Published:Updated:

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

Published:Updated:
##~##

பணக்காரர் ஆவதற்கான நீண்டகால எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு குறுகியகாலத் திட்டங்கள் பலவற்றைத் தீட்டி அதில் வெற்றிகாண வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பணம் சம்பாதிப்பதென்ன அவ்வளவு சிரமமா? இவ்வளவு சிந்தனையும் செயலுமா அதற்கு தேவைப்படுகிறது என்று கேட்பீர்கள். உங்களுடைய நண்பர்கள் பலர் ஏன் உங்கள் கூடவேயிருந்ததைப் போலிருந்துகொண்டே திடீரென ஒருநாள் நல்ல பணத்தையும் சேர்த்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் அடிக்கடி பொருட்கள் வாங்கும் கடையின் முதலாளியும் பத்து முதல் பதினைந்து வருடத்தில் பெரும் பணம் சேர்த்து கடையை விருத்திசெய்து வீடு, கார் என வாங்கி செட்டிலானதைப் பார்த்திருப்பீர்கள்.

அட, நம்ம கண்முன்னாடியே கசங்கின சட்டையைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தவர் இப்படி பணக்காரராக மாறிட்டாரே என்று ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள்.

பணம் சம்பாதிப்பது என்பது கஷ்டப்பட்டால் மட்டுமே நடக்கும் விஷயம். உங்களுடைய புத்திசாலித்தனமான யோசனைக்கும் கடுமையான உழைப்புக்கும் மட்டுமே உலகம் பணத்தினை உங்களுக்கு கொட்டிக்கொடுக்கிறது. ஸ்மார்ட்டாகவும், அதீதமான கடின உழைப்பையும் நீங்கள் கொடுக்கக்கொடுக்க உலகம் பணத்தை உங்களிடம் வேகமாக அனுப்பி வைக்கிறது.

சிந்தனையும், செயலும், பேச்சும்தான் உலகம் உங்களை நோக்கி  பணத்தை அனுப்ப வைக்கிறது. சிந்தனை, செயல் சரி. பேச்சு எப்படி இதைச் செய்கிறது. நான் என்ன பேச்சாளராகியா பணம் சம்பாதிக்கப் போகிறேன் என்பீர்கள்.

பணவளக் கலை!

பெரும் பணம் சம்பாதிப்பவர்களின் (தற்சமயம் தங்கள் உழைப்பால் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் - இப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. அதைப் பின்னர் பார்ப்போம்!) நடுவே கொஞ்சநேரம் இருந்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு இது எளிதில் புரியும். அவர்களுடைய பேச்சு மற்றவர்களைப் பற்றி ஒருபோதும் இருக்காது. தொழில் பற்றியும், ஐடியாக்கள் குறித்தும், நாட்டில் நிலவும் தொழில் சூழல் குறித்தும் மட்டுமே (அன்றையச் சூழலில் அவர்களுடைய அனுபவம் பற்றியும்கூட) பெரும்பான்மையான நேரம் இருக்கும்.

அதேசமயம், தொழில் செய்பவர்களல்லா தவர்கள் பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களைக் கொஞ்சம் கேளுங்கள். அடுத்தவர்கள் முதல் அரசியல் வரை அத்தனையும் பெர்சனல் அலசல்களாகவே இருக்கும். அல்லது ஒரு ரசிகராக பல்வேறு விஷயங்களை ஆச்சர்யத்துடன் அலசுவார்கள். இதனால்தான் பணக்காரர்கள் ஐடியாக்களைப் பற்றிப் பேசி அதனைக் காசாக்குகிறார்கள். சாமான்யர்கள் நபர்களையும் நடப்புகளையும் பற்றிப் பேச ஏதுவாக தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் மட்டுமே ஈடுபாடாக இருக்கிறார்கள். பாமரர்கள் என்ன நடந்தது என்று சாமான்யர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் நிலையில் இருந்து உழல்கிறார்கள்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். பெரும் பணக்காரர்கள் அவர்களது ஐடியாக்களின் மூலம் (நிறுவனங்கள்) விற்பனை செய்யும் பொருட்களைப் பற்றி (ஐபோன், ஆடி கார், ஐம்பது இஞ்ச் டிவி என) சாமானியர்களாகிய நாம் அடிக்கொரு தரம் பேசுகிறோம்.

பணக்காரர்கள் கிரிக்கெட் டீம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் கிரிக்கெட் பார்த்து கைதட்டுகிறோம். பணக்காரர்கள் சினிமா, டிவி என எல்லாவற்றிலும் கதை, விளையாட்டு, பாட்டு, டான்ஸ் என பல ஷோக்களின் மூலம் கேளிக்கைகளைத் தருகிறார்கள். சாமானியர்களாகிய நாம் கேபிள் கட்டணமும், டிக்கெட் கட்டணமும் செலுத்திப் பார்த்துவிட்டு, என்னா மாதிரி ஒரு ஷோ! சிரி சிரின்னு சிரிச்சோமுல்ல! இப்படி எடுத்திருக்கலாம்; இப்படி முடிச்சிருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை உதிர்த்து காலம் தள்ளிக்கொண்டிருக்கிறோம்.

பணவளக் கலை!

அப்படியென்றால், சினிமா, டிராமாவைத் துறந்தால்தான் சம்பாதிக்க முடியும் என்கிறீர்களா? என்று கேட்பீர்கள். அதுவல்ல நான் சொல்வது. பொழுதுபோக்குக்கு ஒரு நேரம் ஒதுக்குங்கள். அதோடு அதனை முடித்துக்கொண்டு விடுங்கள். நாள் முழுவதும் இணையதளங்களில் உங்களுக்குப் பிடித்த ஹீரோயின் இன்று என்ன செய்தார்? ஹீரோ என்ன கார் வாங்கினார் என்று துரத்தித்துரத்தி படித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்.

பணம் சம்பாதிப்பவர்களும் கேளிக்கைகளில் ஈடுபடவே செய்கின்றனர். ஆனால், கேளிக்கை என்பது அந்த இடத்தைவிட்டு வெளிவந்தவுடனேயே அவர்களால் மறக்கப் படுகிறது. புகழையும் பணத்தையும் சேர்க்க விரும்புகிறார் பணக்காரர். அடுத்தவர் புகழையும் பெருமையையும் கண்டு அவர் மயங்குவதேயில்லை. பணம் பண்ணுவது எப்படி என்பதிலேயே அவர் எப்போதும் குறியாக இருக்கிறார். அப்படி மயங்கிச் செல்ல ஆரம்பித்த மறுநிமிடமே சம்பாதிக்கும் திறன் அவருக்குக் குறைய ஆரம்பிக்கிறது. பல வாழும்/ வாழ்ந்த உதாரணங்கள் இதற்கு உங்கள் கண்முன்னேகூட இருக்கலாம். சாமானியரோ புகழையும் பணத்தையும் நம்மால்தான் பெற முடியவில்லை; பேரும் புகழும் பெற்ற ஒருவரை ரசிகர் என்று ஆதரிப்பதன் மூலம் நாமும் அந்தக் கூட்டதில் ஒருவராய் இருக்கிறோம் என்று திருப்திப்பட்டுக்கொள்கிறார்.

சாமானியர்களும் பாமரர்களும் இந்தச் சிக்கலில் இருந்து வெளிவருவதையே பெரியதொரு சவாலாக வைத்திருப்பார்கள். அடுத்தபடியாக மற்றவர்கள் குறித்துப்பேசுவது. சாமானியர்களும் பாமரர்களும் உணர்ச்சிகளுக்கு (கோபம், பொறாமை) கிட்டத்தட்ட அடிமையாக இருப்பார்கள். கோபத்தை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிப்பது ரொம்பவும் கடினம். இந்தக் காலத்தில் பணம் சம்பாதித்தபிறகு கோபப்பட்டால்கூட பணம் பறந்து போய்விடுகிறது.

பணவளக் கலை!

நல்ல வியாபாரி கோபப்பட மாட்டார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயமே! நல்லதொரு மனிதப் பழக்கவழக்கங்கள் இல்லாமல் பணம் சம்பாதிப்பது என்பது சாத்தியமில்லாத ஒரு விஷயம். இந்த மனிதப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக இருப்பது கோபம், பொறாமை போன்ற உணர்வுகளின் பிடியில் சிக்கிச் செயல்படும் குணம். இந்த உணர்வுப் பிழம்புகளில் சிக்கிக்கொண்டு வெளிவர முடியவில்லை என்றால், பணம் சம்பாதிப்பது என்பது கனவாகவே ஆகிவிடும் வாய்ப்புகூட இருக்கிறது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், முதலில் அடுத்தவர்களையும் அடுத்தவர்களின் கருத்தையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களின் செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதல் குறைவுகள் அவ்வப்போது இருக்கவே செய்யும் என்று அறிந்துகொண்டு பண்பட்ட மனநிலையிலேயே பணம் சம்பாதித்தவர்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். கோபப்படுவதைப்போல் தெரிந்தாலும், அதில்கூட ஒரு நாசூக்கும் யாரிடம் கோபப்படுகிறோம் என்ற ஒரு நிதானமும் அவர்களிடம் குடிகொண்டிருக்கும். எப்போதும் குறை சொல்லாமல் நிறைகளைச் சுட்டுக்காட்டி பாராட்டும் குணத்தையும் நீங்கள் வளர்த்தால்தான் பணம் சம்பாதிக்கும் பாதையில் நிலைத்து நிற்க முடியும். தனிப்பட்ட குணரீதியான விமர்சனங்களைத் தவிர்த்து ஐடியாக்கள் ரீதியான தனிநபர் குறித்த தர்க்கத்தையே பணம் சம்பாதிக்க விரும்பும் நீங்கள் செய்ய வேண்டும்.

ஏன் ஐடியாக்கள் பற்றியே பேசி நாம் வட்டமடிக்கிறோம் எனில், சரியான ஐடியாக்களே பணத்தை உங்களை நோக்கி வரவழைக்கும். ஐடியா என்றால் ஐபோன் போன்ற டிசைன் மட்டுமே என்று நினைக்காதீர்கள். சரியான இடத்தினைத் தேர்ந்தெடுத்து போடப்படும் டீக்கடைகூட ஒரு பிரமாதமான ஐடியாதான்!

நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் உங்களுடைய ஐடியாக்களைக் கவனமாக வெற்றிபெற்ற நம்பிக்கைக்கு உகந்த நபர்களிடம் மட்டுமே நீங்கள் விவாதிக்கலாம். தோல்வி அடைந்தவர்களிடம் (தோல்வி என்பது ஒரு குற்றமில்லை என்றாலும், ஒரு தோல்வியின் காரணமாக எதிலும் தோல்வி மனப்பான்மையை மனதில் ஊறவைத்துக் கொண்டவரைத்தான் நான் இங்கே குறிப்பிடுகிறேன்) விவாதித்தால் அவர்கள் உங்கள் மனதில் பயத்தினை வெற்றிகரமாகப் புகுத்தி உங்கள் ஐடியாக்களை நீர்த்துப்போகச் செய்து உங்களை சாமனியராகவே இறுதிவரை வாழவைத்துவிடுவார்கள்.

(கற்றுத் தேர்வோம்)
படம்: ஆ.முத்துக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism