Published:Updated:

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

வாழவைக்கும் வாட்டர் கேன்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

காலேஜில் படித்துக்கொண்டே பகுதிநேரமாக வாட்டர் கேன் பிசினஸை வெற்றிகரமாகச் செய்து, தன் படிப்புக்கான செலவை தானே பார்த்துக்கொண்டு வருகிறார் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வினோத்.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத், பள்ளிக்கரணையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வினோத்திடம் பேசினோம்...

''கல்லூரிப் படிப்பைத் தொடங்கிய திலிருந்தே ஏதாச்சும் பிசினஸ் பண்ணனும்னு யோசிச்சுகிட்டே இருப்பேன். நண்பர்கள்கிட்டேயும் ஆலோசனைக் கேட்பேன். ஆரம்பத்துல ஒருபிடியும் கிடைக்கல.

திடீர்னு ஒருநாள் வாட்டர் கேன் பிசினஸ் செய்துகொண்டிருந்த என் நண்பன் ஒருத்தன் கால் பண்ணி, 'எனக்கு வேலை கிடைச்சிடுத்து, நான் செய்யற இந்த வாட்டர் கேன் பிசினஸை நீ பண்றியா’ன்னு கேட்டான்.

அன்றுதான் என் வாழ்வில் திருப்புமுனை. அவனிடமிருந்து வாங்கிய 10 கேன்களுடன், என்னிடமிருந்த 1,000 ரூபாயை முதலீடாகப்போட்டு மேலும் 10 கேன்களை வாங்கி 20 கேன்களுடன் ஒரு வருஷத்துக்கு முன்னாடி பிசினஸை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ஒரு நாளைக்கு 40, 50 ரூபாய்தான் லாபம் வந்தது. ஆனா, இப்ப பிசினஸ் சூப்பராப் போயிட்டு இருக்கு. 20 கேன்ல ஆரம்பிச்ச நான் இன்னைக்கு 60 கேன் விநியோகம் பண்ற அளவுக்கு வளர்ந்திருக்கேன்.

காலையில காலேஜ் கிளம்பி போயிருவேன். காலேஜிலேருந்து வீடு வந்து 4 மணிக்கு லோடு ஏத்த 25 கேன் எடுத்துட்டு தண்ணீர் ஃபில்லப் பண்ணப் போவேன். திரும்ப வந்து ஒன்பது மணிக்குள்ள கஸ்டமர்களின் வீடுகளில் போட்டு முடிச்சிருவேன்.

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஒரு கேன் 8 ரூபாய்க்கு வாங்கி 25 ரூபாய்க்கு சப்ளை பண்றேன். ஒவ்வொரு நாளும் வண்டி டீசல் போக 100 - 150 ரூபாய் வரை கையில நிக்கும்'' என்று உற்சாகம் பொங்கச் சொன்னார் வினோத்.

அவரே தொடர்ந்து பேசினார். ''மற்ற கல்லூரி மாணவர்கள் மாதிரி என்னால என்ஜாய் பண்ண முடியாது. நண்பர்களோட வெளில அதிகமாச் சுத்த முடியாது... ஞாயிற்றுக்கிழமையிலும்கூட

ஸ்டூடன்ட் பிசினஸ் மேன்!

நண்பர்களோட வெளியில போனால், கஸ்டமர்கள் யாராச்சும் போன் பண்ணி கூப்பிடுவார்கள். எந்த நிகழ்ச்சி களுக்குப் போனாலும் கடைசி வரை இருக்க முடியாது. எந்தநேரம் கஸ்டமர் போன் பண்ணுவாங்க என்று தெரியாது. போன் பண்ணினா, கண்டிப்பா போயாகணும். குடிதண்ணீர் என்பதால் மறுக்கவும் முடியாது. காலேஜ்ல இருக்கும்போதே போன் வரும். அந்த நேரம் என்னோட நண்பர்கள் உதவி பண்ணுவாங்க.

நண்பர்களோட ஜாலியா இருக்க முடியலையே, வீட்டுல நடக்குற சந்தோஷமான நிகழ்ச்சியிலகூட கலந்துக்க முடியலையேன்னு பலமுறை ஃபீல் பண்ணியிருக்கேன். ஆனா, பிசினஸுல தனிப்பட்ட சந்தோஷத்தைப் பார்த்தா, பணத்தைச் சேர்க்க முடியாதுங்கிறதைப் புரிஞ்சுகிட்டு, என் பிசினஸை நான் என்ஜாய் பண்ணி பண்றேன்.

தவிர, குடும்பத்தோட சப்போர்ட் இருக்குங்குறதால என்னால சலிப்பில்லாமல் வேலை செய்ய முடிகிறது. அப்பாதான் எனக்கு எல்லா ஆதரவையும் தர்றார். மாலை நேரத்துல அவர் பயன்படுத்துற வேன், வேலை இல்லாம ஃப்ரீயாதான் இருக்கும். அப்ப, என்னிடம் வண்டியைக் கொடுப்பாரு. நான் போய் வாட்டர் கேன்ல தண்ணீர் நிரப்பிட்டு வந்துடுவேன்.

வருகிற வருமானத்துல தினமும் 50 ரூபாய் செலவு பண்ணிட்டு, 100 ரூபாயைச் சேமிச்சுவைப்பேன். இந்தச் சேமிப்பு பணத்தை என்னுடைய பிசினஸ் தேவைகளுக்கும், காலேஜ் ஃபீஸ் கட்டுவதற்கும் பயன்படுத்திக்குவேன். தீபாவளி, பொங்கல் என்றால் அம்மா, அப்பா, அண்ணன் எல்லோருக்கும் துணிகள் எடுத்துத்தருவேன். அவங்க சந்தோஷத்தைப் பார்க்கும்போது என்னுடைய பிசினஸை இன்னும் உயரத்துக்கு கொண்டுபோகணும்ங்கற எண்ணம்தான் மேலோங்கி இருக்கு.  குடும்பத்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் வாட்டர் கேன் பிசினஸ் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து என்னால் இயன்ற அளவுக்கு பார்த்துக்கொள்வேன்'' என்று சொல்லும்போது அவரது கண்களில் ஆனந்தம் தாண்டவமாடியது!

இன்றைக்கு வாட்டர் கேன் பிசினஸில் கலக்கும் வினோத், எதிர் காலத்தில் ஓர் ஊருக்கே குடிதண்ணீரை விநியோகிக்கும் அளவுக்கு வளர்ந்தாலும் ஆச்சர்யமில்லை!

செ.கிரிசாந்,
படங்கள்: தே.தீட்ஷித்.

 கல்லூரிகளில் படித்துக்கொண்டே பார்ட் டைம் பிசினஸ் செய்பவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

நாணயம் விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002
போன்:044 2851 1616 (2 pm -8 pm)
மெயில் முகவரி:
navdesk@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு