Published:Updated:

ஷேர்லக் : வங்கிப் பங்குகள் ஜாக்கிரதை!

ஷேர்லக் : வங்கிப் பங்குகள் ஜாக்கிரதை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

வெளியே சில்லென்று காற்று அடித்துக்கொண்டிருக்க, தலையில் மப்ளரை இறுக்கிக் கட்டிக்கொண்டு, மழை கோட் அணிந்தபடி விறுவிறுவென நம் அறைக்குள் நுழைந்த ஷேர்லக், சடசடவென செய்திகளை கொட்ட ஆரம்பித்தார்.

''பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் பிரார்த்தனை இன்றைக்கு எப்படி இருக்கிறது தெரியுமா? அமெரிக்க அரசாங்கம் அதன் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துகிற மாதிரி எந்த உருப்படியான அறிவிப்பையும் வெளியிட்டுவிடக் கூடாது என்றுதான் பிரார்த்தனை செய்கிறார்கள். ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்காவின் பொருளாதார சலுகை  குறையும் என்று சொல்லப்போக, உடனே இங்கிருந்த எஃப்.ஐ.ஐ.-கள் பறந்தேவிட்டனர். இதனால் வியாழக்கிழமை மட்டும் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்குமேல் சரிந்தது. அதன் பாதிப்பு இன்றைக்குகூட பார்க்க முடிந்தது.

ஒரு பாசிட்டிவ்-ஆன வளர்ச்சி என்னவெனில், இதுநாள்வரை விற்பதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்த நம் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள்,  குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளில் முதலீட்டை உயர்த்திக்கொள்ள தொடங்கி இருக்கின்றன. 2012 டிசம்பரில் மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் 31.21 லட்சம் பங்குகளை நமது மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் வாங்கி இருந்தன. இந்த எண்ணிக்கை 2013 செப்டம்பரில் 39.55 லட்சமாக அதிகரித்துள்ளது. இதேபோல், டெக் மஹிந்திரா, பிரிட்டானியா இண்டஸ்ரீஸ், சன் பார்மா, டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் போன்ற பங்குகளிலும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன'' என்றவருக்கு, சுடச்சுட ஏலக்காய் டீ தந்தோம்.

''பார்மா துறை அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறதே..?'' என்றோம்.

ஷேர்லக் : வங்கிப் பங்குகள் ஜாக்கிரதை!

''சர்வதேச பார்மாச்சூட்டிகல் நிறுவனமான பைசர், அதன் துணை நிறுவனமான வையத்-ஐ இணைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பைசர் அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவலையடுத்து பைசர் பங்கின் விலை 6%, வையத் 23% அதிகரித்துள்ளது'' என்றார்.

''சில நிறுவனங்கள் எஸ்.இ.இசட் அமைக்க வாங்கியிருந்த அனுமதியை மத்திய அரசாங்கம் கால நீட்டிப்பு செய்திருக்கிறதே?'' என்றோம்.

''டிசிஎஸ், பர்ஸ்வனாத் இன்ஃப்ரா உள்ளிட்ட 29 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்துக்கு அதன் கொல்கத்தா ஐ.டி. சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு 2014 டிசம்பர் வரையில் ஓராண்டுகால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. பர்ஸ்வனாத் இன்ஃப்ராவுக்கு ஆறு மாதம் நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் சீரடையும்பட்சத்தில் இந்த நிறுவனங்களால் நிறைய வேலை வாய்ப்பு உருவாகும் என்று நம்புகிறதாம் அரசாங்கம்.

அதற்காகதான் இந்த கால நீட்டிப்பாம்'' என்றார்.

''செபி மீண்டும் சாட்டையை எடுத்து சுழற்ற ஆரம்பித்திருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறித்து மோசடி விஷயங்கள் ஏதாவது இருந்தால் அதனை வெளிப்படையாக அறிவிக்கும் திட்டத்தைக் கொண்டுவர செபி திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் இயக்குநர்கள், பணியாளர்கள் ஏதாவது மோசடியில் ஈடுபட்டால், அவர்கள் மீது ஏதாவது போலீஸ் மற்றும் கோர்ட் வழக்குபதிவு செய்திருந்தால் அதனை பொது மக்களுக்கு அறிவிப்பது அவசியம். இதன்மூலம் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் என செபி எதிர்பார்க்கிறது'' என்றவரிடம்,  என்.எஸ்.இ.எல் பற்றிய செய்திகள் ஏதாவது உண்டா என்று கேட்டோம்.

''என்.எஸ்.இ.எல்-ன் புல்லியன் கான்ட்ராக்ட் வர்த்தகம் குறித்து சோக்ஷி அண்டு சோக்ஷி சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்ய இருக்கிறது. எம்.சி.எக்ஸ். நிறுவனத்தின் கணக்குவழக்குகளை பிரைஸ்வாட்டர்ஹவுஸ்-கூப்பர்ஸ் நிறுவனம் சிறப்பு தணிக்கை செய்ய இருக்கிறது. இந்தத் தகவல்களை பார்வேர்டு மார்க்கெட் கமிஷன் தலைவர் ரமேஷ் அபிஷேக் சொல்லி இருக்கிறார்.

என்.எஸ்.இ.எல்-ன் தாய் நிறுவனமான ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் (எஃப்.டி) அதற்கு சொந்தமான சிங்கப்பூர் மெர்க்கன்டைல் எக்ஸ்சேஞ்ச்-ஐ அமெரிக்காவைச் சேர்ந்த இன்டர்கான்டினென்டல் எக்ஸ்சேஞ்சுக்கு 15 கோடி டாலருக்கு (சுமார் 945 கோடி ரூபாய்) விற்பனை செய்துள்ளது. இந்தத் தொகை நடப்பு ஆண்டு இறுதிக்குள் எஃப்.டி நிறுவனத்துக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று என்.எஸ்.இ.எல் முதலீட்டாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மொத்தம் தரவேண்டிய 5,000 கோடியில் இந்த 945 கோடி ரூபாய் என்பது ஐந்தில் ஒரு பங்குதான். ஆனால், இந்தக் பணத்தைக்கொண்டு சிறு முதலீட்டாளர்களுக்கு போய்சேரவேண்டிய பணத்தைத் தந்துவிடலாமே என்பதுதான் நியாயமாக யோசிக்கிறவர்களின் கோரிக்கை'' என்றார் ஷேர்லக்.

''வேறு என்ன செய்தி?'' என்று கேட்டோம். ''அண்மையில் கிரெடிட் சூசே நிறுவனம், 3,700 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் கடன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது. இதில் 34 சதவிகித நிறுவனங்களின் கடன் மிகவும் அதிகரித்துள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் அவற்றின் கடனை திரும்பக்கட்ட முடியாமல் இருக்கின்றன அல்லது மறுசீரமைப்பு செய்து வருகின்றன. இந்திய வங்கிகளின் கடன் மறுசீரமைப்பு தொகை இப்போது ரூ.3.3 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.

வங்கிகளின் நிகர வாராக் கடன் 1% அதிகரித்தால் வங்கிகளின் நிகர சொத்து மதிப்பு அதிகரிப்பில் 5% வீழ்ச்சி ஏற்படும். அந்தவகையில் தற்போதைய நிலையில் வங்கிப் பங்குகள் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது என்றாலும், எச்சரிக்கையுடன் செயல்படுவது மிக அவசியம்'' என்றவர் மீண்டும் மழை கோட்டை போட்டுக்கொண்டு ''அடுத்தவாரம் பார்ப்போம்'' என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு