Published:Updated:

பணவளக் கலை!

பணவளக் கலை!

பணவளக் கலை!

பணவளக் கலை!

Published:Updated:
##~##

வரவு அதிகரிக்க அதிகரிக்க செலவும் அதிகரிக்கும். செலவுக்கு அஞ்சக் கூடாது. அதேசமயம், செலவை ஒரேயடியாக கட்டுப்படுத்தவும் கூடாது.

கடந்த 26 வாரங்களாக பணவளக் கலையின் பல அத்தியாயங் களைக் கடந்து வந்துவிட்டோம். நிறையப் பணம் சம்பாதிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானத்துக்கு வழிவகை செய்யவேண்டும் என்பதைப் புரிந்தும் கொண்டுவிட்டோம். வேலை மட்டுமே ஒருவரைப் பணக்காரர் ஆக்காது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்டுவிட்டோம். ரிஸ்க் எடுத்தால்தான் ரிவார்டு கிடைக்கும் என்பதையும், ஒவ்வொரு தனிநபரும் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கவேண்டும் என்பதை அவருடைய வரவுசெலவையும் மற்றும் தாங்கும் திறனையும் வைத்தே முடிவு செய்யவேண்டும் என்பதையும் பார்த்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணத்தின் மீதான மனத்தின் தாக்கத்தையும், மனம் எப்படி பணத்தைச் சேர்க்கும்போதும்/ இழக்கும்போதும் செயல்படும் என்பதைக்கூட சிறிய அளவில் நாம் அலசியும்விட்டோம். இந்த நிலையில் தொழில் செய்யுங்கள், தொழில் செய்யுங்கள் என்று மறுபடி மறுபடி சொல்கிறீர்களே, எந்தத் தொழிலைச் செய்வது என்பதை எப்படி முடிவு செய்வது? என்று நீங்கள் கேட்கலாம்.

ஒரு தொழிலைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் எப்படி அதில் இறங்குவது? ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு சூட்சுமம் கொண்டதாக இருக்கும். சூட்சுமங்களை எப்படி புரிந்துகொள்வது என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றும். இங்கேதான் பணம் சம்பாதிப்பதற்கான தகுதி களை வளர்த்துக்கொள்ள அடுத்த நடவடிக்கையை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்மில் பலரும் பணம் சம்பாதிக்க முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பை மட்டுமே கொண்டிருக்கிறோம். பணத்தைச் சம்பாதிக்க என்னென்ன முயற்சிகளை நாம் இன்றுவரை செய்துள்ளோம் என்று பட்டியலிட்டுப் பார்ப்பதேயில்லை. கொஞ்சம் அந்தப் பட்டியலைப் போட்டுதான் பாருங்களேன்!

பணவளக் கலை!

ஏற்கெனவே நாம் பார்த்ததைப்போல் நம்முடன் வேலை பார்த்த ஒருவரோ/நாம் வாழும் சுற்றுச்சூழலில் வசிக்கும் ஒருவரோ அடைந்த அதிவேகமான வளர்ச்சிதான் நம்முடைய மனதில் நிற்குமே தவிர, அதற்கு அவர் எடுத்த முயற்சி நம் கண்ணில் தெரியாது. என்னுடைய பள்ளி நண்பர் ஒருவர் 1980-களில் கல்லூரி இறுதியாண்டுப் படிப்பை முடித்ததும் 'தொழில் செய்யப்போகிறேன்’ என்று அவருக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபரிடம் சொல்லியுள்ளார்.  

'உன்னுடைய இலக்கு என்ன?’ என்று தொழிலதிபர் கேட்டதற்கு, 'ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்தால் போதும். இன்றைக்கே ரிட்டையராகிவிடுவேன்’ என்றாராம். அந்தக் காலத்தில், அவருக்கு ரூபாய் ஐந்து லட்சம் பெரிய பணமாய்த் தெரிந்துள்ளது. தொழிலதிபரோ, 'நீ சொல்வது சாத்தியமில்லை’ என்று சொல்லியுள்ளார். 'என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? என்னால் ஐந்து லட்சம் சம்பாதிக்க முடியாதா?’ என்று நண்பர் கோபப்பட, தொழிலதிபரோ, 'ஐந்து லட்சம் சம்பாதிப்பது பெரிய விஷயமில்லை. ஐந்து லட்சத்தோடு சம்பாத்தியத்தினை சரியாக நிறுத்திக் கொள்வதற்கு தகுந்தாற்போல் செய்யக்கூடிய தொழில் ஒன்றுமில்லை. ஐந்து லட்சத்தோடு நிறுத்திவிடுவேன் என்ற ப்ரொஜக்ஷன் போட்டு தொழில் ஆரம்பிக்கவும் முடியாது. உன் கையில் ஐந்து லட்சம் இருக்கும்போது அந்த அளவுப் பணம் போதுமானதாகவும் இருக்காது’ என்றாராம்.

அந்த இருவரின் விளையாட்டு விவாதம் வலுக்க, பள்ளி நண்பரோ நான் சொல்வது சாத்தியமே (தொழிலில் ஐந்து லட்சம் சம்பாதித்தவுடன் ரிட்டையராவது) என்று வாதிட்டாராம். இறுதியில் தொழிலதிபர் ஒரு கேள்வியைக் கேட்க, பள்ளி நண்பர் வாயடைத்துப் போனாராம். அது என்ன கேள்வி?

பணவளக் கலை!

'உன்னுடைய வயது 21. இன்றைக்கே நான் என்னுடைய பணத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன். இதை நீ திருப்பித்தர வேண்டாம். அடுத்த ஐம்பது வருடத்துக்கு நீ எப்படியும் நலமாய் இருப்பாய் என்று வைத்துக்கொள்வோம். இன்று கிடைக்கும் ஐந்து லட்சத்தை வைத்துக்கொண்டு உன்னுடைய ஐம்பது வருட காலத்தை எப்படி நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்ந்து முடிப்பாய் என்று மட்டும் சொல்’ என்று கேட்க, கூட்டிக் கழித்து கணக்குப்பார்த்து ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தாராம் என்னுடைய பள்ளித் தோழன்.

கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இந்த உரையாடல் பல பாடங்களைத் தரும். சம்பாதித்தல் என்பது ஒரு தொடர் ஓட்டம். நம்மில் பலரும் அதிகப் பணம் சம்பாதித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். இதை கோடீஸ்வரனாக வேண்டும் என்ற எண்ணம் என்றுகூடச் சொல்லலாம். இந்த ஓட்டத்தை ஆரம்பிப்பதற்கு பிரம்மப் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கும். ஓட ஆரம்பித்துவிட்டாலோ நிறுத்துவது என்பதும், அதேஅளவு பிரம்மப்பிரயத்தனம்தான். திட்டம் போட்டமாதிரி இத்தனை ரூபாயில் என்று நிறுத்திவிட முடியாது.

இந்தக் காலத்தில் தொழிலில் இருந்து ஓய்வுபெறுவதற்கான வயதை தொழிலதிபர்களால் நிர்ணயம் செய்துகொள்ள முடிவதில்லை என்பதை நாம் நேரில் பார்க்கிறோம். இத்தனை ரூபாய்தான் என்னுடைய எல்லை என்று நினைத்து நாம் ஓட ஆரம்பித்து நம்முடைய எல்லைக்கோட்டைத் தொடுவதில்லை. இன்ஃப்ளேஷன் போன்ற புறக்காரணிகள் தவிர்த்து நம்முடைய தேவை அதிகரிப்பு

பணவளக் கலை!

போன்ற அகக்காரணிகளும் நம்முடைய எல்லையை அடைவதில் தாமதத்தை உண்டுபண்ணவே செய்யும்.

பணம் சம்பாதித்தல் என்ற தொடர் ஓட்டத்தில் அகக்காரணிகளின் பங்கு மிகமிக அதிகம். 4,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குப்போக ஆரம்பிக்கும்போது பஸ்ஸிலும் போகலாம், டிவிஎஸ்-50யிலும் போகலாம். அதே சம்பளம் 10,000 ரூபாய் ஆகும்போது டூ-வீலர் கட்டாயம் என்று நினைத்துக்கொள்கிறோம். அதுவே சம்பளம் 25,000 ஆகும்போது பல்சர் வைத்துக்கொண்டால்தானே அந்தஸ்து என்றும், 60,000 ஆகிறபோது கார் இருந்தால் நன்றாயிருக்குமே என்று நினைத்து களத்தில் இறங்குகிறோம்.

மாதம் 4,000 ரூபாய் சம்பளம் இருக்கும் போது இருக்கும் மனநிலையிலேயே 60,000 சம்பளம் வரும்போது நாம் இருப்பதில்லை. ஒரு நிலைக்கு மேல் வரவு மேலாண்மையைவிட செலவு மேலாண்மை முக்கியத்துவம் பெற்றுவிடும். இதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

நான்காயிரம் ரூபாய் வருமானமாக இருக்கும்போது வரவு மேலாண்மைதான் முக்கியம். ஒருபக்கம் சம்பளம் வந்தேயாக வேண்டும். செலவுகள் கழுத்தை நெரிக்கும் என்பதால் வரவைக் கூட்டுவதற்கான முயற்சிகள் பலவும் தேவைப்படும். அந்தச் சூழலில் இருக்கிற சம்பாத்தியத்துக்குள் செலவு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் பஸ்ஸுக்கு காத்திருப்பது ஒரு பிரச்னையே இல்லை நமக்கு.

வரவு மேலாண்மையைச் சரிவரச் செய்து, மாதம் 25,000 நமக்கு வர ஆரம்பிக்கும்போது பஸ் ஸ்டாண்டில் நிற்க வெட்கமாக இருக்கும்! மாதம் 60,000 ரூபாய் வர ஆரம்பிக்கும்போது டவுன் பஸ்ஸில் செல்லவே மனம் ஒப்பாது. ஆட்டோ/கால் டாக்ஸி தான். பிஸியாயிட்டோமாம்! அதுவே, லட்சமாகிவிட்டால் காரில்லாமல் ரோட்டில் இறங்கினால் கேவலம் என்றாகிவிடும்.

பணவளக் கலை!

வேலையும் சம்பளமுமே இத்தகைய தேவை அதிகரிப்பைக் கொண்டு வருகிறதென்றால் உடனே செய்வதற்கு ஒரு தொழிலும் இருந்துவிட்டால் என்னவாகும்? வரும் வரவுக்கு இணையாக செலவுகள் போட்டி போடும். இப்படி வரவுக்கும் செலவுக்கும் ஒரு டக்-ஆப்-வார் நடப்பதாலேயே பணம் சம்பாதிக்கும் நம் பயணம் ஒரு தொடர் பயணமாக இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  

இந்தப் பயணத்தில் வரவும் செலவும் இருக்கும். வரவு அதிகரிக்க அதிகரிக்க செலவும் அதிகரிக்கும். செலவுக்கு அஞ்சக் கூடாது. அதேசமயம், செலவை ஒரேயடியாக கட்டுப்படுத்தவும் கூடாது. இந்த லாகவமான நீக்குப்போக்குக் கலையை கற்றுக்கொள்வது பணம் சம்பாதிக்கத் தேவையான முழுமுதல் தேவையாகும்.

வரவை அதிகரிக்க சில அத்தியாவசியச் செலவுகளைச் செய்தேயாகவேண்டும். அந்த அத்தியாவசியச் செலவுகள் என்ன?, எதனால் அவை அத்தியாவசியம்?, அந்தச் செலவுகளைச் செய்ய எந்த விதமான தேர்ச்சிகளை நீங்கள் பெறவேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

(கற்றுத் தேர்வோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism