Published:Updated:

பங்குச் சந்தை: பெரிதாக இறங்க வாய்ப்பில்லை!

பங்குச் சந்தை: பெரிதாக இறங்க வாய்ப்பில்லை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

ங்குச் சந்தை இனியாவது உயருவதாவது என்று எல்லோரும் நெகட்டிவ்-ஆக பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், 'சந்தையின் அடுத்த காளை ஓட்டத்தில் சென்செக்ஸ் 50000 புள்ளிகளைத் தொடும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சென்னையின் முன்னணி பங்குச் சந்தை நிபுணரான பி.ஸ்ரீராம்.

கடந்த தீபாவளியின்போது உச்சத்தைத் தொட்ட பங்குச் சந்தை, அதன்பிறகு மேற்கொண்டு உயராமல் இறங்க ஆரம்பித்தது. 'சந்தையில் சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்களே...’ என்று அவரிடம் கேட்டோம். விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

''பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்கு சுத்தமாக குறைந்துவிட்டது. இந்தியா முழுக்க கடந்த ஆறு மாதங்களில் ஆயிரம் புரோக்கிங் கிளைகளை மூடிவிட்டார்கள். பல ஆயிரம் பேருக்கு வேலை போய்விட்டது என்று பத்திரிகைகளில் செய்தி வருகிறது. ஆனால், என் புரோக்கிங் நிறுவனத்தைப் பொறுத்தவரை வருமானம் குறைந்துவிடவில்லை. இன்னும் ஒரு புதிய கிளையைத் தொடங்கினால்கூட நன்றாக இருக்குமே என்று நினைக்கிற அளவுக்குதான் என் மனநிலை இருக்கிறது.

காரணம், என் வாடிக்கை யாளர்களில் பலர் டிரேடர் களாக இருக்கிறார்கள். இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு முதலீட்டாளர்களாக இருந்தவர்கள்தான். அவர்கள் இப்போது டிரேடர்களாக மாறியதற்கு காரணம், சந்தை இன்றுள்ள சூழ்நிலையில் நீண்டநாள் முதலீடு என்கிற நோக்கில் செயல்படுவதற்கு பதிலாக ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடத்தில் விலை உயர வாய்ப்புள்ள பங்குகளை வாங்கி, ஓரளவு லாபம் சம்பாதித்து வெளியேறவே விரும்புகிறார்கள்.

பங்குச் சந்தை: பெரிதாக இறங்க வாய்ப்பில்லை!

சந்தை தற்போது ஏற்றஇறக்கத்தோடு இருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் டிரேடர்களாக மாறுவதில் எந்தத் தவறும் இல்லை. டிரேடர்கள் என்றவுடன் தின வர்த்தகம் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால், குறுகிய காலத்தில் விலை உயர வாய்ப்புள்ள பங்குகளை வாங்கலாமே! குறுகிய காலத்தில் பங்குகளை வாங்குவதில் ரிஸ்க் ஆச்சே என்று நீங்கள் சொல்லலாம். இல்லை என்று சொல்லவில்லை. அந்த ரிஸ்குக்கு உட்பட்டு உங்களால் முடிந்த தொகைக்கு பங்குகளை வாங்கலாம். ஸ்ட்ரிக்ட்-ஆன ஸ்டாப் லாஸ் வைத்து செயல்படலாம். இப்போதுள்ள சூழ்நிலையில் டிரேடிங் தொடர்பான திறமையை நாம் வளர்த்துக் கொண்டால், பிற்பாடு ஒரு வெற்றிகரமான முதலீட்டாளராக இருக்க அது மிகவும் உதவியாக இருக்கும்'' என்றவரிடம், ''ஃபண்டமென்டல்கள் சரியில்லாத இந்தச் சமயத்தில் எப்படி முதலீடு செய்ய முடியும்?'' என்று கேட்டோம்.

பங்குச் சந்தை: பெரிதாக இறங்க வாய்ப்பில்லை!

''ஃபண்டமென்டல்கள் என்பது என்ன? ஒரு விஷயத்தைப் பற்றிய அபிப்ராயம்தான் அது. குறிப்பிட்ட நபர் ஒருவர் பிரதமரானால் பொருளாதாரம் சரியாகிவிடும் என்று ஒருவர் சொல்லலாம். அதெல்லாம் சரியாகாது என்று இன்னொருவர் சொல்லலாம். இரண்டு கருத்துகளுமே தனிப்பட்ட கருத்துகள்தான். எனவே, அதை நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை. என்னைப் பொறுத்தவரை, டெக்னிக்கல் அனாலிசிஸ் என்ன சொல்கிறது என்பது தான் முக்கியம். டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பதை 'கூட்டாக செய்யும் தீர்க்கதரிசனமாக’வே (கலெக்ட்டிவ் விஸ்டம்) நான் பார்க்கிறேன். சந்தையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் வருவதற்கு முன்பே அதை டெக்னிக்கல் அனாலிசிஸ் கோடிட்டு காட்டிவிடும்.

என்னைப் பொறுத்தவரை, சந்தை எந்த நேரத்திலும் பெரிய அளவில் உயர்வதற்கான பாய்ச்சலைத் தொடங்கலாம். என்ன நடக்கிறது என்று நாம் சுதாரிப்பதற்குள்கூட அது நடந்துவிடலாம். அப்படியரு பாய்ச்சல் தொடங்கினால் அது எட்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடரக்கூடிய காளைச் சந்தையாககூட இருக்கலாம். அந்தச் சமயத்தில் சென்செக்ஸ் 50000 என்கிற புதிய உச்சத்தைத் தொடலாம் என்பது என் கணிப்பு'' என்றவரிடம், சந்தை தற்போது (கடந்த வியாழக்கிழமை சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிவு) மறுபடியும் இறங்கிக் கொண்டிருக்கிறதே, என்ன காரணம் என்று கேட்டோம்.

''கடந்த வியாழக்கிழமை அன்று சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் இறங்கியதைகூட ஹெல்த்தியான கரெக்ஷன் என்றுதான் சொல்வேன். இந்திய பங்குச் சந்தை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் நிலைமைகளைத் தாண்டிதான் செயல்பட்டு வருகிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பு, பணவீக்க விகிதம் உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி குறைவு என்பதுபோன்ற விஷயங்களால் சந்தையின் செயல்பாடு பாதிப்படைந்துவிடவில்லை. அப்படி இருந்தால் இந்திய பங்குச் சந்தை என்றைக்கோ அதலபாதாளத்துக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. வெறும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல் இந்தப் புள்ளிவிவரங்கள் பெரிதாக சந்தையைப் பாதிக்கவில்லை.

எனவே, சந்தை நேற்று எப்படி இருந்தது?, இன்று எப்படி இருக்கிறது என்பது பற்றி அதிகம் கவலைக்கொள்ள தேவை இல்லை. இந்த விவரங்கள் எல்லாம் ஒரு கணிப்புக்காகத்தானே தவிர, அதனை அடிப்படையாக கொண்டு முதலீட்டை தவிர்க்க கூடாது. பங்குச் சந்தை அடுத்த 2, 3 ஆண்டுகளுக்கு எப்படி இருக்கும் என்று பார்த்துதான் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தை வைத்துதான் சந்தையின் செயல்பாட்டை பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, அடுத்த பத்தாண்டில் இந்திய பங்குச் சந்தை நன்றாகவே இருக்கும்'' என்றவரிடம், அடுத்துவரும் ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படக்கூடிய துறைகளைப் பற்றி கேட்டோம்.

''நேரடியாக நுகர்வோரை சென்றடையும் துறைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. குறிப்பாக, ரீடெய்ல் துறை நன்றாகச் செயல்படக்கூடும். இந்தத் துறையில் ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனப் பங்கை கவனிக்கலாம். அடுத்து, எஃப்.எம்.சி.ஜி துறையில் ஐ.டி.சி, ஹெச்.யூ.எல் நிறுவனப் பங்குகள், உணவு மற்றும் உணவு பொருட்கள் சார்ந்த நிறுவனமான அக்ரோ டெக்ஃபுட்ஸ் வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.

பங்குச் சந்தை: பெரிதாக இறங்க வாய்ப்பில்லை!

அடுத்து, 2 சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங் களுக்கு இந்தியாவில் பெரிய சந்தை இருக்கிறது. சந்தை பெரிய அளவில் இறங்கியபோதுகூட இந்தத் துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை பெரிய அளவில் இறங்கவில்லை. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, மாருதி நிறுவனப் பங்குகள் இன்னும் நல்ல லாபம் கொடுப்பதற்கு வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

இன்ஃப்ரா துறையில் இன்றைய தேதியில் பெரிய வளர்ச்சி இல்லை. ஆனால், எதிர்காலத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். அந்தவகையில் அந்தத் துறையைச் சேர்ந்த

எல் அண்டு டி நிறுவனப் பங்கை சற்று கவனித்தால் லாபம் பார்க்கலாம். தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் மருந்துத் துறையைச் (பார்மா) சேர்ந்த நிறுவனப் பங்குகள் இனிமேல் இந்த அளவுக்கு வளர்ச்சி காணும் வாய்ப்பு இல்லை. எனவே, அவற்றில் அதிக முதலீடு வேண்டாம்'' என்றவரிடம், தேர்தல் மாற்றத்தால் சந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா என்று கேட்டோம்.

''தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தாலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதனால் பங்குச் சந்தையில் ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கலாம். அதனை கரெக்ஷன் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை முதலீட்டுக்கான நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்த 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது சந்தை அவ்வளவுதான் என்றார்கள் பலர். ஆனால், சந்தை மீண்டும் ஏறத்தொடங்கியது. இந்த நிலைதான் 2014-ம் ஆண்டிலும் ஏற்படும். அப்போது பி/இ விகிதம், புத்தக மதிப்பு சரியில்லை என்று பார்த்து முதலீடு செய்யாமல் விட்டிருந்தால், பஸ்ஸை தவற விட்டுவிட்டு பிற்பாடு தவிக்கும் சூழ்நிலையைத்தான் அனுபவிக்க வேண்டும்'' என்றவரிடம், 'குறுகிய காலத்தில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?’   என்று கேட்டோம்.  

''தற்போதைய நிலையிலிருந்து சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிஃப்டி 300 புள்ளிகளும் இறங்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, நிஃப்டி 5700 புள்ளிகளுக்கும், சென்செக்ஸ் 19000 புள்ளிகளுக்கும் இறங்கக்கூடும். அதற்கு கீழே செல்ல வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. அதே நேரத்தில் நிஃப்டி 6800-க்கும் சென்செக்ஸ் 23000 புள்ளிகளுக்கும் சென்று புதிய உச்சத்தைத் தொட வாய்ப்பு உள்ளது'' என்று நம்பிக்கையுடன் முடித்துக்கொண்டார்.

- சி.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு