Published:Updated:

சந்தை ஏற்றஇறக்கம்: சாதகமாக மாற்றிக்கொள்வது எப்படி?

சந்தை ஏற்றஇறக்கம்: சாதகமாக மாற்றிக்கொள்வது எப்படி?

பிரீமியம் ஸ்டோரி

இந்திய பங்குச் சந்தை ரோலர் கோஸ்டர் மாதிரி கிடுகிடு ஏற்றத்திலும் இறக்கத்திலும் இருக்கிறது. கடந்த ஒருமாத காலத்தில் சந்தையின் புள்ளிகள் ஓரிரு நாட்களிலேயே சில நூறு புள்ளிகள் ஏறுவதும் இறங்குவதுமாகவே இருக்கிறது. இந்த ஏற்றஇறக்க காலத்தில் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்பு, சந்தை இப்போது ஏற்ற இறக்கத்துடன் இருப்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

ஏன் ஏற்றஇறக்கம்?  

* அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் நாட்டில் காணப்படும் நிலையற்ற தன்மை...

* இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச கரன்சிகளின் செயல்பாட்டை பொறுத்து இருக்கிறது. அந்தவகையில் அதில் ஏற்படும் மாற்றம் கமாடிட்டி விலையில் பிரதிபலிப்பது...

* அமெரிக்காவின் கடன் வாங்கும் அளவு, ஊக்குவிப்பு சலுகைகள் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள்  ஆகியவற்றால் ஏற்படும் பணப்புழக்க நெருக்கடி...

* இந்தியாவில் நிலவும் அதிக பணவீக்க விகிதம், குறையும் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜி.டி.பி), அதிகரித்துவரும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை...

சந்தை ஏற்றஇறக்கம்: சாதகமாக மாற்றிக்கொள்வது எப்படி?

எப்படி கையாள்வது?  

சந்தையின் ஏற்றஇறக்கத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நன்கு சம்பாதிக்க வாய்ப்புண்டு. ஏற்றஇறக்க காலத்தில் நல்ல பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கும். சந்தை ஏற்றஇறக்கத்தோடு இருக்கும் சமயத்தில், உங்கள் அசெட் அலோகேஷன், உங்கள் இலக்கு ஆகிய இரண்டு விஷயங்களைப் பார்க்கவேண்டும். அவற்றைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறேன்.  

அசெட் அலோகேஷன்!

சந்தையின் ஏற்றஇறக்கத்தில், உங்கள் அசெட் அலோகேஷனை சரியாகப் பயன்படுத்தினால் லாபம் ஈட்ட முடியும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு தீவிர பங்கு முதலீட்டாளர். இப்போது உங்கள் கடன் - பங்கு அசெட் அலோகேஷன் 20-80 என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, உங்களின் முதலீடு 20% கடன் சார்ந்த திட்டங்களிலும், 80% பங்கு சார்ந்த திட்டங்களிலும் இருக்கிறது.

தற்போது சந்தை ஏறும்போது, பங்குகளை அல்லது பங்கு சார்ந்த முதலீட்டை விற்று கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். இதுவே, சந்தை இறக்கத்தில் இருந்தால் கடன் சார்ந்த திட்டங்களிலிருந்து பணத்தை எடுத்து பங்கு அல்லது பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.  அதாவது, மோசமான செய்திகளின்போது பங்குகளை வாங்கி, நல்ல செய்தி வரும்போது பங்குகளை விற்றுவிடுங்கள்.

சந்தை ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது  இறக்கத்தில் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா?

இதற்கு ஸ்டாக் இண்டெக்ஸ் குறியீட்டின் பி/இ விகிதத்தைக் கவனிக்கவேண்டும். உதாரணத்துக்கு, கடந்த ஐந்தாண்டு காலத்தில் பி.எஸ்.இ சென்செக்ஸ் குறியீட்டின் சராசரி பி/இ மடங்கு 15 என்று வைத்துக்கொள்வோம். தற்போது சென்செக்ஸின் பி/இ 17-ஆக  இருந்தால் பங்கு முதலீட்டின் ஒருபகுதியை விற்கவேண்டும். இதுவே, 15-க்கு கீழே இருந்தால் புதிய முதலீட்டை அதிகரிக்க வேண்டும். தற்போது சென்செக்ஸ் பி/இ 17-ஆக இருப்பதால், பங்கு முதலீட்டின் ஒரு பகுதியை விற்று, கடன் சார்ந்த திட்டங்களுக்கு மாறலாம்.  

உங்கள் இலக்கு!  

சந்தை ஏற்றஇறக்கம்: சாதகமாக மாற்றிக்கொள்வது எப்படி?

சந்தை ஏற்றஇறக்கத்தோடு இருக்கும்போது,  சந்தைக்குள் நுழையும்முன்பே உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, நீங்கள் 'ஏ’ என்கிற பங்கில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் எனில், விற்கும் விலையை முன்கூட்டியே நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.  உங்கள் இலக்கு விலை வந்தவுடன் மறக்காமல் பங்கை விற்றுவிடுங்கள். இதற்கு மாறாக, விலை இன்னும் இறங்கும்; அப்போது வாங்கலாம் என்றோ, விலை இன்னும் அதிகரிக்கும்; அப்போது விற்கலாம் என்றோ நினைக்கக் கூடாது. பல முதலீட்டாளர்கள் இப்படி முடிவை மாற்றிக்கொள்வதால்தான் லாபத்தை இழக்கிறார்கள். முதலீட்டில் ஒழுங்கைப் பின்பற்றினால்தான், பயம் மற்றும் பேராசையிலிருந்து தப்பலாம்.  

எந்த விலையில் ஒரு பங்கை விற்கவேண்டும் என்பதை எப்படி நிர்ணயிப்பது?

உதாரணத்துக்கு, கடந்த ஓராண்டுகாலமாக ஒரு பங்கின் விலை ரூ.450 மற்றும் ரூ.700 இடையே வர்த்தகமாகி வருகிறது. இந்நிலையில், நுழைவு விலை ரூ.525, வெளியேறும் விலை

ரூ.650 என நிர்ணயித்துக்கொண்டால் நிச்சயம் லாபம் பார்க்க முடியும். மேலும், மியூச்சுவல் ஃபண்டுகள் இந்த யுக்தியை சரியாகச் செய்யும் என்பதால், வாலட்டைலிட்டி சார்ந்த ஃபண்டுகளிலும் (உதாரணத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டு) முதலீடு செய்யலாம்.

தொகுப்பு: சி.சரவணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு