதவிகிதம்வரை வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறேன். சரியான திட்டமிடலுடன் செய்தால் ஏற்றுமதியை இன்னும் அதிகரிக்க செய்ய முடியும். ஓராண்டுக்கான ஏற்றுமதியை

ரூ.20 முதல் ரூ.30 ஆயிரம் கோடி வரை உயர்த்த முடியும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மீண்டு எழும் திருப்பூர்!

திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரையுடன் பேசினோம். 'ஆர்டர்கள் நிறைய இருக்கும் இந்த நேரத்தில் ஆயத்த ஆடைகளுக்கு வங்கிகள் கடன் தர மறுக்கின்றன. பணியாளர்களின் தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது. தவிர, வாடகை உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதால் தொழிலாளர்கள் இங்கு வர விரும்புவதில்லை. இந்தப் பிரச்னைகளுக்கு அரசாங்கம் தீர்வு அமைத்துத் தந்தால், இந்தத் தொழில் இன்னும் பெரிய வளர்ச்சியை எட்டும்'' என்றார்.

இனி திருப்பூரில் ஜவுளித் தொழிற்சாலையே இருக்காது என எல்லோரும் பயந்து கொண்டிருந்த சமயத்தில், மீண்டும் அங்கு ஜவுளித்துறை களைகட்டியிருப்பது சந்தோஷமான விஷயம்தானே!

- ச.ஜெ.ரவி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism