Published:Updated:

உனக்கும் மேலே நீ!

இளைஞர்களே சிந்தியுங்கள், செயல்படுங்கள் 2

##~##

சொல்ல நினைக்கிற விஷயத்தைக் குழப்பம் இல்லாமல் தெளிவாகச் சொல்ல முயற்சிக்க வேண்டும். அதேநேரத்தில், முடிந்தவரை அதை அழகாகவும் சொல்லவேண்டும்.

நான் ஒருமுறை சொன்னா, நூறுமுறை சொன்னமாதிரி...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாழ்க்கை ஒரு வட்டம்டா... இதுல ஜெயிக்கிறவன் தோப்பான்... தோக்கிறவன் ஜெயிப்பான்...

நம் ஊரில் இதுமாதிரியான பஞ்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமே கிடையாது. இந்த டயலாக்குகள் திரையில் ஒலிக்கும்போது, அரங்கங்கள் இன்றும் அதிர்வது என்னவோ உண்மை.

சினிமாவை நிஜமென்று நம்பும் இன்றைய நம் இளைஞர்கள், இதுமாதிரியான பஞ்ச் டயலாக்குகளை இஷ்டத்துக்குச் சொல்லி தங்களை  பெரிய ஹீரோவாக நினைத்துக்கொள்கிறார்கள். இது மாயை என்பது  யதார்த்தமான உலகில் அடிபடும்போதுதான் தெரிந்துகொள்கிறார்கள்.

சினிமா ஹீரோக்களைபோல, நிஜ வாழ்க்கையில் நாம் பேசும் பேச்சு மிகப் பெரிய எஃபெக்ட்டை உருவாக்க நாம் என்ன செய்யவேண்டும்?

உனக்கும் மேலே நீ!

நம்முடைய கம்யூனிகேஷன் மந்திரங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். கம்யூனிகேஷனிலேயே மந்திரமா என்று ஆச்சர்யப்படாதீர்கள்.

நாம் எதைப்பற்றி பேசினாலும் யோசித்துப் பேசுவதில்லை. சொல்லப்போகிற விஷயங்கள், எந்த மாதிரி மக்களைச் சென்றடையப் போகிறது, நம்முடைய டார்கெட் ஆடியன்ஸ் யார்? அவர்களுக்குப் புரியறமாதிரி வார்த்தைகளும், உதாரணங்களும், மொழியும் நம்மிடம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்துவிட்டு, பேசுவதில்லை. இந்த மூன்று விஷயங்களிலும் கைதேர்ந்தவர்கள், எப்படிப்பட்ட மக்கள் கூட்டத்தில் பேசினாலும், எதைப் பற்றி பேசினாலும் சரி, அந்த மக்களின் கைதட்டலை நிச்சயம் வாங்கிவிடுவார்கள். சாதாரண பேச்சு,  மந்திரங்கள் நிறைந்த கம்யூனிகேஷனாக மாறுவது  இப்படித்தான்.

அதாவது, நம்முடைய கம்யூனிகேஷனானது எதையும் சுருக்கமாக, மற்றவர்களுக்கு எளிதில் புரியவைக்கிற மாதிரி இருக்க வேண்டும். அந்த விஷயத்தைப் புரிந்துகொண்டார்களா என்பதை நாம் உறுதிபடுத்திக்கொள்ளவும் வேண்டும். கேட்கிறவர்களும் அந்த விஷயம் தங்களுக்குப் புரிந்துவிட்டது என்பதைச் சொல்லிவிட்டால், கம்யூனிகேஷன் ஓவர்.

நாம் சொல்ல நினைக்கிற விஷயங்கள், தனிமனிதருக்காக இருந்தாலும் சரி, கூட்டாக இருக்கும் மக்களுக்காக இருந்தாலும் சரி, அலுவலகமோ, வீடோ அல்லது இதர உறவுகளோ அது எப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கும் என்பதை அளந்து பார்க்கும் 'டெக்னிக்’ நமக்குப் புரிந்துவிட்டது எனில், நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் நிச்சயம் கூடிவிடும்.

உனக்கும் மேலே நீ!

சாதாரணமாக நாம் பேசுவதற்கும், இந்த கம்யூனிகேஷனுக்கும் என்ன வித்தியாசம்?

நாலு இளைஞர்கள் ஓரிடத்தில் கூடி பேச ஆரம்பிக்கிறார்கள்.

'மங்காத்தாவுல நெகட்டீவ் ரோல்ல தல அசத்திட்டாருல்ல'', ''அதை விடு மச்சி, எங்க தளபதி, துப்பாக்கியில கௌப்பிட்டாரு பாத்தியா?'', ''அது கெடக்கட்டும், நம்ம டோனி வேர்ல்டு கப் ஃபைனல்ல கடைசியில ஒரு சிக்ஸர் அடிச்சுட்டு கூலா நின்னாரு, சூப்பர் இல்ல?'

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சிலாகித்துப் பேசிவிட்டு கலைந்துபோய்விடுகிறோம். இது ஒரு பொழுதுபோக்கான பேச்சே! இந்தமாதிரியான பேச்சுகள் நமக்குள் எந்தத் தாக்கத்தையும் உண்டு பண்ணுவதில்லை. ஐஸ்ட் டாக்தான். ஆனால், கம்யூனிகேஷன் என்பது இதுவல்ல. கம்யூனிகேஷனில் ஒரு நோக்கம் இருக்கும். சில தெளிவான புரிதல்களை அது உருவாக்கும்.

'கொஞ்சம் புரியறமாதிரிதான் பேசேன்''

''நீ சொல்றது ஒரு மண்ணும் புரியல?'

'சொல்லவர்ற விஷயத்தைச் சொல்லாம ஏன் இப்படி மென்னு முழுங்குறே?''

'இட்லிக்கு சாம்பார், சட்னி இல்லைங்கறதையே, ஏதோ பெரிய தத்துவம் மாதிரி சொல்றியே!''

ஒருவருடைய கம்யூனிகேஷன் சரியாக இல்லாதபோது எதிரில் இருப்பவர் கடுப்போடு சொல்லும் வார்த்தைகள் இவை. ஒரு கம்யூனிகேஷன் எப்படி இருக்க வேண்டும்?

சொல்ல நினைக்கிற விஷயத்தைக் குழப்பம் இல்லாமல் தெளிவாகச் சொல்லுகிறமாதிரி இருக்கவேண்டும். அதேநேரத்தில், முடிந்தவரை அதை அழகாகவும் சொல்லவேண்டும். மக்கள் போற்றும் பெருந்தலைவர்களுக்கு இந்தத் திறமை பெரிய அளவில் உண்டு. இந்தத் திறமை அவர்களிடம் நிறைய இருப்பதால்தான் அவர்கள் மக்கள் போற்றும் தலைவர்களாக இருக்கிறார்கள். உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் மதிப்பு தரவேண்டும் எனில், நீங்களும் அந்தத் தலைவர்கள் போல கம்யூனிகேஷன் கலையைக் கற்றுத்தேர்ந்தவராக இருக்கவேண்டும்.

உனக்கும் மேலே நீ!

நீங்கள் ஒரு கம்யூனிகேஷன் எக்ஸ்பர்ட் ஆகவேண்டுமெனில், அதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன.

1. நீங்கள் பேசுவதற்கு முன்பு அந்த விஷயத்தைப் பற்றி நன்கு தயார் செய்துகொண்டு பேசுங்கள்!

2. நீங்கள் எந்தமாதிரியான மக்கள் முன்பு பேசப்போகிறீர்கள், அவர்களின் தரம் என்ன என்பதை அறிந்துகொண்டு, அதற்கேற்ற மொழியைத் தேர்ந்தெடுங்கள்!

3. எப்போதும் பாசிட்டிவ்-ஆக பேசுங்கள்!

4. வார்த்தைகளை முன்னே எது, பின்னே எதுன்னு சீராக வரிசைப்படுத்துங்கள்!

5. நீங்கள் பேசும்போது, குட்டிக் குட்டியாக கதைகள், பழமொழிகளை உதாரணம் காட்டுங்கள். தேவைப்பட்டால், கேட்கிறவர்களின் ரசனைக்கேற்ப கொஞ்சம் காமெடி கலந்து பேசுங்கள்!

6. மற்றவர்களையும் கொஞ்சம் பேசவிட்டு, அவர்களின் கருத்துகளை எல்லோரும் கேட்க செய்யுங்கள். அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முயலுங்கள்!

7.  அநாகரிகமான வார்த்தைகளை பேசாதீர்கள்!

8. அடுத்தவர்களை முடிந்த அளவு பாராட்டுங்கள், ஆனால், ஐஸ் வைக்காதீர்கள்!

9. நீங்களாக எதையும் தீர்மானம் செய்துகொண்டு, பேசாதீர்கள்!

10. எதைப் பேசினாலும் உண்மையைப் பேசுங்கள்!

11. நீங்கள் பேசுவதை அடுத்தவர்கள் நம்புகிற மாதிரி நடந்துகொள்ளுங்கள்!

12. முடிந்தவரைக்கும், அடுத்தவர்களைக் குறை சொல்லாத மாதிரி உங்கள் பேச்சு அமையட்டும்!

13. இயல்பாக இருங்கள். அடுத்தவர்கள் உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டினால், அது உண்மையாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அதைச் சுட்டிக்காட்டியதற்காக பாராட்டுங்கள்!

14. பொய்ப் பேசாதீர்கள். எந்தவகையிலும் பொய்யான தகவல்களையும் கொடுக்காதீர்கள்!

15. எல்லாவற்றுக்கும் மேலாக, சுருக்கமாகப் பேசுங்கள். 'அட, அதற்குள் பேசி முடித்துவிட்டாரே’ என்று மற்றவர்கள் சொல்கிற மாதிரிதான் உங்கள் பேச்சு அமையவேண்டுமே தவிர, நீங்கள் பேசும்போது கும்பலாக கைதட்டி, போய் உட்கார் என்று சொல்கிறமாதிரி இருக்கக்கூடாது!

நிறையபேர் இங்கிலீஷில் பேசுவதுதான் பெஸ்ட் கம்யூனிகேஷன் என்று நினைக்கிறார்கள். கேட்கிறவர்களுக்கு எந்த மொழியில் சொன்னால் ஒரு விஷயம் புரியுமோ, அந்த மொழியில்தான் பேசவேண்டுமே தவிர, உங்கள் புலமையை எடுத்துக்காட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. எளிமையாகப் பேசுங்கள்; யாரை வேண்டுமானாலும் நீங்கள் வென்றுவிடுவீர்கள்.

(மேலே செல்வோம்)

படம்: சொ.பாலசுப்ரமணியன்.