Published:Updated:

எடக்கு மடக்கு:பணம் போச்சுன்னா சம்பாதிச்சிடலாம்...

உயிர் போச்சுன்னா..!

பிரீமியம் ஸ்டோரி
##~##

பெங்களூரு ஏடிஎம் சம்பவம் பத்தி என்ன நினைக்கிறே ஏகாம்பரம்னு கேக்குறீங்களா? என்னத்தைச் சொல்ல, அதைப் பார்த்துட்டு உடைஞ்சுபோயி உக்கார்ந்திருக்கேன். சின்னப் பயலா இருந்தப்ப எங்க வீட்டு தெருமுனையில பேங்க் ஒண்ணு இருந்துச்சு. என் அப்பாருகூட நான் பேங்குக்கு அப்பப்ப போவேன். வேலை செய்யற எல்லாரும் பிராஞ்சுக்குள்ள திறந்த வெளியில உட்கார்ந்திருப்பாங்க.

ஆனா, இரண்டுபேரு மட்டும் கூண்டுக்குள்ள உட்கார்ந்திருப்பாங்க. எங்க அப்பாருகிட்ட 'ஏன் இவங்க மட்டும் கூண்டுக்குள்ளார இருக்காங்கன்னு சொல்லுங்க டாடி  சொல்லுங்க’ன்னு கேட்டு உயிரை எடுப்பேன். 'அடேய்! அவங்க ரெண்டுபேரும் பணம் வச்சிருக்காங்கடா’ம்பாரு. 'நீ கூடதாம்பா பேங்கில இருந்து பணம் எடுத்து கையில வச்சுருக்கே. நீ கூண்டுக்குள்ளார இல்லாம சைக்கிள்ல போறயே’ன்னு கேப்பேன். 'நிறையப் பணம் வச்சிருக்காங்கடா’ன்னுச் சொல்லுவாரு. ஓ! நிறைய பணம் வச்சிருந்தா சேஃப்டியா கூண்டுக்குள்ள இருக்கணும் போலிருக்கு. கொஞ்சமா பணம் இருந்தாதான் ஜாலியா சைக்கிள்ல போகலாம் போலிருக்குன்னு நினைச்சுக்குவேன்.  

அப்புறம் நான் வேலைக்குப் போய் பேங்குல கணக்கு தொடங்கி மூணாம் தேதி சம்பளம் போட்டவுடனேயே பேங்குக்குப் போய் பணம் எடுப்பேன். கூட்டம் முண்டியடிக்கும். 'ஏங்க முதல் வாரத்துல இப்படி கூட்டம்?’னு கேட்டா, 'சம்பளம், பென்சன் அப்படீன்னு எல்லோரும் பணம் எடுக்க வருவாங்க ஏகாம்பரம்’னு என் நண்பன் சொல்வான்.

அப்புறமா நான் பார்த்த அதிசயம், ஏடிஎம்.! எரிச்சல் இல்லாம, எச்சை பண்ணாம நோட்டை எண்ணி வெளியில தள்ளும். ஏடிஎம்முல பணம் எடுத்தா, எல்லாம் புதுநோட்டுதான்னு இருந்த காலம் அது. சம்பளக் கணக்கை மாத்துறதுக்கு ஏடிஎம் கார்டு தர்றேன்னு தூண்டிலைப் போடுவாங்க. எங்க ஹெச்ஆர் அதுக்கு மயங்கி எல்லாரோட சம்பளத்தையும் அந்த வங்கிக்கு மாத்திட்டாரு. இதேமாதிரி எல்லா கம்பெனிக்கும் போட்டு கடைசியா சம்பள தேதியன்னைக்கு ஏடிஎம் வாசல்ல ரேஷன் கடை மாதிரி க்யூ நின்னுச்சு.

அப்புறம் பார்த்தா கொஞ்சம் கொஞ்சமா சந்துக்கு சந்து, ஊருக்குள்ளே, ஊருக்கு வெளியிலேன்னு ஏடிஎம் வந்துச்சு. இப்ப பேங்க் கொள்ளை மாதிரி ஏடிஎம் கொள்ளையும் வந்துடுச்சு. பேங்கில கொள்ளை நடந்தாப் போறது பேங்கோட பணம். இன்ஷூரன்ஸ்காரங்க தந்துடுவாங்க. ஆனா, ஏடிஎம் கொள்ளையில  கணக்கு வச்சிருக்கவங்களுக்குதான் பாதிப்பு நடக்குது. அட, பணம் போனாகூட சம்பாதிச்சுக்கலாங்க. உயிர் போச்சுன்னா, யாருகிட்ட முறையிடுறது?

எடக்கு மடக்கு:பணம் போச்சுன்னா சம்பாதிச்சிடலாம்...

எனக்கு ஒரு டவுட்டுங்க. பேங்குல பணம் இருக்குதுங்கறதுக்காக கூண்டுலயும் துப்பாக்கியோட புஸ்டிமீசை வச்ச காவலாளியை யும் நிறுத்தி வச்சிக்கிறாங்க. ஏடிஎம்மும் பேங்கோட ஓர் அங்கம்தானே, அங்க எதுக்குங்க பாவம் வயசானவங்களை டூட்டி போடறீங்க? அதுவும் செக்யூரிட்டி ஏஜென்சி வழியா? எல்லா செக்யூரிட்டியும் சிக்ஸ்பேக் வச்சுகிட்டா இருக்காங்க? ஊதினா பறந்துபோறமாதிரி வயசானவங்களா இல்ல இருக்காங்க!

இதைவிட கொடுமை, நிறைய ஏடிஎம்-ல நடக்குமுங்க.  இந்த கொஞ்சநஞ்ச செக்யூரிட்டியும் அங்க கிடையாது. என் அனுபவம் என்னோட நண்பருங்க அனுபவமுன்னு எதை வச்சுப் பார்த்தாலும் செக்யூரிட்டின்னு ஒருத்தரு இருந்தாலும் இல்லேன்னாலும் ஏடிஎம்-ல சுத்தமா செக்யூரிட்டிங்கிறதே கிடையாது!

ஏடிஎம்-ல செக்யூரிட்டிதான் இல்லேன்னா,   சுத்தமும் இல்லீங்க. பணம் வராத ரிப்பேரான ஏடிஎம்முக்குள்ள போய்ப்பாருங்க. பிரின்டாகி வர்ற பேப்பரைக் கிழிச்சுகிழிச்சுப் போட்டு ஒரு மலைமாதிரி குவிச்சு வச்சிருப்பாங்க. சாப்பாட்டு டைமுல போங்க, பிரியாணி வாசம் தூக்கலா இருக்கும். கொஞ்சம் ரிமோட்டா இருக்குற ஏடிஎம்-ல டாஸ்மாக் ஐட்டம் வாசனையெல்லாம் தூக்குதுன்னு நண்பர்கள் சொல்றாங்க.  

அதிலேயும் சில செக்யூரிட்டிங்க அடிக்கிற லூட்டிதாங்க தாங்க முடியலை! ரீஸன்டா ஒரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் பணம் எடுக்கலா முன்னு ஏடிஎம்முக்குப் போனா செக்யூரிட்டி பேண்டைக் கழட்டி மாத்திக்கிட்டிருக்காரு.

சரி டூட்டி சேஞ்ச் டைம் போலன்னு அடுத்த ஏடிஎம்முக்குப் போனா செக்யூரிட்டி வெளியில உட்கார்ந்திருந்தாரு. உள்ளார ஒரு ஆளு செல்போன் பேசிக்கிட்டிருந்தாரு! சரி, பேங்கு கஸ்டமருபோலன்னு நினைச்சு வெயிட் பண்ணினா ஹாயா இருபது நிமிஷம் போன் பேசிட்டு வெளியில வந்த அவரு அந்த மொத்த காம்ப்ளக்ஸோட செக்யூரிட்டி. சவுண்டு ப்ரூப் ரூமா ஏடிஎம் ரூமை யூஸ் பண்ணிக்கிட்டிருக்காரு. மெதுவாச் சொல்றாரு, இது வேலை செய்யறதில்லீங்கன்னு. பல ஏடிஎம்முல பல இடத்துல ஏடிஎம் ரூமை குடியும் (!) குடித்தனமும் நடத்துற இடம் மாதிரி உபயோகிக்கிறாங்க.

ஏடிஎம் ரூமுக்குள்ள போறதுக்கு ஏடிஎம் கார்டை உபயோகிச்சாதான் போகமுடியுமுன்னு இருந்ததெல்லாம் ஒருகாலம். இப்பல்லாம் எல்லா ஏடிஎம்-லயும் எப்போதும் கதவு பாதி திறந்திருக்கும். வாசலில செக்யூரிட்டி தூங்கிட்டு இருப்பாரு! இதுதாங்க வழக்கமா இருக்குது.

