Published:Updated:

ஷேர்லக் 10 பங்குகளுக்கு தடை!

ஷேர்லக் 10 பங்குகளுக்கு தடை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''அருமை, அருமை! உம்முடைய 9-ம் ஆண்டுச் சிறப்பிதழ் அருமை! அத்தனை கட்டுரைகளையும் படித்துமுடிக்க, வாசகர்களுக்கு இந்த வாரம் போதாது!''

வந்ததும் வராததுமாக நம் மீது ஐஸ் மழை பொழிந்தார் ஷேர்லக். டிசம்பர் குளிரில் ஏற்கெனவே நடுங்கிக்கொண்டிருந்த நாம், ''நன்றி, செய்திகளைச் சொல்லுங்கள்'' என்றோம்.

''சந்தையில் ஓர் ஏற்றம் வரும் என்றுதான் பலரும் சொல்கிறார்கள். கடந்த வாரத்தில் ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தல் எக்ஸிட் சர்வே முடிவு பா.ஜ.க.வுக்கு சாதகமாக வந்ததை வைத்தே பெரிதாக சந்தையை உயர்த்திவிட்டார்கள். இந்த ஏற்றம் அடுத்த வாரம் தொடரவே செய்யும் என்கிறார்கள் என் டெக்னிக்கல் அனலிஸ்ட் நண்பர்கள்.

தற்போதைய நிலையில், நிஃப்டி 6311 புள்ளிகளைத் தாண்டினால் 6357-க்கும், அதன்பிறகு 6571-க்கும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம்,  6220-க்கு கீழே இறங்கினால் 6180-க்கும், அதற்கும் கீழே இறங்கினால் 6155-க்கும் இறங்க வாய்ப்பு உள்ளது.

2008-ல் சென்செக்ஸ் 21206 என்கிற உச்சத்தைத் தொட்டது. கடந்த மாதத்தில் (2013 நவம்பர்) 21321 என்கிற ஆல்டைம் உச்சத்தை சென்செக்ஸ் அடைந்தது. சென்செக்ஸ் முன்பைவிட ஏறக்குறைய 70 புள்ளிகள் அதிகரித்துவிட்ட நிலையில், நிஃப்டியும் ஏற்கெனவே அடைந்த உச்சத்தைக் கூடியவிரைவில் அடைவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.

நிஃப்டி 2008 ஜனவரியில் 6357 என்கிற உச்சத்தைத் தொட்டது. கடந்த மாதத்தில் (2013 நவம்பர்) ஆல்டைம் உச்சமாக 6317 புள்ளிகளைத் தொட்டது. கூடியவிரைவில் நிஃப்டியானது 6357 என்கிற நிலையைத் தாண்டும்பட்சத்தில் அடுத்து 7200, 7500 என்கிற நிலையை அடையும் என்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றவருக்கு, மிர்ச்சி பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன் தந்தோம்.  

ஷேர்லக் 10 பங்குகளுக்கு தடை!

''என்.எஸ்.இ.-ல் சில பங்குகள் திடீரென நிறுத்திவைக்கப்படுகிறதாமே, என்ன விஷயம்?'' என்று கேட்டோம்.

''பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் விதிமுறைகளைப் பின்பற்றாத ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ், ஏசியன் எலெக்ட்ரானிக்ஸ், எட்சர்வ் சாஃப்ட்சிஸ்டம், அமர் ரெமடீஸ், அக்வா லாஜிஸ்டிக்ஸ், பிர்லா பவர் சொல்யூஷன்ஸ், ஃபர்ஸ்ட் லீஸிங் கம்பெனி ஆஃப் இந்தியா, ஜியோடெசிக், கே.டி.எல். பயோடெக், கிட்ஃப்ளே இண்டஸ்ட்ரீஸ், கே.எல்.ஜி. சிஸ்டெல் ஆகிய பத்து நிறுவனப் பங்குகளை என்.எஸ்.இ நிறுத்தி வைக்கப்போகிறது. இது டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் பங்குகளை வாங்கி இருப்பவர்கள் உடனடியாக தலையைச் சுற்றி தூர எறிந்துவிடுவது நல்லது'' என்றார் ஷேர்லக், பஜ்ஜியை சாப்பிட்டபடி.

''செபி தலைவர் யூ.கே.சின்ஹா மீது மத்திய அரசு அதிக நம்பிக்கை வைத்திருக்கும் போலிருக்கே?'' என்று விசாரித்தோம்.

''சின்ஹாவின் பதவிக்காலம், 2014 பிப்ரவரியுடன் முடிகிறது. அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலத்துக்கு பதவி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்'' என்றவருக்கு, டீ தந்தோம்.

''யுனிடெக் பங்கு விலை ஒரே நாளில் 10% வீழ்ச்சிகண்டிருக்கிறதே, என்ன காரணம்?'' என்று கேட்டோம்.

''இந்த நிறுவனம், எல்.ஐ.சி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய 200 கோடி ரூபாய் கடனை சரியான நேரத்தில் கட்டமுடியாமல் சிக்கலில் சிக்கி இருப்பதாகவும், இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானதே இதற்கு காரணம். ஆனால், யுனிடெக் பெயரில் தற்போது கடன் எதுவும் இல்லை. நோட்டீஸும் அனுப்பவில்லை என எல்.ஐ.சி ஹவுஸிங் நிறுவனம் அறிக்கைவிட்டுவிட்டது. விலையை இறக்கவேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே சிலர் புரளியைக் கிளப்பிவிடுகிறார்கள், உஷார்'' என்றார்.

''பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஃபாலோ ஆன் ஆஃபருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறதே?'' என்றோம்.    

''ஆமாம், அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. சுமார் 5 மடங்குக்கும் அதிகமாக பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 78.70 கோடி பங்குகள் விற்பனைக்கு உள்ள நிலையில் 375.73 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எந்த பங்குக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை'' என்றார்.

''வேறு என்ன செய்தி?'' என்றோம்.

''என்.எஸ்.இ.எல் பிரச்னையில் அதன் தாய் நிறுவனமான ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் நிறுவனர் ஜிக்னேஷ் ஷாவின் பல சொத்துகளை மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் முடக்கி இருக்கிறார்கள். ஜிக்னேஷ் ஷாவுக்கு சொந்தமான ரூ.178 கோடி மதிப்புள்ள ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ் பங்குகள், ரூ.51 லட்சம் மதிப்புள்ள இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் பங்குகள், ரூ.11.57 கோடி ஃபிக்ஸட் டெபாசிட், ரூ.1.6 கோடி மதிப்புள்ள புனே நிலம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரையில் மொத்தம் ரூ.2,580 கோடி மதிப்புள்ள 206 சொத்துகள் முடக்கப்பட்டு இருக்கின்றன.

என்.எஸ்.இ.எல் பிரச்னையில் முப்பதுக்கும் மேற்பட்ட புரோக்கர்களை செபி மற்றும் எஃப்.எம்.சி கண்காணிக்க தொடங்கி இருக்கிறது. இந்த புரோக்கிங் நிறுவனங்கள், விதிமுறைகளை மீறி அதிக பரிமாற்றக் கட்டணங்களை வசூலித்தது, போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் சேவை வழங்கியது, மார்ஜின் ஃபண்டு சேவை கொடுத்தது என பல பிரச்னையில் சிக்கி இருக்கின்றன. இதில் 14 நிறுவனங்கள் குஜராத்தையும், 7 ராஜஸ்தானையும் சேர்ந்தவையாக உள்ளன. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் எதுவும் இல்லை என்பது ஆறுதலான விஷயம்''  என்று புறப்படத் தயாரானவரிடம், ''ஷேர் டிப்ஸ் ஏதும் இல்லையா?'' என்றோம்.

''குறுகியகாலத்துக்கு வேண்டுமா னாலும் சொல்கிறேன்'' என்றவர், ஒரு துண்டுச் சீட்டைத் தந்தார். அதிலிருந்த பங்குகள் இவைதான்:

மாருதி,
அதானி பவர்,
ஜே.எம். ஃபைனான்ஷியல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு