Published:Updated:

பணவளக் கலை!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் தொடர்!

##~##

பணக்காரராக வேண்டுமென்றால் ஏற்கெனவே இருக்கும் வேலையைத் தவிர்த்து ஏதாவது ஒரு தொழிலை செய்தேயாக வேண்டுமா? ஒரு வேலைக்கு இரண்டு வேலையாக (பார்ட் டைமில்) என்று பார்த்து, வரும் வருமானத்தில் கடுமையாக சேமித்து பணக்காரராக முடியாதா? என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்கள்.  சம்பளக்காரராக மட்டுமேயிருந்து ஏன் ஒருபோதும் மலையளவு சம்பாதிக்க முடியாது என்ற கூற்றைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

மாதச் சம்பளக்காரராக இருக்கும் நாம் என்னவிதமான வாழ்க்கை வாழ்கிறோம்? சம்பளத்தைக் கொடுக்கும்போதே மிகவும் சுலபமாக அரசாங்கம் தன் பங்கை எடுத்துக்கொள்கிறது. வருமான வரிப் பிடித்தம் போக மீதித் தொகையைத்தான் நாம் செலவு செய்கிறோம். அதில் கொஞ்சம் சேமிப்பும் செய்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நம் வருமான வரி சதவிகிதம் 25 (உதாரணத்துக்கு) சதவிகிதம் என்றால், நம் சம்பளத்தில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால், அது 133.50 பைசாவுக்கு பெட்ரோல் போட்டதாக அர்த்தம். அதாவது, 133.50 பைசாவுக்கான உழைப்பைக் கொடுத்தால் மட்டுமே 100 ரூபாய் மதிப்பிலான பெட்ரோல் நமக்கு கிடைக்கும்.

இதில் ஒரு தொழில் செய்பவருடைய நிலையைப் பார்ப்போம். நம் நண்பர் ஒருவர் தொழில் செய்கிறார். அவர் 100 ரூபாய்க்குப் பெட்ரோல் போடுகிறார். அவர் அந்த பெட்ரோல் பில்லை அந்தத் தொழிலில் வரும் வருமானத்தில் செலவாக எழுதிவிடுகிறார். அந்தச் செலவால் அவர் கட்டவேண்டிய வருமான வரியில் (உதாரணத்துக்கு, அவர் தொழிலுக்கும் 25 சதவிகித வருமான வரி இருக்கிறதென்றால்) அவருக்கு 25 ரூபாய் குறைகிறது. இந்த பெட்ரோல் செலவை அவர் செய்யாமல் இருந்தால், 25 ரூபாய் வரி கட்டிவிட்டு, 75 ரூபாய் லாபத்தைப் பணமாக வெளியே எடுத்திருப்பார். அதாவது, அந்தத் தொழிலில் அவரது உழைப்புக்கு அந்த 75 ரூபாய்தான் ஊதியம். அதற்கு பதிலாக அவர் செலவு செய்ததால், 75 ரூபாய் ஊதியத்தை வைத்து 100 ரூபாய் பொருளை வாங்கிவிட்டார் என்று கொள்ளலாம் அல்லவா?!

பணவளக் கலை!

இந்த வாதம் புரியவில்லையா? வேறு வழியில் யோசிப்போம். நீங்கள் ரூபாய் 133.50-க்கான உழைப்பைச் செலுத்தி பெறும் பெட்ரோலை அவர் வெறும் 100 ரூபாய்க்கான உழைப்பைக் கொடுத்து பெற்றுக்கொள்கிறார் இல்லையா? இதுதான் தொழில்புரிபவர்களுக்கான பெரியதொரு சலுகை. வரிச் செலுத்துவதைக் கணக்கில் எடுத்தால் தொழில் கணக்கில் செலவு செய்வதுதான் லாபம் என்று புரிந்து செலவுகளைச் செய்வார் நம் நண்பர்.

வேலைக்குச் செல்லும் நமக்கு அரசாங்கம் பிடித்ததுபோக மீதியாக சம்பளம் கிடைக்கிறது. தொழில்புரிபவர் அரசாங்கத்துக்கு எவ்வளவு வரி தருவது என்பதை டாக்ஸ் ப்ளானிங் மூலம் பெரும்பாலும் அவரே முடிவு செய்கிறார்.  வேலைக்குச் செல்வதில் மற்றுமொரு சிக்கலும் இருக்கிறது. சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வரியும் அதிகரிக்கவே செய்கிறது. இதையும் தாண்டி இன்னும் ஒரு மிகப் பெரும் சிக்கல் இருக்கிறது. வேலைக்குச் செல்வதே ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு முதலாளியையோ சார்ந்து வாழும் நிலை எனலாம். இந்த நிலையில் சம்பளம் எக்கச்சக்கமாக எகிற ஆரம்பித்தால் இந்தச் சார்பு நிலை மிக மிக அதிகமாகவே செய்யும். தொழில் செய்பவர்கள் தங்களுடைய நிதி நிலைமையை அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால், வேலைக்குச் செல்லும் நாமோ நிதிநிலைமையைப் பொறுத்தவரை மற்றவரின் கட்டுப்பாட்டில் வைத்து முழுமையாய் அடங்கிப் போய்விடுகிறோம்.

பணவளக் கலை!

எனவே, வேலைக்குச் செல்வதில் பெரிய சுவாரஸ்யமோ, பணக்காரர் ஆவதற்கான வாய்ப்போ இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படியென்றால், வேலைக்குப் போவது மிகப் பெரிய குற்றமா என்று கேட்பீர்கள். இல்லை, ரிஸ்க் என்று சொல்லலாம். பெரும்பாலான பணக்காரர்கள் ஏதாவது ஒரு காலத்தில் வேலைக்குப் போயிருக்கவே செய்வார்கள். வேலைக்குப்போய் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, தனது நேரடி முயற்சி / உழைப்பு என்ற இரண்டும் இல்லாமல் பணம் கொண்டுவரும் தொழில்கள்/விஷயங்கள்/முதலீடுகள் பலவற்றைச் செய்திருப்பார்கள்.

இப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டறிந்து செயலாக்குவது ஒன்றும் சுலபமான விஷயமில்லை. இந்தவகைக் குணம் கொண்ட முதலீடுகளைச் செய்ய தலைசிறந்த பொறுமை, அறிவு மற்றும் மதிநுட்பம் என்ற மூன்றும் அவசியம். மிகவும் பொறுமையாக உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆராய்ந்து பாருங்கள். எங்கே வருமானம் தரும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதைக் கண்டறிய முயலுங்கள். அந்த வாய்ப்புகளை காசாக்கத் தேவையான பயிற்சிகளைப் பெற்று அதில் தேர்ச்சிகொள்ளுங்கள். அந்தத் தேர்ந்த அறிவை காசாக்கும் வழிமுறைகளை செயல்படுத்துங்கள். பணம் உங்களை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிக்கும்.

நம்மில் பலரும் பல்வேறுவிதமான லாபம் தரும் தொழில் ஐடியாக்களை அவ்வப்போது நம்முடைய சுற்றுச்சூழலில் இருந்து கிரகித்துக்கொள்வோம். ஏன் உங்கள் நண்பர்கள் வட்டத்தை உற்றுநோக்குங்கள். அதில்கூட ஒருவர் சரியாக இந்த நேரத்தில்/ இந்த இடத்தில் இந்தத் தொழில் செய்தால் சூப்பராகப் போகும் என்று பல தொழில்களை கணித்துச் சொல்லும் வல்லமை பெற்றவராக இருப்பார். அதை செயலாக்குவதில் அவருக்கும்/ நமக்கும் ஒரு தயக்கம் இருக்கும். அந்தத் தயக்கம் நம்மை அணைபோட்டு நிறுத்தி வைத்திருக்கும்போதே ஒரு சிறுதொழில் முனைவோர் ஒருவர் அந்தத் தொழிலை நம் கண்முன்னேயே ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்துவார். நாம் அடுத்த ஐடியாவைத் தேடி ஓட ஆரம்பிப்போம். ஐடியாவையும் அதைக் காசாக்குவதற்குத் தேவையான அறிவையும் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை செயலாக்குவதற்கான முயற்சியை எடுப்பதில்தான் பணம் சம்பாதிப்பதற்கான சூட்சுமமே இருக்கிறது.

ஏற்கெனவே பலமுறை சொன்னபடி, அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டே வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் அனைவருமே நிச்சயமாக எவ்வளவு சிறியதானாலும் சரி, ஒரு சைடுபிசினஸை கண்டுபிடித்துச் செய்தேயாக வேண்டும்.

பணவளக் கலை!

எங்கே சார் தொழில் செய்றது? காலையில் எட்டு மணிக்குப் போனால் இரவு எட்டு மணிக்கு அலுவலகத்தில் இருந்து திரும்பி வருகிறேன். இரவு எட்டு மணிக்குமேல், காலை எட்டு மணிக்குள் நைட் வாட்ச்மேன் வேலைக்குத்தான் போகமுடியும் என்றுகூட கிண்டலடிக்கலாம்!.

நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் திட்டமிடும் இந்தத் தொழில் உங்களுடைய நேரம் மற்றும் உழைப்பை நம்பாமல் அதுவாக இயங்கும் தன்மைகொண்டிருப்பதாக இருந்தால் மிக மிக நல்லது என்பதைத்தான். மிக மிக நல்லது என்ற அடைமொழிகள் எல்லாம் எதற்கு? அந்தத் தொழில் உங்களுடைய நேரத்தையும் உழைப்பையும் எடுத்துக்கொள்ளாத ஒன்றாகவே கட்டாயம் இருக்கவேண்டும். இதை சுலபத்தில் நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது. நானே சிறிய அளவில் யோசித்து சின்ன முதலீட்டில் வியாபாரம் செய்ய நினைக்கிறேன். அதை எப்படி என் நேரடி கண்காணிப்பு இல்லாமல் செய்வது? என்பீர்கள்.

இதுதான் நம்போன்ற இன்றைய ஆவரேஜ் மிடில்கிளாஸின் நிலைமை. என்னால் மட்டுமே ஒரு வேலையைக் கவனத்துடன் பண்ண முடியும் என்ற எண்ணம் கொண்டது ஆவரேஜ் மனித மனம். இதை ஆணவம் என்றே சொல்ல வேண்டும்.

என்ன, ஆணவமா என்று முறைக்காதீர்கள். நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியின் முதலாளி அவரே நேரடியாகச் செய்தால்தான் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நம்ப ஆரம்பித்தால் உங்கள் வேலை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்! உலகம் நம்மைவிடத் திறமைசாலிகளைக் கொண்டது. திறமைக்கு இந்த உலகில் பஞ்சமேயில்லை என்பதை நினைவில்கொள்ளுங்கள். பணக்காரர்கள் அடிமனதில் நம்புவதும் இதைத்தான். அவர்களுக்கு இணையாக, ஏன் அவர்களைவிடத் திறமையாக அவர்களுடைய தொழிலைப் பார்த்துக்கொள்ள இந்த உலகில் ஆள் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களைப் பணக்காரர் ஆக்கும் முதல் காரணியாக இருக்கிறது.

ஒரு தொழில் ஜெயிக்க நேரடியான மேற்பார்வை, நேரடியான உழைப்பு தேவை என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வந்துவிட்டீர்களா?

(கற்றுத் தேர்வோம்)