Published:Updated:

லீவ் டிராவல் அலவன்ஸ்: வரிச் சலுகை பெறுவது எப்படி?

லீவ் டிராவல் அலவன்ஸ்: வரிச் சலுகை பெறுவது எப்படி?

##~##

விடுமுறை பயணப்படி (Leave Travel Allowance) என இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அல்லது மாதந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக குறிப்பிட்ட அளவு தொகையை நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு தரும். இந்தத் தொகைக்கு ஊழியர்கள் வரிச் செலுத்த வேண்டும். இதற்கு எப்படி வரிவிலக்கு பெறுவது என்பது குறித்து ஹைநோட் சிஸ்டம் நிறுவனத்தின் சீப் எக்ஸிக்யூட்டிவ் ஆபீஸரான டி.இ. கௌதமிடம் கேட்டோம்.

''ஓரளவுக்கு பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறையுடன் கூடிய பயணப்படியைத் தரும். ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல இந்தத் தொகையைப் பயன்படுத்தலாம். இந்தத் தொகைக்கு இந்திய வருமான வரிச் சட்டம் 1961-ல் பிரிவு 10(5) கீழ் விலக்கு பெற முடியும்.

இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதாவது, இந்த விடுமுறை பயணப்படிக்கு வருமான வரித் துறை நான்கு ஆண்டுகளை ஒரு ப்ளாக் என பிரித்து வைத்துள்ளது. (தற்போது 2010, 2011, 2012, 2013 இந்த நான்கு வருடங்கள்தான் ப்ளாக்காகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு வருடம் என்பது ஐனவரி முதல் டிசம்பர் வரை) ஒரு ப்ளாக்கில் அதிகபட்சம் இரண்டு பயணங்களுக்கு வரிவிலக்கு பெறலாம். இதில் ஒருமுறை விலக்குப் பெற்றுவிட்டு, மீதமுள்ள ஒருமுறையை அடுத்த ப்ளாக்குக்கு கொண்டுசெல்ல முடியும். ஆனால், அதை அடுத்த ப்ளாக்கில் முதல் வருடத்தில் மட்டும்தான் விலக்கு பெற முடியும்.

ஓர் ஊழியர், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் அவரைச் சார்ந்திருக்கும் பெற்றோர் ஆகியோர் சுற்றுலா செல்வதற்கு செலவிடப்படும் தொகைக்கு வரிவிலக்கு பெற முடியும். இந்த வரிவிலக்கு பெறுவதற்காக ஊழியர் தரும் பில் தேதியில், அந்த ஊழியர் கட்டாயம் விடுமுறை எடுத்திருக்க வேண்டும்.

லீவ் டிராவல் அலவன்ஸ்: வரிச் சலுகை பெறுவது எப்படி?

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும்.  நண்பர்களுடன் சுற்றுலா சென்றால் வரிச் சலுகை கிடைக்காது.  சுற்றுலாவுக்கு ஊழியர் செல்வது அவசியம். அவரைத் தவிர்த்து குடும்பத்தினர் சுற்றுலா சென்றால்  வரிவிலக்கு கிடைக்காது.

சுற்றுலா செல்லும் டிக்கெட் தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும். உணவு, தங்கும் இடம், சுற்றிப்பார்க்க ஆகும் பயணச் செலவுகளுக்கு வரிவிலக்கு கிடையாது.

ஓர் ஊழியருக்கு எவ்வளவு தொகை தரப்படுகிறதோ, அதில் செலவு செய்த தொகைக்கு மட்டும்தான் வரிவிலக்கு பெற முடியும். அதாவது, ஒருவர் ஓர் ஆண்டுக்கு விடுமுறை பயணப்படி ரூ.50 ஆயிரம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். அதில் அவர் ரூ.40 ஆயிரம் செலவு செய்கிறார் எனில், அந்தத் தொகைக்கு மட்டும்தான் அவர் வரிவிலக்கு பெற முடியும். அதேசமயம், ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்தான் விடுமுறை பயணப்படி எனில், அவர் ரூ.20 ஆயிரம் செலவு செய்தால், ரூ.10 ஆயிரத்துக்கு மட்டுமே வரிவிலக்கு பெறமுடியும்.

இதில் சுற்றுலாவுக்கு புறப்படும் இடத்திலிருந்து திரும்ப வந்துசேரும் இடத்துக்கான டிக்கெட் செலவுக்கு மட்டும்தான் வரிவிலக்கு பெற முடியும். ஒரேநேரத்தில் பல இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது இந்தச் சிக்கல் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதாவது, சுற்றுலா சென்ற இடங்களில் எந்த இடம் அதிக தொலைவில் உள்ளதோ, அதுதான் சுற்றுலா சென்ற இடமாக எடுத்துக்கொள்ளப்படும். அந்த இடத்துக்கு சென்று வருவதற்கு குறுகிய தூரமுள்ள வழித்தடத்துக்கான  டிக்கெட் தொகைக்கே வரிவிலக்கு பெற முடியும்.உதாரணமாக, சென்னையிலிருந்து மும்பை சென்று, அங்கிருந்து டெல்லி சென்றால், சென்னை - டெல்லிக்கு இடையே இருக்கும் குறுகிய  தூரமுள்ள வழித்தடத்தின் ரயில் கட்டணத் தொகைக்கு மட்டும் வரிவிலக்கு பெறமுடியும்.

லீவ் டிராவல் அலவன்ஸ்: வரிச் சலுகை பெறுவது எப்படி?

சுற்றுலாவுக்கு எந்தவகையான போக்குவரத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், அதிலும் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதாவது, விமானத்தில் சுற்றுலா சென்றால், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் எக்கனாமிக் வகுப்பில் என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அந்தத் தொகைக்கு மட்டும்தான் வரிவிலக்கு கிடைக்கும். ரயில் மூலம் சுற்றுலா செல்லும்பட்சத்தில் அதிகபட்சம் முதல்வகுப்பு ஏ.சி. பிரிவில் உள்ள கட்டணத்துக்கு வரிவிலக்கு பெற

லீவ் டிராவல் அலவன்ஸ்: வரிச் சலுகை பெறுவது எப்படி?

முடியும். ஆனால், சுற்றுலா செல்லும்போது மூன்றாம் வகுப்பு ஏ.சி. பிரிவில் சென்றால் அந்தத் தொகை முதல்வகுப்பு ஏ.சி.-யின் டிக்கெட் தொகையைவிட குறைவாக இருக்கும். அந்தத் தொகைக்கு மட்டும்தான் வரி விலக்கு கிடைக்கும்.

நேரடியாக ரயிலில் செல்ல முடியாத இடத்துக்கு சுற்றுலா செல்லும்போது அந்த இடத்தில் பொதுப்போக்குவரத்து கட்டணம் எவ்வளவோ, அந்தத் தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு பெற முடியும். அதாவது, சென்னையிலிருந்து டெல்லிக்கு ஒருவர் டாக்ஸியில் சென்றால், டாக்ஸி கட்டணம் அல்லது குறுகிய வழித்தடத்தின் முதல் வகுப்பு ஏ.சி. ரயில் கட்டணம், இவற்றில் குறைவான தொகைக்கு மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும். குழந்தைகள் மற்றும் சீனியர் சிட்டிசன்களுக்கு அவரவர்களுக்கான கட்டணச் சலுகைபடி வரிவிலக்கு கிடைக்கும்.  

விடுமுறை பயணப்படி தொகைக்கு வரிவிலக்கு பெறும் ஊழியரின் குழந்தைகளுக்கு சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதாவது, 1998 அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் எனில் ஊழியர் அவரின் இரு குழந்தைகளுக்கு செலவிடும் தொகைக்கு மட்டும்தான் வரிவிலக்கு பெறமுடியும். அதேசமயம், ஊழியருக்கு இரண்டாவதாகப் பிறந்தது இரட்டை குழந்தை எனில், அவர் மூன்று குழந்தைகளுக்கு செலவுகணக்கு காட்டலாம். வளர்ப்புக் குழந்தைகளுக்கு செலவிடப்படும் தொகையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 1998 அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பு பிறந்த குழந்தைகள் எனில் எத்தனை குழந்தையை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

விடுமுறை பயணப்படி தொகைக்கு ஊழியர்கள் வரிச் சலுகைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த ப்ளாக்கில் எத்தனையாவது முறை என்பதை நிறுவனம்தான் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் கவனித்தால்,  சுற்றுலாவும் சிறப்பாக இருக்கும். வரிச் சலுகையும் எளிதாகப் பெறலாம்!

- இரா.ரூபாவதி, படங்கள்: தே.தீட்ஷித்.

அடுத்த கட்டுரைக்கு