ஒருத்தரு கிரெடிட் கார்டை தொலைச்சுட்டாரு. பணத்தை ஏடிஎம்முல யாரோ லவட்டிட்டாங்க. செல்லுல பணம் எடுத்த மெசேஜ் வந்ததும் கார்டு

தொலைஞ்சிடுசுன்னு தெரிஞ்சு உடனே பேங்கோட கஸ்டமர் கேருக்கு போனைப் போட்டாராம். இங்கிலீஷ§க்கு எண் ஒன்றை அமுக்கவுமுன்னு ஆரம்பிச்சு பல ரிக்கார்டட் மெசேஜைத் தாண்டி கார்டு

தொலைஞ்சிடுச்சுங்கன்னு கதறி பிளாக் பண்றதுக்குள்ள திருடுனவன் மூணு தடவை அதே ஏடிஎம்முல பணத்தை எடுத்துட்டான். பேங்குல கேட்டா, 'பின்நம்பரை நீங்க ஏன் கிரெடிட் கார்டு பவுச்சுல குறிச்சு வச்சீங்க’ன்னு கடிச்சு குதறுனாங்களாம்.

கார்டுல பணம் எடுத்தது யாருன்னு பார்க்கலாமுன்னு ஏடிஎம்முல இருந்த கேமராவில பதிவான வீடியோவைப் பார்த்தா, பின்னால இருந்த லைட் எறியாததால முகம் கரேலுன்னு இருந்துச்சாம். பணம் போனதும்போக, பத்துதடவை பேங்குக்குப் போனதுதாங்க மிச்சமுன்னு அலுத்துக்கிட்டாரு அவரு. கேமராதானே வைக்கணும். வச்சாப்போச்சுன்னு வச்சுடறாங்க. லைட்டிங் எப்படியிருக்கணும்னு யோசிக்கிறதேயில்லீங்க.

அதேமாதிரி செக்யூரிட்டிதானே போடணும் போட்டுட்டாப் போச்சுன்னு ஓர் ஆளை உக்கார வச்சிடறாங்க. செக்யூரிட்டி இல்லாத இடத்துல அட்லீஸ்ட் ஷட்டரை சாத்த முடியாத மாதிரி லாக் பண்ணியாவது வச்சிருக்கலாமில்லீங்க. ரோடுல போறவங்களாவது அசம்பாவிதம் ஏதாவது நடந்தா உதவ முன்வருவாங்க. அதை விட்டுட்டு ஷட்டரை இறக்கறதுக்கு தோதா இருந்ததனாலதானே பெங்களூருல ஒரு பெண்ணை மண்டையில் வெட்டிய கொடிய சம்பவம் நடந்துடுச்சு.

இப்ப என்னோட சின்னவயசு சந்தேகம் ஊர்ஜிதமாயிடுச்சுங்க. பேங்குல பணம் இருந்தா சேஃப்டி வேணும். ஏன்னா அதுக்கு பேங்கு பொறுப்பு. அதுமாதிரி ஊருக்கு உள்ளேயிருக்கிற காம்ப்ளக்ஸிலேயோ, இல்லை ஊருக்கு வெளியில இருக்கிற இடத்திலேயோ எங்கேயிருந்தாலும் ஏடிஎம்மும் பேங்கோட வளாகத்தின் ஓர் அங்கம்தானே!

எப்படி பேங்கு பிராஞ்சுக்கு ரிசர்வ் வங்கி சில கடுமையான சட்டதிட்டங்கள் வகுத்திருக்கோ, அதேமாதிரி கடுமையான சட்டதிட்டங்களை ஏடிஎம்முக்கும் வகுக்கணும். சட்டம் வகுத்தா மட்டும் பத்தாதுங்க! நடைமுறையில எப்படியிருக்குன்னு ஒரு ஏஜென்சி வழியா திடீர் சோதனை நடத்தி ஃபைனைப் போடணும்.

பல தடவை தப்பு நடந்தா ஏடிஎம் சென்டருக்கு சீல்வச்சு இந்த வங்கியோட ஏடிஎம்மை சீல் வச்சுட்டோமுன்னு பேப்பரில விளம்பரம் போடணும். அப்பதான் நம்மளை மாதிரி கஸ்டமருங்க தலைதப்பும். இல்லாட்டி ஏடிஎம்முக்குள்ள இசட் கேட்டகிரி செக்யூரிட்டி வச்சுக்கிட்டுதான் போறமாதிரி நிலைவந்துடும். கரெக்டுங்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு