மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப் - ஆபீஸ் வேலை... ஃபாலோ-அப் முக்கியம்!

நாணயம் ஜாப் - ஆபீஸ் வேலை... ஃபாலோ-அப் முக்கியம்!

##~##

அலுவலக பணிநேரம் முடிந்து வீட்டுக்குப் போனபிறகும் அலுவலகம் தொடர்பான சில முக்கியமான வேலைகளை செய்து முடித்து தரவேண்டிய கட்டாயம் சில சமயங்களில் மட்டுமே ஏற்படும். என்றாலும், ஆபீஸ் வேலையை வீட்டுக்கு வந்தபிறகும் பொறுப்போடு ஃபாலோ பண்ணி செய்து முடிப்பதால் நிர்வாகம் அல்லது உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற முடியும். அலுவலகத்தைவிட்டு வந்தபிறகு அந்த வேலையை எப்படி செய்து முடிக்கவேண்டும் என்று சொல்கிறார் சென்னை ஐ.ஐ.டி.-ன் மனிதவள மேம்பாட்டுத் துறை உதவி பேராசிரியர் எம்.பி.கணேஷ்.

''இன்று எல்லாத் துறைகளிலும் வேலை நேரம் தாண்டியும் வேலைகளைப் பற்றிய கவனத்தோடு இருக்கவேண்டும் என்கிற நிலையே இருக்கிறது. குறிப்பாக, மார்க்கெட்டிங், விற்பனை, மருத்துவமனை, ஊடகம் போன்ற துறைகளில் நேரம், காலம் பார்க்காமல் பணி செய்ய வேண்டியிருக்கிறது. இந்தத் துறைகளில் வாடிக்கையாளர்களின் திருப்திதான் முக்கியம் என்பதால், அவர்கள் அழைக்கும் சமயங்களில் எல்லாம் சரியாக பதில் அளிப்பது முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்த வேலையை சரியாக செய்து முடிக்கும்போதுதான் நிறுவனத்தின் உயரதிகாரிகளிடம் நமக்கு நல்ல பெயர் கிடைக்கும். இதற்கு நாம் எப்போதும் தயார் நிலையில் இருப்பது அவசியம்!

எப்படி தயாராக இருப்பது?

அலுவலகத்தைவிட்டு வெளியே செல்லும் போது அதுவரை நாம் செய்த வேலை தொடர்பான சில முக்கிய விஷயங்களை எடுத்துக்கொண்டு செல்வது நல்லது. அதாவது, தொலைபேசி எண், மெயில் முகவரி ஆகியவற்றை கையில் வைத்திருக்க வேண்டும். முடிந்தவரை இவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொள்வது நல்லது அல்லது செல்போனில் குறித்து வைத்துக்கொள்ளலாம்.

நாணயம் ஜாப் - ஆபீஸ் வேலை... ஃபாலோ-அப் முக்கியம்!

இப்போது உள்ள செல்போன்கள் அத்தனையும் இன்டர்நெட் வசதியுடன்தான் உள்ளன. எனவே, உங்கள் வேலை தொடர்பான விவரங்களை உங்கள் இ-மெயிலில் வைத்திருந்தால் செல்போன் மூலம் எப்போது வேண்டுமானாலும் அவற்றை எடுத்து நீங்கள் பதில் சொல்லலாம்.

மேலும், நீங்கள் முடித்துத் தரும் வேலையை உங்கள் உயர் அதிகாரிகளிடம் தருவதற்கு முன்பு நீங்கள் ஒரு பிரதியை உங்கள் மெயிலில் வைத்துக்கொள்வது நல்லது. உங்கள் உயர் அதிகாரி திடீரென நீங்கள் செய்து தந்த வேலையில் சந்தேகம் கேட்டால், அப்போது சட்டென பதிலளிக்க இது வசதியாக இருக்கும். இதனால் எந்த வேலையையும் தடைபடாமல் வீட்டிலிருந்தபடியே நல்லபடியாக செய்து, உங்கள் உயர் அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க முடியும்.

வெளியூர் செல்லும் சமயங்களில்..!

வெளியூர் செல்லும் சமயங்களில் நீங்கள் செய்த வேலை சம்பந்தமான தகவல்களை உயர் அதிகாரியிடம் ரிப்போர்ட் செய்துவிட்டு செல்வது நல்லது. அல்லது உடன் பணிபுரிபவர்களிடம் அதுபற்றிய விவரங்களை தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, மேற்கொண்டு யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிவிடுவது நல்லது. தொடர் விடுமுறை எடுக்கும் சமயங்களிலும் இதுமாதிரி திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வேலைகள் தடைபடாமல் செல்லும். அதன்மூலம் நீங்கள் நல்ல பெயர் எடுக்க முடியும்.

சக ஊழியர்களுடன் நட்புறவு..!

நாணயம் ஜாப் - ஆபீஸ் வேலை... ஃபாலோ-அப் முக்கியம்!

இதற்கு உங்களோடு உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர்களின் நட்பு மிக முக்கியம். அதாவது, எல்லா ஊழியர்களுடனும் எப்போதும் சகஜமாக பழகுவது அவசியம். அதோடு நீங்கள் உதவி கேட்டால் செய்யக்கூடிய அளவுக்கு நட்பை வளர்த்துக்கொள்வது முக்கியம். இதற்கு அவர்கள் கேட்கும் உதவியை நீங்களும் முடிந்தவரை செய்து தரவேண்டும். மேலும், அலுவலகத்தில் உங்களுக்கு மேலே, கீழே வேலை பார்ப்பவர்கள் அனைவரின் செல்போன் எண்ணையும் கையில் வைத்திருக்க வேண்டும். அலுவலகத்தில் யாருக்கு என்ன வேலை தெரியும் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

கிளம்பும் முன்..!

அலுவலகத்தைவிட்டு கிளம்பும் முன் சில விஷயங்களைச் செய்வது அவசியம். அதாவது, நீங்கள் செய்யும் வேலை குறித்த தகவல் அனைத்தையும் உங்களின் தலைமைக்கு தெரிவித்துவிடுவது. மேலும், அந்தத் தகவலை உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கும் தெரிவித்துவிடுவது நல்லது. அதேபோல, எந்த வேலை செய்தாலும் அதுகுறித்து ஒரு சிறு குறிப்பு எழுதி வைப்பது நல்லது. அந்த வேலைக்குத் தொடர்புடைய தொலைபேசி எண், முகவரி, மெயில் ஐடி., எந்தவிதமான வேலை என்பதை எல்லாம் எங்காவது ஓர் இடத்தில் சேமித்துவைப்பது நல்லது.

குடும்பத்தைச் சமாளிப்பது அவசியம்!

வீட்டில் இருந்தபடி ஆபீஸ் வேலையைச் செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் எரிச்சலடைவது இயல்பே. எனவே, அவர்களுக்கு அந்த வேலையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வது அவசியம். அதேநேரத்தில் அவர்களுடன் நீங்கள் நேரம் செலவழிப்பதும் முக்கியம். அலுவலகத்துக்காக குடும்பத்தையோ, குடும்பத்துக்காக அலுவலகத்தையோ இழப்பது கூடாது. அலுவலகத்தில் எவ்வளவு வேலை இருந்தாலும் தொலைபேசியிலாவது குடும்ப உறுப்பினர்களுடன் பேச வேண்டும். அப்போதுதான் நீங்கள் வீட்டில் இருக்கும்போது அலுவலக வேலையைச் செய்தாலும் அதை அவர்கள் ஒரு குறையாகச் சொல்லமாட்டார்கள்'' என்று முடித்தார் கணேஷ்.

இனியாவது அலுவலக வேலையைப் பொறுப்போடு ஃபாலோ செய்து நல்ல பெயர் வாங்க பணியாளர்கள் முயற்சிக்கலாமே!

- இரா.ரூபாவதி.